வெந்தய ஊறுகாயும் பாக்கர் வடியும்
வெந்தய ஊறுகாய்

தேவையான பொருட்கள்
வெந்தயம் - 50 கிராம்
மிளகாய்ப் பொடி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - சிறிதளவு
புளி - ஒரு பெரிய உருண்டை

செய்முறை
வெந்தயத்தைச் சுத்தம்செய்து, கழுவி, தண்ணீரில் முதல்நாள் காலையில் ஊறவைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்தெடுத்துக் கொள்ளவும். (வடித்த தண்ணீரைக் காலையில் வெறும்வயிற்றில் குடிக்கலாம். தினமும் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தையும், தண்ணீரையும் குடிப்பது நீரிழிவு, மூலம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்து). வெந்தயத்தை மெல்லிய வெள்ளைத்துணியில் கட்டிவைத்து அவ்வப்போது அதன்மேல் தண்ணீர் தெளிக்கவும். அல்லது காசரோலில் போட்டு மூடிவைத்தும் முளைகட்டலாம்.

வாணலியில் ஆறு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, சிறிதளவு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு, வெடித்ததும் அதில் முளைவிட்ட வெந்தயம், மஞ்சள்பொடி போட்டுச் சிறிதுநேரம் வதக்கவும். பெரிய எலுமிச்சம்பழம் அளவு புளியை கெட்டியாகக் கரைத்து விடவும். தேவையான அளவு உப்பு, மிளகாய்ப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். மறுபடி கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கெட்டியாக வரும் சமயம் இறக்கி வேறு பாத்திரத்தில் போட்டுவைக்கவும். இந்த ஊறுகாய் ரொம்ப ருசியாக இருக்கும். நாமாகச் சொல்லாவிட்டால் இது எதில் செய்தது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இந்த ஊறுகாய் மோர்சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். வீட்டில் ‘மிளகாய் மாங்காய்’ என்று சொல்லி இதைக் கொடுத்தது பிறகு எல்லாருமே விரும்பிச் சாப்பிடும் ஊறுகாய் ஆகிவிட்டது. நீங்களும் செய்து அசத்துங்கள்!

பார்வதி ராமன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com