மார்ச் 2015: வாசகர் கடிதம்
'பொயட்ரி இன் ஸ்டோன்' விஜயகுமார் நேர்காணல் மிக சுவாரசியமாகவும், அருமையாகவும் இருந்தது. உயரதிகாரியாகப் பணியாற்றினாலும் அவரது சிற்பம், ஓவியக் கலை ஈடுபாடு பாராட்டுக்குரியது. அதற்கு மூலகாரணமாகக் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வ'னை அவர் நினைவுகூர்வது தன்னடக்கத்தைக் காட்டுகிறது. விடாமுயற்சியுடன் பல அரிய சிலைகளைத் தாய்மண்ணிற்கு மீட்டது நாம் செய்த பாக்கியம். கோவில்களிலும் சிலை திருட்டைத் தடுக்க அலாரம் போன்ற உபகரணங்களைப் பொருத்தலாம். முயற்சி வேண்டும் என்ற அவரின் குறையை அரசாங்கம் போக்க வேண்டும். விஜயகுமாரின் இந்தப் பணி மேலும் தொடரும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு தென்றல் நேர்காணலும் பாராட்டுக்குரியது ..

கே.ராகவன்,
பெங்களூரு, இந்தியா

*****


அயல்மொழி பேசுபவராக இருந்தாலும் தமிழ்மீது ஆர்வங்கொண்டு, அதனைக் கற்று, அது ஏன் செம்மொழி என்பதைக் காரணங்களோடு எழுதி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக் காரணியாக இருந்தவரும், "தமிழ்ப்பணி செய்வதே ஆனந்தம், விருதுகள் எல்லாம் பின்னால் வருபவை" என்று சொன்னவரும், பெர்க்கலி பல்கலைக்கழகத் தமிழிருக்கைப் பேராசிரியருமான பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளதை அறிந்தேன் அவருக்கும் கௌசல்யா ஹார்ட் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வையவன் பற்றி 'எழுத்தாளர்' மூலம் நன்றாக தெரிந்துகொள்ள முடிந்தது. 'மிஸ்டர் ராமுடு ஐ.ஏ.எஸ்.' கதை வறட்டு ஜம்பம் வேண்டாமென்பதை எளிமையாகப் புரியவைத்தது. 'அமெரிக்காவில் இயற்கை வேளாண்மை' நல்ல முயற்சி. பயனுள்ள தகவல்.

கடல்தாண்டிக் களவுபோன கலைப் பொக்கிஷங்களை தாய்மண்ணுக்குத் திரும்பக் கிடைக்கச் செய்யும் 'பொயட்ரி இன் ஸ்டோன் விஜயகுமார்' பற்றித் தெரிந்துகொண்டோம். அவரது தன்னலமற்ற செயல்களுக்குத் தலைவணங்குகிறோம். 'ஜமைக்காவில் ஒரு சொர்க்கம்' மனதைத் தொட்டது. ஜனவரி இதழில் 'ஹரிமொழி' ஹரி கிருஷ்ணன் நேர்காணல் மிகநன்றாக இருந்தது.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com