பூபதி பெரியசாமி, புதுச்சேரி வாழ் எழுத்தாளர். புதுச்சேரி கல்வித்துறையில் தொடக்கக் கல்விப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். சிறுவர்க்கான படைப்புகளையும் பெரியோர்க்கான சிறுகதைகளையும் எழுதியவர். பூபதி பெரியசாமி ஏப்ரல் 19, 1964 அன்று புதுச்சேரியில் பெரியசாமி - பாக்கியம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பெரியசாமி, பாரதிதாசன் நடத்திய 'குயில்' இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அச்சகம் ஒன்றை நடத்தியவர். பட்டப்படிப்பை முடித்த பூபதி, ஆசிரியர் பயிற்சி பெற்றார். புதுச்சேரி இளங்கோவடிகள் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் துறை ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின் புராணசிங்குபாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றினார். பின்னர் புதுச்சேரி கல்வித்துறையில் தொடக்கக் கல்விப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பூபதி தனது தந்தையார் மூலம் எழுத்தார்வம் கைவரப் பெற்றார். இளவயது முதலே சிறார் இலக்கியங்கள் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். மாணவர்களை வழிநடத்திய அனுபவத்தால் மாணவர்க்கும் சிறார்க்கும் ஏற்ற சிறுகதைகளை, நூல்களை எழுதினார். தினமலர் வாரமலர், கல்கி இதழ்களில் பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை எழுதினார். 'புதுவை சுபா' என்ற புனைபெயரிலும் எழுதினார். தினமணி சிறுவர் மணி, இந்து தமிழ் திசை, கல்கி, பிரதிலிபி உள்ளிட்ட பல இதழ்களில் பூபதி பெரியசாமியின் படைப்புகள் வெளியாகின. சிறார்களின் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் பல சிறார் கதைகளை எழுதினார். குழந்தைகளைக் கவரும் பல்வேறு புதிய களங்களைத் தன் படைப்புகளில் கையாண்டார். எட்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் 'ஆளுமைச் சிறுகதைகள்', 'காட்டுத் தாத்தா' ஆகியன குறிப்பிடத் தகுந்த நூல்களாக அறியப்படுகின்றன.
பூபதி பெரியசாமி, சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
விருதுகள் * புதுச்சேரி அரசின் நேரு குழந்தைகள் இலக்கிய விருது (இருமுறை) * புதுச்சேரி அரசின் கம்பன் விருது * சிறுவாணி வாசகர் மையம் சிறுகதைப் போட்டியில் பரிசு * அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம் சிறுகதைப் போட்டியில் பரிசு * இலக்கிய பீடம் இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு * கவிதை உறவு இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு * லேடீஸ் ஸ்பெஷல் இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு * உரத்த சிந்தனை இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு * திருப்பூர் தமிழ்ச்சங்கம் சிறந்த சிறுகதை நூல் பரிசு * சேலம் தமிழ்ச்சங்கம் சிறந்த சிறுகதை நூல் பரிசு * கரூர் திருக்குறள் பேரவை சிறந்த சிறுகதை நூல் பரிசு * ராஜபாளையம் மணிமேகலை மன்றம் சிறந்த சிறுகதை நூல் பரிசு * ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை சிறந்த நூலாசிரியர் விருது * எஸ்.ஏ.பி. அண்ணாமலை-கோதை ஆச்சி அறக்கட்டளை சார்பில் மணிமேகலை பிரசுரம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறந்த சிறுகதைக்கான பரிசு * புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் சிறந்த சிறுகதை நூல் பரிசு * ராஜபாளையம் மணிமேகலை மன்றம் சிறுகதைச் செல்வர் பட்டம் * சிறுகதைச் சித்தர் பட்டம் * சிறுகதைச் செம்மல் பட்டம் * கவி ஓவியா பதிப்பகம் சிறந்த சிறுகதைத் தொகுப்பு பரிசு * புதுச்சேரி அரசின் சிறந்த நல்லாசிரியர் மாநில விருது * புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது
பூபதி பெரியசாமி நூல்கள் ஆளுமைச் சிறுகதைகள், ஒரு கை ஓசை, கானல் நீர், காட்டுத் தாத்தா, யானையை வென்ற எறும்புகள், வித்தை படித்த விலங்குகள், தாய்மை, ஈரம் மற்றும் பல.
அரவிந்த் |