பரமேஸ்வரன் வைத்த சோதனை
ஒருநாள் கைலாயத்திலே தேவி பார்வதி சிவனிடம் வந்து, "சுவாமி! உமது வழிபாட்டுத் தலங்களிலே காசியை மிக உயர்வு என்கிறார்கள். இந்தச் சிவராத்திரியின்போது உம்மை அங்கே வந்து வழிபடும் பக்தர்களுக்கெல்லாம் கைலாயத்திலே வந்து தங்கிய பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்களே, இது உண்மைதானா?" என்று கேட்டார்.

சிவபெருமான் புன்னகையுடன், "எல்லாருக்குமே அந்தப் பலன் கிட்டாது. பெயருக்கு அபிஷேகம் செய்து, தமது மகிழ்ச்சிக்காக வழிபடுகிறவர்களுக்கு என் ஆசிர்வாதம் கிடைக்காது. உண்மையில் என்னை வழிபடுகிறவன் யார், நான் யாரை ஆசிர்வதிக்கிறேன் என்பதை நீ புரிந்துகொள்வாய். வா, ஒரு நாடகம் போடுவோம்" என்று கூறினார்.

தொண்ணூறு வயதான, நோயுற்றுத் தளர்ந்த கிழவராகச் சிவனும், எண்பது வயதுக் கிழவியாகப் பார்வதியும் விஸ்வேஸ்வரனின் கோவில்வாசலில் தோன்றினர். அந்தக் கிழவியின் மடியிலே கிழவன் படுத்துக்கொண்டு அரற்றுகிறான். வாயும் தொண்டையும் உலர்ந்துபோய் "தண்ணீர், தண்ணீர்" என்று அலறுகிறான். கிழவி அங்குவரும் பக்தர்களிடம் மன்றாடித் தண்ணீர் தரும்படிக் கேட்கிறாள். "ஓ பக்தர்களே! என் கணவருடைய நிலைமையைப் பாருங்கள். எப்போது வேண்டுமானாலும் உயிர் போய்விடலாம். தயவுசெய்து தாகத்துக்கு நீர் தாருங்கள்" என்று மன்றாடுகிறாள்.

பக்தர்கள் கங்கையில் நீராடி, ஈர ஆடையோடு, பித்தளைப் பாத்திரத்தில் புனிதகங்கை நீரை நிரப்பி எடுத்துக்கொண்டு, விஸ்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பக்தியோடு போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் கிழவியைப் பார்த்து, "அம்மா, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்துவிட்டு வந்து உன்னுடைய கணவரை கவனிக்கிறோம்" என்று சொல்லிவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்துவிடுகிறார்கள். சிலர் முகத்தைச் சுளித்துக்கொண்டு, "இதென்ன தொல்லை" என்கிறார்கள். இன்னும் சிலரோ, "இங்கே பிச்சைக்காரர் தொல்லை வரவரத் தாங்க முடியாமல் போய்விட்டது. இவர்களையெல்லாம் விரட்ட வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே போகிறார்கள்.

அந்த பக்தர்களின் வரிசையிலே ஒரு தொழில்முறை கொள்ளைக்காரன் நிற்கிறான். மிகப்பெரிய கூட்டம் அங்கே இருப்பதால் கொள்ளையடிக்க வந்த அவன், தானும் ஒரு பக்தன்போல, ஒரு சுரைக்குடுக்கையிலே கங்கை நீரோடு அபிஷேகத்துக்கு நிற்பதைப்போல நிற்கிறான். அவன் கிழவனுடைய அவலநிலையைப் பார்த்து, கிழவியினுடைய கூக்குரலையும் கேட்டு மிகவும் வேதனையடைகிறான். அவளருகிலே போய், "அம்மா! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கிறான்.

"மகனே! விஸ்வேஸ்வரனின் தரிசனத்துக்காக இங்கு வந்தோம். வந்த இடத்திலே என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், மயங்கி விழுந்துவிட்டார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் அவரை விட்டுவிட்டு நான் போய் நீர் எடுத்துவர முடியாது. இத்தனை பேர் இங்கே கையில் தண்ணீரோடு போகின்றார்கள். ஆனால் ஒருவர்கூட எனக்கு மனமிரங்கவில்லை. நான் என்ன செய்வேன்! என் கணவர் எப்போது வேண்டுமாலும் நிலைமை மோசமாகி இறந்து போகலாம்" என்று கிழவி புலம்பினாள்.

அவன் மனமிரங்கிச் சுரைக்குடுக்கை நீரைக் கிழவருடைய வாயில் ஊற்றத் தயாரானான். அப்போது கிழவி அவனைப் பார்த்து, "மகனே எந்த நேரத்திலும் என் கணவர் இறந்துவிடுவார். ஆனால் ஒரு நிபந்தனை. யார் அவர் வாயில் தண்ணீர் ஊற்றுகின்றார்களோ அவர்கள், தன்னைப்பற்றிய உண்மையைச் சொன்னபிறகே தண்ணீரை வார்க்கவேண்டும். இல்லையென்றால் அவர் பருகமாட்டார்" என்றாள்.

கொள்ளைக்காரன் அமைதியாகச் சிரித்தான். "அம்மா! என்னைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? நான் ஒரு கொள்ளைக்காரன். இதுவரை எந்த நல்ல செயலையும் செய்ததில்லை. இறந்துகொண்டிருக்கும் இந்தக் கிழவருக்குத் தண்ணீர் கொடுக்கப்போவது மட்டுமே நான் செய்யும் ஒரே நல்ல செயலாக இருக்கமுடியும். இது சத்தியம்" என்றான். அவன் அன்போடும் பரிவோடும் அந்தக் கிழவரின் வாயிலே நீரூற்ற, அதே கணத்தில் கிழவனும் கிழவியும் மறைந்து பூரணப் பிரகாசத்தோடு சிவனும் பார்வதியும் அவன்முன்னே தோன்றினர்.

சிவன் மகிழ்ந்து அவனை ஆசிர்வதித்தார். "எத்தனை பேர் என்னைத் தரிசிக்க வந்தாலும் நீமட்டுமே என்னால் ஆசிர்வதிக்கப்பட்டவன். உன்போல் நற்பண்பு இங்கு எவருக்கும் இல்லை. நீ இதுநாள்வரை எத்தனை பாவம் செய்திருந்தாலும் இன்று நீ செய்த நற்செயலால் அவை அழிந்துபோயின. மகனே! உன்னை நான் ஆசிர்வதிக்கிறேன்" என்று சிவனும் பார்வதியும் சொல்லி மறைந்தனர்.

உண்மை பேசுவதுபோல் நற்பண்பு வேறில்லை.

பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா

(இந்த மாதமுதல் வெளிவரத் தொடங்கும் இந்தக் கதைகள் 'பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் சின்ன கதைகள்' என்ற பெயர்கொண்ட MP3 CDயில் கவிஞர் பொன்மணி அவர்களால் சொல்லப்பட்டவையாகும். வெளியீடு: Sri Sathya Sai Books and Publications Trust, Tamil Nadu, Chennai. தொடர்புக்கு: sssbpttn@gmail.com)

© TamilOnline.com