பாலைவனச் சோலை (அத்தியாயம் 9)
பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த அருண் வீட்டுப் பாடத்தைக் கடகடவென்று முடித்தான். அம்மா இன்னும் வேலையிலிருந்து வந்த பாடில்லை. அவனிடம் சாவி இருந்ததால் அவனே திறந்துகொண்டு வந்து வேலையைச் செய்து கொள்ளும்படி அம்மா அவனை பழக்கியிருந்தார்.

தனக்கு வேண்டிய கொறிக்கும் பண்டங்களை ஒரு தட்டில் எடுத்துத் தின்றுகொண்டே தனது வீட்டுப்பாடம் செய்ய ஆரம்பித்தான்.

சயன்ஸ் ஆசிரியை மிஸ் க்ளே தன்மேல் கோபமாக இருப்பாரோ என்று அருணுக்கு ஒரு நினைப்பு வந்து கொண்டுதான் இருந்தது. ஆசிரியை தன்மேல் இருந்த மதிப்பின் பேரில் வகுப்போடு பகிர்ந்து கொள்ளக் கேட்டபோது, ஒரேடியாக மறுத்து விட்டான். அப்படிச் செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

'அருண், நீ தப்பு எதுவும் செய்யவில்லை' அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அந்த டீச்சர் பண்ணினது சரியில்லை. வீட்டுப்பாடம் முடிக்கும் முன்னரே டபால் என்று தனது நோட்புக் கணினியில் ஒரு தேடல் போட்டு அந்தப் பாலைநில வீட்டுத் திட்டம்பற்றிப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

அருண், இன்னும் கொஞ்சம்தான் பாக்கி இருக்கு. சீக்கிரமா முடிச்சிட்டேன்னா அப்புறம் ராத்திரி தூங்கற வரைக்கும் நீ எல்லா விதமான தேடலும் செய்யலாம். கொஞ்சம் பொறுமையா இரு, சரியா? அவனே பேசிக்கொண்ட போது, ஒரு மெல்லிய சிரிப்பொலி கேட்டது. திரும்பிப் பார்த்தான், அம்மா ஓரத்தில் நின்றுகொண்டு புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்ன கண்ணா, யார்கிட்ட பேசிகிட்டு இருந்தே? யாருமே கண்ணுக்கு தெரியலையே? உன் கற்பனை நண்பர் யாராவது மறைஞ்சி இருக்காங்களா?" கீதா சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டார்.

அருண் கொஞ்சம்கூடத் தயங்காமல், "ஆமாம் அம்மா, என்னோட alter ego இங்க உட்கார்ந்திருக்கான். அவன் பேரு சரண். அவன் என் கண்ணுக்கு மட்டும்தான் தெரிவான்" என்றான்.

"அப்படியா, எனக்கும் அவனை அறிமுகம் பண்ணேன். சரி சரி, வீட்டுப்பாடம் முடிச்சிட்டயா? அப்புறம் அந்தப் பாலைநில ஆராய்ச்சி எப்படி போய்க்கிட்டு இருக்கு?"

அருண் பள்ளிக்கூடத்தில் நடந்தவற்றை விலாவாரியாகச் சொன்னான். தனக்கு கிடைத்த சுட்டிகள் பற்றியும் சொன்னான். முக்கியமாக அறிவியல் ஆசிரியை மிஸ் க்ளே வகுப்பில் நடந்ததை அம்மாவிடம் சொன்னான்.

"என்ன, நிஜமாவா அப்படிச் சொன்னே? அது தப்பில்லையா? அவங்க வகுப்புல நீ வேற ஏதோ பண்ணிட்டு இருக்கிறது எப்படி நியாயம். அவங்க வகுப்பை விட்டு வெளியே போகச் சொல்லி இருந்தாங்கன்னா என்ன பண்ணிருப்ப நீ? அவங்க உன் பேரில இருக்கிற ஒரு மதிப்புக்குதான அந்த மாதிரி ஷேர் பண்ணச் சொல்லி கேட்டிருக்காங்க?"

அம்மா சொன்னது சரியாகப் பட்டாலும் தனது தனித்திறமையைக் காட்ட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான். அந்த ஊரின் பெரிய காப்பாளன் என்று நினைப்பு இருந்தது. ஒன்றும் சொல்லாமல் குத்துக்கல் மாதிரி உட்கார்ந்து இருந்தான்.

கீதா அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை. அது மீண்டும் சண்டையில் போய் முடியலாம். மனதில் பட்டதை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

"அருண், மிஸ் க்ளே கிட்ட சொன்னபடி நீயே இந்த ஆராய்ச்சியைப் பண்ணுற, சரியா? நான் உனக்கு உதவமாட்டேன். எங்க காட்டு பாக்கலாம் உன் சாமர்த்தியத்தை."

அம்மா அப்படிப் பேசியதை ஒரு சவாலாக நினைத்தான். அன்று அறிவியல் வகுப்பில் நடந்து கொண்டதற்கு எதிர்சவால் விடுகிறார் என்பது அவனுக்குத் தெரியும்.

'அருண், உன்னால் முடியும். உன் திறமை எல்லாருக்கும் தெரியட்டும்' தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

கடகடவென்று வீட்டுப்பாடத்தை முடித்த பின்னர் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தான். ஏற்கனவே பண்ணி வைத்திருந்த புக்மார்க் எல்லாம் க்ளிக் செய்து அதில் வந்த விஷயங்களைப் படித்தான். ஒரு நல்ல தகவலறிக்கை ஒன்று கிடைத்தது. அதைப் படித்தான்.

'This deserted area outside of Earthamton is so barren that it has no use at all. The place has no distinctive flora and fauna. Any utilization of this barren land would be welcome.'

அப்படியே அப்பட்டமாக அந்தப் பாலைவன நிலம் எதற்கும் உபயோகமில்லை என்று எழுதப்பட்டிருந்தது. என்ன ஒரு பொய்! பாலைவனத்துப் பகுதிகள் செடிகொடிகளே இல்லாம இருக்குமா என்ன? அங்க இருக்கிற உயிரினங்கள் அங்கே மட்டும்தான் வாழ முடியும். சுத்த முட்டாள்தனமா இருக்கு இந்த அறிக்கை.

அருண் இன்னும் சில அறிக்கைகளைப் படித்தான். எல்லாமே என்னமோ

காப்பி அடித்த மாதிரி இருந்தது. ஒரே நபரே எல்லாவற்றையும் எழுதிய மாதிரி இருந்தது.

என்னங்கடா இப்படிப் பொய் சொல்றீங்க, என்னமோ அந்த இடத்த எதுக்குமே பயன்படுத்த முடியாதுன்னு! அருணுக்கு எரிச்சல் அதிகமானது. சொல்லி வைத்தாற்போல அவன் படித்த எல்லா அறிக்கைகளும் ஒரே செய்தியைத்தான் கொடுத்தன.

கடிகாரம் 7 மணி அடித்தது. இரவு உணவு சாப்பிடும் நேரம். அம்மா எங்கே என்று பார்த்தான். சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

"கண்ணா, சாப்பிட வா" அம்மாவின் அழைப்பு கேட்டது.

தாமதிக்காமல் அன்று படபட வென்று அவனே தட்டில் எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். கீதா வியப்போடு பார்த்தார். உட்காரக்கூட இல்லை அவன். நின்றுகொண்டே எல்லாவற்றையும் முடித்தான். தட்டை தாமதிக்காமல் உள்ளே சென்று அங்கணத்தில் போட்டான். கையைக் கழுவிக்கொண்டு போய் நோட்டுப்புத்தகக் கணினி முன்னே உட்கார்ந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தான்.

"கண்ணா…"

"உஷ்… நான் வேலையா இருக்கேன். தொந்தாவு செய்யாதீங்க."

"சரி, நான் மாடிக்குப் போகட்டுமா?"

அருண் பேசாமல் மும்முரமாக எதையோ படித்துக் கொண்டிருந்தான். கீதா அங்கிருந்து நகர்ந்து மாடியில் தன் அறைக்குப் போகப் படிகளில் ஏறினார்.

அருண் நேரம் போவதே தெரியாமல் பலவிதமான தகவல்களை படித்தான். எல்லாமே சொல்லி வைத்தாற்போல ஒரே தோரணையில் இருந்தன. அவனுக்கு வெறுப்பு அதிகமானது. கோபத்தில் அழுகை அழுகையாக வந்தது. அம்மாவிடம் உதவி கேட்கலாமா என்று நினைத்தான். அவன்தான் ரோஷக்காரன் ஆச்சே!

அங்கே விடுமுறை ஓய்விடம் கட்டுகிறவர்கள் எல்லாவற்றையும் தங்களுக்குச் சாதகமாகக் காட்டி எர்த்தாம்ப்டன் நகரத்தின் பாலைவனப் பகுதிகளில் ஒரு குடியிருப்புப் பகுதி கட்டுவதற்கான நன்மைகளை மட்டும் காட்டியிருந்தார்கள்.

அருண் கட்டடக் கம்பெனிகள் கொடுத்திருந்த காரணங்களையும் படித்துப் பார்த்தான். எல்லாவற்றிற்கும் அவர்கள் அவன் முன்னம் படித்த அதே ஆதாரங்களில் இருந்து விளக்கம் கொடுத்திருந்தார்கள்.

'…இந்த இடத்தில் வீடுகள் வந்தால், நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.'

'…பாலவனத்தை ஒரு சோலை ஆக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம். இதன்மூலம் பல பறவைகளுக்கு இது சரணாலயம் ஆகக்கூடும்.'

'…இதனால் நம் எர்த்தாம்ப்டனுக்கு மட்டுமே அல்ல, நம் பக்கத்து ஊர்களுக்கும் நன்மைதான்.'

எதிர்க்கேள்வி கேட்காமல் எர்த்தாம்ப்டன் நகராட்சி அனுமதி கொடுத்திருந்தது.

அவனுக்குத் திடீரென்று ஒரு யோசனை வந்தது. படபடவென்று ஒரு மின்னஞ்சல் எழுதி அனுப்பினான். அது அவனது அறிவியல் ஆசிரியை மிஸ் க்ளே அவர்களுக்கு. மணியைப் பார்த்தான். 11 ஆகியிருந்தது. அம்மா தூங்கிவிட்டார். அவனுக்கும் கண் சொருகியது.

தூங்கப் போகலாம் என்று மூடப்போனான். டிங் என்று மின்னஞ்சல் வந்ததற்கான மணி ஒலித்தது. என்ன என்று பார்த்தான். மிஸ் க்ளேதான். அவனுக்கு மிகவம் சந்தோஷம் கலந்த ஆச்சரியமாக இருந்தது. என்ன எழுதிஇருக்கிறார் என்று படிக்கும் முன்னர் அங்கேயே, அப்படியே தூங்கிப் போனான்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com