Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பூனை
- எஸ். ஷங்கரநாராயணன்|செப்டம்பர் 2017|
Share:
திருமண அழைப்பிதழ். வாட்ச் கட்டிய கையோடு இணைந்து கொண்ட வளையல் கை. "என் பிரியமான நாகராஜனுக்கு" என்று அழகழகாய் எழுதிப் பத்திரிகை கொடுத்தாள் நந்தினி டீச்சர். விநாடிக்கும் குறைவான நேரம் அவனுள் பில்லியர்ட்ஸ் பந்துகள்போல உணர்வுகள் வேறு வேறு வண்ணங்களில் உருண்டு முட்டின. சந்தோஷம் நிச்சயம். தனக்குத் தனியே அழைப்பிதழ் வைத்த நெருக்க உணர்வின் நெகிழ்ச்சி. பெருமை. உதடுகள் துடித்தன. கூடவே திடீரென சோகம் பால்குடிக்கிற கன்றுக்குட்டியாய் அவனில் மோதிற்று. "அப்ப கல்யாணம் ஆனதும் வேலைய விட்டுட்டுப் போயிருவீங்களா டீச்சர்?" என்று கேட்டான் நாகராஜன்.

"தெரில, அவரதான் கேக்கணும்" என்றாள் டீச்சர்.

"நீங்க போவேணாம் டீச்சர். அவர்கிட்ட நா சொல்றேன்" என்றபோது "ரைட்" என்று சிரித்தபடி அவன் தலையில் தட்டிவிட்டுப் போனாள் அவள்.

இவளும் லலிதா டீச்சர் மாதிரி ஏன் உள்ளூரிலேயே மாப்பிள்ளை பார்த்துக்கொள்ளக் கூடாது? லலிதாவும் ஜீயெஸ் சாரும், எப்படித்தான் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினார்களோ? ஜீயெஸ் சார் ரொம்ப நல்ல மாதிரி. லலிதா டீச்சரோ முரட்டு சுபாவம். பாதி ஆம்பிளை அவள். எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் பொருத்தமேயில்லை. அவ்வளவு நல்ல சார் அந்தம்மா கையில் எப்படி ஏன் மாட்டிக் கொண்டார்?

டீச்சர்களில் நந்தினி வேறு மாதிரி. ரொம்ப நல்லமாதிரி. சிவப்பு நந்தினி. கிளி. தேவதை. ஒருமுறை இவன் பள்ளிக்கூடம் விட்ட ஒரு சாயங்காலப் பொழுதில், ஒரு ஓணானைக் கயிற்றில் கட்டி வட்டமடித்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் வேப்ப மரத்தைப் பார்த்ததும், "ஊய்"யென்று ஓணானை ஓங்கி மரத்தில் அறைந்தான். உடம்பு சிதறி ஓணானின் வயிற்றிலிருந்து பாகல் விதைகளாய் அதன் முட்டைகள் தெறித்தன. "வீல்" என்று அலறல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் - நந்தினி. ஒரு நனைந்த பறவையாய் நடுங்கி நின்றிருந்தாள்... நனைந்த கிளியாய்.

"ஏய், அதக் கீழே போடு."

"பயந்துட்டீங்களா டீச்சர்?"

"மொதல்ல கீழ போடு அத."

போட்டுவிட்டு அவளையே பார்த்தான்.

"த பாரு, இது ரொம்பப் பாவம். இனிமேல் இப்படிச் செய்யாதே" என்றாள் அவள். சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

இத்தனைக்கும் அவள் ஒன்பதாங் கிளாசுக்குத்தான் டீச்சர். கணக்கு மற்றும் ஆங்கிலம் எடுக்கிறாள். அவனுக்கும் அவளுக்கும் சம்பந்தமேயில்லை.

"சரி டீச்சர்" என்றான். இவன் கனவில். அம்மா எழுந்துகொண்டு இவனையே பார்த்தாள். பின் ஒரு குறுஞ்சிரிப்புடன் இவனை எழுப்பினாள். இவன் விழிப்பு வந்த பிறகும் எழுந்து கொள்ளவில்லை. கண்ணையே திறக்கவில்லை. திறந்தால் கிளி பறந்துவிடுமே. நந்தினி மறைந்து விடுவாளே?

எய்த் 'பி'க்கு வகுப்பாசிரியை லலிதாதான். லலிதா டீச்சர் ரொம்பக் கண்டிப்பு. ஸ்கேல் இல்லாமல் அவளைப் பார்க்க முடியுமா? காளிக்கு சூலம்னா, லலிதாவுக்கு ஸ்கேல்... நோட்டு ஏன் கொண்டாரல, நீட்டு கைய. ஓயாமப் பக்கத்துப் பையங்கூட என்ன பேச்சு, வா இங்க - அடி, மீண்டும் அடி. உள்ளங்கையிலல்ல புறங்கையில். கையை உதறி உஸ் உஸ்ஸென்று ஊதியபடியே பிள்ளைகள் அழும்; அழுதபடியே மீண்டும் நீட்டும்...

"நீட்டுரா கைய" - நாகராஜன் அவளையே பார்த்தான். ஆவேசமாய் ஒரு கெட்ட வார்த்தை சொன்னான். கூடவே தனக்கே அர்த்தம் தெரியாத அநேக கெட்ட வார்த்தைகளும் சொன்னான். வகுப்பு முழுதும் கேட்கும்படி சத்தமாய்ச் சொன்னான். சொன்னபடியே மிகுந்த ஆக்ரோஷத்துடன் அவளிடமிருந்து ஸ்கேலைப் பிடுங்கினான். மதம் பிடித்த யானையாய் அதைக் காலால் மிதித்து உடைத்துப் போட்டான். எங்கேயிருந்து எதற்காக எப்படி அத்தனை ஆத்திரம் வந்தது தெரியவில்லை.

அந்த நிகழ்ச்சிக்குப்பின் அவன் முரடன் என்று பேரெடுத்திருந்தான். வக்ரங்களில் ருசியும் திருப்தியும் ஏற்பட்டது இப்படித்தான்.

ஆனால் இதே கோபம் நந்தினி டீச்சர் மீது வரவில்லை என்பதுதான் ஆச்சரியம். வந்தது, உடனே அது தன் மேலேயே எப்படியோ தலைகுப்புறத் திரும்பிவிட்டது.

நந்தினி டீச்சர் அவனுக்கு வகுப்புகள் எடுக்க வருவதில்லை. அவளை அவனுக்குத் தெரியாது. அதிகம் அவளைப்பற்றி யோசித்துப் பார்க்கக்கூட ஒன்றுமில்லை. ஒல்லியான சிவப்பான டீச்சர். ஒரு வேளை கண்ணாடி இவளுக்கு எடுப்பாய் இருக்கும் என்று தோன்றும். சில சமயம் பள்ளிக்கூடம் போகும்போது அல்லது பள்ளிக்கூடம் விட்டு வரும்போது கூடவருவது உண்டு. இறைவணக்கம் நடக்கும்போது இவங்க வகுப்புப்பக்கம் நின்று கொண்டு, "ஸ் பேசாத" என்று ரகசிய எச்சரிக்கை செய்வாள். ஆசிரியர் அறையைத் தாண்டிச் செல்கையில் "குமுதம்" படித்துக் கொண்டிருப்பாள். அல்லது வெந்நீர் குடித்துக் கொண்டிருப்பாள். நீண்ட கழுத்தின் நரம்புகளில் அதிர்வான இம்சையைப் பார்க்கலாம். இப்படித் தூரப் பார்வைக்கு, வெறும் காட்சியளவிலேயே அறிமுகம் ஆனவள், திடீரென்று எப்படியோ அவன் உள்ளே புகுந்து உயர்ந்த ஸ்தானத்தை எட்டிப் பிடித்துவிட்டாள். ஆச்சரியம்!

லலிதா டீச்சரும் நந்தினி டீச்சரும் பள்ளிக்கூட விளையாட்டுத் திடல் வழியே வந்து கொண்டிருந்தார்கள். இவன் அவர்களை கவனிக்கவில்லை. டிரில் மாஸ்டர் அறைப்பக்கமாய் ஒதுங்கிக்கொண்டு இவன் சுவாரஸ்யமாய் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் வளைத்து பீரங்கி மூக்கு போல சிகரெட்டைப் பிடித்தபடி, ரொம்ப தோரணையாய் உறிஞ்சினான். உட்கவிந்த புகைமூட்டத்தை நுரையீரலை விரித்து சுவீகரித்து அனுபவித்தான். பின் கண்ணை மூடி லயித்தபடி புகையைச் சுருள் சுருளாய் வெளியேற்ற முயன்று கொண்டிருந்தான்.

லலிதா டீச்சர் "ஐயோ வேணாம் டீச்சர். அவன் முரடன். வேணாம், வேணாம்" என்று கத்தினாள். நந்தினி கவனிக்கவேயில்லை. அவளுக்குக் கோபம் வந்திருந்தது. இப்போது முற்றிலும் வேறு ஆளாய்த் தெரிந்தாள். ஆத்திரமாய்த் தெரிந்தாள். ஆத்திரம் பிசாசைப் போல அவளில் உருப்பெருகிப் பிடரி சிலிர்க்க அவளை விரட்டிற்று.

நாகராஜன் கன்னத்தில் காட்டமாய் அறை விழுந்தது. விரல்களே, வேர்களாக அவள் ஆவேசம் அவன் கன்னத்தில் இறங்கிற்று. வலி.... நெருப்புடன் சிகரெட் நழுவித் தரையில் விழுந்தபோது, வெறுப்பாய் அதை அவள் ஒரு மூட்டைப் பூச்சியைப் போல நசுக்கிச் சிதைத்தாள். "ராஸ்கல் சிகரெட்டா பிடிக்கறே?" என்று கிறீச்சிட்டாள். அவன் தலைமுடியைப் பற்றி இடப்புறம் வலப்புறம் என்று மாறி மாறிக் கன்னத்தில் அறைந்தாள். "வேணா டீச்சர், வேணா டீச்சர்"னு லலிதா டீச்சர் கத்தறாங்க. "அவன் முரடன் டீச்சர், வேணாம் வம்பு"ன்னு திரும்பத் திரும்பச் சொல்றாங்க. எங்க நந்தினி அதக் காதுல வாங்கிக் கிட்டாத்தானே?

அவனோ இதை எதிர்பார்க்கவில்லை. புகைபிடிப்பதை ஒரு வளர்ந்த மனிதனின் அடையாளமாய் அவன் நினைத்திருந்திருந்தான். தொடை தெரிய டவுசர்களை வெறுக்கத் துவங்கியிருந்தான் அப்போது. முழுக் கால்களையும் மூடி மறைக்கிற மாதிரிப் பேன்ட்டோ வேட்டியோ நல்லது. அந்தப் பருவம் அப்படி. இளம்பெண்கள் கண்களில் தொந்தரவு செய்தார்கள். மனசில் தாளமுடியாத அரிப்பு. எல்லாமாய் மிதக்கிற அவன் நிலையில் சற்றும் எதிர்பாராமல் ஒரு இடைஞ்சல்.

சற்றும் எதிர்பாராமல் விழுந்த அறை. அறைகள்... சற்றும் எதிர்பாராத அவளது ஆவேசம்; கோபம்; கிறீச்சிடல்; அலட்சிய உரிமையுடன் சிகரெட்டை வீணடித்த அவளது ஆத்திரம். அறை. எதிர்பாராத தாக்குதல். கண்ணில் பொறிகள்; கன்னத்தில் வலி... வாய்க்குள் புகை திணறிற்று. இருமல் வந்தது. கன்னம் வலித்தது. திடீரென்று அவனில் ஒரு மிருகம் உசுப்பப்பட்டது. ஏராளமான கெட்ட வார்த்தைகளால் அவளைத் தாக்கினான். கன்னம் வலித்தது. அவளை "டி" போட்டுத் திட்டினான்.
"நா சிகரெட்டும் குடிப்பேன். தண்ணியும் அடிப்பேன். ஒனக்கென்ன "டி" வந்தது? ஒஞ்சோலியப் பாரு."

"என்ன, "டி"யா? பல்லுப் பேந்துரும் ராஸ்கல். இந்த வயசுல ஒனக்கென்னடா சிகரெட்டு? இனிமேத் தொடு. கைய முறிச்சிர்றேன்" என்று மீண்டும் கத்தினாள். கத்தியபடியே மீண்டும் அவன் தலைமுடியைப் பற்றினாள்.

ஒரு அலையைப் போல அவன் பொங்கினான். சரமாரியாய் வசவுகளை ஒரு முள்ளம்பன்றி போல அவள்மீது விட்டெறிந்தான். அப்படியே துள்ளி அவளை விட்டு விலகினான். விலகிய மாத்திரத்தில் குனிந்தான். ஒரு தீவிர அவசரத்துடன் தரையில் தேடினான். ஒரு கல்லைத் தேர்ந்து அம்பாய் மீண்டும் புறப்பட்டான். நடுங்கிய கையால் சற்றேறக் குறைய நெற்றிக்கு வீசினான். "இனிமே என் வெவகாரத்ல தலையிட்டே, நா சும்மா இருக்க மாட்டேன்" என்று கத்தினான். மீண்டும் வசவுகள், பைக்கட்டை மறந்தான். பள்ளிக்கூடத்தை மறந்தான். எங்கோ ஒரே ஓட்டமாய் ஓடினான்.

நந்தினி டீச்சர். கிளி அல்லவா அவள்? தேவதையல்லவா? சே, அவளைப் போய்க் கல்லால் அடிப்பார்களா? ஓரம் கூர்மையான கருங்கல். நெற்றி பிளந்திருக்கும்... இரத்தம் ஊற்று திறந்திருக்கும். மண்டையைப் பிடித்தபடி சரிந்திருப்பாளோ? மயங்கியிருப்பாளோ? என்ன மடையன் நான்...

"என்னடா?" என்றாள் அம்மா ராத்திரி.

"டீச்சர அடிச்சிட்டேம்மா."

"இதே வேலையாப் போச்சு உனக்கு, நீ எங்க உருப்படப் போற?"

"நந்தினி டீச்சரம்மா..." என்னுமுன் தொண்டைக்குள் வார்த்தைகள் செத்துப் பிணத்தின் கனம். மௌன நிமிடங்களின் அஜீரணம். அழுகை வந்தது. உதடு வெடிக்க அழுகை குமுறிக் குமுறி வந்தது. தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. நிற்க முடியவில்லை; நடக்க முடியவில்லை; உள்ளே புயல்; அவனுக்குத் தள்ளாடிற்று; ஏராளமான மருந்துகளின் நெடி அவனைத் தாக்கிற்று; டிஞ்சர் அயோடின், காயத்தை டெட்டால் விட்டுக் கழுவியபோது நந்தினி அலறினாள் பார் ஒரு அலறல் - டீச்சர், டீச்சர்...

எழுந்து உட்கார்ந்தான். அம்மா தூங்கி விட்டிருந்தாள். தனிமையுடனான இந்த இருட்டு அவன் குரல்வளையைப் பிடிக்கிறாற் போலிருந்தது. திரும்பிப் படுத்துக்கொண்டான். குப்புறப் படுத்துக்கொண்டான். தலையணையைக் கவ்வியபடி அப்படியே கிடந்தான். அப்படியே அசையாமல் கிடந்தான். விக்கி விக்கி அழுகை வந்தது. கண்ணில் கரகரவென்று கண்ணீர்; தலையணை நனைந்தது. அடிபட்ட நாயாய் அப்படியே கிடந்தான். நினைவும் மயக்கமுமாய்க் கிடந்தான். அரைக்கால் நினைவில் ஒரு கனவு; அவன் குனிவதும் கல்லால் அடிப்பதும் மாறி மாறி மின்னல் அடித்தன. அவன் ஒரு ஓணானைக் கயிறில் கட்டிச் சுற்றிக்கொண்டே போகிறான். போகப்போக கனம் கூடிக் கொண்டே போகிறது. இழுக்க முடியவில்லை. ஓணானா இவ்வளவு கனம் - திரும்பிப் பார்த்தால், ஐயோ, நந்தினி டீச்சர் அல்லவா அது?

தூக்கிவாரிப் போட்டது. எழுந்து உட்கார்ந்தான். ரயில் ஓடுகிறாற்போல அவன் உடம்பில் கிடுகிடுவென்று அதிர்வுகள். எழுந்து நின்றபோது கால்களில் பலமேயில்லை. உணர்ச்சியே இல்லை. வயிறு ஒட்டிக்கிடந்தது.

எழுந்து வெளியில் வந்தான். வெளிச்சம் இல்லாத இரவு சத்தமில்லாத தெரு. அமைதியான அமைதி. குளிராயும் இல்லை. வெப்பமாயும் இல்லை. ஒரு சூன்யமான இரக்கமற்ற இரவு. மரங்கள் உயிரற்று நின்றன. காற்றே இல்லை. சலனமேயில்லை. அவன் தப்படிகளை எண்ணி எட்டி வைத்து நடந்து போனான். இரவின் இந்த விசித்திரம் புதுசாய் இருந்தது. அழுகையை மறந்து வேடிக்கை பார்க்கும் குழந்தையாய்த் தன்னை உணர்ந்தான். தெருவோரம் இன்னும் கட்டப்படாத மனையில் முள்ளுக்காட்டுப் பக்கம் ஒண்ணுக்குப் போக உட்கார்ந்த போது ஓணான் ஒன்று "கல்லால் அடிச்சிறாதே" என்று அலறி ஓடிற்று. நந்தினி டீச்சர்... உடம்பை உதறி எழுந்து கொண்டான்.

டீச்சர் வீடுவரை போன வேகம் சட்டென்று வடிந்து விட்டது. ஒரு விநாடி குழம்பினான். பின் கதவைத் தட்டினான்.

"யாரு?" என்று தூக்கக் குரல்.

"நாந்தான்."

"யாரு?..."

"நாகராஜன் - " என்று சொல்லிவிட்டு, டீச்சர் வெளியே வரமாட்டாள், கதவைத் திறக்க மாட்டாள் என்று எதிர்பார்த்தான்.

டீச்சர் வந்தாள். நெற்றி வீங்கிய விகாரம் தூரத்திலேயே தெரிந்தது. கட்டு எதுவும் இல்லை.

"எ - என்னை மன்னிச்சுடுங்க டீச்சர்..."

"சரி உள்ள வா."

"நெத்தில அடி பலமா டீச்சர்?"

"இல்லை."

"ஸாரி டீச்சர் - "

"......"

"என்ன மன்னிச்சுடுங்க டீச்சர். இனிமே நா சிகரெட்டத் தொடமாட்டேன் டீச்சர்."

"சரி."

"மாடு மேய்க்கிற ரத்தினம் இல்ல டீச்சர்? அவன்தான் டீச்சர், இதொண்ணும் கெட்ட பழக்கம் இல்லடான்னு சொல்லி கத்துக் குடுத்தான் டீச்சர்"

"கெட்ட பழக்கம் ஒண்ணு பழகிட்டா, அப்புறம் ஒண்ணொண்ணா வேணும்னு தோணும். ரொம்பக் கெட்டவனா ரௌடியா நீ ஆயிடுவே."

"இனிமே சிகரெட்டத் தொடவே மாட்டேன் டீச்சர்."

"எந்தக் கிளாஸ் படிக்கிற?"

"எய்த் பி."

"லலிதா டீச்சர் கிளாஸா?"

அவன் தலையை மட்டும் ஆட்டினான்.

"நல்லா படி, சந்தேகம் எதும் வந்தா என்ட்டக் கேளு, டெய்லி என்ட்ட வந்து படிச்சுக்கோ, என்ன?"

அவன் தலையாட்டினான்.

"போ, போய்த் தூங்கு."

"சரி டீச்சர்!" என்று எழுந்துகொண்ட போது உடம்பில் தெம்பு ஊறினாற் போலிருந்தது. பசியான பசி...

நந்தினி டீச்சர் அதற்குப் பிறகு அவனில் உயர்ந்து போனாள். அவள் வாக்கு தேவவாக்கு. அவள் எது சொன்னாலும் அவன் தட்டுவதேயில்லை. மீறுவதேயில்லை என்றாகிப் போயிற்று. எதுக்கெடுத்தாலும் டீச்சர் டீச்சர் என்று ஓடிக் கொண்டிருந்தான்.

"இந்தாங்க டீச்சர்!"

"என்னது?"

"அதிரசம்..."

"ஏது?"

"ஊர்லேந்து மாமா கொண்டாந்தாங்க."

நந்தினி, மிகுந்த அக்கறையுடன் அவனுக்குப் போதித்தாள். கடினமான கணக்குப் பாடம் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. அடேடே, சாலையோரம் நிழல் தரும் மரங்களை நடுவது மட்டுமா சரித்திரம்?... எவ்வளவு இருக்கிறது படிக்க!

லலிதா டீச்சர் பெயருக்குதான் டீச்சர். அவளுக்கே ஒண்ணும் தெரியாது. ஒண்ணுமே அவள் சொல்லித் தருவதில்லை. போன வருஷம் எழுதிப்போட்ட நோட்டைப் பார்த்து இந்த வருஷமும் எழுதிப் போட்டு விடுவாள். சதா வெற்றிலை போட்டு அரச்சிட்டேயிருப்பாள். நெத்தில மூணாவது கண்ணைப் போலப் பெரிசாய்ப் பொட்டைப் பார். மொகம் ஏற்கனவே லெட்சணம். கரிக்கட்டை. இதில் கோபம் வந்தால் பசங்கள் வாங்கும் அடிகளுக்குக் கணக்கேயில்லை. டீச்சரா இவள்? ஆப்பக்காரியாட்டம்...

டீச்சர்னா நந்தினியாட்டம் இருக்கணும். எவ்வளவு பொறுமையா நிதானமா பாடம் சொல்லிக் குடுக்கறாங்க. கோபப்படவே மாட்டாங்க. புரியல டீச்சர்னா, நல்லா வௌக்கமா மொதல்லேந்து சொல்லிக் குடுப்பாங்க. பரமஹம்சர் கதை, புராணக் கதைல்லாம் சொல்லுவாங்க. அவனுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.

டீச்சர் சொல்லித்தான் அவன் தன் வீட்டுல தோட்டம் போட்டான். பிஞ்சு பிஞ்சாய் வெண்டையும் கத்திரியும் வந்தபோது பெருமையாய் இருந்தது. ஒரு ரோஜாப் பதியன்கூட நட்டான். நிறைய வேலை வாங்கி விட்டது. ஒரு வழியாய் அது பூக்க ஆரம்பித்தபோது அவனைப் பிடிக்க முடியவில்லை. ஐ ஜிங்குஜிக்கா!

"நாளைக்கு ரோஸ் புடவை கட்டிட்டு வாங்க டீச்சர்." அவள் ஆச்சரியத்துடன் பிறகு "சரி" என்றாள். மறுநாள் ஆசிரியர் அறையில் உடம்பெங்கும் சந்தோஷம் பொங்க "டீச்சர் இந்தாங்க" என்று கொடுத்தான். உள்ளங்கை அளவு ரோஜாப்பூ. "நீயே வளத்ததா, வெரிகுட்!" என்றாள் டீச்சர். இது போதுமே, இந்த ஒரு "வெரிகுட்"காக எதுதான் செய்யக் கூடாது.

நந்தினி ரசிகர் மன்றத் தலைவன் அவன். உடல் மண்ணுக்கு. உயிர் நந்தினிக்கு.

மாலை, அவள் திருத்த வேண்டிய நோட்டுகளை எடுத்துக் கொண்டு அவன் அவளுடன் வீடு திரும்பினான் - "வா" உள்ளே அழைத்து டீச்சர் அவனுக்குப் பத்திரிகை கொடுத்தாள்.

-திருநிறைச் செல்வி நந்தினியை
திருநிறைச் செல்வன் புருஷோத்தமனுக்கு-

அவனுக்கு ரொம்ப சந்தோஷம், கூடவே பிரிவின் சுமை. சிறகுகள் கனத்தன.

"முந்தின நாளே வந்துடணும்."

"கண்டிப்பா."

"மாப்ளைய நீதான் கவனிச்சுக்கணும்..."

"கண்டிப்பா" என்றான் நாகராஜன்.

டாக்ஸியில் குடும்பத்தாருடன் புருஷோத்தமன் வந்திறங்கினான். டிரைவர் பின்னாடி போய் டிக்கியைத் திறந்தான். கச்சிதமான மீசையும், முழுக்கைச் சட்டையும், தடித்த பிரேமில் கண்ணாடியுமாய்ப் புருஷோத்தமன். இறங்கி பொதுவாய் வணக்கம் சொன்னபோது "வாங்க வாங்க" நாகராஜன் முன்னால் வந்து ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டான்.

"நீ?"

"நாகராஜன், எய்த் பி'.

"ஓகோ" என்று புருஷோத்தமன் சிரித்தான்.

மாப்பிள்ளை பரவாயில்லை. நல்ல கலகலப்பு அவனிடம். டீச்சரைத் தொடர்ந்து இங்கேயே வேலைசெய்ய அனுமதிக்கும்படி கேட்டுவிடத் துடித்தான் நாகராஜன். நேரம் பார்த்துக் காத்திருந்தான்.

பூராவும் மாப்பிள்ளையை விட்டு அவன் பிரியவேயில்லை. "என்ன வேணும் சார், என்ன வேணும் சார்" என்று சுற்றிச்சுற்றி வந்தான். எங்கே டீச்சரை வேலையை விடச்சொல்லி விடுவானோ தன்னோடு ஊருக்கு அழைத்துப் போய்விடுவானோ என்று திகிலாய் இருந்தது. அவனிடம் எப்போது எப்படிக் கேட்பது என்று குழப்பமாய் இருந்தது.

சாப்பிட்டுவிட்டு லலிதா டீச்சரும் ஜீயெஸ் சாரும் உட்கார்ந்து இருந்தார்கள். அவலட்சணமான லலிதா... லலிதம்னா அழகுன்னு அர்த்தமாம். நந்தினி டீச்சர் சொன்னாங்க. இவளுக்கு யார் லலிதான்னு பெயர் வெச்சாங்க - நம்மள்ள நெறயப் பேருக்கு ஆளுக்கும் பேருக்கும் சம்மந்தமே இல்லை.

புருஷோத்தம்மன் மாடியில் தனியே உட்கார்ந்திருந்தான். எல்லாரும் சாப்பிடப் போயிருந்தார்கள். புருஷோத்தமன் தனியே இருப்பதை கவனித்ததும் இவன் விறுவிறுவென்று அங்கே போனான்.

"எதாவது வேணுமா சார்?"

அவன் பைக்குள் கை விட்டான். ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினான். "ஒரு பாக்கெட் வில்ஸ் ஃபில்டர் வாங்கிட்டு வா" என்றான் புருஷோத்தமன்.

எஸ். ஷங்கரநாராயணன்
Share: 




© Copyright 2020 Tamilonline