Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
அறுவடை
- ஆர்.சண்முகசுந்தரம்|ஆகஸ்டு 2002|
Share:
பருத்திச் செடிகள் பூவும் பிஞ்சும் காய்களுடன் குலுங்கி நின்றன. தோட்டம் முழுவதும் பருத்தியும் சோளமும் பயிர்செய்யப்பட்டிருந்தன. கிணற்று மேட்டிலிருந்து பார்த்தால் பூமி தாழ்வாகப் போய் வேலியில் முடிவதைப் பார்க்கலாம். கிணற்று மேட்டிலிருந்து வாய்க்கால் ஓரத்தில் இருமருங்கிலும் தென்னம்பிள்ளைகள் வைத்துப் பயிராக்கப்பட்டி ருந்தது. கிணற்று மேட்டுக்கு வடபுறமாக மாட்டுத் தொண்டுப்பட்டியிலிருந்தது. நான்கு பக்கமும் கிழுவமுள்வேலி பலமாக காட்சியளித்தது. வேலிக்குக் காவலாக சுற்றிலும் கொஞ்சம் இடம்விட்டு மலங்கிழுவ மரம் செழிப்பாக வளர்ந்திருந்தது. தொண்டுப் பட்டிக்குக் கீழப்புறமாக கொஞ்சதூரம் தள்ளித்தான் வீடும், அதைச் சுற்றி மதிற்சுவரும் எழுப்பப்பட்டிருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் மதிற்சுவர் ஒருபெட்டி போலத் தோற்றமளிக்கும்.

வீடு முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. முதலில் இந்த வீடு கட்ட ஆரம்பிக்கும்போது சின்னப்ப முதலியார் சிமிண்டால் கட்டுவதென்றுதான் திட்டம் போட்டிருந்தார். யுத்த காலத்தில் சிமிண்டிற்கு வந்த கிராக்கியும், அதோடு அப்போது வெட்டிக் கொண் டிருந்த கிணற்றிலிருந்து கிடைத்த கருங்கல்லும் அவர் முடிவை மாற்ற வைத்தன. ஆனால், இப்படித்தான் வெளியார்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். காரணம் இதுவல்ல என்பது முதலியாருக்குத்தான் தெரியும். கருப்பு மார்க்கட்டில் எத்தனை டன் வேண்டுமானாலும் சிமிண்ட் வாங்கலாமென்பது முதலியாருக்குத் தெரியாததல்ல. அதோடு இம்மாதிரி விஷயங்களிலெல்லாம் பணத்தை அவர் பணமென்றே பார்க்கக்கூடியவரும் அல்ல. இந்தக் காட்டை கிணறு வெட்டி தோட்டம் ஆக்குவது என்று அவர் முடிவு செய்தது அதிக உணவு உற்பத்தி செய்யவேண்டுமென்ற அரசாங்கத்தின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அல்ல. தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத்தான். அவருடைய ஆசை இனி ஒருகணம்கூட மகன் மருமகளுடன் கூட்டுக் குடித்தனம் செய்யக்கூடாது என்பது தான்.

கீரனூருக்குச் சுமார் ஒரு பர்லாங் தூரத்திலிருந்த தமது வேலாங்காட்டை முதலியார் நான்கு வருஷத்திற்குள் அற்புதமான தோட்டமாக மாற்றி விட்டார். அவர் மண்ணைத் தொட்டால் பொன்னா கத்தானே இத்தனை நாளும் மாறி வந்திருக்கிறது! இதுவரையில் இம்மாதிரி பல காடுகளைத் தண்ணீர் பொங்கி வழியும் தோட்டங்களாக மாற்றியிருக் கிறார். ஆனால், என்ன எழவோ இந்தப் பெண்கள் விஷயத்தில் தான் சின்னப்ப முதலியாருக்கு அதிருஷ்டம் ரொம்பக் குறைச்சல்! அவருடைய நாற்பதாவது வயதில் ஒரு பையனையும் இரண்டு பெண்களையும் விட்டு மனைவி கால மானதிலிருந்து அவரையும் இந்தப் பெண் தொல்லை சூழ்ந்து கொண்டது. இப்போது வயது கிட்டத்தட்ட எழுபது ஆகிறது. இந்த முப்பது வருடமாக அவர் எத்தனையோ சொத்து சம்பாதித்திருக்கிறார். ஆனால் தமக்கென நிலையாக ஒரு பெண்ணைச் சம்பாதித்துக் கொள்ள முடியவில்லை. ஊருக்குள் பலர் பலவிதமாக பேசுவார்கள், ஆனால், முதலியார் அந்தப் பேச்சுக்களை எல்லாம் பொருட் படுத்த மாட்டார். ''இப்படிப் பேசுகிற பயல்களுக்கு எவனுக்காவது பொண்டாட்டி இல்லாது இருக்குதா? அப்படி இருந்தால்ல அருமை தெரியும்? என்று தமது ஆப்த நண்பரான கருப்பண முதலியாருடன் குறைப்பட்டுக் கொள்வார்.

சவாரி வண்டி தோட்டத்திற்குள் நுழைந்து தொண்டுப்பட்டி ஓரமாகப் போய் நின்றது. வண்டியிலிருந்து முதலில் கருப்பண முதலியார்தான் இறங்கினார். வெற்றிலை பாக்குப் போட்டிருந்ததால் அவர் உதடுகள் செக்கச் செவேலெனச் சிவந் திருந்தது. நெற்றிக் குங்குமத்தை விடக்கூட சிவந்திருந்தது. வண்டி வந்ததுமே வீட்டின் வெளிக் கதவைத் திறந்துகொண்டு சமையல்காரப் பையன் நின்று கொண்டிருந்தான். வண்டிக்காரக் குப்பன் பையனைக் கண்டதும் 'வண்டித் தலையணை'களை எடுத்துப் போகும்படி உத்தரவிட்டான்.

''நீங்க எதாச்சும் குடிக்கிறீங்களா மாப்பிளே?'' என்று சின்னப்ப முதலியார் கேட்டார். 'இப்பத்தான் வெடிஞ்சாப்பலெ இருக்குது. அதுக்குள்ளே வெயில் என்ன போடுபோடுது!'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

''நா இப்பத்தா வயிறு ரொம்பச் சாப்பிட்டுட்டு வாரே. எனக்கு ஒண்ணும் வேண்டாமுங்க. காலங்காரத் தாலேயே போயிட்டீங்களா?'' என்றார் கருப்பண முதலியார்.

''அந்தக் கூத்தெ ஏங் கேக்கிறீங்க! வெளியிலே சொன்னா வெக்கக்கேடு. நம்ம தோட்டத்து மரமேறி நாச்சானில்லீங்க. அந்த நாய் பேச்சைக் கேட்டுட்டு அலைஞ்சதுதான் மிச்சமிங்க''.

''திடீர்னு எங்க போயிட்டு வாரீங்க?''

''காங்கயத்திலே ஒரு சோலி இருந்ததுங்க. அதோடு முந்தி நம்மூட்டிலே சோறு தண்ணி ஆக்கிப்போட்டுக் கிட்டு முத்தான்னு ஒரு புள்ளெ இருக்கலீங்க. அவளெ எங்கெயொ காங்கயத்துலே கண்டமின்னு நாச்சான் சொன்னனுங்க. இந்தப் பயலுக்க உப்புக்காரம்கூடப் போடத் தெரியறதில்லையே, அவளெயாவது போய்க் கூட்டியாரலாமின்னு வண்டியைக் கட்டிக்கிட்டுப் போனனுங்க. அந்தக் கழுதெ ஊரை உட்டூப் போயி ரண்டு நாளாகுதுங்களா!''

கருப்பண முதலியார் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ''அந்த எழவெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க. நாஞ் சொன்னபடி செஞ்சிடுங்க! அதுதான் நல்லது'' என்றார்.

சின்னப்ப முதலியார் நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு பேசுவதற்கு வாயைத் திறந்தார். ஆனால், பேச்சு வெளிப்படுமுன் ஒரு பெருமூச்சு வெளிக்கிளம்பி பேச்சைத் தடை செய்தது. ஒருவாறு மூச்சை வெளிப்படுத்திவிட்டு ''அடே! சுப்பா!'' என்று கூப்பிட்டார்.

கருப்பணன் தன்னிடம்தான் ஏதோ சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டி ருந்தார். அதற்குள் சுப்பன் வந்தான். சுப்பனிடம் ஒரு டம்ளர் மோர் கொண்டு வரும்படி உத்திரவிட்டார். முதலியார் ஏதோ சிந்தனையில் லயித்துப் போயி ருந்தார். கண்ணை மூடிக்கொண்டார். இப்போது உண்மையில் தூங்குவது போலவேதான் இருந்தது. தலைமுடியை ஒட்டக் கத்தரித்து விட்டிருந்தார். தேங்காய் எண்ணெய் தடவிய தலை முடி பளபளவென மின்னியது. காதோரத்திலிருந்து வியர்வை கழுத்து வரையிலும் வழிந்துகொண்டிருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததுமே மேல் சட்டையைக் கழட்டி மடிமீது வைத்துக் கொண்டிருந்தார். அந்தச் சட்டையால் வியர்வையைத் துடைத்தார். அதற்குள் ஒரு சொம்பு தண்ணீரும் ஒரு டம்ளர் மோரும் கொண்டுவந்து எதிரில் வைத்தான் சுப்பன்.

''ஏண்டா பொரியல் என்ன செய்திருக்கிறாய்?'' என்றார் முதலியார்.

''ஒண்ணும் செய்யலீங்க! இனிமேல் தான் செய்யோணும்''

''கத்திரிச் செடியிலே போய் பிஞ்சுக் கத்திரிக் காயாக் கொண்டாந்து பொரியல் பண்ணு.''

''சரியிங்க'' என்று கூறிவிட்டு வெளிக் கதவைத் திறந்துகொண்டு சுப்பன் போய்விட்டான்.

முதலியார் மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தார்.

''என்ன யோசிக்கிறீங்க?''

''ஒண்ணுமில்லெ... நீங்க சொன்னதைத்தான் அப்படியே யோசிச்சுக்கிட்டு இருக்கிறேன்.''

''மாமா! யோசிக்க யோசிக்க மலையாட்டந்தான் தோணும். நாங்கூடப்பாருங்க ஊரை உட்டு எப்படியடா வாரதுண்ணு யோசிச்சுக்கிட்டுத்தான் இருந்தேன். பாருங்க, ஒருநாள் திடீர்னு வண்டியிலெ சாமானெ ஏத்திக்கிட்டு பொண்டாட்டி புள்ளெயெக் கூட்டிக்கிட்டு இங்கே வந்திட்டெ! இப்போ, நான் என்ன குறைஞ்சுபோயிட்டேன். உங்க தர்மத்துலே பையன்கள் ரண்டுபேரும் பாட்டுக்கு வந்திட்டாங்க. நான் வெளயாடிக்கிட்டுருக்கறேன்... நாம் என்ன பேசிக்கிட்டு இருந்தோம்?... ஊம்! யோசிக் கிறமினீங்களா? இத்தனெ நாளா யோசிச்சு யோசிச்சு என்னத்தெக் கண்டோம்? மகன் வேணும், மருமகள் வேணும்னு பார்த்துப் பார்த்து என்னாச்சு? அவுங்களுக்கும் நாம வேணும் இன்னு இருக் கோணுமில்லே?''

''நீங்க சொல்றதிலே ஒண்ணும் தப்பில்லே. ஆனா, பேரனுக்கே கலியாண வயசு வந்திட்டுதே, இந்தக் காலத்திலே போயிப் பண்ணிக்கிட்டானே! இண்ணு நாலு பேரு உங்களப்போலொத்தவங்க பேசு வாங்களே!''

''உங்களுக்கு வயசு என்னாகுதுங்க?''

''கிட்டத்தட்ட எழுபது இருக்குமிங்க''

''சும்மா வெளயாடாதீங்க மாமா!''

''ஆமா மாப்பிளெ!''

''நான் நம்ப மாட்டேன்!''

''உங்க உத்தேசம்தா என்ன சொல்லுங்க பாப்போம்.''

''எனக்கு மேலெ நாலஞ்சு வருசம் மூத்திருப்பீங்க.''

''போங்க மாப்பிளெ! நீங்க ஒண்ணு! அம்பது அம்பத்தைந்து இருக்குமிங்கறீங்க!''

''அதுக்கு மேலெ ஒரு பயல் மதிச்சிட்டான்னா என் காதை அறுத்துக்கறேனுங்க!''

சின்னப்ப முதலியார் உள்ளம் குளிர்ந்துவிட்டது. ஆனந்தத்தால் கடகடவெனச் சிரித்தார். குரங்கு கூடச் சிரித்தால் முகம் நன்றாகத்தானிருக்கும் போலிருக்கிறது! முதலியார் தன் உடலை மேலும் கீழும் பார்த்துக் கொண்டார். ''ஒடம்பு வாக்குங்க மாப்பிளெ! அதுதான் நீங்க ஏமாந்திட்டீங்க'' என்றார்.

கருப்பண்ண முதலியார் ஏமாந்தவர் போலவே ஆச்சரியப்பட்டார். ''அதுக்கென்னுங்க, இருபது வயசு வாலிபன் எம்பது வயசுக் கிழவனாட்டம் இருக் கிறதில்லீங்களா? அவனெ நான் வாலிபன்னு ஒத்துக்க மாட்டேன். உங்களையும் நா வயசானவங்கன்னு சொல்ல மாட்டேன்.''

சின்னப்ப முதலியார் முன்னாலிருந்த மோர் டம்ளரை எடுத்துக் குடித்தார். அவருக்கு உற்சாகம் மேலிட்டு விட்டது. காலையில் தோல்வியுடன் திரும்பிய சோர்வு இந்தப் பேச்சில் பஞ்சாப் பறந்துவிட்டது. அவருடைய வாலிபப் பருவமும் வீர தீரச் செயல்களும் நினைவுக்கு வரத் தொடங்கின. ஒரு கணம் மறுபடியும் கண்ணை மூடினார். ஆனால், அந்நிலையை நீடிக்கவிடவில்லை கருப்பண முதலியார். ''மாமா! வயசு காலத்திலே நீங்க ஒண்ணும் கஷ்டப்படக்கூடாது. இந்த வயசிலே எத்தனையோ சம்பாதிச்சிட்டீங்க. ஆனால், ஏதாச்சும் ஒரு சொகம் உண்டா? இந்த சொத்து சொகமெல்லாம் நீங்க சம்பாதிச்சதுதானே? ஆனா என்ன பிரயோசனம்? நாளைக்கு நீங்க தலையிலா கட்டீட்டுப் போயிடுவீங்க? நீங்க எப்படி இருக்க வேண்டியவங்க! எப்படி இருக்கறீங்க? அனாதை யைப்போல காட்டுக்குள்ளெ தன்னந்தனியா உட்கார்ந்துக்கிட்டு இருக்கறீங்க! ஏமம் சாமத்திலே ஒரு வாயை வலிச்சது, வயித்தெ வலிச்சது யாருங்க மாமா இருக்கிறாங்க பாக்கறதுக்கு? காரத்தாலே வந்து சேதி தெரிஞ்சிக்கிட்டு போறவங்கதானே? இத்தனெ சொத்து இருந்தும் என்ன பிரயோசனம்?'' கருப்பண முதலியார் பேசிக்கொண்டே இருந்திருப் பார். ஆனால், அதற்குள் சுப்பனுடன் இன்னும் யாரோ பேசிக்கொண்டு வருவது கேட்கவே தமது பேச்சை நிறுத்திக்கொண்டு வாயில் கதவுப் பக்கம் திரும்பி யார் வருவது என்று பார்த்தார்.

''அடடா! வாப்பா நாச்சிமுத்து! எங்கே ரொம்ப நாளா ஊரிலேயே காணோம்?'' என்றார் சின்னப்ப முதலியார்.

''எங்கயோ காக்கா குருவியாட்டம் போறது தானுங்க... அண்ணங்கூட இருக்கறாங்களா! நா உங்க ஊட்டிலெ போய்ப் பார்த்திட்டு வாரே'' என்றான் அங்கு புதிதாக வந்த நாச்சிமுத்து.

''ஊட்டிலே இல்லேன்னா இங்கேதானே இருப் பேன்னு குழந்தயக் கேட்டாகூடச் சொல்லுமே? நீ எப்பப்பா வந்தாய்?'' என்றார் கருப்பண முதலியார்.

நாச்சிமுத்து வாசல் படியில் காலிலிருந்த பூட்சைக் கழட்டிவிட்டு விட்டு எதிர்த் திண்ணையில் உட்கார்ந்து கொண்டான். ஓபன்கோட் பொத்தானைக் கழட்டி விட்டான். மேல் அங்கவஸ்திரத்தால் ஷர்ட்டிற் குள்ளிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே விட்டிற்குள் எட்டிப் பார்த்தான். ''ஏன்? என்ன வேண்டும்?'' என்றார் சின்னப்ப முதலியார்.

''கொஞ்சம் தண்ணி வேணுமிங்க'' என்று கூறிவிட்டு கருப்பண முதலியாரைப் பார்த்து, 'ஏண்ணா, நூலெல்லாம் இப்பத் தறிக்குக் கெடைக்குதுங்களா?'' உங்களுக்காட்ட எல்லாம் பசங்களாப் பொறந் திருததின்னா எனக்கும் வெடுக்கினு இருக்குமிங்க'' என்றான்.

சின்னப்ப முதலியார் சுப்பனைக் கூப்பிட்டுத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு, ''ஏப்பா? ஒரு புள்ளெயெப் பெத்துவிட்டு மலையெத் தூக்கித் தலெ மேலெ வெச்சுக்கிறமாதிரிப் பேசுறயே? யார் கையினலாச்சும் புடிச்சுக் கொடுத்தீட்டினா உம்பாடு யோகம் தான்!'' என்றார்.

''நம்ம நாச்சிமுத்துப் பேச்செ நீங்க ஒரு பேச்சினு எடுத்துக்கலாமுங்களா? எதையோ நெனைச்சுக்கிட்டு எதையோ பேசுவான்! அதிருக்கட்டும்... எங்கே போயிருந்தே! இப்போ என்னா செய்வே?'' என்றார் கருப்பண முதலியார்.

''இப்பொ புதுசா ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சிருக் கறணுங்க?''...

சின்னப்ப முதலியார் குறுக்கிட்டு அது என்னப்பா அது? எனக்குப் புரியறாப்பலே சொல்லு!'' என்றார்.

கருப்பண முதலியார் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார். ''நம்ம நாச்சிமுத்து நாலு எடத்துக்குப் போறவன் பாருங்க! இது நம்ம ஊரு, நம்ம ஊர்க்காரர்கிட்ட பேசறமிங்கறதையே மறந்திட்டுப் பேசறானங்க'' என்றார்.

''எத்தனை ஊர்தா போனா என்னுங்கண்ணா? உங்களைப் போலெ ஒரு மனுசரைப் பாக்க முடியுமிங்களா?''

''அது கெடக்கட்டும்! அப்புறம் சொல்லு! என்ன பண்ணறாய்?''
நாச்சிமுத்து மனத்திற்குள் சபித்துக்கொண்டான். தன் கோபத்தை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல், ''உங்களோட்டச் சிரிப்பு வாராப்பலே பேசறதுக்கு ஆராலும் முடியாதண்ணா...! உங்களுக்கு திருப்பூர் தரகு கடை ஆறுமுகம் செட்டியாரைத் தெரியுமல்ல? உங்களை நல்லாத் தெரியுமிங்கறாரே?...'' என்று கேட்டுவிட்டு சின்னப்ப முதலியார் முகத்தைப் பார்த்தார்.

''இவ்வடத்திக்கு, இந்த இருபது முப்பது மைலுக் குள்ளெ நம்மளத் தெரியாதவங்க ஆரப்பா இருக்கறாங்க?'' என்றார் சின்னப்ப முதலியார்.

''அது எனக்குத் தெரியாதுங்களா? அண்ணா, உங்களுக்குத் தெரியாதுங்க. நா சின்னப் பயனிலிருந்துரு இவுங்ககிட்டயே இருந்தவனுங்க! நாங்க போகாத எடமில்லீங்க... பாக்காத மனுசரில்லீங்க! அது எல்லாம் கள்ளுக்கடெ சாராயக்கடை இருந்த அந்தக் காலத்திலுங்க...''

இடையில் கருப்பண முதலியார் குறுக்கிட்டார். இந்தப் பேச்சு அவருக்குப் பிடிக்கவில்லை. தன்னைவிட அதிகமாகச் சின்னப்ப முதலியாரிடம் நாச்சிமுத்து உறவு கொண்டாடுவதை அவர் விரும்பவில்லை.

'' ஏப்பா, மாமனும் நீயும் போன எடம் வந்த எடத்தெப் பத்தி இப்பொ ஆரப்பா கேட்டாங்க? திருப்பூரின்னாய், ஆறுமுகம் செட்டியார்னாய், அப்புறம்?''

''அதெத்தானே சொல்லப் போறனுங்க. புதுசா ஒரு பஞ்சாபீஸ் கட்டப் போறாருங்க.. அதுல்லே எல்லா பொறுப்பும் என்னெச் சேந்ததுங்க... அவரோடெ இன்னும் ரண்டு பேரு சேர்ந்துருக்காங்க! பணம் ரம்ப வேணும் பாருங்க. இன்னும் ஒரு கூட்டுச் சேத்திக் லாமினு பாக்கறாருங்க! அவருகூட கூட்டுச் சேர்ற துக்கு ஆளா கிடையாது? ஆளு சேத்துக்கறதுக்கு முந்தி பலதையும் யோசனை பண்ண வேண்டும் பாருங்க! அதுக்குத்தா நம்ம கிட்டெ அனுப்பிச் சாருங்க.''

''என்ன மாப்பிளெ! நம்ம நாச்சிமுத்துச் சும்மாவே இருக்க மாட்டானுங்க! எதாச்சும் ஒண்ணு பண்ணிக்கிட்டுத்தா இருப்பானுங்க. எப்படியோ ஆரையோ புடிச்சு ஒரு நல்ல தொழிலெ ஆரம்பைச்சிட்டானே!'' என்றார் சின்னப்ப முதலியார்.

கருப்பண முதலியாருக்கு முதலிலிருந்தே ஒன்றும் பிடிக்கவில்லை. நாச்சிமுத்து வந்ததும் வியாபாரத் துக்குக் கூட்டுச் சேர ஆள் பிடிப்பதும் அவருக்குக் கசப்பாக இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ள முடியுமா? வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை வெளியில் வந்து துப்பிவிட்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டே வந்து உட்கார்ந்தார். நாச்சிமுத்து அவரைப் பார்த்துக் கொண்டே புன்சிரிப்புடன், 'ஏண்ணா? பொய்யிலச் சாத்தெ முழுங்கீட்டீங்களா?'' என்றான்.

''அதெல்லாம் ஒண்ணுமில்லெ! உன்னைப் பத்தி மாமெ சொன்னாங்களா? அதெயே நெனச்சுக்கிட்டு இருந்திட்டெ! எதெயும் ஆரம்பிக்கறதுக்கு உன்னையாட்ட ஆராலும் முடியாது. ஆனாக் கடைசி வரையிலும் இருந்து அந்தப் பலனெ அடைய மாட்டீங்கறயே! அந்த ஒரு கொணம் வந்து உன்னெக் காலெ வாரி உட்டுடுதே!'' என்றார் கருப்பண முதலியார்.

சின்னப்ப முதலியார் விரைவில் நாச்சிமுத்துவை அப்புறம் தாட்டி விடவேண்டும் என்று எண்ணினார். கருப்பண முதலியார் பேச்சை வளர்த்திக்கொண்டே போவது அவருக்குப் பிடிக்கவில்லை. ''ஏப்பா! உன் சின்ன முதலாளியெப் பாக்கறது தானே?'' என்று தன் மகனை மனதில் வைத்துக்கொண்டு கேட்டார்.

''நீங்க ஒண்ணு! அவுங்கெல்லாம் துணிஞ்சு ஒரு காரியத்துலெ எறங்குவாங்கின்னா இருக்கறீங்களா? முன்னெருக்கா அப்படித்தா ஒரு லாரி ஒண்ணு ரொம்பச் சீப்பா வந்தது. சரி, அதெ வாங்கி உருட்டுக்கிட்டிருக்கலாமேன்னு அவருகிட்டெப் போயிச் சொன்னேன். கெரகத்து வேளெ பாருங்க! அப்பத்தா அவரு தோட்டத்துக்குப் போயிட்டு வாரப்போ நம்ம மேக்காலெப் பள்ளத்துக்குளெ, மேட்டிலே ஒரு லாரி கெட்டுப் போயித் தள்ளறதுக்கு ஆள் தேடிக்கிட்டு இருந்திருக்கிறாங்க! அதெப் பாத்திட்டு வந்திருக்கறாரு! நா சொன்னதும் எடுத்த எடுப்பிலே 'ஏப்பா, சும்மா வந்த லாரியையே தள்ளறதுக்கே ஆள் கெடக்க மாட்டீங்குது! பாரத்தோட எங்காச்சும் கண் காணாத எடத்துலெ போயி நிண்ணுக்கிட்டுதான்னா தள்ளறதுக்கு ஆளுகளுக்கு எங்கப்பா போறது? அப்பறம் சாமானக்காரனுக்கு ஆரப்பா பதில் சொல்றது? இதெல்லாம் நமக்கு ஒத்துக்காதுன்னு ஒரே அடியாச் சொல்லீட்டாரு. எனக்கு வந்த சிரிப்பெ அடக்க முடியலீங்க. எல்லா உங்க மருமக கையிலே அடக்கமுங்க. இவராக ஒண்ணும் செய்ய மாட்டாருங்க'' என்றான்.

கருப்பண முதலியார் சிரித்தார். தன் மருமகளைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டதும் சின்னப்ப முதலியார் உள்ளூர எரிச்சல் அடைந்தார். ''நம்ம நாச்சிமுத்து சொல்றது நெஜந்தா மாப்பிளெ! இப்ப அவெவெறுஞ் சக்கைதா மாப்பிளெ! அவ, அவனெ உறிஞ்சிட்டா'' என்றார்.

''என்னமோ போங்க, நீங்க அரமணையாட்ட உள்ள ஊடு வாசலெ எல்லாம் உட்டுட்டு இப்படி வந்து காட்டுக்குளெ உக்காந்துகிட்டு இருக்கறதெப் பாத்தா எனக்கெல்லா வருத்தமாத்தானிருக்குதுங்க'' என்றான் நாச்சிமுத்து. பிறகு கருப்பண முதலியாரைப் பார்த்து, ''ஏண்ணா! தறிக்கு நூலுக்கீலெல்லாம் நல்லாக்கெடேக்குதுங்களா? இல்லாட்டிச் சொல் லுங்க! எத்தனை வேணும்மானும் கொண்டாந்து கொடுக்கச்சொல்றேன்'' என்று கூறினான்.

''இனி குடும்பத்தோடெயே திருப்பூர் போயிடு வயாக்கும்?'' என்றார் சின்னப்ப முதலியார்.

''திடீர்னு போக முடியுமிங்களா? குடும்ப மின்ன எத்தனெ பேருங்க? நா ஒண்ணு புள்ளெ ஒண்ணு! எங்கக்கா வாரமிம்பாளோ மாட்டீம்பாளோ? நீங்க ஒண்ணும் சொல்லமாட்டீங்கறீங்களே?''

''நாந்தா மொதல்லியே சொல்லீட்டனே! வயசு காலத்துலே இது நமக்கு, அதெல்லாம் தோதுப் படுமா?''

''வயசு! வயசுங்கறீங்களே! அப்படி என்ன வயசாகிப் போயிடுச்சுங்க?'' என்று கூறிவிட்டு கருப்பண முதலியாரைப் பார்த்துச் சிரித்தான். அவன் சிரித்ததின் உள்ளர்த்தம் கருப்பண முதலியாருக்குத் தெரியும். பெண் வேட்டையில் இப்போதும் சின்னப்ப முதலியார் யாருக்கும் இளைத்தவரல்ல. அதை மனதில் வைத்துக் கொண்டு நாச்சிமுத்து சிரிக்கிறான் என்பது கருப்பண முதலியாருக்குத் தெரியும். ஆனால், அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார் நாச்சிமுத்துச் சொல்றதெக் கேட்டீங்களா? நாஞ் சொன்னத்தா நம்பமாட்டீங்க! சிறு வயசிலிருந்து உங்க கிட்டயே இருந்தவன் சொல்றான் கேளுங்க?'' என்றார்.

நாச்சிமுத்துக்கு இதன் உள்ளார்த்தம் தெரியாது. இருந்தாலும் தான் வந்ததிற்கு ஏதோ இரண்டு பேச்சுப் பேசி ஆயிற்று. இனி அதிக நேரம் செய்வதில் அர்த்தமில்லை என்று பட்டது. தான் உத்தேசித்து வந்த காரியத்திற்கு மெள்ளப் பேச்சை ஓட்டினான். ''ஊட்டுலெ எங்கயோ கொஞ்சம் கருவாடு இருந்ததாக்கும். அதுக்கு ரண்டு கத்திரிப் பிஞ்சு வேணுமின்னு புள்ளெ சொல்லிச்சு! நம்ம தோட்டத் துலே எதாச்சும் கத்திரிச் செடி போட்டிருக் கறீங்களா?'' என்று நாச்சிமுத்துக் கேட்டான். அவன் வரும்போதே சமையல்காரச் சுப்பன் கத்திரிக்காய் பறித்துக் கொண்டு வந்தது அவனுக்குத் தெரியும். அதோடும் வரும் வழியில் கத்திரிச்செடி காயும் பிஞ்சும் பூவோடு செழித்துக் குலுங்கி நின்றதைப் பார்த்து வந்திருந்தான்.

சின்னப்ப முதலியார் இதற்கு நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. ''அடே ! சுப்பா!'' என்று சமையல் காரனைக் கூப்பிட்டு நாச்சிமுத்துக்கு வேண்டிய கத்திரிக்காய் பறித்துக் கொடுக்கும்படி உத்தர விட்டார்.சுப்பனும் கையிலிருந்த கரண்டியை உள்ளே கொண்டு போய் வைத்து விட்டு ஒரு சிறிய கூடையுடன் கத்தரிக்காய் பறிக்கக் கிளம்பினான். இதைப் பார்தததும் நாச்சிமுத்தும், ''சரி, அப்படியே ரண்டு காயெப் பறிச்சிக்கிட்டுப் போறனுங்கோ.. எதுக்கும் நா சொன்னதெ இன்னொருக்கா யோசனெ பண்ணிப் பாருங்க'' என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

நாச்சிமுத்து வாயில் கதவைத் தாண்டியதும் கருப்பண முதலியார் சிரித்தார். அந்தச் சிரிப்பில், எத்தனையோ விஷயங்களைக் கூறிவிட்டார். ஆனால், நாச்சிமுத்துவைப் பற்றி சின்னப்ப முதலியாருக்க யாரும் கூறித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சுமார் பன்னிரண்டு வயதுப் பையனாக இருக்கும்போதே சின்னப்ப முதலியாரிடம் நாச்சிமுத்து வேலைக்கு வந்துவிட்டான். அந்தக் காலத்தில் சின்னப்ப முதலியார் கள்ளுக்கடை, சாராயக்கடை குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வந்தார். முதலில் கூப்பிடும் குரலுக்கு ஏனென்று கேட்கும் பையனாக வேலைக்குச் சேர்ந்த நாச்சிமுத்து நாளாக நாளாகக் கடைப்பொறுப்பு முழுதும் கவனிக்கும் நிர்வாகியாக உயர்ந்து விட்டான். சின்னப்ப முதலியாரே வேடிக்கையாகச் சொல்வார். 'நாச்சி! நாச்சி! என்று கூப்பிட்டு வந்தேன். அவன் இப்போது நாச்சப்பனாகி நாச்சி முத்துவாக மாறிவிட்டான் என்பார். ஆனால் ஆள் உருவமும் உடையுமதான் மாறினானே ஒழிய அறிவு ஒன்றும் அதிகமாக மாறிவிட வில்லை. முதல் முதலில் மாதம் மூன்று ரூபாய் சம்பளத்திற்குச் சேர்ந்தபோது இருந்த பணக்கஷ்டம் தான் அவன் கடைசி கடைசியாக மாதம் நூறு ரூபாய் வாங்கும்போதும் இருந்தது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். முதலியாரிடம் இருக்கும் வரையிலும் கையில் பணப் புழக்கததிற்கு ஒன்றம் குறைச்சல் இல்லை. சாராயக் கடையில் சதா சீட்டாட்டம் நடைபெறும். குடிவெறி தலைக்கேறிய பிறகு நினைவு தடுமாறிய நிலையை ஆட்டக்காரர்கள் அடையும் போது நாச்சிமுத்தும் ஆட்டத்தில் கலந்து கொள் வான். அப்புறம் வெற்றி நிச்சயம் நாச்சி முத்துக்குத்தான். ஆட்ட ஆரம்பத்தில் ஒரு நாளும் நாச்சிமுத்து கலந்து கொள்ளமாட்டான். ஆனால், அது அந்தக் காலம். கள்ளுக்கடை எல்லாம் போய்விட்டது. ஆனால் சீட்டாட்டம் தான் எஞ்சி நிற்கிறது. சீட்டாட்டம் இருந்து என்ன பயன்? யார் முன்போல ஏமாறுவார்கள்? ஒவ்வொருத்தனும் பிறரை ஏமாற்றவல்லவா வழி பார்த்துக் கொண்டிருக்கிறான்? எப்படியோ ஏதாவது ஒரு நாளைக்கு நல்ல வேட்டை கிடைக்காதா என்று நாச்சிமுத்துக்கும் நப்பாசை போகவில்லை. அதை விட்டுத் தான் அவனுக்கு வேறு என்ன தொழில் செய்யத் தெரியும்? என்ன தொழில் செய்து தான் தனக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க முடியும்?

''என்ன மாப்பிளெ சிரிக்கிறீங்க? அவுங்கப்பனெப் பத்தி உங்களுக்குத் தெரியாது. அவெ குடிச்சிக் கிட்டே இருப்பன். கையிலே ஒரு ரூவா முழுசாப் கெடச்சிட்டுதுன்னா, அதை கீழே பலமாப் போட்டு ஒண்ணு ரண்டுண்ணு எண்ணிக்கிட்டே இருப்பான். பக்கத்து ஊட்டுக்காரன் இவங்கிட்டெ இத்தனெ ரூவா இருக்குறதுன்னு நெனச்சிக்குவானம்! அவனுக்குப் பொறந்த புள்ளெயுங்க இவன்'' என்றார் சின்னப்பா முதலியார்.

''அது சரி, நாஞ் சொல்லியா நீங்க தெரியோணும். கோவணத்திலே ஒரு காசிருந்தா கோழிகூப்பிடப் பாட்டுப் பாடுற ஆளுங்க.''

'என்னமோ நம்ம கிட்ட இருக்கிறவரைக்கும் நல்லாக் காலட்சேபம் நடந்தது. பாக்கிறவங்க அவனத் தானெ மொதலாளியிம்பாங்க!''

''நானும் வந்து நேரமாவுதுங்க. போயிட்டு வரட்டுங்களா?''

''இங்கேயே சாப்பிட்டுட்டுப் போனாப் போவுதுங்க... அடே! சுப்பா ! எலெயெப் போடடா!''

ஆர்.சண்முகசுந்தரம்
Share: 




© Copyright 2020 Tamilonline