வைகுண்டம் எவ்வளவு தூரம்?
உங்கள் புத்தி கூர்மையாக இருந்து, பாரபட்சம் மற்றும் முன்கணிப்பு இல்லாததாகவும் இருந்தால் யதார்த்தம் ஒரு நொடியில் உங்களுக்குத் தெளிவாகும். ஏனெனில் இது மிகவும் எளிமையான விஷயம்தான். எல்லாக் குழப்பங்களையும் தாண்டி, பிரச்சனையின் அடிப்படையைப் பார்க்க வல்லதாக புத்தி இருக்கவேண்டும்.

ஒருமுறை மிகவும் கற்ற பண்டிதர் ஒருவர் பாகவதத்திலிருந்து கஜேந்திர மோக்ஷம் கதையை மகாராஜாவுக்கு முன்னால், ஏராளமான அரசவையினர் முன்னிலையில் மிகவும் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். பயங்கரமான முதலையின் வாயில் அகப்பட்ட யானையின் வேதனைக் குரலைக் கேட்ட பகவான், தான் எங்கு, எதற்காகச் செல்கிறோம் என்பதைக் கூட தேவியிடம் சொல்லாமல் வைகுண்டத்திலிருந்து அவசரமாகச் சென்றதை அவர் விவரித்தார்.

திடீரென்று, மகாராஜா குறுக்கிட்டு, "பண்டிதரே, இந்த வைகுண்டம் எவ்வளவு தூரம்?" பண்டிதருக்குத் தொலைவு தெரியவில்லை; அவர் குழம்பிவிட்டார். அரசவையில் இருந்த மற்ற அறிஞர்களுக்கும் தெரியவில்லை.

மன்னரின் அரியணைக்குப் பின்னால் நின்று சாமரம் வீசிக் கொண்டிருந்த சேவகன், தனது அதிகப்பிரசங்கத்தை அரசர் மன்னிப்பாரானால் பதில் தருவதாகக் கூறினான். பண்டிதர் சற்றே அதிர்ச்சி அடைந்தார், ஆனால் மகாராஜா அவனைப் பேச அனுமதித்தார்.

"மகாராஜா! யானையின் பிளிறல் சத்தம் கேட்கும் தூரத்தில் வைகுண்டம் இருக்கிறது" என்றான் அவன்.

ஆம், ஒரு பக்தன் உள்ளத்தின் வேதனை கூக்குரலாகவோ, முனகலாகவோ, பெருமூச்சாகவோ வெளிப்படும்போது, அந்த ஒலி எட்டும் தொலைவிலேயே இறைவன் இருக்கிறார். தன் பிள்ளைகளின் அழுகுரலைக் கேட்க அவர் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கிறார். துக்கப்படும் ஒவ்வோர் இதயத்தின் அழுகுரலையும் கேட்கும் தூரத்தில்தான் வைகுண்டம் உள்ளது. படிப்பறிவில்லாத அந்தச் சேவகன் இறைவனின் சர்வ வல்லமையையும் பரிவையும் நொடியில் அறிந்து கொண்டான்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2023

© TamilOnline.com