Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்
- அழகிய பெரியவன்|நவம்பர் 2012|
Share:
இளங்காலை.
பாலாற்றில் புதுவெள்ளத்துக்கு மகிழ்ச்சி தாளவில்லை. தவிட்டு நிற நீர்ப்பறவை இருகரைகளையும் இறக்கைகளால் தொட்டபடி பறந்தது. நிறைவின் மதர்ப்போடு ஓடும் வெள்ளப்பரப்பில் அங்கங்கே சுழிகள். நீர் இழைகள் பின்னியதுபோல நீர்ச்சடைகள். இருகரை கொருக்கைப்பயிர் வேலிகளில் சிக்கிய நுரைக்கூட்டம் இன்னுங்கூட வெடிக்கவில்லை. சில இடங்களில் நுரை அடங்கி செம்பழுப்பு நிறத்தில் நீர்ப்பாதைக்கு எல்லை வரைந்திருந்தன. ஆழிப்பெண்ணின் கண்களுக்கு மை எழுதும் நுரையோ...

பெருமாள் கோயில் படித்துறையில் அமர்ந்து வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சிவபாலனுக்கு விலுக்கென்றது. நீர் பிடித்திழுக்கும்போது அவை படபடவென அடித்துக்கொள்ளும் ஓசையோ, மீன்களையும் தவளைகளையும் தேடி வந்து ஏமாந்த விரக்தியில் காகங்களும் வேறுசில பறவைகளும் காற்றையடித்து அலப்பறைக் காட்டும் சப்தமோ எதுவுமே உணர்வுக்குக் கொண்டுவராத சிவபாலனை அவர் கவி மனதில் உருவான ஒரு படிமம் கொண்டுவந்துவிட்டது.

நேற்றே அவர் ஆற்றுக்கு வர நினைத்திருந்தார். கடந்த இருவாரங்களாக பெருமழை கொட்டித் தீர்த்தது. அவர் வீட்டின் எல்லாக் கதவுகளையும் தாண்டி, அவர் படுத்திருக்கும் உள்ளறை வரையிலும் வந்து நிற்கும் மழை ஓசை. வீட்டெதிரில் ஆழ்ந்த பெருங்கனவு ஒன்றைப்போல் உறைந்திருக்கும் பெருமாள் கோயில் பிரகாரங்களில் பெய்யும் மழை. அறையைவிட்டு வெளியே வந்து அவரைப் பார்க்கச் சொல்லி ஓயாமல் கூப்பிடும். கோயிலை ஒட்டிச் சடை தரித்து நின்றிருக்கும் ஆலமரத்தின் மீதோ மழை குரங்குக் கூட்டம்போல் இலைக்கு இலை தாவி ஆடும். அம்மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் வெண்ணிறக்கோட்டில் கைகளை ஊன்றி, ஓடுவதற்காக வெடிச்சத்தத்திற்குக் காத்திருக்கும் வீரன் ஒருவனை நினைவூட்டும் சிவபாலனுக்கு.

இந்த மழையின்போது வானம் பிளக்கும் வெடிச் சத்தத்துக்காவது இந்த ஆலமரம் எழுந்து ஓடிவிடாதா என்றும் விரும்பினார். மழை பொழிந்த ஒரு வாரம் கழித்தும் அந்த ஆலமரம் அங்கேயே கைகளை ஊன்றி ஓடக் காத்திருப்பதைப் பார்த்தபோது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒருவேளை இந்த மரம் செவிடாக இருக்குமோ என்றும் நினைத்துக்கொண்டார் சிவபாலன். மழை அவரின் அன்றாட அலுவல்களில் ஒன்றைக் குலைத்துப் போட்டதற்காக அதன்மீது கோபமாக வந்தது. காலையில் எழுந்து வேலையாளி பொன்னம்மா காபி தரும்வரை புத்தகங்கள் எதையாவது புரட்டிக்கொண்டு ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார். பின்னர் காலை உண்டி முடிந்ததும் கையில் குடையோடு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினால், நேராக பெருமாள் கோயில் படித்துறைதான்.

பெயர்தான் கோயில் படித்துறை என்றாலும் அது கோயிலை ஒட்டி இல்லை. கோயிலின் வடபுறமாக மேற்கைப் பார்த்து இறங்கும் மண்பாதையில் சுப்பிரமணியர் மடத்தையும், அரண்மனை வீட்டையும் தாண்டிப் போகவேண்டும். அப்போதுதான் ஆறு வரும். கோயிலுக்கும் ஆற்றுக்கும் உள்ள கூப்பிடு தூரத்துக்குள்ளாகவே அகண்டு கிளை விரித்திருக்கும் முதுமரங்கள் பல வரும். அவற்றில் பெரும்பாலானவை நாவலும் அரசும்தான். படித்துறையில் இருக்கும் ஆல்தான் அவற்றுக்கெல்லாம் மூத்தது. சூரியன் இறங்கத் தவிக்கும் அவ்வழியில் ஒளிக்கயிறுகள் ஊஞ்சலாடும். கணக்கற்ற காட்டுப் பூச்செடிகள். சில வேலிகளில் படர்ந்திருக்கும் வெண்சங்கு பூக்கொடிகளைச் சிவபாலனுக்கு மிகவும் பிடிக்கும்.

வெண்சங்கு பூக்கும் ஊதற்காலங்களில் அவ்வழியே போகும்போது அப்பூக்களின் முன்பாகவே நீண்டநேரம் நின்றிருப்பார். சிலநேரங்களில் அவரை பாம்புகள் வழி மறிப்பதுண்டு. சில்வண்டுகளின் கிறீச்சலாலும், வெட்டுக்கிளிகளின் துடிப்புகளாலும், பறவைகளின் குரலொலிகளாலும் நிறைந்திருக்கும் அப்பாதை. சில நேரங்களில் பலவண்ண வண்ணத்துப் பூச்சிகள் பாதையில் தோரணம் கட்டும்.

படித்துறையில் பெரும்பாலும் யாரும் இருக்கமாட்டார்கள். ஆற்றைக்கடந்து பெருமாள்புரம் வழியே முகையூருக்குப் போகிறவர்கள், ஆலமரவேர் பற்றி சூழ்ந்திருக்கும் முதல்படியில் சிவபாலன் அமர்ந்திருப்பதைப் பார்த்துப் போவார்கள். அதுவும் சொற்பம்தான். அப்படிப் போகிறவர்களில் அவரை அறிந்த சிலர் கையெடுப்பதுண்டு.

"வணக்கம் வாத்தியாரே. என்ன இங்கக்கீறிங்க?"

"ம்... ஆமா. சும்மா இப்பிடி வந்தென்"

பேச்சொலிகள் காற்றில் கரைவதற்குள்ளாகவே அங்கு அமைதி சூழ்ந்துவிடும். நீரற்று, மௌனவெயில் நிறைந்து ஓடும் ஒளியாற்றில் அப்பேச்சொலிகள் சில கற்கள். அவ்வளவே. இரட்டைவால் கருங்குருவிகளும், மைனாக்காளும் அங்கு அதிகம்தான். அவைகளும் ஆற்றின் இருப்புக்கு பயந்து கமுக்கமாகப் பேசிக்கொள்வதே வழக்கம்.

இரண்டு மூன்று நாட்களில் வற்றிவிடப் போகும் பாலாறை நிலைகொண்டு பார்த்தபடியிருந்தார் சிவபாலன். அந்த ஆறு அவருக்கு இன்று பெரும் ஞான குருவாக மாறியிருந்தது. நிறைவின் போதும் நிறைவின்மையின் போதும் அது அப்படியே இருக்கிறது. நிறைவின் நீர்ப்புன்னகையைவிடவும், நிறைவின்மையின் மணற்சிரிப்பு இன்னும் அழகு. அதன் கரையோர வனங்கள் நீரற்ற காலத்திலும் வாடியிருந்ததை சிவபாலன் கண்டதில்லை. இக்கணத்தில் பாலாற்றில் நிறைந்திருக்கும் புதுவெள்ளம் போலத்தான் அவரின் வாழ்வும் ஒருசமயம் நிறைந்திருந்தது. அவரின் தற்போதைய நிலையை ஒத்து ஒன்றிரண்டு நாட்களில் வற்றிவிடப் போகிறது அதன் வெள்ளம். அவர் பாலாறென தன்னை உருவகித்துக்கொண்டார். அக்கணம் உடல் நடுங்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு, கருநிற நீர் ஓடும் ஆறெனத் தெரிந்தது அது. அவர் தலையை உலுப்பிக் கொண்டார். அவருக்கு முதுகுப்பக்கமிருந்த புதைகாட்டில், அங்கிருந்து பார்த்தாலே தெரியும்படி இருக்கின்றன இரு சமாதிகள். அவரின் மனைவி மகளுடையவை. அவற்றைத் திரும்பிப் பார்க்கத் துணிவில்லை. விசாலத்தைப் புதைத்து விட்டு வந்த பிறகும், மின்னொளியை எரியூட்டிய பிறகும் இங்குதான் நெடுநேரம் அமர்ந்து பித்துநிலையில் கிடந்தார். திவசத்தின் போது மட்டும் அங்கு போய் வருவதோடு சரி. இதைப் போன்றதொரு ஐப்பசியின் கரிநாளில் மனைவிக்கும், மகளுக்கும் சிரார்த்தம் செய்த நடு ஆற்றின் மணல்திட்டு புதுவெள்ளத்துள் மறைந்திருந்தது.

"நெறைஞ்ச அமாவாசையில பிதுர் தேவதைகளுக்குப் பிண்டம் கொடுத்திருக்கேள். உம்ம பொண்ணு கன்னியாவே போயிருந்தாலும் உங்கமேல அவளுக்குச் சினமேற்படாது."

சிரார்த்தம் செய்த பெருமாள்புரத்துப் பெரியவரின் மந்திரங்கள் திடீரென சிவபாலனின் காதுகளில் ஒலிக்கத் தொடங்கின. புதுவெள்ளத்தின் சுழிவாய்கள் அம்மந்திரங்களைச் சொல்லியபடியே அவரை விழுங்க எழுந்தன. மந்திரங்களின் அவரோகணச் சொற்களான பித்ருசாந்தி படித்துறையில் மோதிச்சிதறும் புதுவெள்ளச் சென்னீராய் அவர்மீது படிந்து நனைந்தது. சிவபாலன் காதுகளைப் பொத்திக் கொண்டு துடித்து எழுந்தார். குடையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு இடக்கையால் வேட்டியின் முனையைப் பிடித்த படி, மண்பாதையில் இறங்கி நடந்தார்.
முற்பகல்.
ஆற்றங்கரையிலிருந்து திரும்பிய சிவபாலன் வீட்டுக்குப் போக அஞ்சினார். ஆனாலும் வீட்டைப் பார்த்துதான் நடந்துக்கொண்டிருந்தார். நேராக பெருமாள் கோயிலுக்குள் நுழையலாமா என்றும் தோன்றியது. அதற்கு அவர் மனம் இடம் தரவில்லை. அவர் குடியிருக்கும் பெருமாள்புரம்தான் முகையூரின் நெஞ்சப்பகுதி. அங்கு இல்லாத கோயில்களே இல்லை. அவர் வீட்டிற்கு நான்கு தெரு தாண்டினால் ஈஸ்வரன் கோயில். கிழக்குப் பார்த்து பெருமாள் கோயில் தெருவிலேயே போனால் கருமாரியம்மன் கோயிலும் உண்டு. எங்கு போகவும் மனம் விரும்பவில்லை. விசாலத்தின் நினைவும், மின்னொளியின் நினைவும் அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன. தனிமையிலிருக்கும் வீட்டுள் நடுங்கியபடியே நுழைந்து இரும்புக் கிராதியை சாத்தி உட்புறம் தாழிட்டார். நடையைத் தாண்டி நடுக்கூடத்தில் போய் நாற்காலியில் சரிந்தார். வீடு அவருடன் பேச மறுத்து அதன்பாட்டுக்கு இருந்தது. சுவரில் இருந்த புகைப்படங்கள் அவரை ஊடுருவிப் பார்க்கத் தொடங்கிவிட்டன.

எதிரில் முக்காலியில் கிடந்த புத்தகங்களை வெறுமையாகப் பார்த்தார் சிவபாலன். பாரதியின் நூல்களும், பாரதிதாசனின் நூல்களும். கூடத்து அலமாரியில் பொன்னம்மாவால் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அவரின் பெரும்பாலான நூற்களும்கூட இரு கவிகளைப் பற்றியதுதான். அகிலன், நா.பா, மு.வ. என்று சிலருடையதும் உண்டு. பாரதியைக் காட்டிலும் பாரதிதாசன் மீது மையல். பாரதிதாசனின் கடல்மேற்குமிழிகள் நாயகி மின்னொளியின் பெயரைத் தன் ஒரே மகளுக்கும் வைத்தார் சிவபாலன். அவரின் கவியரங்கங்களுக்கும், பட்டிமன்றங்களுக்கும் பெருங்கூட்டம் கூடும். எங்கு போனாலும் மின்னொளியும் உடன் போவாள். அவரைக் கொண்டாடும் மாணவர் கூட்டம் ஒன்றும் பின்தொடரும். சிவபாலனின் தமிழ் வகுப்புகள் எப்போதுமே அமளிதுமளிப்படும்.

"பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது,
சிறுத்தையே வெளியில் வா"

சிவபாலன் பாரதிதாசனின் கவிதைகளை உறுமலுடன் ஒப்புவிப்பார். இக்கவிதையை அவர் உணர்வெழுச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, பார்வையாளர்களில் பலருக்கும் உடலில் வரிகளும், கரும் புள்ளிகளும் உருவாகி குத்தீட்டிப் பற்கள் தெரிய அவர்கள் உறுமுவதை பார்த்திருக்கிறார்.

"இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே"

எதிரில் இருப்பவர்களை இழிந்து நோக்கி ஆத்திரத்துடன் சொல்வார் சிவபாலன். இருக்கின்றானே என்ற சொல்லை அவர் இழுத்துச் சொல்கையில் பார்வையாளர்களுள் பலர் புழுவாகி நெளிவர். மகள் மின்னொளி பேசும் கூட்டங்களிலோவென்றால் முன்வரிசை பார்வையாளராய் மாறிவிடுவார் சிவபாலன். மகள் பேசுவதில் பிடிபடாத பெருமை அவருக்கு. கூட்டம் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போதே தொடங்கி விடும் சலசலப்பு.

"பாத்தியாடி விசாலம் எம் பொண்ணை. உங்க வகையறாவுல ஒருத்தரு உண்டா இப்பிடி?"

விசாலாட்சிக்கு முகம் சிவக்கும். அவள் அதிகம் பேசுவதில்லை. ஆனால் இத்தருணங்கள் புலம்ப வைத்துவிடும்.

"போதும் உங்க வேலையைப் பாருங்க."

கூட்டம், அது இதுன்னு பொண்ண கூட்டிப்போய் கெடுக்கிறதுமில்லாம பெரும வேற, வகையறாவாம் வாய்க்காலாம்."

நாற்காலியை விட்டெழுந்து கூடத்தில் உலவினார் சிவபாலன். தன் அறைக்குள் அனிச்சையாய்ப் போய் வந்தார். அவ்வீட்டின் உள்ளே மெழுகுபோல் இறுகியிருக்கம் மௌனத்தை சிதைக்காமல் அவர் தனக்கான வழியைக் குடைந்து உருவாக்கியிருந்தார். கூடத்தை விட்டு வெளியேறித் தோட்டத்தின் பக்கம் போனார். பொன்னம்மாவின் கணவன் ஏகாம்பரம் எப்போதாவது ஒருமுறை வந்து சீர்செய்துவிட்டுப் போகும் தோட்டம் அது. அவர் ஒரு செடியையும் தொடமாட்டார். வெயில் சாட்டையைச் சொடுக்கி இழுத்தது.

சிவபாலன் தன் மகளைக் கொன்றது இதைப்போன்றதொரு வெயில் ஏறும் முற்பகல் பொழுதில்தான். மின்னொளி கல்லூரியில் சேர்ந்திருந்த முதல் கோடையது. நகரின் நூலகத்துக்கும், தட்டச்சு வகுப்புக்கும் தினமும் போய் வருவாள். அவளுக்கென்றே வார்க்கப்பட்டது போலிருக்கும் அவள் போய்வரும் அடர் சிவப்பு மிதிவண்டி. அன்று வீடுதிரும்பிய மின்னொளி வழக்கத்தைவிடவும் குதூகலத்தோடு தெரிந்தாள். இருண்ட முகத்துடன் தன்னை எதிர்கொண்ட அப்பாவை அவள் கவனிக்கவில்லை. அவள் கூடத்தில் வந்து உட்கார்ந்ததும் சிவபாலன் வெடித்தார்.

"லைபிரரியில யார்கூட பேசிட்டு வர்ற?"

"தீர்த்தமலை வந்திருந்தான். பேசிட்டு வந்தேன்"

"அவங்கூட பேசாதேன்னு சொல்லியிருக்கேன். ஊர்ல கீற பெரிய மனுசனெல்லாம் வாயெடுத்தா இதத்தான் விசாரிச்சி புத்தி சொல்றான்."

"பேசிக்காட்டினா, சொல்லவேண்டியது தானேப்பா."

"என்னன்னு, அவனுக்குத்தான் எம் பொண்ண கட்டித் தரப்போறேன்னா?"

"அப்படியே இருந்தாலும் அதுல என்ன தப்பு?"

"என் உறவுக்காரனங்க நடுவுல தல நிமிர்ந்து நிக்கமுடியாது."

குறுஞ்சிரிப்பு மாறாமல் மின்னொளி பேசிக்கொண்டே எழுந்து சுவர் அருகில் போனாள்.

"மேடையிலெல்லாம் பேசறீங்களேப்பா..."

சிவபாலனுக்கு சுரீரென்றது. வேகமாய்ப் போய் மின்னொளியின் முகத்தைப் பற்றி சுவரில் இடித்துக் கத்தினார்.

"என்னையவே மறிச்சி மறிச்சி பேசறியா..."

மிரட்சியில் கண்களைத் திறந்து அப்பாவைப் பார்த்தவளுக்கு பேச்சில்லை. சிவபாலனின் இறுகிய பிடியிலிருந்து நழுவிச் சுவருடன் சரிந்தாள் மின்னொளி. பின்னந்தலையிலிருந்து கசிந்த ரத்தக்குழம்பு சுவரில் நீளமாய்க் கோடு தீட்டி, தரையில் அவளைச் சுற்றிப் பரவியது.

பிற்பகல்.
பொன்னம்மாள் செய்து வைத்திருந்த சாப்பாட்டைத் தின்று படுத்திருந்தார் சிவபாலன். வழக்கத்திற்கு மாறாய் இன்று அலைக்கழிக்கும் நினைவுகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. வெயில் கிளப்பும் வெக்கையில் உடல் மெல்லச்சூடேறி காந்தியது. உடலுக்கு மேலே சுற்றும் மின்விசிறி அவரைக் கவ்வ வரும் நினைவுகளை வெறி கொண்டு துரத்தியபடி இருப்பதாக நினைக்கத் தோன்றியது.

"அப்பன்காரன் திட்டுனான்னு தற்கொலை பண்ணிக்கிச்சாம் அந்தப் பொண்ணு. செல்லமா வளந்துட்ட ஒரே புள்ள. அதான் சொல்லுதாங்க. முடியல."

பேச்சை மடைமாற்றிய பிறகு எல்லாம் சுளுவாய் நடந்தேறியது. தெருக்காரர்கள் கைக்கொடுக்காமல் இருந்திருந்தால் எதுவும் முடிந்திருக்காது. கூரையை வெறித்த சிவபாலனுக்கு விசாலத்தின் ஞாபகங்களை மடைபோட முடியவில்லை. மின்னொளி சரிந்ததை ஓடி வந்துப்பார்த்தவள் எழுப்பியக் கத்தலில் அப்போது வீடு அதிர்ந்தது. அதற்குப்பின் அவள் சிவபாலனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். பிறரிடம்கூட அவ்வளவாக இல்லை. பித்துப் பிடித்தவள்போல இருந்தாள். கண்கள் ஆழத்துக்குப் போய்விட்டன. உடல் வெளிறி மெலிந்துபோனாள் விசாலம். உணவு இறக்கமில்லாமல் போன பிறகு ஒரு மாதத்துக்குக்கூட அவள் இல்லை.

விசாலாட்சியின் சாவை நினைத்தால் மரம் இலையுதிர்த்த நினைவே சிவபாலனுள் வந்துபோகிறது. எந்தச் சலனமும் இல்லை. ஆனால் இறக்கும் தருவாயிலும் அவரைக் கொத்திப் பிடுங்கிய அவளின் கண்களைத்தான் அவரால் மறக்க முடியவில்லை. கண்களை மூடினால் மேலிருந்து அவரை குறி பார்த்து செங்காகத்தைப் போல இறங்குகின்றன அவை.

அடுத்தடுத்த சாவுகளால் சிவபாலன் நிலைகுலைந்துப் போனார். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விசாலத்தைப் புதைத்துவிட்டு வந்த பிறகுதான் எல்லாமே முடிந்துவிட்டிருப்பதை உணரமுடிந்தது. உறவினர்கள் விலகிப் போன பிறகு அவரை நிரந்தரமாக தனிமை சூழ்ந்துக்கொண்டது. தனிமையின் துணையோடு போகும் தனது நாட்களை இப்போது அவரால் மனிதர்களின் துணையுடன் இணைத்து கற்பிதம் செய்யமுடியவில்லை. தெருவிலிருக்கும் யாருமே பேசுவதில்லை. பொன்னம்மாளைத் தவிர வேறு உதவியில்லை. சொல்லியனுப்பினால் ஏகாம்பரம் வந்து போவதுண்டு. பள்ளி வேலையைவிட்ட பிறகு காலையில் ஆற்றுப்படித்துறை, பகலுக்கும் வீடு, மாலையில் இருட்டும்வரை நூலகம் அல்லது சின்னத்தம்பியின் தேநீர்க் கடை இப்படியாகச் சுண்டிப் போனது இயக்கம்.

பொன்னம்மாவுடன் முகம் கொடுத்துப் பேசும் சமயங்களில் விசாலத்தின் நினைவுகள் உபரியாகின்றன. அந்தத் தினங்களில் நீண்டநேரத்துக்கு குளியலறையில் இருக்க வேண்டியதாகிவிடுகிறது. கை சோர்ந்து, நரம்புகள் இழுத்துச் சுருளும் அடிவயிற்று வலியோடு சிலநேரங்களில் குளியலறையிலேயே மயங்கிக் கிடந்திருக்கிறார்.

வெயில் மெல்லத் தளர்ந்ததும் வீட்டைப் பூட்டிக்கொண்டு சின்னத்தம்பியின் கடையை நோக்கி நடந்தார் சிவபாலன். நூலகத்திற்கு போக முடியாது என்று தோன்றியது. நூல்களின் மௌன உரையாடலை செவிமடுக்கும் மனநிலை தப்பிப்போயிருக்கிறது. சின்னத்தம்பியுடன் கொஞ்சநேரம் பேசினால் தீரும்.

“வாங்க வாத்தியாரே, கம்மில கொறயில. இன்னிக்கெல்லாம் ஒரு நாலஞ்சிவாட்டி நெனச்சிருப்பேன், பாத்துக்கேன்"

பேச்சுடன் வரவேற்றான் சின்னத்தம்பி. இடம்பார்த்து உட்கார்ந்ததும் தேநீரைப் போட்டு நீட்டினான். பொறுக்கும் சூட்டில் இருந்த தேநீர் மனதை இலகுவாக்கியது. தேநீர்க்கடையை ஒட்டியது போல இருந்த எண்ணைய்க்கடை வீதிக்குப் போகும் சாலை பரபரப்பாகத் தொடங்கியிருந்தது. கருமாரியம்மன் கோயிலில் பாட்டுப்போட்டிருந்தார்கள். தளரும் வெயிலுக்கு மண் வதங்கும் வாசனையை நுகரமுடிந்தது.

சிவபாலனின் இரண்டு மூன்று விழுங்குக்குள்ளேயே சின்னத்தம்பி தன் பேச்சை தொடங்கிவிட்டான். காலையிலிருந்து கடைக்கு வந்தவர்களால் நையப்புடைக்கப்பட்ட தினத்தந்தியின் ஒரு பக்கத்தை அவருக்கு எதிரில் விரித்து விட்டுச் சொன்னான்.

"பாத்தியா சார் நியூசு. நம்ம பி.கஸ்பா பையன் அய்யேஎஸ்சுல டாப்புல வந்துருக்கானாம். பி.கஸ்பான்னா யாரு? எல்லாம் அவங்கதானே? கம்மில கொறயில நம்ம ஊருல மட்டும் அவங்கள்ள ஒரு நூறு வாத்தியாரானா இருக்கமாட்டாங்க? இந்தப் பையன் உங்கக்கிட்ட படிச்சவனா பாருங்க."

சிவபாலன் செய்தித்தாளில் இருந்த படத்தைக் கூர்ந்து பார்த்தார். பெயருடன் வெளியாகியிருந்தது அது. தீர்த்தமலை. சிறிதுநேரம் விடைபெற்றிருந்த நினைவுகள் அவரை ஓடி வந்து பிடித்துக்கொண்டன. அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட நினைத்தார்.

"எங்கிட்ட படிச்ச பையன்தான்."

உணர்வின்றி அவரின் வாய் சொற்களை உதிர்த்தது. பள்ளியிலும், நூலகத்திலும் தீர்த்தமலை மின்னொளியுடன் பேசிச் சிரிக்கும் தருணங்கள் அடுத்தடுத்து எழும்பி வந்து தொந்தரவு செய்தன.

"ஆமா, எங்க சார் ஒருவாரமா உங்கள இந்தப்பக்கம் காணும்? நானுங்கூட ரெண்டுநாளா கடையத்தொறக்கல."

"ஏன்?"

"எம் பொண்ணு ஒரு பையங்கூட போயிடுச்சி சார். அவன் நம்ம பையன் இல்லதான். ஆனா நல்லவனா தெரியிறான். சரின்னுட்டு தேடிக் கூட்டினு வந்து நாங்களே சேத்துவச்சிட்டோம். புள்ளைங்க பாசத்துக்கு முன்னால என்னுமானா நிக்குமா சார்? ஊரு ஆயிரஞ்சொல்லும் சார். திடுக்குன்னு அதுங்க எதாச்சும் பண்ணிக்கினா போன உயிர் திரும்பி வருமா சார்?"

சின்னத்தம்பியின் குரலிலிருந்து சிவபாலனுக்கு சாயைகள் பல பிரிந்து பிரிந்து போவதாக இருந்தன. வாய் திறக்காமல் நீண்டநேரத்துக்கு அப்படியே இருந்தார்.

"என்னா சார் சும்மாயிட்டிங்க?"

"ஒண்ணுமில்ல. பி.கஸ்பாக்கு இப்பிடி போலாம்ல?"

"எண்ணெ கட பஜார்ல நொளஞ்சி, வளையல்காரத் தெருவுல நடந்தா பி.கஸ்பா."

சிவபாலன் தெருவிலிறங்கி எண்ணைய்க்கடைத் தெருவைப் பார்த்து நடக்கத் தொடங்கினார்.

அழகிய பெரியவன்
Share: 




© Copyright 2020 Tamilonline