Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கல்லுக்குள் கனிவு
- ஆர்.எஸ். ஜேக்கப்|டிசம்பர் 2019|
Share:
சின்னப்பொண்ணு தலைமுடியைக் கோதியவாறு சிக்கலெடுக்கும் சிணுக்கோலியுடன் வந்தாள்.

"என்னக்கா சிணுக்கோலி" என்று தங்கச்சி நல்லதாய் கேட்டாள்.

சின்னப் பொண்ணு சொன்னாள்: "வாழ்க்கை முழுவதும் சிக்கல்தான். உலகமே சிக்கல்தான். இடியாப்பச் சிக்கலாயினும், இடி விழுந்தாற்போன்ற கொடிய சிக்கலாயினும் தெய்வ அருளாலும், உலக ஞானத்தாலும் வெல்ல வேண்டும். இன்று நம்மிடையே பிரபல வியாபாரி வேதமாணிக்கம் அய்யா அவர்கள் வந்துள்ளார்கள். அவர் தம் வாழ்வின் அனுபவ நிகழ்ச்சி ஒன்றைச் சொல்வார்கள்." என்று சொல்லி பத்தமடை பாயில் உட்கார்ந்தாள்.

வேதமாணிக்கம் பேச ஆரம்பித்தார்...

இரங்கூன் தங்கையா என்றால் 'புதியம்' வட்டாரத்தில் தெரியாதார் கிடையாது. பெரிய பருத்தி வியாபாரி. கரிசல் வட்டாரக் கிராமங்களில் பருத்தியை வாங்கி தூத்துக்குடி ஆர்.வி. மில்லில் கொண்டு விற்பார். 1940களில் கரிசல் வட்டாரப் பருத்திக்கு பெரும் கிராக்கி இருந்தது.

ஆள் வாட்டசாட்டமாக நல்ல வளர்த்தியாக இருப்பார். நேர்த்தியான மீசை. அதட்டலான குரல். அவருக்குப் புதியம் ஊரில் ஒரு பெரிய மளிகைக்கடை இருந்தது. அதில் புளியிலிருந்து உளிவரை அனைத்தும் இருக்கும். பன்னிரண்டு பேர் கடையில் வேலை செய்தார்கள். விற்பனை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். காலை ஏழு மணிக்குத் திறந்த கடை, இரவு பத்து மணிக்குத்தான் அடைபடும். தங்கையா மிகவும் கண்டிப்பான பேர்வழி.

கடை ஊழியர்களை 'குமாஸ்தா' என்று சொல்லுவார்கள். அந்தப் பன்னிரண்டு ஊழியர்களில் ஆழ்வார் மிகத் திறமைசாலி. மிகவும் புத்தி கூர்மை உள்ளவன். அவனை முதலாளி தங்கையாவுக்கு ரொம்பப் பிடித்தது. கொள்முதல் செய்வதிலிருந்து விற்பனைவரை ஆழ்வார் பொறுப்பில் விட்டுவிட்டார். கடை அடைக்கும்போது ஆழ்வார் எல்லாரையும் சோதித்துத்தான் அனுப்புவார். கிறிஸ்மஸ் பழம், அண்டிப்பருப்பு என விலை உயர்ந்த பொருட்கள் நிறைய இருந்தன.

இரங்கூன் தங்கையாவுக்கு பருத்தி வியாபாரம்தான் மெயின். கடைக்கு எப்போதாவது வருவார். அவர் வந்த நாளில் பெரிய ராஜ தர்பார் நடக்கும். அவர் மிகவும் கடின சித்தம் உள்ளவர். அவரது புன்சிரிப்பும், புருவத்தின் அடர்த்தியும், அவரது தோற்றப் பொலிவும் கெம்பீரமாக இருக்கும்.

ஆழ்வாருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டும் கல்யாண வயதில் இருந்தன. வருகிற ஞாயிற்றுக்கிழமை மூத்த மகள் சந்திராவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள். அதற்காக வழக்கமான சன்மானம் நூறு ரூபாய் கொடுத்துவிட்டார். ஆனாலும் ஆழ்வாருக்கு கவலை. மாப்பிள்ளை வீட்டார் இருபது பேருக்கு மேல் வருவார்கள். அவர்களுக்குக் காப்பி போட்டுக் கொடுக்க வேண்டும்.

நூறு ரூபாய் மற்றச் செலவுகளுக்குப் போதும். காப்பிக்கு என்ன செய்வது? அவருக்கு ஒரு குறுக்கு வழி தோன்றியது. அதை நிறைவேற்றினால் காப்பி பிரச்சினை முடிந்தது என்ற ஒரு திருப்தியுடன் எழுந்தார்.

'இந்த முதலாளிமார்களுக்கு உழைத்துப்போட்டு என்ன பிரயோஜனம்? ஆம், அப்படித்தான் செய்ய வேண்டும்' என்று மனதிற்குள் தீர்மானித்தார். ஒரு சொடக்குப் போட்டு 'சரியான யோசனை' என்று என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார்.

அன்று சனிக்கிழமை. இரவு பத்து மணிக்குக் கடை அடைப்பார்கள். மறுநாள் காலை எட்டு மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை கடை அடைப்பு.

ஆழ்வார் தம் எண்ணத்தைச் செய்துமுடித்து விட்டார். எதிர்பாராத விதமாகக் கடை முதலாளி தங்கையா வந்துவிட்டார். வழக்கமாக உட்காரும் பருத்திக் கொட்டை மூடையில் அமர்ந்தார். அது பஞ்சு மெத்தை போலிருக்கும். அதிலிருந்து பெரிய விசாரணைகள் நடக்கும். ஆழ்வாரைக் கூப்பிட்டு திங்கள் கிழமை கொள்முதல் செய்யவேண்டிய பொருள்கள் என்னவென்று எழுதித் தரச் சொன்னார். ஆழ்வாரும், முதலாளியும் தூத்துக்குடியிலிருந்து மொத்தமாகச் சரக்குகளை வாங்கி வருவார்கள். அப்போதெல்லாம் மாட்டு வண்டிதான்.

முதலாளி தங்கையா ஆழ்வாரைக் கூப்பிட்டு, "ஆழ்வார். நாளை உங்கள் வீட்டில் விசேஷம். நீங்க சீக்கிரம் வீட்டுக்குப் போங்க. மாப்பிள்ளை வீட்டாரை நன்றாக கவனிங்க" என்று சொல்லி வீட்டிற்குப் போகச் சொன்னார்.

"மணி ஏழுதானே ஆகிறது. ஒன்பது மணிக்கு போகிறேன் முதலாளி" என்றார் ஆழ்வார்.

தங்கையா மற்ற ஊழியர்களிடம் வியாபார சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தார். அரை மணி நேரமாகியும் இன்னும் ஆழ்வார் போகவில்லை. குடோனுக்குள் போன ஆழ்வார் இன்னும் புறப்படவில்லை.

இரங்கூன் தங்கையா ஒரு செருமல் போட்டார். "ஏல ஆழ்வார்.. என்னல இவ்வளவு நேரம்? போடா சீக்கிரம்." அவருடைய கண்டிப்பில் கனிவும் இருந்தது.

கடை நல்ல உயரம். அதில் உள்ள பருத்திக்கொட்டை மூடையில் தங்கையா அமர்ந்திருந்தார். கடையில் கயிறு பிடித்துத்தான் ஏற வேண்டும். குதித்துத்தான் இறங்க வேண்டும்.

கொஞ்சம் லேட் பண்ணினால் முதலாளி போய்விடுவார். ஆனால் அவர் போவதாக இல்லை. மட்டுமல்ல ஆழ்வாரை துரிதப்படுத்தினார்.

வேறு வழியில்லாமல் ஆழ்வார் உயரமான கடையிலிருந்து கயிறைப் பிடித்தபடி 'டொம்'மென்று குதித்து இறங்கினார்.

அங்கே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆழ்வார் குதித்தபோது மூன்று சிரட்டை கருப்பட்டி கீழே விழுந்தது. அவரது கோவணத்தில் மறைத்து கட்டியிருந்தார்.

முதலாளி பார்த்தார். கொடும் அதிர்ச்சி அடைந்தார். மற்ற ஊழியர்கள் 'திக்' பிரமை பிடித்துச் சிலையாய் நின்றனர். ஆழ்வார் பயந்து நடுங்கிவிட்டார்.
"முதலாளி மன்னியுங்கள்" என்றார்.

தங்கையா மௌனமாக இருந்தார். அவர் ஆழ்வாரை அடித்து, உதைத்து, துவைத்து விடுவாரென்று மற்ற ஊழியர்கள் நினைத்தனர். தங்கையாவின் மீசை துடித்தது. இறுக்கத்தின் மத்தியில் கண்களில் இரக்கத்தின் கனிவும் இருந்தது. ஒரு கணம் மனதிற்குள் அழுதார். "எனது ஊழியர்களின் குடும்ப பாரங்களில் நான் அக்கறை எடுக்கவில்லையே" என்று தன்னைத்தானே நொந்துகொண்டார்.

திடீரென்று அதட்டலுடன் வாய் திறந்தார். "ஆழ்வார் உள்ளே போய் ஒரு சிப்பம் கருப்பட்டி தூக்கிட்டுப் போ" என்றார். (ஒரு சிப்பம் என்பது பத்து கிலோ கருப்பட்டி)

ஆழ்வார் விழித்தார். குற்ற உணர்வால் கல்லாய் நின்றார்.

"ஆழ்வார் உன்மேல ஒரு தப்பும் இல்ல. என்மேலதான் தப்பு. ஒரு சிப்பம் கருப்பட்டியை நானே தந்திருக்க வேண்டும். வளமாகக் காப்பி போட்டுக் கொடு" என்றார்.

"கற்பாறையினுள் தேனினும் இனிய தண்ணீர் இருப்பதைப் போல, கடினமான மனிதன் தங்கையாவின் உள்ளத்திலும் ஒரு மனிதாபிமானம் இருந்தது" என்று கூறி முடித்தார்.

அவித்த கொண்டைக் கடலை அன்றைய சிற்றுண்டியாக அமைந்தது.

ஆர்.எஸ். ஜேக்கப்
Share: 




© Copyright 2020 Tamilonline