தன்முன் மேசையில் எறியப்பட்ட பரத் பற்றிய தகவல்களடங்கிய கோப்புகளைச் சக்கரவர்த்தி சல்லடைக் கண்களால் அலசியவாறே "கைலாஷ் என்ன நீ அனுப்பின ஆளைப் பிடிக்கமுடிஞ்சதா? விபரீதம் ஆவறதுக்குள்ள ஆஃப் பண்ணு" என்றார். அப்போது அவர் கவனத்தை மனோகரும் பரத்தும் ஒன்றாயிருக்கும் புகைப்படம் ஈர்த்தது.
"கைலாஷ் கைலாஷ்.. பரத்தோட இருக்கிற இந்த ஆசாமி யாரு?"
கைலாஷ் உற்றுப் பார்த்துவிட்டு, "இவனா? பரத்தோட க்ளோஸ் ஃப்ரெண்டாம். இவன் டிவி சீரியல் பாத்தா அவன் அழுவானாம். அவனுக்கு ஜுரம் வந்தா இவன் மருந்து சாப்பிடுவானாம். மந்திரவாதியோட உயிர் ஏழுகடல் தாண்டி ஒரு கிளியோட உடம்புல இருக்கும்னு கதைகள்ல வருமே, அதுமாதிரி இவன் உயிர் அவன்கிட்டயும், அவன் உயிர் இவன்கிட்டயும் இருக்குதாம். தகவல் சேகரிச்ச பசங்க குடுத்த விவரத்தைச் சொன்னேன்."
சக்கரவர்த்தி இன்னும் அந்தப் படத்தை உற்றுப் பார்த்துவிட்டு, "இவன் பேரு மனோகரா?"
"ஆமா எப்படி சரியா கேட்டீங்க? இவனை முன்னமே தெரியுமா?"
"ம்ம்..ரெண்டு மூணு தடவை துபாய் போனபோது பாத்துருக்கேன். நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில சூப்பர்வைசரா இருக்கான். ப்ராஜெக்ட் சைட்டிலேருந்து மாத்தி ஆஃபீசுலேயே மேனேஜர் வேலைக்கு மாத்தச்சொல்லி கேட்டிட்டிருந்தான். நல்லா வேலை செய்யிறவங்கிறதாலே, ப்ராஜெக்ட்லேயே இருக்க சொல்லியிருக்காங்க. பொறுமையிழந்து மனோகர் என்கிட்ட மேல்முறையீடு பண்ணிட்டான். நானும் கம்பெனி டைரக்டர்ங்கிற முறையில விசாரிச்சிட்டிருந்தேன். இவன் தகுதிக்கு மீறி ஆசைப்படறவன். நமக்கு உபயோகமில்லை, விட்டெறிஞ்சிடலாம்னு நெனச்சேன். ஆனா இப்ப இவன் நமக்கு பெரிய அளவுல உபயோகப்படுவான்னு தோணுது."
"என்ன சொல்றீங்க சக்கி? இவன் துபாயில இருக்கான். இவனை வச்சு என்ன பண்ண நினைக்கறீங்க?"
"லுக், இந்த மனோகர் ஒரு ஒய்ட்காலர் பேர்வழி. குளுகுளு அறையில, நல்ல சம்பளத்தோட, ஒரு பெரியபதவி குடுத்தா தாசானுதாசனா நமக்கு வேலை செய்வான். நான் இவனை எடைபோட்டது சரியா இருந்தா, இவன் பரத்துக்கு எதிர்மாறானவன். லட்சியம், சத்தியம் சக்கரைப்பொங்கல்னு டயலாகெல்லாம் பேசாம ப்ராக்டிகலா போயிட்டேயிருப்பான். இவனை நம்ம கைல போட்டுக்கறது ரொம்ப சுலபம். நீ குடுத்த தகவல் சரியா இருந்தா, இவனை வச்சு பரத்தை மடக்கறதும் சுலபம். ரத்தக் காவெல்லாம் குடுக்காம காரியத்தை ஈசியா முடிக்கலாம்."
"நீங்க சொல்றது புரியுது, இருந்தாலும் இந்த சின்னப் பையனுக்கு இவ்வளவெல்லாம் சுத்தி வளைக்கணுமானு தோணுது."
"பரத் அற்பமாவே இருக்கட்டும். ஆனா அவன் ஈடுபட்டிருக்கிற காரியம் ரொம்பப் பெருசு. அதை நம்ம வசப்படுத்த என்ன வேணாலும் செய்யலாம். இந்த மனோகரை உடனே சென்னை பிராஞ்சுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண ஏற்பாடு பண்ணு. ரீஜினல் மேனேஜர்னு ஒரு போஸ்ட் குடுத்து வலைய பின்னுவோம்.
எல்லாம் சரி. ஆனா பரத்தை தீத்துக்கட்டப் போன பசங்க ஃபோன் பண்ணா எடுக்க மாட்டேங்கிறாங்க. அவனை முடிச்சாலும் முடிச்சுருவாங்க போலேருக்கு. டூ லேட்."
"நோ. அது நடக்கக்கூடாது. ஃபோன் எடுக்கலைன்னா, எஸ்.எம்.எஸ். பண்ணு. வேற பசங்கள அனுப்பி அவனுங்கள மடக்கு. க்விக்."
கைலாஷ் படபடப்போடு எஸ் எம் எஸ்ஸை அனுப்பினான்.
*****
ஆட்டோ அண்ணாசாலையில் திரும்பி பீட்டர்ஸ் சாலைக்குள் நுழைந்தது. ஃப்ளெக்ஸ் போர்டுகளில் கலர்கலராகத் துண்டுகள், கருப்புக்கண்ணாடிகள் போட்டுத் தலைவர்கள் மக்களை "அழைத்துக்கொண்டிருந்தார்கள்". நோக்கமில்லாமல் அலைந்து கொண்டிருந்த இரண்டொரு நாய்களைத்தவிர, அவ்வளவாக வாகனங்களோ, ஆள் நடமாட்டமோ இல்லை. ஆட்டோ திருவல்லிக்கேணி சந்துகளில் நுழையுமுன் பரத்தை முடித்துவிட வேண்டும், அதேநேரம் ஆளரவம் இல்லாத இடமாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு பரத்தைத் துரத்திவந்த முரட்டுகும்பல் இதுதான் சரியான இடம், நேரம் என்று நினைத்து வேகத்தைக் கூட்டியது. இரண்டு ஆட்டோக்களுக்கும் இடைவெளி குறைந்தது.
அந்த ஆட்டோவில் முன்னால் இருவர், பின்னால் மூவர் என்று, டிரைவரையும் சேர்த்து ஐந்துபேர் இருந்தார்கள். கும்பலின் தலைவன் "வெல்டிங்" மணி, ராயபுரத்தில் லேத் வைத்திருந்தான். சிறிய வெல்டிங், என்ஜினியரிங் வேலைகளை கான்ட்ராக்டில் எடுத்து செய்துவருபவன். அது சைட் பிசினஸ்தான். அவன் பிரதானத் தொழில் கட்டப்பஞ்சாயத்து, பெரியமனிதர்களுக்காக ஆட்களை மிரட்டுவது, போட்டுத்தள்ளுவது. இந்த வேலைகளில் ஈடுபடும்போது கிடைக்கும் பெரிய தொடர்புகளைக் கொண்டு தன் :லேத் பட்டறைத் தொழிலுக்கும் நிரந்தர வருமானம் வருமாறு செய்துகொண்டிருந்தான். கே.டி.கே. கம்பெனிக்கு கைலாஷ்மூலம் நிறைய வேலைகள் செய்து தந்திருக்கிறான். சக்கரவர்த்தி மூலம் கேந்திரா மோட்டார்சிலும் ஏதாவது காண்ட்ராக்ட் கிடைக்குமா என்று கைலாஷை கேட்கச் சொல்லியிருந்தான். அப்போதுதான் கைலாஷ் பரத்தைத் தீர்த்துக்கட்டும் வேலையை மணியிடம் ஒப்படைத்து, இந்த வேலையைக் கச்சிதமாக முடித்தால் கேந்திரா மோட்டார்சில் பெரிய காண்ட்ராக்டுகளுக்கு வழி செய்வதாக உத்தரவாதம் கொடுத்திருந்தான். இதோ "வெல்டிங்" மணி அதை நிறைவேற்றத்தான் பரத்தைத் துரத்திக்கொண்டிருக்கிறான்.
மணி தன் குறியை நெருங்கிவிட்ட நேரத்தில், அவன் செல்ஃபோன் விடாமல் அடித்துக்கொண்டேயிருந்தது. சலித்தபடி அதைப் பாக்கெட்டிலிருந்து எடுக்காமல், அப்படியே அணைத்துவிட்டான். இன்னும் சில வினாடிதான், இப்போது கவனக்கலைப்புக்கு இடங்கொடுத்தால் ஏதாவது தவறு நேரலாம். அது பின்னால் சங்கடங்களுக்கு வழிவகுக்கும். அந்த செல்ஃபோன் அழைப்பு கைலாஷிடமிருந்து வந்தது என்று மணிக்கு தெரியாது.
*****
பச்சை மரகதம்போல எங்கும் பசுமையான தீவு. சுற்றிலும் தெளிந்த பச்சை நிறத்தில் மகாசமுத்திரம். கருகருவென்று அடர்ந்து வளர்ந்த கரும்புக்காடுகள். ஒரு கரும்புக்காட்டின் வரப்பில் ஒரு வாலிபன் உடலெங்கும் ரத்தக் காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அவன் தலையைத் தன் மடியில் வைத்து, செய்வதறியாமல் ஒரு இளம்பெண் கண்ணீர் மல்கிக்கொண்டிருந்தாள்.
"வள்ளி இனிமே இந்த ஊர்ல நீ இருக்கிறது உனக்கு ஆபத்து. இன்னைக்கு ஆகஸ்ட் ரெண்டாந் தேதி. இன்னும் ரெண்டு வாரத்துல தேசம் விடுதலையாயிடும். நம்ம தாய்மண்ணுக்குப் போகணும், நம்ம தேசம் அன்னியசக்திகள் கிட்டேயிருந்து விடுதலை அடையறதைப் பாக்கணும்ங்கிற என் ஆசை நிராசையாயிடுச்சு. நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள் எல்லாரும் ஊருக்குத் திரும்பிறலாம். 53 பேர் மிச்சம் இருந்தோம், என்னைத் தவிர 52 பேரும் திரும்பிடுவீங்க.
"அப்படி எல்லாம் சொல்லாதீங்க. நீங்க பொளச்சுக்குவீங்க. எப்பவும் சொல்லுவீங்களே தர்மம் சாவாதுன்னு, நூறு வருஷமா நம்ம சனங்க அறியாமையை, வறுமையைப் பயன்படுத்திக்கிட்டு இந்த கரும்புக்காட்டுல அடிமைப்படுத்தி வெச்சிருந்தாங்க. ராசா நீங்க வந்தீங்க, இந்த ஆறு வருஷம் இந்த வெள்ளைத் துரைமாருங்களோடவும், கருங்காலி கங்காணி, மேஸ்திரிங்களோடவும் எங்களுக்காகப் போராடி அம்புட்டுப் பேரையும் விடுவிச்சீங்க. அதுக்கும் மேலே ஆதரவில்லாம இருந்த எனக்கு வாழ்வு குடுத்தீங்க. இந்தப் பாடெல்லாம் இப்படி இந்த பாழும் மண்ணுல போய் சேரத்தானா? என் ஆத்தா மகமாயி அப்படி உட்டுறமாட்டா!"
"சீ பைத்தியம்! இந்த உலகத்துல யாரும் சாசுவதம் இல்லை. ஆனா, பொறப்புக்கு ஒரு பயன் இருக்கணும். நோக்கமில்லாம, அன்னியனுக்கு அடிமையா வேலை செஞ்சிக்கிட்டிருந்தேன். உங்களோட நெருங்கிப் பழகி உங்க கஷ்டங்களைப் பாத்ததுக்கப்புறம் என் கண் தொறந்தது. என் வாழ்க்கையோட நோக்கமும் தெளிவாச்சு. என் லட்சியம் நெறவேறிடுச்சு. இனிமே நீதான் என் நம்பிக்கையை முன்னே நடத்திட்டுப் போகணும்.
"நீங்க என்ன சொன்னாலும் செய்யறேங்க."
இந்தியா திரும்பினதும், நீ நம்ம ஊருக்குப் போகணும். இதோ இதுவரை நாம சேத்த எல்லாப் பணமும் இந்த பெட்டியில இருக்கு. இதை வெச்சு காடுகரை வாங்கு. நம்ம சனங்க எல்லாத்தையும் உன்கூட சேத்துக்க. நீ இருக்கற எடத்துல அடிமை, கூலின்னு யாரும் இருக்கக்கூடாது. எல்லாருமே மொதலாளி, எல்லாருமே தொழிலாளி. நான் உன்கூட இல்லைனு சோர்ந்து போயிடாதே. உன் ஆத்மசக்தில நம்பிக்கை வை.
மூச்சுவாங்கியபடி வாழ்வின் கடைசிநிமிட வார்த்தைகள் வெளிப்படவும், வள்ளி ஓவென்ற கதறலோடு "நீங்க என்னைய வுட்டு எங்கியும் போயிறமுடியாது. என் கூடவேதான் இருக்கீங்க. இருப்பீங்க. ஆமா. இங்க தொட்டுப்பாருங்க" என்று தன் வயிற்றைத் தொட்டுக் காட்டினாள் இரண்டுமாத கர்ப்பிணியான வள்ளி.
அந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டதை, கண்கள் பளிச்சென்று இறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. வாயோரம் ஒரு சிறு கீற்றுப்புன்னகை வெளிப்பட்டதோடு அந்த மனிதனின் ஆவி விடை பெற்றுக்கொண்டது.
"அய்யோ… சாமி... என் சாமீ போகாதே... என்ன வுட்டுப்போகாதே!" உயிரற்ற உடலின்மீது அந்தக் கரும்புக்காட்டு வரப்பில் வள்ளி விழுந்து புலம்பினாள்.
"அய்யோ சாமீ போகாதே" அலறியவாறே தன் கிராமத்து வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வள்ளியம்மாள் கனவு கலைந்து விழித்துக்கொண்டாள். ஏதோ ஒரு உள்ளுணர்வு பெரும் அபாயம் ஏற்படப்போவதை உணர்த்தியது போலிருந்தது. எண்பது வயதைக் கடந்தாலும் எந்த உடல் உபாதையும் இன்றி நல்ல ஆரோக்கியமாகவே அவள் இருந்தாள். மனதளவில் தன் குடும்பத்தைப் பற்றிய வடுக்களை அவள் சுமந்தாலும், அந்த கிராமத்து மக்களையே தன் குடும்பமாக சுவீகரித்ததில் ஐம்பது வருடங்களாகத் தன் மனக்காயங்களை மறந்திருந்தாள். அவ்வப்போது சில பயங்கர கனவுகள் அவளுக்கு வரும், அவை பெரும்பாலும் அவள் வாழ்வில் கடந்துவந்த பழைய சோகங்களின் நகல்களாகவே இருக்கும். சுதாரித்துக்கொண்டு எழுந்து, பக்கத்தில் இருந்த செம்பிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு "சாமி என்னவோ மனசு அல்லாடுது. என்னனு தெரியலை. எதுனாலும் நீதான் குலதெய்வமா இருந்து நல்லவங்களைக் காக்கணும்" என்று தன் அறையில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்துக் கும்பிட்டாள். ஊதுபத்தி ஏற்றி, பூப்போடப்பட்டிருந்த அந்த கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் வள்ளியம்மாளின் கனவில் கரும்புக்காட்டில் அவள் மடியில் இறந்துபோன அந்த வாலிபன் கம்பீரமாக மிலிட்டரி யூனிஃபார்மில் சிரித்துக்கொண்டிருந்தான். சாமி என்று வள்ளியால் அழைக்கப்பட்ட அந்த வாலிபன், அச்சு அசலாக அதே இரவுநேரத்தில், சென்னையில் வெறிகொண்ட கும்பலால் துரத்தப்பட்டுக்கொண்டிருந்த பரத்தைப்போலவே இருந்தான்.
"அண்ணே கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க" பரத் ஆட்டோ டிரைவரின் தோளைத் தட்டினான். ஆட்டோ சத்யம் தியேட்டர் காம்ப்ளெக்ஸ் அருகில் நின்றது. அதன் வாசலில் தன் பைக்கின் எஞ்சினோடு கனகராஜ் மன்றாடிக்கொண்டிருந்தார்.
"ஹலோ அங்கிள் உங்களுக்கே வண்டி ரிப்பேரா?" ஊருக்கெல்லாம் ஸ்பேர் பார்ட் சப்ளை பண்றீங்க. இன்னும் இந்த பழைய வண்டியை உடமாட்டேங்கிறீங்க."
"ஏய் பரத் என்ன இந்த நேரத்துல இங்க? நல்லவேளை நீ வந்ததும் நல்லதுதான். போயிகிட்டே பேசுவோம். வண்டியை இப்படி ஓரமா நிறுத்திட்டு வரேன். ஆட்டோல வீட்டுக்குப் போயிறலாம்."
கனகராஜ் மிகவும் களைப்பாக இருந்தார். இல்லாவிட்டால் பரத் கலாய்த்ததற்கு பதிலுக்கு பதில் சொல்லியிருப்பார். இப்போதுதான் தன்னையும் மனோகரையும் இதே பைக்கின் முன்னால் உட்கார்த்திவைத்து பீச் ரோடில் பறந்ததுபோல் இருந்தது. காலம் வேகமாய் உருண்டுவிட்டது. கனகராஜ் தன் பைக்கை ஓரமாக பத்திரமாக நிறுத்திவிட்டு வந்தார். அவர் கண்கள் பரத் ஆட்டோவை ஒட்டிப் பின்னால் நின்ற ஆட்டோவையும் அதில் ஆயுதங்களோடு இருந்த மனிதர்களையும் காணத் தவறவில்லை. பரத்தைத் தொடர்ந்து ஏன் இந்த கும்பல் வருகிறது என்று அவருக்குப் புரியவில்லை. ஆனாலும் சட்டென்று அவர் மூளை ஒரு யுக்தி செய்தது.
"பரத் இந்த பைக்கோட மல்லுக்கட்டி ஒரே டயர்டா இருக்கு. ஒரு கஸ்டமரப் பாக்க வந்தேன். இவ்வளவு நேரமாயிடுச்சு. இந்தத் தியேட்டர் காம்ப்ளெக்ஸ்ல டீ நல்லா இருக்கும். ஒரு டீ சாப்பிடலாமா?" தியேட்டருக்குள் போய்விட்டால் கும்பலோடு கலந்தோ அல்லது போலிசுக்கு ஃபோன்செய்தோ இந்த ஆபத்தை முறியடிக்கலாம் என்று நினைத்தார்.
இது வெல்டிங் மணியின் காதிலும் விழுந்தது. இனி காத்திருக்கக்கூடாது. பாய வேண்டியதுதான் என்று தயாரானான்.
"அங்கிள் இங்கெல்லாம் வேணாம். நம்ம தெருக்கோடி நாயர் கடைய மூடியிருக்க மாட்டார். அஞ்சு நிமிஷத்துல போயிரலாம். அங்க போய் டீ குடிக்கலாம்."
இப்போது கனகராஜ், வெல்டிங் மணியைக் கண்ணுக்குக்கண் நோக்கினார். நிச்சயம் இவர்கள் பரத்தைக் குறிவைத்து வந்தவர்கள்தான். அவருக்கு சந்தேகம் ஊர்ஜிதமானது. வெல்டிங் மணிக்கு முதுகைக்காட்டி நின்ற பரத் இதை அறியாமல் சாவதானமாகப் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு நிலைமையை எப்படிப் புரியவைப்பது என்று தெரியாமல் கனகராஜ் தவித்தார்.
"சிக்கிருச்சு, தூண்டிலை இழுங்கடா" வெல்டிங் மணி தன் ஆட்களுக்குச் சொன்னான். இந்த வார்த்தையின் அர்த்தம் அவர்களுக்கு நன்றாகப் புரியும். முப்பதுமுறை இதற்கு அர்த்தம்புரிந்து செயல்பட்டிருக்கிறார்கள்.
பரத்துக்கு இரண்டுபுறம் இரண்டு, இரண்டு பேராக வெறியோடு அரிவாளோடு இறங்கினார்கள். ஆட்டோவைத் தயார் நிலையில் ஒருவன் வைத்துக்கொண்டு அவர்களோடு முன்னேறினான்.
இது நடக்கவும், கடைசிக் காட்சி முடிந்து தியேட்டரிலிருந்து கும்பலாக "சூப்பர், சுமார், ஒரு தபா பாக்கலாம், அடாசு" என்ற கமெண்டுகளோடு தமிழ்கூறும் நல்லுலகம் சிவந்த கண்களோடு வெளியே வந்துகொண்டிருந்தது. மணியின் இயக்கம் பவர்ப்ளே மோடுக்கு மாறியது. நேரம் அதிகமில்லை, இதோ நெருங்கிவிட்டோம். மணியின் அரிவாள் பரத்தின் கழுத்தைநோக்கி வீசப்பட்டது.
(தொடரும்)
சந்திரமௌலி, ஹூஸ்டன் |