முனைவர் செ. ராஜேஸ்வரி, எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். மொழிபெயர்ப்பு, ஆய்வு என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருப்பவர். விஸ்கான்சின் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தவர். தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர்.
செ. ராஜேஸ்வரி, ஜூலை 01, 1959ல், மதுரையில், பொ. செல்லையா - தங்கத் தாயம்மாள் இணையருக்கு மகவாகப் பிறந்தார். வராகி உபாசகரான தந்தையின் மூலம் ஆன்மிக நுணுக்கங்களையும் தாந்த்ரீக வழிபாட்டு முறைகளையும், ஜோதிடத்தையும் அறிந்தார். இளவயதிலேயே எதையும் பலவித கோணங்களில் பார்ப்பது, நுணுகி ஆராய்ந்து உண்மையை அறியும் நுட்பம் கைவரப் பெற்றார்.
கல்வி ஆங்கிலவழியில் பயின்று பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். கல்லூரிப் படிப்பு முடித்து ஆய்வு முயற்சிகளைத் தொடர்ந்த காலத்தில் எபிரேயம், கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இயல்பாக ராஜேஸ்வரிக்கு இருந்த ஆர்வம் மேலும் பல மொழிகளைக் கற்கும் ஆர்வத்தை அளித்தது. தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கண வேற்றுமை மரபு' என்ற தலைப்பில் ஆய்வுசெய்து இளமுனைவர் (M.Phil) பட்டம் பெற்றார். 'தமிழ் ஆங்கிலச் செய்யுள் மொழிபெயர்ப்பில் சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.
ஆய்வு முயற்சிகள் 'புலமை', 'செந்தமிழ்', 'வளர்தமிழ்', 'ஓங்கு தமிழ்', 'ஆராய்ச்சி' போன்ற ஆய்விதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். சமயச்சொல் அகராதி, எபிரேயம் - தமிழ் அகராதி, கிரேக்கம் - தமிழ் அகராதி உருவாக்கத்திற்காக மக்கள் கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் ராபின்சன் லேவி அவர்களுடன் இணைந்து இருபது ஆண்டுகள் பணியாற்றினார். ஈரோடு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி போன்றவற்றில் சில ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

சமூக, சமய இயல் ஆய்வுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் முத்து மோகன், தி.சு. நடராசன் போன்றவர்கள் மூலம் பெற்ற அறிமுகத்தால் சமூக இயல் சார்ந்த ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தார். சமூகவியல் சார்ந்த சமய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றை 'முத்தமிழ் விரும்பி' நடத்தி வந்த 'நெருஞ்சி' காலாண்டு இதழில் எழுதினார். 'தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்குப் பெண்தெய்வ வழிபாடு' பற்றி இவர் எழுதிய தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது. பின்னர் அது நூலாகவும் வெளிவந்தது.
மொழிபெயர்ப்புப் பணிகள் செ. ராஜேஸ்வரி, 1985ம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். 'இண்டியன் உமன் சேஞ்சஸ் அண்ட் சேலஞ்சஸ்' (Indian Women – Changes and Challenges) என்ற நூலை ஆங்கிலப் பேராசிரியர் ரீட்டம்மா டேவிட் உடன் இணைந்து மொழிபெயர்த்தார். அதுவே இவரது முதல் மொழிபெயர்ப்புப் பணி. தொடர்ந்து முத்தமிழ் விரும்பியின் 'பூ மர நிழல்', 'வறட்சியின் பாடல்கள்', 'உன்னொடு உரையாடுதல்', 'காதலின் மொழி', 'திட்டிவாசல் பெண்ணொருத்தி' போன்ற கவிதை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இளம் தலைமுறையினருக்குத் தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்யும் நோக்கில் ஐங்குறுநூறு, குறுந்தொகை, புறநானூறு, நாலடியார், ஆசாரக்கோவை, திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடல் பள்ளு ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த்தார். மள்ளர்கள் வரலாற்று மீட்டுருவாக்கம் குறித்து நான்கு நூல்களை மொழிபெயர்த்தார். சமயச் சொல்லகராதி தொகுக்கும் பணியிலும், திருமறை மொழிபெயர்ப்பு சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டார். Urban Theology, Vaigai Paripadal, Assisted reproductive technologies and its Impact on Women, Eco Vision and Mission, Bachelor's Study Materials for Social Science [IGNOU], Neuro Ophthalmology Articles போன்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளை எழுதினார்.

கல்விப் பணிகள் செ. ராஜேஸ்வரி 1993ல் ஆசியவியல் - ஆய்வியல் நிறுவனத்தில் இணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். ஜப்பானிய மொழியைத் தமிழில் எளிதில் கற்கும் வகையில், யூகோ ஃபுகுரோயியுடன் இணைந்து நூல் ஒன்றைத் தயாரித்தார். அது மூன்று பாகங்களாக வெளிவந்தது. வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். தமிழ் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி இலக்கணம் கற்பித்தார். வெளிநாட்டவருக்கு தமிழ் கற்பிக்கப் பாடநூல் ஒன்றை உருவாக்கினார். அரவிந்த் கண் மருத்துவமனையில் மொழி பெயர்ப்பாளராகவும், வேற்று மாநில மருத்துவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
தமிழ் தெரியாத கண் மருத்துவர்களுக்குத் தமிழ் கற்பிக்க 'Tamil for Non-Tamils' என்ற பாடநூலை உருவாக்கினார். செவிலியர் பயிற்சி பெறும் இளம் பெண்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க 'Easy English' என்ற ஆங்கிலப் பாடநூலை எழுதினார். மக்கள் கண்காணிப்பகத்தில் வெளி மாநிலத்தவருக்கு ஆங்கிலமும் வெளி நாட்டவருக்குத் தமிழும் கற்பித்தார். வெளிநாட்டு மாணவர்களுக்காக 'சென்ட்டர் ஃபார் லேங்குவேஜ் ஸ்டடீஸ்' (Centre for Language Studies) என்ற பெயரில் தனி மையம் ஒன்றை அமைத்துத் தமிழ் கற்பித்தார்
வெற்றித் திருமகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் ஆளுமை ராஜேஸ்வரியை மிகவும் கவர்ந்தது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அவரைப் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்தார். எம்.ஜி.ஆர். பற்றிய நூல்களை எழுதத் தொடங்கினார். எம்.ஜி.ஆர். பற்றி "ஒப்பனையும் ஒரிஜினலும் -எம்.ஜி.ஆர். 100" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் தொடர் கட்டுரைகளை எழுதினார். தொடர்ந்து வாழ்க்கை வரலாறாக அல்லாமல், எம்.ஜி.ஆர். பற்றிய ஆய்வு நூலாக 'வெற்றித் திருமகன் எம்.ஜி.ஆர். நூல் வரிசை' என்ற பொதுத்தலைப்பில் 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அதன் தொடர்ச்சியாக, கனடாவில் இருந்து வரும் www.tamilauthors.com என்ற இணைய இதழில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். எம்.ஜி.ஆர். பற்றிய தனது ஆய்வு நூல்களை ஆர்வமுள்ள அனைவரும் எளிதில் வாசிக்கும் வகையில் 'ஆர்கைவ்' தளத்தில் ஆவணப்படுத்தினார். (பார்க்க)

இதழியல் பணிகள் செ. ராஜேஸ்வரி, 'லவ் தமிழ்' என்ற ஆங்கிலப் பன்மொழி மின்னிதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். தமிழ் நாளிதழ்களில் பல்வேறு ஆன்மிகத் தொடர்களை எழுதினார். தினகரன் ஜோதிட மலரில் இவர் எழுதிய 'என்னோட ராசி நல்ல ராசி' தொடர் வாசக வரவேற்பைப் பெற்றது. ஆன்மிகம் மாதமிருமுறை இதழில் 'மர வழிபாட்டின் வேர்களைத் தேடி', 'காளியும் தேவியும்', 'உலகளாவிய காளி கோட்பாடு' போன்ற ஆன்மிகக் கட்டுரைத் தொடர்களை எழுதினார். 'சத்யபிரபா' என்ற புனைபெயரில் பல சிறுகதைகளை எழுதினார்.
தற்போது 'தமிழணங்கு', 'சக்தி' என்று இரண்டு இதழ்களை நடத்தி வருகிறார். தமிழணங்கு ஆய்விதழ். சக்தி மகளிருக்கான இதழ். 'சந்திரோதயம் பதிப்பகம்' என்ற பதிப்பக நிறுவனம் மூலம் தனது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகிறார்.
விருதுகள் தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, தஞ்சை நெருஞ்சி இலக்கிய இயக்கம் அளித்த சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, பெண் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
பல்துறைச் சாதனையாளராக விளங்கும், செ. ராஜேஸ்வரியின் முயற்சிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துவோம்.
அரவிந்த்
செ. ராஜேஸ்வரி நூல்கள்
ஆய்வு, கவிதை நூல்கள் தேவேந்திரன், பண்பாட்டு நகர்வுகள், மொழிபெயர்ப்பியல் ஆய்வு, பெண் பூப்பின் புனித வழிபாடு, கவிதையில் அடிக்கருத்தியல் ஆய்வு, கவிதை மொழிபெயர்ப்பு, தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு பெண் தெய்வ வழிபாடு, பூ மர நிழலில் களமும் காலமும்
கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பியின் பாடுபொருளும் பாசப்பொருளும், மருத நிலப் பெண் தெய்வங்கள், கலீல் ஜிப்ரான் பாடல்கள், கவிதையில் காதல், வேளாண் மரபில் பூப்பும் - விதையும், முன்னோர் வழிபாடு, இருநிலத்தில் திருமுருகன், யானைக் கடவுள், மனிதநேயச் செம்மல் சைதை சா. துரைசாமி அவர்களின் சிறப்புத் திட்டங்களும் செயல்பாடுகளும், அமராவதியின் காதல் (சிறுகதைத் தொகுப்பு), பயணக் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு), ரோஜா மொட்டு (கவிதைகள்).
எம்.ஜி.ஆர் பற்றிய நூல்கள் எம்.ஜி.ஆர். நிழல் நிஜம் நிரந்தரம், சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பப்பா, வீரமகன் போராட வெற்றி மகள் பூச்சூட, மகளிர் போற்றும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி, எம்.ஜி.ஆர். ஒரு கலியுகப்போராளி, ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்., வெற்றிப் படிக்கட்டில் நாடோடி மன்னன், நீங்க நல்லா இருக்கணும் (எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்கள் -1), பாட்டுடைத் தலைவன் எம்.ஜி.ஆர். (எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்கள் -2) இரசிகர்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர்., முத்தமிழ்க் காவியம் மதுரை வீரன் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் ஜொலிக்கும் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர். படங்களில் அறிவியல் புனைவு, படகோட்டி மீனவ நண்பன் ஓர் ஒப்பீடு.
ஆங்கில நூல்கள் Shade of the Flowering Tree, Songs of Dryness, Speaking with You Language of Love, and A Lady at the little gate, kurunthokai, Ainkurunuru, Purananuru, Unique Fandom of MGR |