Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல் - போகிற போக்கில்
வீராங்கனை லட்சுமி தேவி நாயுடு
- |அக்டோபர் 2002|
Share:
Click Here Enlargeசந்திப்பு: பாலுமணிவண்ணன்
புகைப்படம்: ஆப்ரகாம்

அது 1943 ஆம் ஆண்டு.

ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி

மலேசியா நாட்டின் ஈப்போ நகரம்.

''நேதாஜி வருகிறார்...நேதாஜி வருகிறார்'' என்கிற காந்தச் செய்தியைச் சுமந்து கொண்டு, ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்து காற்று, ஒட்டிக்கொண்ட இதயங்களையெல்லாம் கொண்டுபோய் நேதாஜியின் முன்பு கொட்டுகிறது.

அவற்றின் சுதந்திரத் துடிப்பிற்கிடையே, சிறுத்தைப் புலியென நேதாஜி பேசுகிறார்.

''இந்தியத்தாய் ஈன்றெடுத்த சகோதர, சகோதரி களே! நம் பாரதத்தில் ஆண்கள் மட்டுமல்ல; பெண் களும் வீரப்போர் புரிந்திருக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க ஒருவரான ஜான்சிராணி பெயரில் ராணுவப்பிரிவு ஒன்றைத் துவக்கி யிருக்கிறேன். நம் தாய்நாட்டை வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவிக்க வேண்டு மென்கிற ஆர்வமும் துடிப்பும் மிக்க இளம் யுவதிகள் - 18 வயது முதல் 30 வயது வரையுள்ள திடகாத் திரமானவர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேரலாம்'' - என்று நேதாஜி பேசி முடிக்கக்கூட இல்லை. பெண்களெல்லாம் ''நான் சேருகிறேன்... என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நேதாஜி'' என்று, உணர்ச்சிப் பிரவாகமாக ஓசை எழுப்பு கிறார்கள். 'ஜெய்ஹிந்த்...' 'ஜெய்ஹிந்த்...' என்று உக்கிரமாக கோஷம் போடுகிறார்கள். ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு நேதாஜியை தரிசிக்க நெருங்குகிறார்கள்.

அவர்களில் இருவர்தான் லட்சுமி தேவி நாயுடுவும், அவரது தங்கை ருண்மணி தேவி நாயுடுவும்!

21வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, இந்திய விடுதலைக்காகப் போரிட்ட லட்சுமி தேவி நாயுடுவுக்கு இப்போது வயது 80!

அவரது கந்தக நினைவுகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தபோது,

''எனக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. கேட்டவரை ஆட்கொள்ளும் ஆளுமை மிக்க நேதாஜியின் பேச்சு எங்கள் ஒவ்வொருக்குள்ளும் சுதந்திர தாகத்தை ஊற்றெடுக்க வைத்தது. பேச்சின் இடையே, ராணுவச் செலவை ஈடுகட்ட நீங்கள் ஒவ்வொருவரும் நன்கொடை வழங்க வேண்டு மென்று நேதாஜி கேட்டுக் கொண்ட அந்தக் கணமே பெண்கள் அனைவரும் தங்கள் காது, கழுத்து, கைகளில் கிடந்த அத்தனை நகைகளையும், ஏன் தாலிக் கொடியையும்கூட கழற்றிக் கொடுத்தனர். நானும் என் தங்கையும் எங்கள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி நேதாஜியின் காலடியில் காணிக்கையாக்கினோம்.''

- என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் லட்சுமி தேவியிடம் நகையை நீங்கள் கழற்றிக் கொடுத்தது உங்கள் வீட்டில் பிரச்சனையை ஏற்படுத்தவில்லையா- என்று கேட்டோம்.

''எங்கள் தந்தையார் ஆங்கில அரசின் கீழ் உதவித் தணிக்கையாளராகப் பணிபுரிந்து வந்தாலும், இந்திய சுதந்திர இயக்கத்தைப் பற்றியும், இயக்கத்தின் தலைவர்கள் அடைந்து வரும் துன்பங்கள் குறித்தும் எங்களுக்கு எடுத்துக் கூறுவார். இந்தியாவிற்கு வெளியே வசித்துக் கொண்டிருப்பதால், தாய் நாட்டிற்காக தம்மால் சேவை செய் முடியவில்லயே என்று அடிக்கடி வருத்தப்படுவார். தவிரவும், எங்களுக்கு முன்னரே எனது தம்பிகள் இருவர் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்திருந்தனர். ஆகவே எங்களுக்கு பெற்றோர் இடைஞ்சல் ஏதும் செய்யவில்லை. சொல்லப்போனால் எங்களை இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்தினார்கள்'' என்கிறார்.

1943ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி சிங்கப்பூர் வாடர்லூ தெருவில், ஜான்சிராணி ரெஜிமென்ட்டின் முகாம் துவக்கப்பட்டது. முற்றிலும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 150 வீராங்கனைகள் துவக்க (போர்) விழாவுக்கென காத்திருக்க, கிழக்கைக் கிழித்துக் கொண்டு நேதாஜி வாசற்கதவைத் தள்ளிக் கொண்டு வந்தார். அவருடன் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமை அதிகாரியான பான்ஸ்லே மற்றும் ஜான்சிராணி ரெஜிமென்டின் கேப்டன் லட்சுமியும் (குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளாகத் தற்போது போட்டியிட்டவர்) வந்திருந்தனர்.

அனைவருக்கும் நேதாஜி தமிழில் வணக்கம் சொல்லி, இறுக்கமான தோழமையை வெளிப் படுத்தும் வகையில் கைகுலுக்கினார்.

''தோழியர்களே, உங்களின் தாய்நாட்டுப்பற்றை நான் பாராட்டுகிறேன். உங்களுக்கு நான் வழங்கும் மூன்று மந்திரங்கள் ஒற்றுமை... நம்பிக்கை... தியாகம்! நாம் அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்பதால் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நம் தாய்நாடு நிச்சயம் விடுதலைபெறும் என்கிற நம்பிக்கை, அத்தகைய விடுதலையை நம் தாய்நாடு அடைவதற்காக நம் உயிரையும் தியாகம் செய்யத் தயாராகியிருக்க வேண்டும்'' என்று சிறிது நேரம் பேசிவிட்டு உடனே கிளம்பிவிட்டார். ''எங்கள் உயிரில் மின்சாரம் பாய்ச்சின அந்த வார்த்தைகள்'' என்று உணர்ச்சி வசப்படுகிறார் லட்சுமிதேவி நாயுடு.

இந்திய தேசிய ராணுவத்தைப் பொறுத்தவரை, ஒரு ராணுவ வீரன் சாதாரணமாக மூன்றாண்டு காலம் பெற வேண்டிய அனைத்து வகை ராணுவப் பயிற்சி களையும் ஆறு மாதங்களுக்குள்ளாகவே பெற்றுக் கொண்டு போர் முனைக்குச் செல்லத் தயாராக வேண்டும். இதற்கு ஜான்சிராணி ரெஜி மென்டைச் சேர்ந்த மகளிரும் விதிவிலக்கல்ல. இயந்திரத் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முதலிய வற்றைக் கையாளுதல்; கையெறிகுண்டு வீசுதல், துப்பாக்கியில் பொருத்தி வெடிகுண்டு களைத் தொலைவில் விழச் செய்து வெடிக்க வைத்தல், துப்பாக்கியில் பொருத்தப் பட்டுள்ள குத்து ஈட்டியால் எதிரியைத் தாக்குதல், தந்திச் செய்தி, சமிக்ஞை அனுப்புதல், Map Reading எனப்படும் வரைபடம் படித்தல், இவற்றோடு இன்னும் பல சண்டையிடும் உத்திகளும் பெண்களுக்குக் கற்றுத் தரப்பட்டன.

வழக்கம்போல ஒருநாள் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்கள் முகாமிற்கு நேதாஜியின் போர்ப் பிரகடனம் வந்து சேர்ந்தது.

''தோழர்களே! ராணுவ அதிகாரிகளே! வீரர்களே! நம்முடைய பணி தொடங்கி விட்டது ''டில்லி சலோ'' என்ற முழக்கம் நமது உதடுகளிலிருந்து புறப்பட்ட வண்ணமாக நாம் முன்னேறி போராடுவோமாக! புதுடெல்லி வைஸ்ராய் மாளிகை மீது நமது நகரி லுள்ள புராதனமான செங்கோட்டையிலே நம்முடைய 'ஆஸாத்ஹிந்த்' ராணுவம் வெற்றிப்பவனி வரவேண் டும். அதுவரையும் நாம் தொடர்ந்து போரிடுவோ மாக!''

- என்று நேதாஜி, ஆணையிட்டதும் பெண்களின் முகாமில் பொத்தி வைத்திருந்த போர் மனநிலை விசுவரூபமெடுத்தது. தன் லட்சியம் நிறைவேறப் போகிற வெறி லட்சுமிதேவி நாயுடுவுக்கும்!

ஆனால் முதல் கட்டமாக 300 பேரை மட்டுமே போர் முனைக்குத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் நான் இல்லை. ஆத்திரமும் அழுகையுமாக வந்தது எனக்கு. எங்களது காண்டிங் ஆபீசர் மனோரஞ்சிதா சத்யவதி தேவரிடம் போய், ''என்னை போர் முனைக்கு அனுப்புவதற்காகத்தானே தேர்ந்தெடுத்தீர்கள்... ஏன் அனுப்பவில்லை?” என்று விளக்கம் கேட்டேன். ''வீராங்கனைகளுக்கு நீ நன்றாகப் பயிற்சி கொடுக்கிறாய். இன்னும் நிறைய பேருக்கு பயிற்சி தரத்தான் உன்னை நிறுத்தியிருக்கிறேன்'' என்றார்.

ஆக, அடுத்தடுத்த களங்களுக்குப் போர் புரியப் புறப்படும் ஆவலில் இருந்த என்னில் இடி இறங்கியது போல் வந்து சேர்ந்தன போர்முனைச் செய்திகள்.

இம்பால்வரை வெற்றிபெற்ற இந்திய தேசிய ராணுவம் அதற்கு அப்பால் வெற்றிபெற முடியாமல் போனது. அப்போது வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையும், ஜப்பானில் பெய்த அணு ஆயுத மழையும் பெரும் தடைக் கற்களாகத் தோன்றிவிட்டன.

ஒருநாள் நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. எங்களது பெண்கள் முகாமுக்குக் களையிழந்த முகத்துடன், ஆனால் கம்பீரமான நடையுடன் நேதாஜி வந்தார்.

''ஹிரோஷிமா நாகசாகி அணு ஆயுதப் பேரழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜப்பான் அரசால், நமக்கு உதவ முடியவில்லை. ஆகவே நமது இந்திய தேசிய ராணுவம் சண்டையை நிறுத்திக் கொள்ள வேண்டிய தாகிவிட்டது. இதில் கவலைப்பட ஏதுமில்லை. இது ஒரு பின்னடைவுதான். இறுதி வெற்றி இந்தியா வுக்கே. ஆகவே, உங்களுக்கு ஒரு நீண்ட விடுப்புத் தருகிறேன். பிறகு நான் அழைக்கும்போது வாருங்கள்'' என்று சொல்லிச் சிலையாக சிறிது நேரம் எங்களையே பார்த்துக் கொண்டு நின்றார். நாங்களெல்லாம் கண்கலங்கி அழுதுவிட்டோம்.

சண்டையிட்டு வெள்ளையனை வெளியேற்ற வேண்டுமென்று எவ்வளவு வெறியுடன் வந்தோம். அது இப்படி கைகூடாத கனவாகப் போய்விட்டதே என்கிற வருத்தம் எல்லா வீராங்கனைகளுக்கும் இருந்தது.

ப்ச்... உறையில் உறங்கும் கத்திகளாக துப்பாக்கி யில் தூங்கும் தோட்டாக்களாக எல்லோ ரும் அவரவர் ஊருக்குத் திரும்பினோம். அந்தச் சமயத்தில் சிலர் என்னைத் திருமணம் செய்துக் கொள்ள விரும்பி பெண் கேட்டு வந்தனர். என்னவோ எனக்கு திருமண ஆசையே தோன்றவில்லை. ஆகவே பிறகு அந்த எண்ணத்தோடு ஆட்கள் வருவது நின்று போனது.

அதன்பிறகு ஒருநாள், ஓர் ஆங்கில அதிகாரி வந்தார். இந்திய தேசிய ராணுவம் பற்றிய விசார ணைக்கு வரவேண்டுமென்று அழைத்தார்.

நான் தைரியமாகப் போனேன்.
ஈப்போ நகர நீதிமன்றக் கட்டிடவளாகத்தில் விசாரணை ஆரம்பமானது.

விசாரணைக் குழுவின் கர்னல் முதல் மேஜர் வரையிலான பதவி வகிக்கும் ஐந்து அதிகாகிள் இருந்தனர்.

அவர்களில் ஓர் அதிகாரி, ''இந்திய தேசிய ராணுவத் தில் நீ ஏன் சேர்ந்தாய்?'' என்று கேட்டார்.

''உங்களது பிரட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து எங்ளது தாய்நாட்டை விடுவிப்பதற்காக'' என்றேன்.

நேருக்கு நேர் அப்படி ஒரு பதிலை எதிர்பாராத அந்த அதிகாரி, ''ஓஹோ, அந்தளவுக்கு நாட்டுப் பற்றா! இதோ பாரம்மா, என்னை நீ போர் முனையில் சந்திக்க நேரிட்டால், என்ன செய்திருப்பாய்?'' என்று கேட்டார்.

சற்றும் தயங்காமல் நான், ''உங்களை சுட்டுக் கொன்றிருப்பேன்'' என்றேன்.

இந்தப் பதில் இன்னும் அவருக்கு அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும். ஆனாலும் அவர், "துணிச்சல் மிக்க பெண்ணாக இருக்கிறாய்'' என்று என்னைப் பாராட்டினார்.

பிறகு சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டோம் என்கிற லட்சுமிதேவி நாயுடுவிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்டோம்.

இந்திய தேசிய ராணுவம் செயலிழந்து போனாலும் அதன்பின் 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் நமது நாட்டுக்கு விடுதலை கிடைத்ததும், உங்கள் உணர்வு எப்படியிருந்தது?

நாட்டு விடுதலைக்காக நடத்திய போரில் வெற்றி கிடைத்தது மகிழ்ச்சிதான். ஆனால். நேதாஜி என்ன ஆனார், இன்றாவது தோன்றி, மக்களுக்கு உற்சா கமும், உத்வேகமும் அளிக்க மாட்டாரா என்கிற ஆதங்கமும் அபிலாஷையும்தான் அன்று எங்களுக்கு அதிகமாக இருந்தது. ஆனால், இப்பவும் ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நேதாஜி தலைமையில் நாம் விடுதலை வாங்கி யிருந்தால் நாடு இந்த நிலைமைக்குப் போயிருக் காது.

ஆழமான நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் விட்டுச் சென்றிருக்கிறது நேதாஜியின் தலைமை. அந்த வெற்றிடத்தை நிரப்புகிற தலைவரையும், நாளையும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது இந்தியா!

நன்றி: பெண்ணே நீ

சந்திப்பு: பாலுமணிவண்ணன்
புகைப்படம்: ஆப்ரகாம்
Share: 




© Copyright 2020 Tamilonline