Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
இது ஓர் உதயம்
- ரமணிசந்திரன்|ஜனவரி 2020|
Share:
(நாவலிலிருந்து ஒரு பகுதி)

அன்றாட வழக்கம்போலவே அன்றும் அதிகாலையில் துயில் களைந்து, கண்ணைத் திறவாமல் தாயின் குங்கும முகத்தை மனதில் கொணர்ந்து காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டு எழுந்தாள் அனுபமா.

மறைந்துவிட்ட தாயார் பெரிய அதிசயம் நிகழ்த்தித் தன்னைக் காப்பாற்றிவிடக்கூடும் என்ற நம்பிக்கையில் வேண்டிக் கொண்டாள் என்று இல்லை.

சும்மா, வேறு கதியற்றுப் போனதால் 'அம்மா, அம்மா' என்று உள்ளூர அழைத்து அதே வழக்கம் அவ்வளவுதான்.

மற்றபடி ஆள் ரூபத்தில் அன்னை வந்து அதிசயங்கள் நடத்த அவள் என்ன பாலநாகம்மாவா?

திரும்பித் தங்கையின் முகத்தை அந்த அரை இருளில் கூர்ந்தவள் ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள்.

அப்புறம் இவள் கதி என்ன ஆகும்?

தயங்கி மீண்டும் ஒரு முறை தங்கையை நோக்கினாள்.

இல்லையில்லை, இவள் அப்பாவைக் கொண்டு இருக்கிறாள். அதனால் இந்த அளவுக்குத் தொல்லையிராது.

ஏதேதோ யோசித்தபடி தன் போக்கில் சமையலறையில் காலை வைத்தவள், அங்கு எழுந்த கடாமுடா சத்தத்தில் பயந்து பின்னடைந்தாள்.

மெல்ல கையை நீட்டி விளக்கைப் போட்டுவிட்டு எலிகள் ஓடி மறைவதற்காகக் காத்து நின்றாள்.

காலையில் எழுந்து மீண்டும் கண்மூடும்வரை எத்தனை பயங்கள்.

விழித்து எழுந்தால் இன்னொரு நாளை எதிர்கொள்ள வேண்டும் என்ற பயம்.

எலிகளிடம் பயம்.

சித்தியிடம் பயம், அவளுடைய சித்தப்பா மகனிடம் பயம், பள்ளியில் சக ஆசிரியர்களிடம் பயம். ஒருநாள் இவளது சேலையில் கிழிசலையும் டப்பாவில் நீர்சோற்றையும் காட்டி அந்த நளினா செய்த கேலி மறக்கக்கூடியதாக இல்லையே.

டியூசன் கற்றுக் கொள்ளும் பிள்ளைகளிடம்கூட பயம்தான் - இனி இவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்?

மாலை மங்க வீடு வந்தால் மீண்டும் சித்தி...

பயந்து பயந்தே இந்த வாழ்க்கை முடிந்துவிடுமோ?

முடிப்பதற்காவது தைரியம் வருமா?

சாகத் துணிந்தவர்களுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்கிறார்களே!

இந்த எலிக்கே இவ்வளவு பயம் வந்தால்...

எங்கேயோ மணியடித்தது.

கூடவே அன்றைய வேலைகளும் நினைவு வர, எலிகள் எல்லாம் ஓடிவிட்டனவா என்று ஒரு தரம் நிச்சயப்படுத்திக் கொண்டு வேலைகளைத் தொடங்கினாள் அனுபமா.

காலைப் பலகாரம், மதியச் சமையல் எல்லாவற்றையும் சித்திக்குத் திருப்தியாக முடித்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் வசை புராணமும் நீர்ச்சோறுமாய் அவள் தலையில் விடியுமே.

கூடவே கொசுறாகத் திருத்தப்பட வேண்டிய பள்ளி நோட்டுகள் வேறு.

அவள் அஷ்டவதானம் செய்து கொண்டிருந்த போது, "அனுபமா, ஏ அனுபமா..." என்று சித்தியின் அழைப்பில் மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டுக் கள்ளிச் சொட்டாய்க் காப்பியைக் கலந்து எடுத்துக்கொண்டு ஓடினாள்.

காப்பியைக் கண்டதும் எழுந்தாள் ராஜாத்தி அம்மாள்.

வாய்கூடக் கொப்பளிக்காமல் தன் சிற்றன்னை காப்பி அருந்துவதை வழக்கம்போல ஒரு சின்ன அருவருப்புடன் சகித்து நின்றுவிட்டு, காலி தம்ளருடன் உள்ளே சென்றாள்.

ராஜாத்தி, திரும்பவும் படுத்துவிட அதற்குள் சித்தியின் பெருங்குரலால் தங்கை எழுந்து வந்திருந்தாள்.

"என்னக்கா என்னை எழுப்பக்கூடாதா? தனியாக எல்லா வேலைகளையும்..." என்று குறைபட்டபடி அவசரமாகப் பல்லைத் துலக்கினாள்.

ஆனால் காலைத் தூக்கம் என்றால் அவளுக்கு உயிர் என்பதும் அனுபமாவிற்குத் தெரியும். ஆகையால் தங்கையைத் தூங்க விட்டுவிடுவாள்.

ஏதோ, வேறு சுகம் இல்லையென்றாலும் இதையாவது தங்கை அனுபவிக்கட்டுமே என்றுதான்.

"ஷ்... மெல்லடி ரமா, தேய்க்கிற வேகத்தில் பிரஷ் எங்காவது குத்தி வைக்கப் போகிறது" என்று மிருதுவாய்த் தங்கையை எச்சரித்துவிட்டுத் தனக்கும் அவளுக்குமாகச் சற்று நீர் கலந்த காப்பியைத் தயாரித்தாள்.

தடுக்க முயன்றும் பிடிவாதத்துடன் சட்னிக்கு அரைத்த தங்கையைப் பார்க்கையில் அனுபமாவிற்கு உள்ளூர ஒரு ஆறுதலும் உண்டாயிற்று.

இவளைச் சித்தி இஷ்டம்போல ஆட்டிவைக்க முடியாது. சித்திக்கு ஈடுகொடுத்து நிற்க இவளால் முடியும்... முடியுமா?

வேலைகள் ஒருவாறு முடிந்து வருகின்ற நேரத்தில் மீண்டும் முன் அறைக் கட்டிலில் இருந்து கூப்பாடு - அதை அழைப்பு என்றும் கொள்ளலாம் - அனுபமாவை அழைத்தது

சரத்சந்திரரின் கதைகளைப் படித்து ரசித்து, அவரது கதாநாயகிகளில் இருந்து பொறுக்கி எடுத்து அன்பு மகளுக்குப் பெற்றோர் ஆசையாகச் சூட்டிய பெயர் அனுபமா.

அவ்வளவு ரசனை உணர்வுடைய ஒரு பெண்ணுடன் வாழ்ந்த தந்தையால் அந்த அழகிய பெயரை உச்சரிக்கக்கூட இயலாத இந்த மாதிரிப் பெண்ணுடன் எப்படி வாழ முடிந்தது? இவளை எப்படி மணந்து கொண்டார்?

ஒருவேளை இரண்டு பெண் குழந்தைகளோடு... அதிலும் ஒருத்திக்கு வயது பத்து. ஒரு சாதாரண மாதச்சம்பளம் வாங்கும் குமாஸ்தாவை மணக்க நடுத்தரக் குடும்பங்களில்கூட எந்தப் பெண்ணும் சம்மதிக்கவில்லையோ? ஒரு பெண்ணோடு வாழ்ந்து பழகிவிட்டுத் தனியே வாழ முடியாமல், கொஞ்சம் கீழான குடும்பத்தில், கொஞ்சம் பெயர்கூட வாங்கிய, கொஞ்சம் வயதும்கூடக் கூடுதலான பெண்தான் அப்பாவுக்கு கிடைத்தாளோ?

கடைசியில் இவளை மணந்த பிழையினால்தான் சீக்கிரமாய் இறந்தும் போனாரோ?

காலைப் பலகாரம் இட்லிதான் என்ற பதிலைச் சொல்லிவிட்டுச் சித்தியின் சொல்மாரியைச் கேட்டுக்கொண்டு நின்ற அனுவின் உள்ளே வழக்கம் போலவே இந்தக் கேள்விகள் அத்தனையும் தோன்றலாயின.

"என்னடி முளிச்சுக்கிட்டே நிற்கிறே" என்று சித்தியின் குரல் உயரவும் பயந்து, "இல்லை சித்தி... நேரமே..." என்று மெல்ல்த் தொடங்கினாள்.

"என்னடி நேரம்? இது ஒரு சாக்கு உனக்கு, அதெல்லாம் சும்மா... உடம்பு நோவாமத் துன்னனும் உனக்கு. அரிசியும், உளுந்துமா மிசினிலே கொடுத்துட்டுப் போயிட்டா மறுநாள் அவிச்சுக் கொட்டிடலாம். ஒரு நாள்தான் இடுப்பை வளைச்சு அரிசி இடிச்சு ஒரு ஆப்பம், இடியாப்பம் என்று செய்கிறதுக்கு என்ன? ஒரு நல்ல சாப்பாட்டுக்கு நாக்கு செத்துப் போச்சுது" என்றாள் ராஜாத்தியம்மாள், நாலு வீட்டுக்கு எட்டும் குரலில்.
காலையில் சமையல் செய்து வைத்துவிட்டு ஓடு ஓடு என்று பள்ளிக்குச் சென்று பள்ளி வேலை முடித்து மூன்று இடங்களில் 'டியூசன்' சொல்லிக் கொடுத்துவிட்டு மீண்டும் வந்து இரவு சமையலையும் செய்வது என்றால் அது உடம்பு நோகாமல் 'துன்னுவதா?'

உள்ளத்துள் துடித்த வார்த்தைகள் துணிவின்மையால் தொண்டைக்கு வெளியே வராமல் உள்ளே மடிந்தன.

"சரி சரி, ஊமைக்கோட்டான் மாதிரி சும்மா நிற்காதே. இந்த சனி, ஞாயித்திலேயாவது நல்லபடியாச் செய். ஒரு நாள் ஆப்பம், மறுநாள் இடியாப்பம்."

"உன்னோட ஆசை தெரிஞ்சுதான் எல்லோருக்குமா இடியாப்பமும் பாயாவும் வாங்கியாந்தேன்" என்று வாயிற்புறமாய்க் கேட்ட குரலில் ராஜாத்தியம்மாளின் முகம் மலர, அனுபமா மின்னலென உள்ளே மறைந்தாள்.

"வா தம்பி, வா" என்று ராஜாத்தி வாய்நிறைய உபசாரம் செய்ய, உள்ளே வந்து கையில் இருந்த அலுமினிய டப்பாவைக் கட்டிலில் வைத்துத் தானும் அட்டகாசமாக அமர்ந்து கொண்டான் கண்ணபிரான்.

"கண்ணு, அனுபமா, வா வா, வந்து நீயும் ரெண்டு எடுத்துக்க" என்று உரிமையோடு அழைத்தான்.

உள்ளிருந்து மூச்சுவிடும் சத்தம்கூட இல்லாது போயிற்று.

சட்டென அவன் கடுக்க "இன்னா" அக்கா, என் பேச்சுக்கு ஒரு மருவாதி இருக்குதா பாரு? இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். இந்தா இந்தான்னு, நீயும் தான் மூணு வருசமா சவ்வு இழுத்துக்கிட்டே இருக்கே. என்னைக்கு கல்யாணமின்னு இன்னைக்கே ஒரு முடிவு சொல்லியாகனும் ஆமா" என்றான் கடும் குரலில்.

நெஞ்சு தடதடக்கச் சுவரோடு ஒட்டிக் கொண்டு நின்றாள் அனுபமா.

தமக்கையின் முகத்தைப் பார்த்தபடி ரமாவும் பேசாமால் நின்றாள்.

ஆனால் ராஜாத்தியும் ஒன்றும் கொக்கல்லவே?

பொன்முட்டை இடும் வாத்தை அவ்வளவு எளிதாய் விட்டுவிடுவாளா?

ஒரு சாகசச் சிரிப்புடன், "அப்படி ஆத்திரப்பட்டாக்க எப்படி நைனா? நெலமையத்தான் உன்கிட்ட சொல்லியிருக்கேனே. ஏதோ இவ மாதிரி அந்தச் சின்னக்குட்டிக்கும் படிப்பு ஏறினாலும் ஏதோ சமாளிக்கலாம். இப்ப அவ கல்யாணத்துக்குமில்லே இவ சம்பாத்தியத்திலேயே சேர்க்க வேண்டியிருக்கு. உன்ன மாதிரி ஒண்ணும் வேண்டாமின்னு வருவானா என்ன?" என்று சோப்புப் போட்டவளைக் கண்ணபிரான் இடைமறித்தான்.

"சும்மா சும்மா இதே பேசாதக்கா. சின்னவ கல்யாணத்தை நானே மின்ன நின்னு செய்யுறேங்கிறேன். வேறே என்ன தாமதம்.."

"ஆங் ஆங்... அதானே வேண்டாங்கிறது. நமக்குள்ளேயே என்ன மறைப்பு? இப்ப பொண்ணு வேணுமின்னு இடியாப்பமும் பாயாவுமா வர்றே. இதுக்கு மின்னே அக்கா நெனைப்பு எப்பவாச்சும் வந்திச்சா? நாளைக்கு உன் காரியம் ஆன பின்னாடி கைய விரிச்சியானா நான் இன்னா பண்ண முடியும் சொல்லு."

"மூணு வருசமா நீயும் கேக்கிறேன், கேக்கிறேன்னு தான் சொல்றே, இன்னுமுமா சேர்த்து முடிக்கலை?" என்று எரிச்சலோடு மொழிந்தான் அவன்.

"என்னை இன்னா பண்ணச் சொல்றே? இவ ஒருத்தி சம்பாத்தியம். இதிலே சாப்பாட்டுச் செல்வே என்ன ஆவுதுங்கிறே. இதுலெ நானு வயித்தக்கட்டி... வாயக்கட்டி... இல்லாட்டி ஒண்ணு செய்யேன் கண்ணு. எப்படியோ சிரமப்பட்டு பெரிய பத்திலே ஒரு அஞ்சு கொணாந்து கொடுத்துடு. மறுநாளே ஜாம் ஜாமுன்னு பெரியவளத் தலைமுடியப் பிடிச்சு இழுத்துகிட்டுப்போ" என்றாள் ராஜாத்தி தாராளமாய்.

"பெரிய பத்துன்னா....ஜம்பது ஆயிரமா? அதுக்கு நான் எங்கக்கா போவேன்?" என்று இறங்கி வந்தான் தம்பி.

"அதான் சொல்றேன் .ஏதோ சித்த பொறு நயினா. என்னைக்குன்னாலும் அவ உனக்குத்தான்... முதல்ல டப்பாவைக் குடு... சூடு ஆறுமின்ன துன்றேன்."

தொடர்ந்து அலுமினிய டப்பாக்கள் ஓசைப்பட்டன.

ராஜாத்தியுடன் கூடச் சேர்ந்து உண்டுவிட்டு ஒரு பெரிய ஏப்பத்துடன் கண்ணபிரான் வெளியேறிய பிறகும் கூட அனுபமா சமையல்கட்டுக்கு வெளியே தலைகாட்டவில்லை.

மதியச் சாப்பாட்டுக்காக டிபன் பாத்திரங்களில் ரமா உணவை எடுத்து வைப்பதை மனதில் பதியாத பார்வையாகப் பார்த்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள்.

கைக்குக் கிட்டும் வருமானத்தைவிட மனம் இல்லாமல் முடிகிற வரையில் சித்தி அவளது திருமணத்தை தள்ளித்தான் போடுவாள். செலவில்லாத வேலைக்காரி வேறு.

தழைந்தும் குழைந்தும் சிரித்தும் பசப்பியும்... இயன்றவரை சமாளிப்பாள்.

ஆனால் அந்தக் கண்ணபிரானும் அவளுக்கு இளைத்தவன் இல்லையே.

சித்தியைப் புரிந்துகொண்டு அவன் மிரட்டத் தொடங்கினால், கழற்றிய செருப்பாய் இவளை அவன் காலடியில் வீசத் தயங்கமாட்டாளே இந்த ராஜாத்தி அம்மாள்.

அந்தக் கண்ணபிரானை எண்ணிப் பார்க்கையில் அனுபமாவிற்கு உடம்பு கூசியது.

சதா பீடியும், சாராய வாடையும், கூடவே தெருமுனையில் வசிக்கும் ஒரு மாதிரியான கிளியாம்பாவின் வீட்டுக்கு அவன் அடிக்கடி வருவதும் ஊர் அறிந்த ரகசியம்தான்.

இப்படிப்பட்ட ஒருவனா அனுபமாவின் கணவன்.

சீச்சீ! கீழே விழுந்ததைத் தொட்டாலே அழுக்குப்பட்டிருக்கும் என்று மெல்லக் கண்டிக்கும் தாயின் குரலும், சன்னமாய்ச் சுளிக்கும் முகமும் நினைவு வந்தது.

இந்த மாதிரி ஒருவனை வீட்டுப் படி ஏற விடுவாளா தாயார்?

இவள் உனக்குத்தானாமே?

துக்கம் தொண்டையை அடைத்து, கண் ஓரம் கசிந்து நாசி விரிகையில் ,தலையைச் சரித்து யோசனையோடு நோக்கும் தங்கையின் முகம் அனுவின் கருத்தில்பட்டது.

வழக்கம்போல விழுங்கிக் கொண்டவள், "சித்திக்கு எடுத்து மூடி வைத்துவிட்டாயா ரமா? நேரமாச்சே?" என்று எழுந்தாள்.

சிற்றன்னையின் கடைசி நேரக் குற்றேவல்களையும் முடித்துவிட்டு ஒருவாறு வீட்டைவிட்டுக் கிளம்பிய அனுபமா, அன்றைய தினம் வேறு மாதிரி முடியப்போகிறது என்று சற்றும் நினைக்கவில்லை.

ரமணிசந்திரன்
Share: 




© Copyright 2020 Tamilonline