மன்னித்துவிட்ட குழந்தை!
வீட்டில் பெரிய சண்டை!
பதின்மூன்று வயது மகனுடன்தான்.
வாதம் செய்யும் வயதுபோல இது!
மறந்து வேறு தொலைத்துவிட்டது.

நேரத்திற்குத் தூங்கி எழ - வாதம்
நடுங்கும் குளிரில் கால்சட்டை அணிய - வாதம்
வீட்டுப் பாடம் செய்ய - வாதம்
காய்கறி சாப்பிட - தினமும் வாதம்

ஒரு வாரமாக நடந்த வாதத்தை
முடிக்கவந்த சண்டைதான் அது;
வாய் வலித்து, அழுது, மனமுடைந்து
உறங்கச் செல்கையில் மணி பதினொன்று.

மறுநாள் பள்ளி சென்றேன்
அவனை அழைக்க,
இறுகிய முகத்துடன்,
காரில் என்னைப் பார்த்ததும் சிரித்து
அம்மா என்கிறான்,
தண்டிக்கமட்டுமே தெரிந்த என்னை
மன்னித்துவிட்ட குழந்தை!

ஜெயா மாறன்,
அட்லான்டா, ஜார்ஜியா

© TamilOnline.com