உளமாரச் செய்யலாம் உறுப்பு நன்கொடை
வாழ்வது ஒருமுறை. அதில் வைகறை பலமுறை. ஆனால் விடியல் என்பதே இல்லாது, நோயின் இருளில், உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால், உறுப்புமாற்றுச் சிகிச்சை அல்லது மரணத்தறுவாய் என்றிருப்போருக்கு உடலுறுப்புகளைத் தானம் செய்வதன்மூலம் மறுபடியும் வாழ ஒரு வாய்ப்புத் தரமுடியும். இது தற்கால மருத்துவ வளர்ச்சியில் வந்திருக்கும் வரம். நான் அமெரிக்காவில் மருத்துவப் பயிற்சியில் இருந்த காலத்தில், அமெரிக்க உறுப்புமாற்றுச் சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது உரையில் விநாயகர் படத்தைப் போட்டு, உலகிலேயே மிகப் பழங்காலத்தில் உடலுறுப்பு அறுவை சிகிச்சை நடந்ததற்கான சான்று இதுவே என்று சொல்லித் தனது உரையை ஆரம்பித்தார். புராணக்கதைகளில் இதைப்பற்றிப் படித்திருக்கலாம். ஆனால், இன்று உண்மையிலேயே உறுப்புமாற்று அறுவை சிகிச்சை திறம்பட நடக்கின்றது. அதுகுறித்த சில உண்மைகளை அறியலாம் வாருங்கள்.

யார்? எதை?
யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். தற்காலத்தில் எவரும் சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதி, தசை, தோல், எலும்பு மஜ்ஜை போன்றவற்றை உயிருடன் இருக்கும்போதே கொடுக்கலாம். கடவுள் இரண்டு சிறுநீரகங்கள் கொடுத்திருப்பதால், ஒன்றைக் கொடுத்தாலும், மற்றொன்றின் உதவியுடன் வாழலாம். இதைத்தவிர இறந்தபிறகு தானம் செய்யவும் முன்கூட்டியே பதிந்து கொள்ளலாம். வாகன ஓட்டும் உரிமம் வாங்கும்போதோ, அல்லது www.organdonor.gov வலைதளத்திலோ பதியலாம். இதைத்தவிர எலும்பு மஜ்ஜை தானம் செய்ய, உமிழ்நீர் பரிசோதனைக்குப் பின் பதியலாம். இதுபற்றி bethematch.org வலைதளத்தில் விவரமாக உள்ளது. இதற்கு வயது வரையறை இல்லை. முதியவரானாலும் உறுப்புகள் நலமாக இருந்தால் செய்யலாம். நாம் பதிந்தபின், பரிசோதித்து, தானம் செய்ய நாம் தக்கவரா இல்லையா என்பதை மருத்துவர்கள் முடிவுசெய்வர்.

சிறுநீரகம் பெரும்பாலும் நெருங்கிய உறவினரால் அளிக்கப்படும். உடன்பிறந்தோர் அல்லது நெருங்கிய உறவினரானால், ரத்தப்பிரிவு, தசைப் பொருத்தம் ஆகியவை பொருந்திவரும் வாய்ப்பு அதிகம். திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் பார்ப்பதுபோல் உறுப்பு கொடுப்போருக்கும், வாங்கிக் கொள்வோருக்கும் பொருத்தம் இருக்கவேண்டும். இன்றைய காலத்தில் நல்ல தரமான மருந்துகள் இருப்பதால் இந்தப் பொருத்தங்கள் சற்றே தளர்த்தப்பட்டுள்ளன.

தானம் பெற்றவர் செய்ய வேண்டுவது
ஓர் உடலில் வேறொரு நபரின் உறுப்பைப் பொருத்தும்போது, அதை ஏற்காமல் உடல் எதிர்க்கும். இந்த எதிர்ப்புச்சக்தியைக் குறைக்க மருந்துகள் கொடுப்பர். இந்த மருந்துகளை, தானம் பெற்றவர் வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். இதனால் நோயெதிர்ப்புச் சக்தி குறையும் வாய்ப்புண்டு. இவர்களை எளிதில் நோய்க்கிருமிகள் தாக்கலாம். அதையும்மீறி உடலுறுப்பு வேலை செய்யமுடியாமல் போகலாம். அப்போது மீண்டும் சிகிச்சை தேவைப்படும். உறுப்புகளின் பலம், நோய்க்காரணம் முதலியவற்றைப் பொறுத்து உறுப்புகளின் செயல்பாடு நீடிக்கும்

தானம் தருபவர்கள் செய்ய வேண்டுவது
இவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னரே பல பரிசோதனைகளுக்கு உள்ளாக வேண்டும். இவர்களின் உடல் நலமாக இருக்கிறதா என்ற பரிசோதனைக்குப் பிறகே உடலுறுப்பை அறுவடை செய்வர். அதற்குப் பிறகு மருந்து தேவைப்படாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதன்மை மருத்துவரைப் பார்த்து சிறுநீரகம் அல்லது கல்லீரல், எதைத் தானம் செய்தார்களோ அதன் எஞ்சிய பகுதி வேலை செய்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

எலும்பு மஜ்ஜைமாற்று சிகிச்சை
இதைப்பற்றித் தென்றல், மார்ச் 2011 இதழ்க் கட்டுரையில் விவரமாக எழுதியுள்ளேன். எலும்பு மஜ்ஜைமாற்று சிகிச்சைக்கு இடுப்பிலிருந்து மஜ்ஜை எடுப்பர். இது புற்றுநோய் தாக்கியவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்தச் சிகிச்சைமுறை மிக எளிதாகச் செய்யப்படுவதால் தானம் செய்பவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது. இதைப்பற்றிய தகவல்களுக்கும் உங்கள் ஊரில் எலும்புமஜ்ஜை வழங்க விரும்புவோர் கூட்டம் நடத்திப் பதியவும் bethematch.org வலைமனையைப் பார்க்கவும்.

இந்தியர்கள் ஏன்?
தெற்காசியர்களான நமக்கு அமெரிக்காவில் பொருத்தமான உறுப்புக் கிடைப்பது மிகவும் அரிது. அதனால் முன்கூட்டியே பதிந்தால், தேவை ஏற்படும்போது அந்த அமைப்புகள் நம்மை அணுகும். சிறுநீரக தானம் செய்ய முன்வருவோர், அவரது குடும்பத்தினருடன் பொருத்தம் இல்லாவிடில், வேறு எவரோடு பொருந்துகிறதோ அவருடன் இணை மாற்றுசிகிச்சை செய்யவும் வாய்ப்பு உள்ளது. இதை 'Paired donor' என்று சொல்வர்.

அமெரிக்கச் சட்டதிட்டங்கள்
நெருங்கிய உறவினர் தானம் செய்ய இயலாத நிலையில், மாற்று சிகிச்சை அட்டவணையில் பெயர்கொடுத்துக் காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியலில், பணமோ, புகழோ செல்லாது. அவரவர் வரிசைப்படியே தானம் வழங்கப்படும். உடல் உறுப்பு தானம் செய்வதற்கும், பெறுவதற்கும் எந்த மதத்திலும் தடையில்லை. இதனை பணம் கொடுத்து வாங்கி வணிகமாக்குவது சட்டப்படி குற்றம் என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

இங்கிருப்பவரின் உறவினர் இந்தியாவில் நோய்வாய்ப்பட்டால், இந்தியாவுக்குச் சென்று உறுப்பு தானம் செய்யலாம். அங்கும் இந்த அறுவை சிகிச்சை முறைகள் நல்லமுறையில் செய்யப்படுகின்றன. 'வறியார்க்கொன்று ஈதலே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து'. இல்லாதவர்க்கு எதையும் எதிர்பார்க்காமல் கொடுப்பதே ஈகை என்று திருவள்ளுவர் சொன்னதை நினைவில் கொண்டு உடலுறுப்புக் கொடை தர முன்வருவோம்.

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com