கருமுத்து தி. கண்ணன்
கல்வியாளரும், தொழிலதிபரும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காருமான கருமுத்து தி. கண்ணன் (70) மதுரையில் மே 23, 2023 அன்று காலமானார். பிரபல தொழிலதிபரும் கல்வியாளருமான கருமுத்து தியாகராஜ செட்டியார்-ராதா தம்பதியரின் ஒரே மகன் இவர். பட்டப்படிப்பு முடித்த கண்ணன், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக 2006 முதல் தொடர்ந்து 18 ஆண்டுகள் பதவி வகித்தார். 2009-ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்தினார்.

மதுரை பொற்றாமரைக் குளத்தைப் புனரமைத்தார். மதுரையின் சித்திரை வீதிகளைச் சீரமைத்தார். மதுரை மாநகர வளர்ச்சிக்குப் பல பங்களிப்புகளைச் செய்தார். சிறந்த தமிழ்ப் பற்றாளராகத் திகழ்ந்தார். திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரி, தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தலைவராகவும், கப்பலூரில் உள்ள தியாகராசர் நூற்பாலை இயக்குநராகவும் செயல்பட்டார். தமிழ்ச்சங்கம், ஜவுளிகள் வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். சிறந்த சமூக சேவகராகவும், கொடையாளியாகவும் திகழ்ந்தார்.

திடீர் உடல்நலக் குறைவால் கருமுத்து தி. கண்ணன் காலமானார். இவருக்கு மகன் ஹரி தியாகராஜன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

கருமுத்து தி. கண்ணனுக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com