திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம்
தமிழ்நாட்டில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில், கச்சனம் நாலுரோடு பஸ் நிறுத்தத்திலிருந்து 9 கி.மீ. மேற்கே உள்ளது திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து ஆட்டோ, டவுன்பஸ், மினிபஸ் உள்ளது. இறைவன் திருநாமம் கொள்ளிக்காடர், அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சினும் மெல்லடியாள் (மிருதுபாத நாயகி). தீர்த்தம், சனிதீர்த்தம். இது கோயிலின் வடபுறம் உள்ளது. தலவிருட்சம் வன்னிமரம்.

அக்னி பகவான் தமது சாபம் தீர இத்தலத்து இறைவனை பூஜித்தமையால் இவ்வூர் அக்னிபுரி, அக்னீஸ்வரம் எனப் பெயர்பெற்றது. சூரியனின் உஷ்ணம் தாங்காமல் மனைவி உஷாதேவி தவித்தபோது சாயாதேவியை சூரியனுக்கு மறுமணம் செய்விக்கின்றனர். வெப்பத்தைச் சாயாதேவியாலும் தாங்க முடியவில்லை. அக்னி பகவான், சூரியனிடமும், உஷாதேவி, சாயாதேவியிடமும் இத்தலத்துக்குச் சென்று ஈஸ்வரனிடம் மனமுருக பிரார்த்திக்கக் கோரினார். அதன்படி இத்தலத்திற்குச் சென்று சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் அக்னீஸ்வரரை மனமுருகப் பிரார்த்தித்தனர். ஈஸ்வரன் அவர்களைச் சனிதீர்த்தத்தில் நிறுத்தி சூரிய வெப்பத்தைத் தணிவிக்கிறார், வெப்பம் தணிந்த சூரியனிடம் உஷாதேவிக்கு தர்மவானாக ஒரு குழந்தை பிறப்பான் என்று வரமருளினார் ஈசன். அப்படிப் பிறந்தவர்தான் யமதர்மன். பின்னர் சாயாதேவிக்குக் கோள்களில் சிறந்த ஓர் குழந்தை பிறப்பான் என்று ஆசிர்வதித்தார். அப்படிப் பிறந்தவர்தான் 'மந்தன்' எனப்படும் சனிபகவான்.

சனிபகவான் ஈஸ்வரனிடம் 'எனக்கு நீங்கள் இடும் கட்டளை என்ன?' என்று பணிந்து கேட்டபோது, "நீ நவகோள்களில் முக்கியத்துவம் வாய்ந்தவனாக இருப்பாய். மனிதர்களின் கர்மவினைக்கேற்பத் தண்டனை கொடுத்து அவர்களது பாவங்களைப் போக்கி புனிதப்படுத்த வேண்டியது உன் செயல்" எனக் கட்டளையிட்டார். அவ்வாறே கடுமையானவராகச் செயல்பட்ட சனியிடம், மக்கள், தேவர் எனப் பலரும் அஞ்சினர்.

சனைச்சரன் தானும் பிற தெய்வங்களைப்போல் அருள் தெய்வமாகவும், கேட்பவர்களுக்குக் கேட்டது கொடுப்பவராகவும் ஆகவேண்டும் என்று விரும்பினார். வசிஷ்டரின் ஆலோசனைப்படி அக்கினிவனம் எனும் இத்தலத்தில் கடும் தவமியற்றினார். ஈசனும் அதுகண்டு மனமிரங்கி சனைச்சரனுக்கு பொங்குசனியாக மறு அவதாரம் எடுக்கச்செய்தார். சனைச்சரன் கையிலிருந்த தண்டனைதரும் ஆயுதங்களுக்குப் பதிலாக பலராமன், பரசுராமர், குபேரன் இவர்கள் கையில் இருந்த கலப்பையைத் தந்து காகக் கொடியுடன் மகாலக்ஷ்மி ஸ்தானத்தில் அமர்த்தி அருகே மகாலட்சுமியை அமர்த்தினார். பழைய தண்டனை தரும் குணம் தலைதூக்கா வண்ணம் சனீஸ்வரரின் குருவான பைரவரை நேர்பார்வையில் நிறுத்தி, தம்மையும், சனைச்சரரையும் வழிபடுபவர்களுக்கு சனிக்கிரகம் தொடர்பான எல்லா கெடுபலன்களும் விலகி, நன்மை, புகழ் கிடைக்கும் என்று வரமருளினார். குடும்பத்துடன் சனைச்சரர், பைரவர், கொள்ளிக்காடரை வணங்குவோருக்கு எல்லாப் பாவங்களும் தொலைந்து போகும்.

ஆலயத்தில் மூன்று தலவிருட்சங்கள் உள்ளன. வன்னிமரம், ஊமத்தை மற்றும் கொன்றை. ஊமத்தை மனக்கவலையைப் போக்குவது. கொன்றை எப்படி கொத்தாக பூ, பிஞ்சு, இலைகளோடு உள்ளதோ அதுபோல் குடும்ப ஒற்றுமையை அளிக்கவல்லது. வன்னிமரம் லட்சுமி கடாட்சம் அளிக்க வல்லது. பொதுவாகப் பிற ஆலயங்களில் உள்ளதுபோல் அல்லாமல் இங்கே நவக்கிரகங்கள் ஒருவரையொருவர் பார்த்தவண்ணம் "ப" வடிவில் அமர்ந்துள்ளனர். நமது பாவங்களை இத்தலத்து இறைவனே போக்கிவிடுவதால், நவக்கிரகங்கள் இவ்வாறு அமர்ந்துள்ளனர்.

பஞ்சுதோய் மெல்லடிப் பாவையாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும்
வெஞ்சின மருப்பொடு விரையவந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே


என்பது ஞானசம்பந்தப் பெருமான் வாக்கு. இத்தலத்து மங்கள சனைச்சரரை வழிபடப் பாவம், பிணி மறையும்; பொன்னும் பொருளும் பெருகும் என்பது நம்பிக்கை.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com