மணக்கால் ரங்கராஜன்
தனது தனித்துவமிக்க குரலால் ரசிகர்களின் மனதை வசீகரித்தவர் மணக்கால் ரங்கராஜன். இவர், திருச்சிராப்பள்ளி, லால்குடியை அடுத்த மணக்காலில் செப்டம்பர் 13, 1922 அன்று சந்தான கிருஷ்ண பாகவதர் - சீதாலக்ஷ்மி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். மணக்காலில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். உயர்கல்வியை லால்குடி அரசுப் பள்ளியில் படித்தார். ரங்கராஜனின் குடும்பமே இசைக்குடும்பம். தந்தை மிகச் சிறந்த வித்வான். பல்வேறு மாணவர்களுக்கு இசை போதித்து வந்தார். தந்தை சந்தான கிருஷ்ண பாகவதரையே தனது முதல் குருவாகக் கொண்டு சிறுவயது முதலே இசை கற்றார் ரங்கராஜன். படிப்புப் போக, எப்போதும் இசை கற்பது, பாடிப் பயிற்சி செய்வது என்று இசைப் பயிற்சிகளைத் தொடர்ந்தார். முதல் கச்சேரி மணக்கால் ரங்கராஜனின் 15ம் வயதில் நிகழ்ந்தது. தொடர்ந்து மணக்காலைச் சுற்றியுள்ள பல கோவில் விழாக்களில் ரங்கராஜனின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சிறு சிறு கச்சேரி வாய்ப்புகள் வந்தன. கச்சேரி ஒன்றில் மணக்கால் ரங்கராஜன் பாடிய, 'நின்னுவினா' அவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. அதன்மூலம் திரளான ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தார் ரங்கராஜன். தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் வரத் தொடங்கின.

அது அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிறி சுப்பிரமணிய ஐயர், மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியம், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோர் இசையுலகில் ஆதிக்கம் செலுத்திய காலம். அக்காலத்திலும் தனக்கென்று தனியாக ரசிகர்கள் கூட்டத்தை வசப்படுத்தி வைத்திருந்தார் ரங்கராஜன். தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, பெங்களூர் எனப் பல இடங்களுக்கும் சென்று கச்சேரி செய்தார். ஒரு சமயம் திருவையாற்றில் நடந்த கச்சேரியில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பிறகு கூட்டம் கலைந்து சென்றுவிட்டது. அடுத்து மணக்கால் ரங்கராஜன் பாடத் தொடங்கினார். சில நிமிடங்களில், கிளம்பிய எல்லோரும் திரும்பி வந்து அமர்ந்து கேட்கத் தொடங்கினர். கச்சேரி முடியும்வரை அவர்கள் செல்லவில்லை. அந்த அளவுக்கு அவரது குரலிலும் பிருகாவிலும் சொக்கிப் போய்க் கேட்டனர்.

மணக்கால் ரங்கராஜனின் குரல் மிக இனிமையானது. தனித்துவமிக்கது. பிருகாக்களில் நிபுணர். விளம்பம் மற்றும் த்ருத கலசங்களில் மிக வல்லவர். ராகங்கள் மற்றும் பல்லவிகளில் நிகரற்ற நிபுணத்துவம் பெற்றவர். அதனால் மணக்கால் ரங்கராஜன் சக கலைஞர்களால் மிகவும் மதிக்கப்பட்டார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு கச்சேரிகளைச் செய்தார். மைசூர் டி. சௌடையா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை போன்ற ஜாம்பவான்களுடன் அவர் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.



அரிய ராகங்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர் ரங்கராஜன், அரிதான பல்லவிகளை அநாயசமாகப் பாடும் திறன் பெற்றவர். விமர்சகர் சுப்புடு இவரது இசைத் திறனைக் கண்டு மகிழ்ந்து பாராட்டியதுடன், இவருக்கு ஹார்மோனியமும் வாசித்திருக்கிறார். சென்னை வானொலி நிலையம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பாடிவந்த ஒரே மூத்த இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன்தான். அவர், தான் செய்த வானொலி இசைக் கச்சேரிகளில் ஒரு பாடலைக் கூடத் திரும்பப் பாடியதில்லை என்ற சிறப்புப் பெற்றவர். ஒவ்வொரு முறையும் புதுப்புது பாடல்கள்தாம். அதுபோல திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவில் அறுபது வருடங்களுக்கும் மேலாகத் தவறாது கலந்துகொண்ட சிறப்புக்குரியவர். சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த வெவ்வேறு கச்சேரிகளில் தனித்தனி நடைகளை உள்ளடக்கிய தாளங்களுக்கு இரு கைகளையும் பயன்படுத்தி அரிய பல்லவி நிகழ்ச்சிகளை வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. மியூசிக் அகாதமி இவருக்கு மூத்த இசைக்கலைஞர் விருதை அளித்துச் சிறப்பித்தது.

தொடர்ந்து இடைவிடாமல் ஆறு மணி நேரம் கச்சேரி செய்யும் அளவுக்கு ஆற்றல் மிக்கவராக இருந்தார் ரங்கராஜன். அவரது மேதைமையைக் கண்டு வியந்த செம்பை வைத்தியநாத பாகவதர், ரங்கராஜனுக்கு 'சங்கீத சிம்மம்' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை விருது, பாரதியாரின் பாடல்களில் நிபுணத்துவம் பெற்றதற்காக நாதக்கனல் விருது போன்றவை இவருக்குக் கிடைத்தன. சங்கீத கலாசிகாமணி, ஞானகலா ரத்னா, காயக சாம்ராட், ஞானகலா சாகரா, தியாகபிரம்ம நாத விபூஷண், தமிழக அரசின் கலைமாமணி, யுகாதி புரஸ்கார் உள்பட பல்வேறு விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றார் ரங்கராஜன்.

ரங்கராஜனின் திறமையை அறிந்த லண்டன் வாழ் இலக்கியவாதி பத்மநாப ஐயர், லண்டனில் இவர் கச்சேரியை ஏற்பாடு செய்தார். அப்போது மணக்கால் ரங்கராஜனுக்கு வயது 84. வி.வி. சுந்தரம் அவர்களது அழைப்பின் பேரில் க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை விழாவிலும் கலந்துகொண்டு பாடியிருக்கிறார். ஹிந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசையிலும் மேதைமை மிக்கவர். டி.வி. கோபாலகிருஷ்ணன், டி.கே. கோவிந்தராவ், ரவிகிரண், டாக்டர் நர்மதா எனப் பல இசைக்கலைஞர்களால் பாராட்டப்பட்டவர். கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, மைசூர் சௌடையா தொடங்கி, இளம் இசைக் கலைஞர் சூரியப்பிரகாஷ் வரை பல தலைமுறை இசைக் கலைஞர்களுடன் பயணித்த சிறப்பிற்குரியவர். நிறைகுடம் தளும்பாது என்பதற்கேற்றவாறு தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக வாழ்ந்தார். மனைவி பத்மா ரங்கராஜன் வாய்ப்பாட்டுக் கலைஞர். மகள் பானுமதி ஹரிஹரன் வயலின் கலைஞர். மகன் மணக்கால் ஸ்ரீராம் புகழ்பெற்ற மிருதங்க வித்வான். மருமகள், விஜி ஸ்ரீராம் தம்புராக் கலைஞர்.

மணக்கால் ரங்கராஜன் பிப்ரவரி 26, 2019 அன்று சென்னையில் காலமானார். இவரிடம் இசை பயின்றவர்கள் உலகம் முழுக்கப் பரவி, அவரது இசைப்பணியைத் தொடர்கின்றனர். கர்நாடக சங்கீத உலகின் குறிப்பித்தகுந்த முன்னோடி இசைக் கலைஞர்களுள் ஒருவராக மதிப்பிடத்தக்கவர் மணக்கால் ரங்கராஜன்.

மணக்கால் ரங்கராஜனின் இசை வாழ்க்கையை அம்ஷன்குமார் ஆவணப்படமாகத் தயாரித்திருக்கிறார்.

அந்த அரிய ஆவணப்படத்தைக் காண:


மணக்கால் ரங்கராஜனின் சில கச்சேரிகள்:

நின்னுவினா:








பா.சு. ரமணன்

© TamilOnline.com