ஜட்ஜ் சுவாமிகள்
சித்தர்களும் யோகிகளும் மகான்களும் ஞானிகளும் தோன்றிப் பொலிந்த நாடு பாரதம். அதுவும் தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்நாட்டைத் தேடி வந்து வாழ்ந்து நிறைவெய்தியும் உயர்ந்த ஞானியர் பலர். அவர்களுள் ஒருவர் ஜட்ஜ் சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட ஸத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள்.

பிறப்பு
ஆந்திராவின் கோதாவரி நதிக்கரையில், இன்று அணை கட்டப்பட்டிருக்கும் இடத்தில் முன்பு 'தவளேஸ்வரம்' என்ற ஊர் ஒன்று இருந்தது. அத்தலத்தின் இறைவன் தவளேஸ்வரன். அத்தலத்தில் வாழ்ந்த அந்தணர்களுள் ஸ்ரீ வேதமூர்த்தி சாஸ்திரிகள் ஒருவர். சம்ஸ்கிருத பண்டிதர், காசியில் வேதம் கற்றவர். தெலுங்கிலும் சிறந்த பண்டிதராக விளங்கினார். அக்காலத்தில் தவளேஸ்வரம் பகுதியில், கோதாவரி அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. அதனால் அவ்வூரில் வாழ்ந்தவர்கள் பிழைப்பிற்காகப் பல இடங்களுக்கும் செல்லத் தலைப்பட்டனர்.

வேதமூர்த்தி சாஸ்திரிகள் விசாகப்பட்டினத்திற்குக் குடிபெயர்ந்தார். திருமணம் ஆனது. இனிய இல்லறத்தில் நற்குழந்தைப் பேறும் வாய்த்தது. குழந்தை இளவயதிலேயே தெய்வீகத் தன்மையுடன் திகழ்ந்தது. வளர வளர அதன் அறிவு சுடர் விட்டது. குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்து அவன் எதிர்காலத்தில் சிறந்த மகானாக மாறுவான் என்பதை உணர்ந்தார் வேதமூர்த்தி. அவனுக்குச் சிறுவயது முதலே புராண, இதிகாசக் கதைகளைச் சொல்லி வளர்த்தார். குழந்தையும் சிறு வயதிலேயே மிகுந்த மேதைமையுடன் விளங்கினார். ஒருமுறை சொல்லிக் கொடுத்ததைத் திரும்ப மாறாமல் கூறும் ஏகசந்த கிராஹியாகத் திகழ்ந்தான்.

கல்வி
சுவாமிகளுக்கு நல்லதொரு நாளில் குல வழக்கப்படி முறைப்படி உபநயனம் செய்விக்கப்பட்டு, வேதக்கல்வி போதிக்கப்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்த சுவாமிகள், தாயின் விருப்பப்படி ஆங்கிலக் கல்வியும், தந்தையின் விருப்பப்படி வேதக் கல்வியையும் கற்க விரும்பினார். கல்லூரிக்குச் சென்று படிக்க ஆசைப்பட்டார். தந்தையிடம் 'கல்லூரிக்குச் சென்றாலும் வேதத்தைக் கைவிட மாட்டேன்' என்று உறுதிகூறி, அனுமதி பெற்றார்.

சுவாமிகள் வசித்து வந்த ஆந்திரா, அப்போது சென்னை ராஜதானியில் இருந்ததால் சுவாமிகளின் குடும்பம் சென்னை திருவல்லிக்கேணிக்குக் குடிபெயர்ந்தது. சுவாமிகளின் கல்லூரிப் படிப்பு சென்னையில் தொடர்ந்தது. சுவாமிகள் கல்லூரிக் கல்வி கற்றார். பின் சட்டக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். அதை முடித்தபின் பதிவுசெய்த வழக்குரைஞராகத் தொழிலைத் தொடங்கினார்.

திருமணம்
சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகளுக்குத் திருமணம் ஆனது. சில ஆண்டுகாலம் கூட்டுக் குடும்பமாக வசித்தனர். நாளடைவில் பெற்றோர் காசித் தலத்தில் வாழ விரும்பி அங்கு வாழத் தலைப்பட்டனர்.



இளமைப் பருவம்
சுவாமிகள் மனைவியுடன் சென்னையில் வாழ்ந்தார். நிதிக்காக அல்லாமல் நீதிக்காகத் தொழில் புரிந்தார். பிரிட்டிஷ் நீதிபதிகளே இவரது வாதத் திறமை கண்டு வியந்தனர். சிறந்த வழக்கறிஞர் என்ற பெயருடன் நல்ல வருவாயும் கிடைத்தது. தவறான வழக்குகளுக்கோ, தவறான நபர்களாகக் கருதுபவர்களுக்கோ சுவாமிகள் வாதாட மாட்டார். அதுபோல வழக்களிப்பவர்கள் அளிக்கும் தொகை குறைவானதாக இருந்தாலும் பெற்றுக் கொள்வார். பணமே இல்லாத ஏழை, எளியவர்களுக்காகவும் வாதாடினார். இந்தியர்கள் மட்டுமல்லாது ஐரோப்பியர்களும் சுவாமிகளை மதித்தனர். மரியாதை செலுத்தினர். அவரது வாதத்திறனைப் போற்றினர். சுவாமிகள் நாடறிந்த வழக்கறிஞரானார்.

சுவாமிகளுக்கு நாளடைவில் நல்ல புத்திர பாக்கியம் உண்டானது. அதே சமயம் அன்றாட அவரது இறைவழிபாடும், வேத பாராயணமும், தீவிரமாகத் தொடர்ந்தன. ஆன்மீகத் தேடல் அதிகமானது. இப்படியே இருபது வருடங்கள் கழிந்தன.

சமஸ்தான அழைப்பு
இந்நிலையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர், அனந்த பத்மநாப சுவாமியின் சேவகனாக ஆட்சியை நடத்தி வந்தார். அனந்த பத்மநாப சுவாமி திருவனந்தபுரம் வீதிகளில் வலம் வரும்போது அரசமுத்திரை தாங்கி, கையில் வாளேந்தி மன்னர் முன்செல்வது எப்போதும் வழக்கம். தனது நாட்டின் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியை நியமிக்க விரும்பினார் மன்னர். யார் அதற்குத் தகுதியானவர் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு கலந்தாலோசித்தார். சாஸ்திரங்கள் அறிந்தவரும், தர்மம், நீதி இவற்றை எல்லாம் பின்பற்றி வாழ்ந்து வருவருமான ஒருவரே இதற்குப் பொறுப்பானவர் என்பதால் அப்படிப்பட்டவர் யார் என்ற தேடல் தொடர்ந்தது. இறுதியில் ஜட்ஜ் சுவாமிகளே அதற்குச் சரியானவர் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், செல்வாக்கும், புகழும் அதிக வருவாயும் கொண்ட அவர் திருவிதாங்கூருக்கு வரச் சம்மதிப்பாரா என்ற ஐயம் மன்னருக்கு இருந்தது. அதனால், ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியின் பிரசாதத்தோடு ஒரு பிரதிநிதியைச் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

தர்மாதிகாரி ஒருவர் ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமியின் பிரசாதத்துடன் சென்னைக்குப் புறப்பட்டார்.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com