சாகித்ய அகாதமி விருது
பாரதத்தின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான விருதுகளைச் சாகித்ய அகாதமி வழங்கிக் கௌரவித்து வருகிறது. அந்த வகையில், தமிழில், 2024ம் ஆண்டுக்கான விருதுக்கு தேவிபாரதி எழுதிய 'நீர் வழிப்படூஉம்' நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ராஜசேகரன் என்னும் இயற்பெயர் கொண்ட தேவிபாரதி, ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் திரைப்படத்துறையில் பணிபுரிந்தார். காலச்சுவடு மாத இதழிலும், புதுயுகம் தொலைக்காட்சியிலும் பணியாற்றினார். பின் சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார்.

'நிழலின் தனிமை' இவரது முதல் நாவல். பரவலான கவனம் பெற்ற அந்த நாவலைத் தொடர்ந்து, 'நட்ராஜ் மகராஜ்', 'நொய்யல்' ஆகிய படைப்புகளைத் தந்தார். ஆறு சிறுகதைத் தொகுதிகளையும் மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். பரிசுபெறும் நாவல் கிராம மக்களின் வாழ்வியலையும், தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான உறவையும் உணர்வு பூர்வமாகப் பேசுகிறது.

டாக்டர் எம். ராஜேந்திரன், டாக்டர் க. செல்லப்பன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அடங்கிய நடுவர் குழு இந்த நாவலை விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த விருது, செப்புப் பட்டயம், சால்வையுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை அடங்கியது.

தேவிபாரதிக்குத் தென்றலின் வாழ்த்துகள்!

© TamilOnline.com