காஷ்மீரே ஒரு பூங்காவனம் தான். அதிலும் பஹல்காமிலிருந்து சுமார் 35 நிமிடநேரக் குதிரைச் சவாரியினால் மட்டுமே அடையக்கூடிய பாயிசரன் பள்ளத்தாக்கு ஒரு கனவுச் சோலை. அந்த இடம் ஏப்ரல் 22ஆம் தேதியன்று செங்குருதியால் பசுமை குலைந்தது. 28 ஆண்கள், அதில் 26 பேர் இந்துக்கள் தேர்ந்தெடுத்துச் சுட்டுக் கொல்லப்பட்டது உலகறிந்த விஷயம். இந்தப் படுகொலையைச் செய்தது The Resistance Front என்ற, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை ஆகும். இதுவரை பொறுமை காத்த பாரதப் பிரதமர் இப்போது இந்திய ராணுவத் தலைவர்களிடம், "தக்க எதிர் நடவடிக்கை எதுவென்று தோன்றுகிறதோ அதை எடுங்கள்" என்று சுதந்திரம் கொடுத்துவிட்டார். வீர வசனம் பேசினாலும் பாகிஸ்தான் குலை நடுங்கிக் கொண்டு இருக்கிறது. எல்லையோரங்களில் தினமும் இரவில் கைகலப்பு நடந்து கொண்டேதான் இருக்கிறது. எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதைப் பாரதம் காண்பித்தாக வேண்டிய கட்டாயம். நாட்டுக்கும் உலகுக்கும் எது நல்லதோ அதை மோடி அரசு செய்யும் என்று நம் அனுபவம் கூறுகிறது. நகத்தைக் கடித்தபடி காத்திருக்கிறோம்.
★★★★★
அமெரிக்க அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனராகப் பணியாற்றி வந்த டாக்டர் சேதுராமன் பஞ்சநதன் (நேர்காணல் பார்க்க) பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கவே ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் இன்றைய அரசு இந்த அமைப்பிலும் கணிசமான ஆட்குறைப்பும் நிதிக்குறைப்பும் செய்திருக்கும் இந்த நேரத்தில், முந்தைய ட்ரம்ப் அரசினால் நியமனம் செய்யப்பட்ட பஞ்சநதன் இப்போது பதவி விலகியிருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. அற்பக் காரணங்களுக்காக மாணவர்களின் விசாவை திடீரென்று திரும்பப் பெறுவது, கல்விக்கான, பல்கலைக் கழகங்களுக்கான நிதியைத் தர மறுப்பது, பரந்துபட்ட ஆட்குறைப்பு என்று எங்கு பார்த்தாலும் பல அவலங்களைப் பார்க்க முடிகிறது. இதன் எதிரொலி வெள்ளை மாளிகையில் கேட்காமல் போகாது. அப்போதாவது அரசு விழித்துக்கொண்டு, பாதையை மாற்றிக்கொள்ளட்டும். காலம் கடந்துவிடவில்லை.
★★★★★
கவிஞர், கிராம முன்னேற்றச் சேவகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என்று மூச்சுவிட நேரமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கவிஞர் விஜயகிருஷ்ணன். இவருக்கும் ஒருநாளில் அதே 24 மணிநேரம்தானே என்று வியக்கவைக்கும் நேர்காணலை வாசித்து இன்புறுங்கள். ஓவியர் மாயா குறித்த கட்டுரை, மனதைத் துணுக்குற வைக்கும் சிறுகதை, நாடக விமர்சனம், கவிதை எல்லாம் உண்டு இந்த இதழில்.
வாசகர்களுக்கு புத்த பூர்ணிமா வாழ்த்துகள்.
தென்றல் மே 2025 |