ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை
அன்புள்ள சிநேகிதியே

எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கிறது இந்த ஆறு மாதங்களில். எப்படி எழுதுகிறது என்பது புரியவில்லை. சுருக்கமாக என் பிரச்சனைபற்றிச் சொல்லிவிடுகிறேன். என் அம்மா, அப்பாவின் இரண்டாவது மனைவி. 20 வயது வித்தியாசம். அப்பாவிற்கு முதல் திருமணம் நடந்ததையும் மூன்று குழந்தைகள் இருந்ததையும் மறைத்து என் அம்மாவை ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டார் என்று என் அம்மா, நான் சிறுவனாக இருந்தபோது சொல்லியிருக்கிறார். நான் தனியனாக வளர்ந்தேன். என் அண்ணன், அக்காமார்களிடம் (ஏதேனும் குடும்ப விசேஷங்களின்போது சந்தித்துக் கொண்டதைத் தவிர) பாசம் என்று ஒன்றும் பெரிதாக இல்லை. அப்பாவின் முதல் மனைவியை நான் பார்த்ததும் இல்லை. அவர், நான் பள்ளியிறுதி படிக்கும்போது இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அப்பா மிடில் ஈஸ்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கிருந்து ரிடயராகி எங்களுடன் தான் தங்கியிருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் நான் கல்லூரிப் படிப்புக்காக வீட்டைவிட்டு வெளியே செல்லவேண்டி இருந்தது.

நல்லவேளை. அம்மாவிற்குப் பொறுப்பேற்க அப்பா நிரந்தரமாக வந்துவிட்டது மனநிம்மதியைத் தந்தது. அம்மாவுக்கு ஆஸ்துமா. அவ்வப்போது மூச்சுத்திணறல் அதிகமாகி அட்மிட் ஆகும் நிலைவரும். அப்பா இருந்ததால் நான் அமெரிக்கா வந்து மேற்படிப்பை முடித்தேன். நான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு இங்கேயே செட்டிலாகி விட்டேன். அம்மாவால் வர முடியவில்லை. அவருக்கு எப்போது மூச்சுத்திணறல் வருமென்று தெரியாது. அப்பா, அம்மாவை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் நான் இங்கே செட் ஆவதற்குள் பலப்பல பிரச்சனைகள். பிறந்த குழந்தைக்கு ஹார்ட் கண்டிஷன், அதைக் கவனிப்பதிலேயே நேரம் போயிற்று. படித்த மனைவி வேலைக்குப் போகமுடியவில்லை. என் வேலையின் insecurity என்று இதுபோல எத்தனையோ பிரச்சனைகள். ஆறு மாதத்திற்கு முன்பு அப்பா திடீரென்று போய்விட்டார். அதற்கும் என்னால் போகமுடியவில்லை. என் அக்கா, அண்ணன்கள் இரண்டுபேரும் எல்லாவற்றையும் உடனேயே முடித்துவிட்டனர். அப்பா போகும்போது 87 வயது. காரியம் எல்லாம் முடிந்தபிறகு அம்மா எனக்குச் சொன்ன நியூஸ், அவர்கள் அம்மாவின் மேரேஜ் சர்டிஃபிகேட்ஸைக் கேட்டார்களாம். அம்மாவிற்குச் சரியாகத் தெரியவில்லை. எல்லா டாகுமெண்ட்ஸையும் காட்டச் சொன்னார்களாம். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, 'சரி, நாங்கள் வக்கீலைப் பார்க்க வேண்டும்' என்று எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அம்மா பாவம் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள். நானும் நம்பி கொஞ்சம் டயம் கொடுத்தேன். மூன்று மாதத்திற்குப் பிறகுதான் அவர்களை காண்டாக்ட் செய்தேன். மனது வருந்தும்படி பதிலடி கொடுத்தார்கள். அப்பா, அம்மா திருமணம் செல்லாதாம். எந்த ரெகார்டும் இல்லையாம். அப்பா எழுதிய உயிலும் குளறுபடியாக இருக்கிறதாம். அதில் எழுதியிருக்கிற சில சொத்துக்களை விற்ற விபரம் அப்டேட் ஆகவில்லையாம். அந்தச் சொத்துக்களை என் படிப்பிற்காகச் செலவு செய்திருக்கிறார்களாம். ஆகவே, எனக்கு அதில் எந்தச் சொந்தமும் இல்லை. அம்மா இருக்கும் வீட்டில் இருந்துவிட்டுப் போகட்டும். இப்போது தொந்தரவு செய்யப் போவதில்லை-என்பதுதான் நான் தெரிந்துகொண்டது.

அவர்கள் என்னிடம் பேசியவிதம் மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதனை அம்மாவிற்குத் தெரியப்படுத்தவில்லை. அம்மா ரொம்ப இன்னொசென்ட். அதிகம் படிக்கவில்லை. அவர் அழகில் மயங்கி, அப்பா விஷயத்தை மறைத்து கோவிலில் வைத்து தாலி கட்டிவிட்டார் என்று நினைக்கிறேன். பணத்திற்கு ஆசைப்பட்டு தன் அழகால் அப்பாவை மயக்கிக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள் என்று அப்பாவின் மகன்கள் நினைக்கிறார்கள். எது உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் அம்மாவிடம் எந்தப் பிரச்சனை பற்றியும் சொல்வதில்லை. அவர் கவலைப்பட்டால் ஆஸ்த்மா அதிகமாகிவிடும் என்று பயம். அப்பா என்ன உயில் எழுதி வைத்தார் என்றும் தெரியாது. வக்கீல் வழியாகப் போவது என்றால் அதற்குரிய நேரமும் பணமும்பற்றி யோசிக்கவேண்டி இருக்கிறது. அம்மாவை எங்கே தங்கவைப்பது என்றும் கவலையாக இருக்கிறது. இதுவரை யாரோ உறவுக்காரர்களை வைத்துப் பணம் அனுப்பிப் பார்க்கச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் பக்கத்து ஃப்ளாட். இனிமேல் என்ன செய்வது என்பது வேறு புரியவில்லை. வக்கீலிடம் போகாமல் சமரசமாக பாகம் பிரிக்க என்ன செய்யலாம் என்றுதான் பார்க்கிறேன்.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதிரே

பரவாயில்லை கடிதம் சிறிது பெரிதாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் பல விஷயங்கள் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

* எப்படி இருந்தாலும், எந்த முடிவை எடுக்க நினைத்தாலும் நீங்கள் நிச்சயமாக இந்தியாவுக்கு ஒருமுறை போய்த்தான் ஆகவேண்டும்.

* உங்களின் பலத்தைவிட அவர்களின் பலம் அதிகம் இருப்பதுபோலத் தெரிகிறது.

* சொத்துக்களுக்குரிய டாக்குமெண்டை நேரில் பார்த்து ஒரு வக்கீலை வைத்துப் பரிசீலனை பண்ணுவதுதான் வழி.

* உங்களுக்குள் அதிகம் தொடர்பில்லை. அதனால் உறவு அன்னியோன்னியமாக இல்லாமல் அந்நியமாக இருந்திருக்கிறது.

* அவர்கள் பொருளாதார நிலைமை என்ன என்பது தெரியவில்லை. நியாய அநியாயத்துக்குக் கட்டுப்பட்ட குடும்பப்போக்கில் இருப்பவர்களா என்பதும் தெரியவில்லை.

* மூன்று பேருடன் தனியாகப் பேசிப் பாருங்கள். யார் கொஞ்சம் உங்களிடம் இங்கிதமாக நடந்து கொள்கிறார்களோ அவர்களிடம் தோழமை காட்டி உங்கள் நிலைமையை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* உங்கள் பிரச்சனைக்கு லீகல் ஆங்கிள் மிகவும் அவசியம்.

* சில சமயம் உங்கள் நிலைமையைப் புரிந்து கொண்டால் மூன்று பேருமே உங்களுக்கு உதவ முன்வருவார்களோ என்று நினைக்கவும் சாத்தியம் இருக்கிறது.

* பொதுவாக ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை உட்கார்ந்துகொண்டு உண்மையை உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவர்கள் உங்கள் நிலைமையை உணர்ந்தால் கொஞ்சம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com