பேட்டி: ரகுநாத் பத்மநாபன் ஒலிபெயர்ப்பு, தொகுப்பு: நிஷா ஸ்ரீனிவாசன் மொழிபெயர்ப்பு, தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்
  பேரா. ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசன் புகழ்பெற்ற நியூ யார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கைத் துறையில் பேராசிரியராகப் பணி புரிகிறார். அமெரிக்காவில் தெற்காசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தை (South Asian Journalist Association - SAJA) நிறுவி அதன் தலைவராகப் பணிபுரிந்திருக்கிறார். இணையத்தில் ஊடகங்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்துள்ள இவர், நியூ யார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல நாளேடுகளிலும் பல இதழ்களிலும் எழுதி வருகிறார்.  அமெரிக்க ஊடகங்களில் தெற் காசியச் செய்திகளைப் பிழையில்லாமல் வெளிவரும் முயற்சிகளில் ஓரளவு வெற்றி கண்டுள்ள இவரைத் தென்றல் சார்பில் தொலைபேசியில் உரையாடினோம். 
  வணக்கம் பேரா. ஸ்ரீனிவாசன் அவர்களே! தென்றல் வாசகர்களின் சார்பில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறோம். 
  பொதுவாக, மேலைநாடுகளில் வாழும் பல இந்தியர்களுக்கு,  மேற்கத்திய மரபுக்கும் இந்திய மரபுக்கும் இடையே ஊசலாடும் அடையாளக் குழப்பங்கள் இருப்பதுண்டு.  ஆனால், நீங்களோ டோக்கியோவில் பிறந்து, ·பிஜித் தீவிலும் மன்ஹாட்டனிலும் பள்ளி சென்று, டெல்லியில் பட்டம் பெற்று, பட்ட மேற்படிப்பை அமெரிக்காவில் முடித்தீர்கள்!  உங்களுக்கு, இரண்டுக்கும் மேற்பட்ட பண்பாட்டுக் குழப்பங்கள் இருக்க வேண்டுமே!  இல்லை, இவற்றிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி கண்டு பிடித்து விட்டீர்களா?
  இப்படிப் பட்ட கேள்வியை  யாரும் என்னிடம் கேட்டதில்லை; ஆனால், இது நல்லதொரு கோணம்தான். நான் நினைக்கிறேன், வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவுக்கு வெளியே கழித்திருந்தாலும், உள்ளுக்குள்ளே நான் என்றும் இந்தியன் தான். எங்கிருந்தாலும், எனது இந்தியக் கண்ணோட்டத்தையும், இந்தியா பற்றிய சிந்தனையையும் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதால் இந்தப் பண்பாட்டுக் குழப்பங்களை என்னால் எதிர்கொள்ள முடிந்திருக்கிறது.
  அதே நேரத்தில், எனது அமெரிக்க அடையாளமும் முக்கியம்.  சிறு குழந்தையிலிருந்தே அமெரிக்காவில், அதிலும் நியூ யார்க் நகரில் இருந்திருப்பதால் என்னை ஒரு நியூ யார்க்கராகவே எண்ணிக் கொள்கிறேன் (சிரிக்கிறார்.)  ஒன்பது வயதில் நியூ யார்க்கிற்கு வந்தேன். வாழ்க்கையின் பெரும்பகுதியை நியூ யார்க்கில் கழித்திருக்கிறேன். மும்பையில் பிறந்தால்தான் மும்பைவாலா என்பது போல் இல்லாமல், நீங்கள் உலகில் எங்கிருந்து வந்தாலும், நியூ யார்க்கர்தான்! ஓர் ஆச்சரியம் என்னவென்றால், நியூ யார்க் நம்மை இப்படி அரவணைத்துக் கொள்ளும் தன்மை உள்ள உலகின் வெகு சில நகரங்களில் ஒன்று. அதுதான் வித்தியாசம்.
  எனக்குள் அடையாளக் குழப்பங்கள் இருக்கிறதா?  இருக்கலாம்! நான் எத்தனையோ இடங்களில் வாழ்ந்திருப்பதால்,  எனக்குள் ஏதோ ஒரு மூலையில் அடையாளக் குழப்பம் இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்! ஆனால், பல காலமாக நியூ யார்க்கில் வாழும் இந்தியன் என்ற அடையாளம் நிலைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு அந்த அடையாளத்தைப் பற்றித்தான் அக்கறை.
  அமெரிக்காவில் நல்ல நிலையில் இருக்கும்  இந்தியர்கள் பெரும்பாலும் கணினித் துறையிலோ அல்லது மருத்துவத் துறையிலோ தான் இருக்கிறார்கள். நீங்களோ ஒரு வித்தியாசமாகப் பத்திரிக்கைத் துறையிலே புகழ்பெற்றிருக்கிறீர்கள். நீங்கள், தெற்காசியர் களைப் பத்திரிக்கைத் துறையில் ஈடுபட ஊக்குவிப்பீர்களா?
  இங்கிருக்கும் தெற்காசியப் பெற்றோர்கள் தம் குழந்தைகள் பத்திரிக்கைத் துறையில் ஈடுபடுவதை விரும்பவில்லை என்றுதான் சொல்வேன். எங்கள் தெற்காசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தில் 800 உறுப்பினர்கள். அதனால் 800 பெற்றோர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்வோம்.  (சிரிக்கிறார்).
  இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் தொழில்களில் ஒன்று பத்திரிக்கைத் தொழில். பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர் களை விட முக்கிய சாதனைகள் படைத்திருக் கிறார்கள் என்றாலும், பத்திரிக்கையாளர்களும் முக்கிய இடம் வகிக்கிறார்கள்.
  பாருங்களேன்,  அமெரிக்க ஊடக நிறுவனங்களில் பல இந்தியர்கள் இருப்பதால்தான் முனைவர் கல்பனா சௌலா மறைவு பற்றிய செய்திகளில் பிழைகள் குறைவாக இருந்தது.  1986இல், சேலஞ்சர் விண்கலம் வெடித்ததில், ஒரு ஆசிய அமெரிக்கரும் இறந்து போனார்.  ஆனால், அமெரிக்க ஊடகங்கள் அவரைப் பற்றி மூச்சு விடவில்லை.  ஆனால், இந்த முறை, பல இந்திய இளைஞர்கள் ஊடங்களில் இருப்பதால், கல்பனா பற்றிய செய்திகள் வெளிவந்தன.  அதே போல், செப்டம்பர் 11க்குப் பிறகு, இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தாக்கப் பட்ட போது, நம்மைப் போன்றவர்கள் மீது கட்டவிழ்த்து விடப் பட்ட வெறுப்புக் குற்றங்களை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.  எங்களால் இது போல சில செய்ய முடிகிறது.
  ஆண்டுதோறூம் அமெரிக்காவில் பட்ட மேற்படிப்புக்கு வரும் 66,000 இந்தியர்களில் பலர் அறிவியல் அல்லது பொறியியல் படிக்கிறார்கள்.  இவர்களுக்குப் பத்திரிக்கைத் துறையில் படிக்கவும், பின்னர் வேலை பார்க்கவும் வாய்ப்புகள் உள்ளனவா?
  நல்ல வாய்ப்புகள் உள்ளன! பத்திரிக்கைத் துறையில் பட்ட மேற்படிப்புக்கு அவ்வளவு விண்ணப்பங்கள் வருவதில்லை.  வெளிநாடுகளிலிருந்து வரும் விண்ணப்பங்களில்கூட இந்தியாதான் தலைமை வகிக்கிறது.  படிப்புக்குப் பின் பல இந்தியர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.  அவர்கள் இன்னும் மேன்மையான பதவிகளை எட்டவில்லை.  ஆனால்,  அவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்  எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 
  நீங்கள் அமைத்த தெற்காசியப் பத்திரிக்கைச் சங்கம்  இந்த மாணவர்களை ஊக்குவிக்க ஏதேனும் செய்கிறதா?
  கட்டாயம்! பத்திரிக்கைத் துறை பற்றிச் செய்தி களறிய மடலாடற் குழுவொன்றை அமைத்துள்ளோம்.  எப்படி வேலை தேடுவது, எப்படிப் பல்கலைக் கழங்களில் சேர்வது போன்ற தலைப்புகளில் தினமும் உரையாடுகிறோம். தென்றல் வாசகர்களை www.saja.org என்ற வலைத்தளத்துக்கு வந்து பதிவு செய்து பார்க்க அழைக்கிறோம்.  பத்திரிக்கைத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட வென்றே குழுவொன்றையும் அமைத்துள்ளோம்.  பள்ளி, கல்லூரி, பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பத்திரிக்கைத் தொழில் படிக்க உதவிச் சம்பளம் ஏற்பாடு செய்திருக்கிறோம். 
  நேரத்தை உறிந்து கொள்ளும் பரபரப்பான தொழில்களிலிருந்தும் நீங்கள் லாப நோக்கற்ற பல சங்கங்கள், அமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றி வருகிறீர்கள்.  உங்கள் தொழிலுக்குத்  தொடர்பற்ற பல அமைப்பு களிலும் நீங்கள் ஈடுபடுவதின் நோக்கம் என்ன?
  தெற்காசியச் சமூக வளர்ச்சி போன்றவற்றில் எனக்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு. ஒரு விதத்தில் இது  பரம்பரைக் குணம் எனலாம்!  என் அம்மா தலைமை வகித்த கருணா என்ற அறப்பணி மன்றம் பல நல்ல பணிகளைப் புரிந்து கொண்டிருக்கிறது.  அதற்கு நானும் என்னாலான உதவி செய்து வருகிறேன்.
  கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்தால், சில மணி நேரம் கூடுதலாக உழைத்தால், இதெல்லாம் செய்ய முடியும். சென்னையில் பிறந்து வளர்ந்த என் மனைவியும் அமெரிக்காவில் உள்ள தெற்காசியப் பெண்களுக்கு உதவி செய்யும் சக்தி என்ற அமைப்பில் இருக்கிறார்.  எங்கள் இருவருக்குமே தொழிலுக்கும் அப்பாற்பட்ட ஈடுபாடுகள் இருக்கின்றன.
  இந்த நாட்டில் எங்களுக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட சில பழக்கங்களில் இதுவும் ஒன்று.   வேலை மட்டும் போதாது - பொதுத் தொண்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்.  நான் செய்வது ஒன்றும் அபூர்வமல்ல.  பலர் அன்றாடம் செய்வதுதான்.  இதில் என் மனைவி செய்யும் தொண்டு குறித்து நான் பெருமைப் படுகிறேன்.
  உங்கள் மனைவி ரூபாவும் தொழிலில் மட்டு மல்லாமல் விளையாட்டுத் துறையிலும் சாதனை படைத்தவராயிற்றே!
  ஆமாம்!  அவர் துப்பாக்கிப் போட்டி வீராங்கனை!  நானும் ஊரிலேயே மிக ஒழுங்கான கணவன்!  (சிரிக்கிறார்)  தமிழ்நாடு தம்மை வளர்த்து ஆளாக்கி உயர்த்தியதைப் பற்றி என் மனைவி அடிக்கடி சொல்லுவார். இங்கே பெண்கள் விளையாட்டுத் துறையில் எவ்வளவு ஈடுபடவேண்டும் என்று வாக்குவாதங்கள் உள்ளன.  ஆனால், இந்தியாவிலோ பெண்கள் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டும்.
  இணையத்தில் புதிய ஊடகங்கள் பற்றி ஆய்வு செய்து வரும் நீங்கள், இந்திய மொழிகளில் இணைய வளர்ச்சியைக் கவனித்து வருகிறீர் களா?  செப்டம்பரில் கலி·போர்னியாவில் தமிழ் இணைய மாநாடு நடந்தது. தமிழ் போன்ற மொழிகளில் இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பாலும் திறந்த ஆணைநிரல் (Open Source) தொழில்நுட்பத்தைச் சார்ந்தே வந்திருக்கிறது.  தாய்மொழியில் கணினி வளர்ச்சிக்குத் திறந்த ஆணைநிரல் நுட்பங்கள் துணை புரிவதற்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
  இது கட்டாயம் தேவை.  தமிழர்கள் இந்த முயற்சிகளில் தலைமை வகிக்கிறார்கள்.  அவர்கள் சாதனைகளைப் பார்த்துப் பெரிதும் மலைக்கிறேன். 
  இந்த முயற்சிகளின் வணிக வளர்ச்சி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
  பல பெரும் வணிக வளர்ச்சிகள் இருக்கும் என்று நம்புகிறேன்.  எல்லாத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சிலிகன் வேல்லியையும் சியாட்டலையும் மட்டுமே நம்பி இருக்காமல்  இவர்கள் ஒரு புதிய தடம் பதிப்பதைப் பார்க்கப் போகிறோம்.  இது மாபெரும் மாற்றங்களை உருவாக்கும் எனக் கருதுகிறேன்.
  உங்கள் கட்டுரைகளில் எண்ணியப் பிளவு (digital divide) பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மொழி சார்ந்த எண்ணியப் பிளவு ஏதும் இருக்கிறதா?
  ஆமாம்.  மொழி சார்ந்த எண்ணியப் பிளவு இருக்கத்தான் செய்கிறது.  அது மட்டுமல்லாமல் மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் எண்ணியப் பிளவோடு கருதவேண்டும்.  உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பற்றியும் அக்கறைப் பட வேண்டும்.  இது ஒரு சிக்கல்தான்.  இரண்டையும் இந்தியாவில் ஒருங்கே கவனித்துக் கொள்ள வேண்டும்.  இது அவ்வளவு எளிதல்ல.
  இந்த இணைய யுகத்தில், தென்றல் போன்ற இதழ்கள் அச்சில் வருவதால் மட்டுமே மக்களிடம் வரவேற்பு பெறுகிறது.  இது வலையிதழாக மட்டுமிருந்தால் இந்த வரவேற்பைப் பெற்றிருக் குமா என்பது ஐயமே.  மரபு வழி மற்றும் புதிய ஊடகங்களில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியர் என்ற முறையில் இந்தப் புதிருக்கு என்ன விடை காண்கிறீர்கள்?
  மக்களின் இணையப் பங்கேற்பு கூடக் கூட அச்சில் வெளிவரும் இதழ்களின் மதிப்பும் கூடுமே ஒழியக் குறையாது.  தென்றலின் அண்மை அனுபவம் அதைத்தான் காட்டுகிறது என்று எண்ணுகிறேன்.
  சிறுபான்மைப் பத்திரிக்கைகளின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  வரும் தலைமுறை இந்தியர்கள் அமெரிக்கச் சூழலில் மூழ்கும்போது வேற்று மொழிச் சிறுபான்மை இதழ்களை ஆதரிப்பார்களா?
  கட்டாயம். சிறுபான்மையினரின் எண்ணிக்கை கூடக் கூட, இந்த ஊடகங்களின் வளர்ச்சியும் கூடும்.  நான் பல சிறுபான்மைப் பத்திரிக்கைகளோடு நெடு நேரம் செலவழித்துப் பணியாற்றுகிறேன்.  சுயேச்சைப் பத்திரிக்கையாளர் சங்கம் (Independent Press Association) என்ற அமைப்பில் நாங்கள் சிறுபான்மைப் பத்திரிக்கைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம்.
  கொலம்பியா போன்ற பெரும் பல்கலைக் கழகங்கள் சிறுபான்மைப் பத்திரிக்கைகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருக் கின்றனவா?
  ஆம்.  நாடெங்கும் உள்ள பல பேராசிரியர்கள் சிறுபான்மைப் பத்திரிக்கைகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
  நீங்கள் நிறுவிய தெற்காசியப் பத்திரிக்கையாளர் சங்கம் (சாஜா/SAJA) பற்றிச் சொல்லுங்களேன். அமெரிக்கப் பெருவழி ஊடகங்களில் (mainstream media) தெற்காசியர் பற்றிய செய்திகளில் உள்ள குறைகளைக் களையச் சாஜா ஏதாவது செய்கிறதா?
  ஆம். அடிக்கடிச் செய்கிறோம்.  தெற்காசியர் செய்திகளைக் கூட்டுவது மட்டுமல்லாமல், பெருவழி ஊடகங்களின் செய்தித் தரம் பற்றிய கருத்துகளையும் தெரிவிக்கிறோம். எங்கள் சங்கத்தில் 800 உறுப்பினர்கள். அவர்களில் பலர் தமிழர்கள். என்னோடு சாஜாவை நிறுவிய இணை-நிறுவனர் எம். கே. சீனிவாசனும் ஒரு தமிழரே. 
  சர்வாதிகாரிகள், எதேச்சாதிகாரிகள், மற்றும் சந்தேகப் புத்தியுள்ள வல்லரசுகளின் கண்காணிப்பையும் தணிக்கையையும் புதிய ஊடகங்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?
  இது சிந்திக்க வேண்டிய ஒன்று.  பத்திரிக்கைச் சுதந்திரத்தை அடக்கி வைத்த எந்த அரசும் வாழாது, வளராது என்பதைப் புதிய ஊடகங்களும் உணரவேண்டும். பத்திரிக்கைச் சுதந்திரம் உள்ள சமுதாயத்தில் மக்கள் வளம் பெறுகிறார்கள்.  இதை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் காண்கிறோம்.  இது மேலும் பரவ வேண்டும். 
  அமெரிக்க ஊடகங்களின் தாக்கம் மற்ற அமெரிக்கத் தாக்கங்களைப் போலவே உலகின் மற்ற பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.  தெற்காசிய ஊடக வளர்ச்சியில் அமெரிக்கத் தாக்கம் எவ்வாறு இருக்கும்?
  அது.. மிகப் பரவலாகத்தான் இருக்கும்.  எல்லோருமே அமெரிக்காவை மையமாக வைத்து எல்லாவற்றையும் செய்கிறார்கள்.  அமெரிக்கர்கள் செய்வது எல்லாமே சரி என்று சொல்ல முடியாது.  இருந்தாலும், பலர் அமெரிக்கர்கள் வழியை மட்டுமே பின்பற்றுகிறார்கள்.   அது நல்லதல்ல.  
  பத்திரிக்கை தர்மத்தைப் பற்றிய கேள்வி ஒன்று.  பெருவழிப் பத்திரிக்கையாளர்கள் மக்கள் கண்ணுக்குத் தெரியாமல் செய்திகளைத் திரிக்கிறார்கள் என்று  போர் எதிர்ப்புப் போராட்டங்கள், பச்சை விழா போன்ற நிகழ்வுகளில் சந்திக்கும் மாற்று ஊடகப் பத்திரிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்களே!
  ஆம்.  அமெரிக்கப் பெருவழி ஊடகங்கள் நிறுவனத் தன்மை உடையவை.  எடுத்துக் காட்டாக ஜெனரல் எலக்டிரிக் நிறுவனம் ஹட்சன் நதியை மாசு செய்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  நான் என்.பி.சி. செய்தி நிறுவனத்தில் பத்திரிக்கை யாளனாய் இருந்தால், என். பி. சி. தொலைக்காட்சிச் செய்தியில் இதைப் பற்றி ஏதும் சொல்ல முடியாது. ஏனென்றால், என்.பி. சி. நிறுவனம் ஜெனரல் எலக்டிரிக் நிறுவனத்துக்குச் சொந்தம்.
  இது கண்ணுக்குத் தெரியாத விலங்குக்குக் கட்டுப்பட்டிருப்பதுபோல்..
  ஆமாம்.  உண்மைதான்.
  நீங்கள் ஒரு மலையாளி இல்லையா...
  ஆமாம்.  அதில் ஏதும் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன்! (சிரிக்கிறார்) 
  அதிலெல்லாம் ஏதும் பிரச்சினை இல்லை!
  என் வாழ்க்கை முழுவதும் என் பெயரை வைத்து என்னைத் தமிழன் என்று குழம்பிக் கொண்டிருக் கிறார்கள்.  எனக்கும் தமிழ் நாட்டுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன.  என் சித்தப்பா ஒருவர் ஆவடி ஆயுதத் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். என் தாய் மாமன் புகழ் பெற்ற இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனின் மகளைத் திருமணம் புரிந்து கொண்டவர். நாங்கள் அடிக்கடி சென்னைக்குச் செல்வதுண்டு.  எனவே நான் தமிழன் இல்லை என்றாலும் எனக்குத் தமிழர்களிடமும் சென்னைமீதும் நிறைய பற்றும் பாசமும் உண்டு. ஆனால், தமிழன் என்று என்னைக் குழப்பிக் கொள்வதால் நான் நிறைய பலன் அடைந்திருக்கிறேன் (சிரிக்கிறார்).
  அப்படியென்றால் ஓரளவுக்குத் தமிழர்களோடு உள்ள தொடர்பு உதவியிருக்கிறது என்று சொல்லுங்கள்!  (சிரிப்பு)
  கட்டாயமாக! மலையாளிகள் மிகச் சிறு பான்மையர்.  அதனால், தமிழன் என்ற குழப்ப அடையாளம் எனக்குக் கை கொடுத்திருக்கிறது என்று சொல்ல வேண்டும்! (சிரிப்பு)
  பேரா. ஸ்ரீனிவாசன் அவர்களே, தென்றல் வாசகர்களோடு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. வணக்கம்.
  ******
  தெற்காசியப் பத்திரிக்கையாளர் சங்கம்
   (South Asian Journalists Association) http://www.saja.org
  தெற்காசியப் பத்திரிக்கையாளர் சங்கம் (சாஜா/SAJA) பதினெட்டு உறுப்பினர்களோடு 1994-ல் மார்ச் மாதத்தில் தொடங்கியது.  தற்போது நியூ யார்க், மற்றும் அமெரிக்கா, கனடாவில் உள்ள பல நகரங்களில் தொழில் புரியும் 800க்கும் மேற்பட்ட தெற்காசியப் பத்திரிக்கையாளர்கள் சாஜாவில் உறுப்பினராய் இருக்கின்றனர்.  உறுப்பினர்களில் 70+ மாணவர்களும் உள்ளனர்.
  சாஜா தொழில்முறைப் பத்திரிக்கையாளர்கள் கலந்து கருத்து பரிமாறிக் கொள்ள உதவும் அமைப்பு.  வட அமெரிக்காவின் தெற்காசியப் பத்திரிக்கையாளர்களிடையே உள்ள பந்தங்கள் தழைக்க வேண்டும், வட அமெரிக்கச் செய்தி ஊடகங்களில் தெற்காசியச் செய்திகளின் தரம் உயர வேண்டும் என்பவை சாஜாவின் குறிக் கோள்கள். 
  சாஜா அரசியல் இயக்கம் அல்ல.  இது ஓர் அரசியல் சார்பற்ற அமைப்பு.  எடுத்துக் காட்டாக தெற்காசிய நாடுகளின் அரசியலில் சாஜா எந்த அணியோடும் சேருவதில்லை.  சாஜாவின் கவனம் எல்லாம் தெற்காசியப் பத்திரிக்கைத் தொழிலைப் பற்றிதான்.  சாஜாவின் உறுப்பினர்கள் பங்களா தேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா என்றத் தெற்காசிய நாடுகளின் வழித்தோன்றல்கள்.  அதனால், தெற் காசியாவில் உள்ள தனித்தனி நாடுகளைப் பற்றி மட்டும் கவனம் செலுத்துவதைத் தவிர்த்துத் தெற்காசியா,  தெற்காசிய அமெரிக்கா என்ற பெரிய கூட்டு அமைப்புகளைப் பற்றியே சாஜா அக்கறை கொள்கிறது.  பள்ளி, கல்லூரி, பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பத்திரிக்கைத் தொழில் படிக்க உதவிச் சம்பளம் கொடுக்கவும் சாஜா ஏற்பாடு செய்திருக்கிறது.
  சாஜா ஒவ்வொரு ஜூன் மாதமும் நியூ யார்க்கில் தேசிய மாநாடு நடத்துகிறது. மாநாட்டில் சாஜா பத்திரிக்கையாளர் சங்க விருதுகள் வழங்கப் படுகின்றன. தெற்காசியச் செய்திகளுக்கான சாஜா நடைக் கையேடு வட அமெரிக்கச் செய்தியாளர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நியூ யார்க், சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி, நடுமேற்கு அமெரிக்கா, பாஸ்டன் பகுதிகளில் சாஜா பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அட்லாண்டா, லாஸ் ஏஞ்சலஸ், ·பிலடெல்·பியா, டொராண்டோ, டெக்சாஸ் பகுதிகளில் கிளைகளை அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
  சாஜா பல மடலாடற் குழுக்களை அமைத்துப் பத்திரிக்கையாளர்களிடையே கருத்துப் பரி மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.  பத்திரிக்கைத் தொழிலில் வேலை தேடுவது, பல்கலைக் கழங்களில் சேர்வது போன்ற தலைப்புகளில் உரையாடல்கள் உள்ளன. பத்திரிக்கைத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டவும் ஒரு குழுவுள்ளது.
  அவ்வப்போது பொது இடங்களில் சாஜா நடத்தும் “பக்கோடா கொரிக்கும்” கூட்டங்களில்  கலந்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் வரவேற்கப் படுகிறார்கள்.
  பேட்டி: ரகுநாத் பத்மநாபன் ஒலிபெயர்ப்பு, தொகுப்பு: நிஷா ஸ்ரீனிவாசன் மொழிபெயர்ப்பு, தொகுப்பு: மணி மு. மணிவண்ணன் |