ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் V. கிருஷ்ணமூர்த்தி, D. விஜயஸ்ரீ
அவர் உள்ளே நுழைந்ததுமே முகங்கள் மலர்கின்றன. இதழ்களில் புன்னகை. "என்னப்பா சாப்டியா, நல்லா இருந்ததா?" ஒருவரின் தோள்தட்டி விசாரிக்கிறார். "நல்லா இருந்துச்சு சார். திருப்தியா சாப்பிட்டேன்" என்கிறார் அவர். "என்னம்மா, இன்னிக்கு எப்படி இருக்கீங்க, வலி குறைஞ்சிருக்கா? கால் பிடிச்சிவிடச் சொல்லட்டுமா?" வாஞ்சையுடன் கேட்கிறார் ஒரு பெண்மணியிடம். "ஒரு கொறயும் இல்லய்யா. நிம்மதியா இருக்கேன்...." சற்றே கூச்சத்துடன் பதில் சொல்கிறார் அவர்.

சென்னை அடையாறிலுள்ள ராஜஸ்தானி தர்மசாலாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட்டில்தான் மேற்கண்ட காட்சி. புற்றுநோயால் தாக்குண்ட ஏழை நோயாளிகள் அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அன்போடும் பரிவோடும் அவர்களிடம் விசாரிப்பவர் ட்ரஸ்ட் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான திரு. வி. கிருஷ்ணமூர்த்தி. ஏழைப் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அவருடன், இணைந்து செயலாற்றி வருகிறார் திருமதி டி. விஜயஸ்ரீ. 'ஜனசேவா ரத்னம்', ராமகிருஷ்ண மடத்தின் சிறந்த சேவை நிறுவன விருது, லயன்ஸ் க்ளப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த சேவையமைப்புக்கான விருது, மதுரா ட்ராவல்ஸ் வழங்கிய 'மதுரா மாமனிதர்' , சுதேசி மாத இதழின் 'துருவா', கவி ஓவியா இதழ் வழங்கிய மனிதநேய விருது, ராஜாஜி சேவையமைப்பின் ராஜாஜி விருது, ஸ்ரீகுரு வித்யாலயாவின் 'சேவாரத்னா', 'Outstanding Achiever', மதர் தெரசா விருது, எனக் கணக்கற்ற விருதுகளை இவர்கள் பெற்றுள்ளனர். நோயாளிகளின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி என்று கர்மயோகிகளாக வாழ்ந்துவரும் இவர்களைத் தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்த உரையாடலிலிருந்து...



தென்றல்: ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் ஆரம்பித்தது எப்போது, அதை ஆரம்பித்ததன் பின்புலம் என்ன?
கிருஷ்ணமூர்த்தி: இப்போது நாங்கள் இயங்கிவரும் இந்த இடம் அரசாங்கத்தால் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. இதில் ஒரு நான்குமாடிக் கட்டிடத்தை ராஜஸ்தான் தனவந்தர்கள் 150 பேர் கொடுத்த நிதியைக் கொண்டு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டினர் கட்டினார்கள். இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் ஏழை புற்றுநோயாளிகள் சென்னைக்கு வந்து தங்கி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. 1999 மே மாதம் திறந்துவைக்கப்பட்டது. ஆனால் திறந்து ஒருவருடம் ஆகியும் இதை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. காரணம், இதை நடத்த அதிக நிதி தேவைப்பட்டதுதான். அனுபவமும் மனிதாபிமானமும் வாய்ந்த சரியான நோக்கமுடைய ஒரு சேவையமைப்பு இதனை நடத்துவதற்குத் தேவைப்பட்டது. அது கிடைக்காமல் ஒரு வருடகாலம் பூட்டிக்கிடந்தது.

அதுகண்டு வருந்திய கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் நிர்வாகத்தலைவர் டாக்டர் வி. சாந்தா (இவரோடு நேர்காணல் பார்க்க: தென்றல் ஆகஸ்ட் 2007) மற்றும் ராஜஸ்தான் அசோசிஷேயனைச் சேர்ந்தவர்கள், காஞ்சி சங்கராசாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து இதனை நடத்தித்தர வேண்டிக்கொண்டனர். நான் காஞ்சிமடத்தின் சிஷ்யன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றியவன். அங்கு வேலை செய்யும்போது பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்காகக் காஞ்சிமடத்தை அணுகியதுண்டு. அவர்கள் அமைத்த பள்ளிக்குச் செயலாளராக இருந்து, இயன்ற அளவு நற்பணிகளைச் செய்திருக்கிறேன். அவ்வாறு பெரியவரின் அன்புக்குப் பாத்திரமானவன் நான்.

அவர்கள் அணுகியதும், பெரியவரும், "கேன்சர் இன்ஸ்டிட்யூட் நற்பணிதானே, ஏழைகளுக்கு உதவுவதைவிட வேறென்ன தர்மகாரியம் இருக்கமுடியும்? அவசியம் செய்வோம்" என்று உறுதியளித்துவிட்டு என்னை அழைத்தார். "உன் வேலையை விட்டுவிட்டு இதன் பொறுப்பை ஏற்றுக்கொள்" என்று சொன்னார். பெரியவரின் உத்தரவைக் கடவுளின் உத்தரவாக ஏற்று நானும் வேலையை விட்டேன். பின், "பெரியவா, நான் முழுமையாக இதில் இறங்குவதற்கு முன்னால் இதுபற்றி ஒரு சர்வே எடுக்க நினைக்கிறேன். 20 சதவீதம் மக்களுக்கு இலவசம்; 80 சதவீதம் பேரிடம் ஓரளவு பணம் வாங்கமுடியும் என்று சாந்தா அம்மா சொல்கிறார்கள். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை நான் நேரில்சென்று பார்த்து, அங்குள்ள நோயாளிகளிடம் பேசித் தெரிந்துகொண்டு வருகிறேன். அதன் பின்னர் பொறுப்பேற்கிறேன்" என்று சொன்னேன்.

இங்கு வந்து பார்த்தால் இங்கு வருபவர்கள் எல்லாமே பரம ஏழைகள் என்பதும், கட்டிய லுங்கியோடு, புடவையோடு வரும் அவர்கள், ஒருவேளைச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் என்பதும் தெரிந்தது.



தெ: அடடா.. பிறகு?
கி: நான் பெரியவாளைச் சந்தித்து, "இது ரொம்ப உசந்த தர்மம். நாம் இலவசமாகச் செய்ய முடிந்தால்தான் சாத்தியம். இல்லாவிட்டால் முடியாது" என்றேன். "எவ்வளவு செலவாகும்?" என்றார் பெரியவா. "ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 5000 ரூபாயாவது ஆகும்" என்றேன். அது 2000 ஆண்டுப்படி கணக்கு. பெரியவர், "நான் ஏகவஸ்திரதாரி ஆச்சே! தினம் 5000 ரூபா உனக்கு எப்படிக் கொடுக்கமுடியும்?" என்றார். நான் "நீங்கள் பணம் கொடுக்கவேண்டாம். உங்கள் பரிபூரண ஆசிர்வாதத்தைக் கொடுத்தால் போதும். எனக்கு இரண்டு வரங்களை மட்டும் கொடுங்கள்" என்றேன். 'என்ன' என்பதுபோல் பெரியவா பார்த்தார். "நீங்கள் தினமும் மூன்றுவேளை சந்திரமௌலீஸ்வர பூஜை செய்கிறீர்கள். பூஜையில் முதல்பூவைப் போடும்போது இந்த அமைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்" என்றேன். சிரித்தபடி அனுக்கிரகித்த பெரியவர், "சரி, சரி. இரண்டாவது வரத்தை கைகேயி மாதிரி ஏதாவது கேட்டுவிடப் போகிறாய்" என்றார். "இல்லை பெரியவா. உங்களுக்கு இஷ்டதெய்வம் திருப்பதி பாலாஜி. அந்த பாலாஜியை தரிசனம் செய்துவிட்டுத்தான் நீங்கள் எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிப்பீர்கள். எப்போதெல்லாம் பாலாஜி முன்னால் நிற்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த ட்ரஸ்ட் நீடூழி இருந்து ஏழைகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்" என்றேன்.

பெரியவர் நெகிழ்ந்துவிட்டார். "நீ ரொம்ப புத்திசாலிடா. பணமாக் கேட்டிருந்தாக்கூட கொடுத்திருந்திருப்பேன். ஆனால் அது காலத்தால் அழியக்கூடியது. நீ அதைக் கேட்கவில்லை. சந்திரமௌலீஸ்வரரோட அருளையும், பாலாஜியோட அருளையும், என்னோட ஆசிர்வாதத்தையும் கேட்கிறாய். நிச்சயம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று அனுக்கிரகித்தார். அன்றிரவே பெரியவா திருப்பதிக்குப் புறப்பட்டார். என்னையும் உடனழைத்துச் சென்றார். திருப்பதியில் பெருமாள்முன் பெரியவா உட்கார்ந்தார். என்னையும் உட்காரச் சொன்னார். தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பெரியவா தியானத்தில் இருப்பார். கண்விழித்து என்னைப் பார்ப்பார். அவர் கண்களில் கண்ணீர் பெருகும். அதைத் துடைத்துக்கொண்டு பாலாஜியைப் பார்ப்பார். மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இப்படியே நள்ளிரவு 1.30 மணிமுதல் விடியற்காலை 5.30 மணிவரை பெருமாள்முன் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவ்வளவு நேரம் பெருமாள்முன் உட்காரும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்தார். தியானம் முடித்து வெளியில் வரும்போது பெரியவா, "உன்னோட அமைப்புக்கு 'ஸ்ரீமாதா ட்ரஸ்ட்'னு பேர் வை. ரொம்ப நன்னா வரும்" என்றார். அப்படிப் பெருமாள் சன்னதியில் பெரியவா ஆரம்பித்து வைத்தது ஸ்ரீ மாதா ட்ரஸ்ட். பெரியவா இதன் அடிப்படைச் செலவுகளுக்குப் பணம் கொடுத்தார். ஒருவருடம் கழித்து நடந்த பத்திரிகையாளர் கூட்டத்துக்கும் வந்தார். அதில் பேசும்போது, "இது ஒசந்த தர்மம். நீங்க கிருஷ்ணமூர்த்தி கையில கொடுக்கற பணம் என் கையில கொடுக்கறமாதிரி. இதைவிட ஒசந்த தர்மம் இருக்கமுடியாது" என்று சொன்னார்.

தெ: இங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படுகின்றன?
கி: அன்றைக்கு ஒருநாள் செலவு 5000 ரூபாயாக இருந்தது, இன்றைக்கு 25000 ரூபாய் ஆகிறது. அன்றைக்கு வெறும் சாப்பாடுமட்டும் தான் போட்டோம். இன்றைக்கு இங்கே தங்கியிருக்கும் நோயாளிகளுக்குச் சாப்பாடு, உடனிருப்பவருக்குச் சாப்பாடு, தங்குமிடம், மருந்து மாத்திரைகள், அவர்கள் சிகிச்சைக்கான பண உதவி, அவர்கள் திரும்பி ஊருக்குப் போகும்போது ஒரு மாதத்துக்கான மருந்து மாத்திரைகள் எல்லாம் தருகிறோம். பஸ் சார்ஜ்கூட இல்லாத ஏழைகள் என்றால் அதற்கு, குடும்பமே நடத்தமுடியாத பரம ஏழையாக இருந்தால் அதற்கான உதவி, குழந்தைகள் படிக்க உதவி என்று இன்றைக்கு ஏறத்தாழ ஒன்றரைக் கோடி ரூபாய்க்குமேல் வருஷத்திற்குச் செலவாகிறது. இறையருளால், பொதுமக்களின் கருணையால் இன்றளவும் ஒருநாள்கூடத் தடங்கல் இல்லாமல் நற்பணி தொடர்கிறது. இதுவரை 3 லட்சம் பேர் இங்கு தங்கிச் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

தெ: இவர்களுக்குத் தரப்படும் உணவு...?
கி: காலை 6.00 மணிக்கு காபி. 7.30 மணிக்கு இட்லி, கிச்சடி, சாம்பார். மதியம் இரண்டு காய், சாம்பார், ரசம், கறி, கூட்டு, மோர் என்று காய்கறி உணவு. மதியம் 3.30 மணிக்கு டீ, சுண்டல். கேன்சர் நோயாளிகளுக்கு கொத்துக்கடலை சுண்டல் அவசியம் தேவை. அதில் நிறையப் புரதம் இருக்கிறது. ரேடியேஷன் தெரபியால் அவர்கள் உடல் மிகவும் பலவீனம் அடைந்துவிடும். அதனால், விட்டமின், புரோட்டீன், மினரல்ஸ் என்று சத்துமிகுந்த உணவுகள் தேவைப்படும். அது வழங்கப்படுகிறது. மாலை 6:30க்கு கூட்டுவழிபாடு. 7.30க்குக் கலவை சாதம், ஒரு காய், ரசம், மோர் சாதம் கொடுக்கிறோம். நோயாளிக்கும், உதவியாக இருப்பவருக்கும் இதை இலவசமாகவே கொடுக்கிறோம். நோயாளி குழந்தையாக இருந்தால் தாய், தந்தை இருவருமே உடனிருக்க அனுமதிக்கிறோம். ஏனென்றால் ஒரு சமயம் குழந்தை அம்மா சாப்பாடு ஊட்டவேண்டும் என்று அடம் பிடிக்கும். ஒரு சமயம் அப்பா இருந்தால்தான் மாத்திரை சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கும். அவர்களுக்கும் உணவு இலவசம். சிலசமயம் நோயாளிகளுக்கு ஸ்பெஷல் டயட்ஸ் டாக்டர்கள் எழுதிக் கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கு அதையும் கொடுக்கிறோம். அதுபோலப் பண்டிகைகள் எப்படி அவரவர் வீட்டில் கொண்டாடுவார்களோ அதேபோல இங்கும் கொண்டாடப்படும். தீபாவளி, பொங்கலுக்கு புத்தாடை, இனிப்பு எல்லாம் நோயாளி, உதவியாளர் என எல்லாருக்கும் உண்டு. என் பேரன் என்ன சாப்பிடுவானோ அதே உணவு இவர்களுக்கு இங்கே உண்டு.

ஒரு வாரம் இதை நடத்தக் கையில் பணம் இருக்கும், அப்புறம் இருக்காது. ஆனால் நாங்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. எப்போது சந்திரமௌலீஸ்வரரும் பாலாஜியும் உத்தரவாதம் கொடுத்து இதை ஆரம்பித்தேனோ, அப்போதே இது அவர்கள் பொறுப்பாகி விட்டது. ஏன் நான்தான் எல்லாவற்றையும் செய்வதாக நினைத்து வீண் கவலைப்பட வேண்டும்? எல்லாம் அவர்கள் பொறுப்பு. அவர்கள்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

தெ: புற்றுநோய் தொற்றுநோயா?
கி: இல்லை. அது மொத்தம் நான்கு நிலைகளில் இருக்கலாம். முதல் இரண்டு நிலைகளிலே கண்டறிந்துவிட்டால் முழுக்க குணப்படுத்தலாம். இங்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். இங்கே புற்றுநோயாளிகளாக வந்த ஆணும், பெண்ணும் காதலித்து, திருமணம் புரிந்துகொண்டு அவர்களுக்குப் பிறந்த குழந்தையை நான் பார்த்திருக்கிறேன். இந்த நோய் வந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலையில் இருப்பவர்களை மாற்றி, மனநல சிகிச்சையும் அளித்து, உற்சாகப்படுத்தி அவர்களுக்கு வாழ்க்கையின்மீது பிடிப்பை ஏற்படுத்துவதை நாங்கள் எங்கள் கடமையாகச் செய்கிறோம்.

இங்கே தொடர்சிகிச்சை அளித்துக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாலும் சிலர் மட்டும் குணப்படுத்த முடியாத டெர்மினல் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர்களை யார் பார்த்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தது. அதாவது கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களை மட்டுமே நாங்கள் வைத்துப் பராமரிக்கமுடியும். குணமாகும் நிலையைக் கடந்தவர்களை யார் பராமரிப்பது? இதைப்பற்றி நிறையச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நமக்கோ வயதாகிவிட்டது, எல்லாச் சுமைகளையும் சுமக்க முடியவில்லை. இதனை யார் தொடர்வார்கள் என்று யோசித்த வேளையில் விஜயஸ்ரீ வந்தார்.



தெ: அதுபற்றிச் சொல்லுங்கள்...
கி: ஒரு பத்திரிகைப் பேட்டிக்காக விஜயஸ்ரீ வந்து என்னைச் சந்தித்தார். பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். சுவாமி ஹரிதாஸ்கிரி இவரது சின்னத் தாத்தா. இங்கு வந்து நோயாளிகளைச் சந்தித்தத்தில் மிகவும் மனம் நெகிழ்ந்துவிட்டார். அவ்வப்போது இவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்வார். தானே முன்வந்து வேலைகளைச் செய்வார். In one year, she proved she will be my successor with better capacity, with better capability, with better delivery for what the poor cancer patients need. இவர்களுக்கு என்ன தேவையோ அதைப் புரிந்துகொண்டு கொடுக்குமளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டார். கருணை, தாய்போன்ற பரிவு, சகிப்புத்தன்மை இதெல்லாம் இங்கே தேவை. அது விஜயஸ்ரீயிடம் நிறையவே இருந்தது.

இவரையே வளர்ப்பு மகளாகச் சுவீகரித்த நான், இந்த ட்ரஸ்டின் அடுத்த கட்டத் தலைவராகவும் நியமித்தேன். இவரை நான் பெற்றமகளைவிட ஒரு மடங்கு மேலாகக் கருதுகிறேன். பெற்ற மகளுக்கு விருப்பங்கள் இருக்கும். நான் இவருக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. செய், செய் என்று மேலும் மேலும் வேலைகளைக் கொடுக்கிறேன். புன்சிரிப்புடனும், ஆர்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் சுறுசுறுப்பாக ஒரு கர்மயோகியைப் போல் செய்துவருகிறார். ஸ்ரீ மாதா ட்ரஸ்டை அதன் அடுத்தகட்டத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் ஹாஸ்பைஸ் (hospice) என்ற அமைப்புகள் உள்ளன. (இந்த இதழின் நலம்வாழ கட்டுரையைப் பார்க்கவும்-ஆசிரியர்) அவை நோய்முற்றியவர்களுக்கு வேண்டிய சிகிச்சை, உணவு, உறைவிடம் அளித்து இறுதிவரை பாதுகாக்கின்றன. இந்தியாவில் அதுபோன்ற அமைப்புகள் இல்லையென்று சொல்லிக் கொண்டிருக்காமல், நாமே முயற்சிப்போமே என்று அந்தப் பொறுப்பை விஜயஸ்ரீயிடம் கொடுத்தேன். அவரையே நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது ஸ்ரீ மாதா கேன்சர் கேர்.

தெ: அருமை! ஸ்ரீ மாதா கேன்சர் கேர் என்ன செய்கிறது?
விஜயஸ்ரீ: இந்திராநகரில் நர்ஸிங் ஹோம் ஒன்று, அதை நடத்திவந்த டாக்டர் காலமானதால் மூடிக்கிடந்தது. அதை லீஸுக்கு எடுத்து அங்கே ஸ்ரீ மாதா கேன்சர் கேரை (www.srimathacancercare.com) ஆரம்பித்தோம். இறுதிநிலையில் உள்ள புற்றுநோயாளிகளை அங்கே பராமரிக்கிறோம். அதற்காக அரசுப் பொது மருத்துவமனையுடன் ஓர் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. அரசினால் பராமரிக்க முடியாத, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் கைவிடப்பட்ட இறுதிநிலை புற்றுநோயாளிகள் இங்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இங்கும், நோயாளி, நோயாளியின் துணைவர் என இருவருக்கும் தங்க இடம், மூன்றுவேளை உணவு, நோயாளிக்கு வலிதணிப்புச் சிகிச்சை (palliative care), மற்ற மருத்துவ உதவிகள் எல்லாவற்றையும் இலவசமாகச் செய்கிறோம். எங்களுடைய நோக்கம், நோய்முற்றிய ஏழைப் புற்றுநோயாளிகள் கடைசிக்கட்டம் வரையில் பசியில்லாமல், வலியில்லாமல் அமைதியாக வாழவேண்டும் என்பதுதான். இறுதிக் காலத்திலாவது அவர்கள் கொஞ்சமாவது நிம்மதியோடு முடிவைநோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காக.

இப்படி வரும் நோயாளிகளில் ஆதரவற்றோர், உறவுகள் யாருமில்லாதவர்களாக இருந்தால் அவர்களுடைய இறுதிச் சடங்குகளையும் நாங்களே செய்கிறோம். சிலர் கேரளா, மேற்கு வங்கத்திலிருந்தெல்லாம் வந்திருப்பர். மாற்றுப்புடவை, லுங்கிகூட இல்லாமல் வரும் ஏழைகள்தான் இங்கு அதிகம். அவர்களது முடிவிற்குப்பின் அவர்கள் ஊருக்கு உடம்பை எடுத்துச் செல்ல வசதி இருக்காது. அவர்கள் சார்பாக, உற்றார் அனுமதியுடன் நாங்களே அந்த இறுதிக் காரியங்களையும் செய்துவிடுகிறோம்.

தெ: இவற்றில் மிகப்பெரிய சவால் எது?
வி: புற்றுநோயாளிகளைப் பராமரிப்பதே சவால்தான். இதில் மிகப்பெரிய சவால் என்றால் நோய் முற்றி, உடலின்மேல் புண் போன்றவை வந்து கஷ்டப்படும் நோயாளிகள்தாம். அவர்கள் அருகில் போகமுடியாத அளவிற்கு துர்நாற்றமும், நோவும் இருக்கும். சிலர் தங்கள் விகார முகத்தையோ, உடல் பாகத்தையோ மற்றவர்கள் பார்த்து வெறுப்போ, அருவருப்போ, பயமோ கொள்ளக்கூடாது என்பதற்காகத் துணியில் மறைந்துகொள்வார்கள். அவர்களை அன்போடும், பரிவோடும் அணுகி, வேதனையை மாற்றி, சிகிச்சையளித்து, வலியைக் குறைத்து, அவர்களையும் மற்ற பொதுநோயாளிகளுடன் பொதுவார்டில் தங்குமளவிற்குக் கொண்டுவந்து, இறுதிக்காலத்தில் அவர்களை அமைதியாக வழியனுப்பி வைக்கவேண்டும். அது ஒரு சவால்தான். அதை நிறைவோடு செய்துவருகிறோம்.

தெ: இந்த ஹாஸ்பைஸில் எத்தனை நபர்கள் தங்கி சிகிச்சை பெறலாம்?
வி: பதினைந்து பேருக்குத்தான் சிகிச்சை வசதி உள்ளது. அதற்குமேல் இடவசதி போதாது.

தெ: வேறென்ன சேவைகளை அளிக்கிறீர்கள்?
வி: சிறுநீரகப் பிரச்சனையால் டயாலிசிஸ் தேவைப்படும் ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ் செய்கிறோம். எங்களுக்குத் தெரிந்து இந்தியாவில் எந்த அரசுசாரா அமைப்பும் இலவச டயாலிசிஸ் சிகிச்சை செய்வதில்லை. நிறையத் தன்னார்வ அமைப்புகள் குறைந்தபட்சம் 500 அல்லது 750 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் இந்த வசதியைத் தருகின்றன. வாரத்துக்கு மூன்று, நான்கு டயாலிசிஸ் செய்தாலும் குறைந்தது 4000 ரூபாய் ஆகும். எந்த ஏழையால் இத்தனை செலவுசெய்ய முடியும்? அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்வதற்கான சில கருவிகளைக் கொண்டுவரச் சொல்லுவார்கள். நாங்கள் இலவசமாகச் செய்வதோடு, மிகவும் ஏழைமை நிலையில் உள்ளவர்களுக்குச் சிகிச்சையளித்து, வீட்டில் திரும்பக் கொண்டுபோய் விடவும் ஏற்பாடு செய்கிறோம் அல்லது அதற்குப் பணம் உதவுகிறோம். அவர்களுக்கும், உடன் வருவோருக்கும் இலவச உணவும் கொடுக்கிறோம்.

தெ: ஒருநாளைக்கு எத்தனை நபர்களுக்கு இங்கு டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுகிறது?
வி: தற்போது நான்கு யூனிட்டுகள் வைத்திருக்கிறோம். ஒருவருக்குச் செய்ய நான்கு மணிநேரம் ஆகும். அதனால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே செய்யமுடிகிறது.

தெ: ஒரு புற்றுநோயாளி உங்களை அணுகுவது எப்படி?
இருவரும்: நேரடியாக எங்களை அணுகமுடியாது. அவர்கள் புறநோயாளியாகக் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் விவரம், எத்தனை நாள் தங்கவேண்டும், என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், எந்தமாதிரித் தனி உணவு அளிக்க வேண்டும் என்பவற்றை எழுதிக் குறிப்புச்சீட்டு அனுப்புவார்கள். அதன்படிச் சேர்த்துக்கொள்வோம். வெளியூர் ஏழை நோயாளிகளை மட்டுமே அனுமதிக்கிறோம். அவர்களுக்கென்று தனியாக ஒரு சேர்க்கைப் பதிவேடு வைத்துப் பரமாரிக்கிறோம். நோயாளி, உதவியாளர் என்று எப்போதும் 300 பேருக்குமேல் இங்கே இருக்கிறார்கள். தற்போது இந்த இடம் போதவில்லை.

ஸ்ரீ மாதா கேன்சர் கேரில் அனுமதிக்க வேண்டுமென்றால் நோய்முற்றிய ஏழைப் புற்றுநோயாளியாக இருக்கவேண்டும். அவ்வளவுதான். அங்கு சேர்ந்துவிட்டால், அவர்கள் கடைசிமூச்சுவரை எல்லாமே நாங்கள் முழுப்பொறுப்பெடுத்து பார்த்துக் கொள்கிறோம்.

தென்றல்: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
இருவரும்: இப்போது இருப்பது வாடகைக் கட்டடத்தில். சொந்தமாக ஓரிடம் இருந்தால், இதனை விரிவாக்கி அதிகப் பேருக்குப் பலனளிப்பதாய்ச் செய்யமுடியும். சென்னை துரைப்பாக்கத்தில் ஒரு நிலம் வாங்கியிருக்கிறோம். நகர எல்லைக்குள் இருந்தால்தான் நோயாளிகளும் டாக்டர்களும் வர வசதிப்படும். இதை ஒரு உலகத்தரம் வாய்ந்த ஹாஸ்பைஸாக உருவாக்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். அமெரிக்காவின் ஹாஸ்பைஸ் வசதி இந்தியாவில் இருக்கும் ஏழைக் குடிசைவாசிக்கும் கிடைக்கவேண்டும். இது பேராசையாகத் தோன்றலாம். வாழ்வின் கடைசிக்கட்டத்தில் இருக்கும் அந்த நோயாளி சிலநாட்களாவது சிரித்துப் பேசி, நிம்மதியாக, அமைதியாக விடைபெற வேண்டும் என்று நாங்கள் நினைப்பதில் என்ன தவறு?

தெ: பலமொழி மக்கள் இங்கு வருகிறார்கள். மொழி ஒரு பிரச்சனையா?
கி: அன்புதான் எங்கள் மொழி. அன்போடு, பாசத்தோடு தோளில், முதுகில் தட்டிக்கொடுத்தால் போதும். அந்தப் பாச உணர்வு மொழிக்கெல்லாம் அப்பாற்பட்டது. இங்கே பல இன, மத, ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஏழை முஸ்லிம்கள் நிறைய இருக்கிறார்கள். வங்காளி, பிஹாரி, அந்தமான்காரர் என்று பலர் இருக்கிறார்கள். எனக்குக் கொஞ்சம் ஹிந்தி தெரியும். விஜயஸ்ரீக்கு தெலுங்கு தெரியும். சமாளித்துக் கொள்வோம். மற்றபடி மொழியோ, ஜாதியோ, மதமோ பிரச்சனையே இல்லை. அன்பிற்கு ஏது சார் மொழி!

தெ: உங்களுக்குத் துணை நிற்பவர்கள்பற்றி?
கி: இங்கு பணிசெய்பவர்கள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே துணையாக இருக்கிறார்கள். மனைவியின் ஆதரவு இல்லாமல் இவ்வளவுதூரம் செய்ய முடியாது. எங்கள் குழுவினர் அமெரிக்கன், ரமா, மணி என்று எல்லோருமே சிறிதளவுகூடச் சுயநலம் இல்லாதவர்கள். அர்ப்பணிப்பு உணர்வும், கடமை உணர்வு கொண்டவர்கள். சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு பணி செய்கிறார்கள்.

விஜயஸ்ரீ: என் கணவர் மிகுந்த உதவியாக இருக்கிறார். எனக்கு அருண், அர்ஜுன் என்று இரட்டைக் குழந்தைகள். அவர்களுக்கும் தெரியும், அம்மா காலை 8.00க்குக் கிளம்பினால் இரவு 8.00 மணிக்கு மேல்தான் வருவார் என்று. அப்பா ரிடயர் ஆகிவிட்டார். அவர் காலையில் எழுந்ததும் வாக்கிங்போல நேராக இந்திராநகர் சென்டருக்குப் போய்விடுவார் அங்கே, எல்லாருக்கும் டீ, காபி போய்விட்டதா, டிபன் தயாராகிவிட்டதா என்று மேற்பார்வை செய்வார். நான் காலையில் 9 மணிக்கு அங்கே செல்வேன். அதுபோல வெளிவேலை எங்காவது செல்லவேண்டும் என்றால் என் கணவர் துணைவருவார். இதுவரை ஒருநாள்கூட அவர் முகம் சுளித்ததில்லை.

தெ: எந்தெந்த விதத்தில் தென்றல் வாசகர்கள் உங்களுக்கு உதவலாம்?
கி: பணமாக, பொருளாக என எந்த விதத்திலும் உதவலாம். உதவுவதற்கு மனம்தான் வேண்டும். ஒரு தொழுநோயாளி மாதம் 50 ரூபாய் எங்களுக்கு மணியார்டர் செய்துவருகிறார். அவர், பிச்சையெடுத்துக் கிடைக்கும் பணத்திலிருந்து மாதாமாதம் அனுப்புகிறார் என்றால் கொடுப்பதற்கு மனம்தான் வேண்டும் என்பதற்கு வேறெதுவும் உதாரணம் வேண்டியதில்லை, அல்லவா?

உங்களுடைய திருமணநாள், பிறந்தநாள், முன்னோர் நினைவுநாள் என்று எதற்கு வேண்டுமானாலும் உதவலாம். துரைப்பாக்கத்தில் கட்டப்போகும் பில்டிங்கிற்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ. 2500 என்று நிர்ணயித்துள்ளோம். ஒரு கோயில் கட்ட நிதி தருவதில்லையா? இதையும் ஒரு கோயிலாக நினைத்து உதவலாமே! 1, 10, 100 சதுர அடி என விருப்பத்துக்கும் சக்திக்கும் ஏற்பத் தரலாம். நோயாளியும் உதவியாளரும் தங்கும் அறை கட்டுவதற்கான செலவை ஏற்கலாம். அதற்கு 3.5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

இது மிகப்பெரிய தர்ம காரியம். பெருமளவு பணம் இருப்பவரும் தனிநபராகச் செய்வது கஷ்டம். எங்களுக்கு நிதி அளிப்பதன்மூலம் இந்த நற்பணியில் சேர்ந்துகொள்ளலாம். நம்மிடையே இருக்கும் பிரச்சனை பணம் இல்லை என்பதல்ல. மனமும் பணமும் உள்ளவர்கள் இருக்கின்றார்களா என்பதுதான். இதுதவிர புலம்பெயர்ந்த தமிழர்களிடம் எனக்கு வேண்டுகோள் ஒன்றும் உண்டு

தெ: சொல்லுங்கள்...
கி: எங்கு வாழ்ந்தாலும் இதுதான் உங்கள் மூதாதையர் ஊர். அவர்கள் வாழ்ந்த நம் மண்ணிற்கு என்ன திருப்பிச் செய்யப்போகிறோம்? இன்று வெளிநாடுகளில் வசதியோடு இருக்கும் முன்னோடிகளில் பலரும் சாதாரண குக்கிராமங்களில், சாதாரண பள்ளிக்கூடங்களில் படித்து ஆளாகிச் சென்றவர்கள்தானே! யாரோ எதையும் எதிர்பார்க்காமல் கட்டிய பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்தானே இன்றைக்கு உலக வங்கியில் பணியாற்றும் அளவு பெரிய ஆளாக இருக்கின்றார்கள்.

இங்கே வாருங்கள். இதுபோன்ற ஆதரவற்ற அம்மா, அப்பாக்கள் இருக்கும் இந்த ட்ரஸ்ட்டுக்கு உதவுவதன்மூலம் அவரவர் பெற்றோருக்குச் செய்த பலனை அடையலாம். பலரும் நிதியளித்து உதவினால் சென்னையில் இருப்பதுபோல் இன்னமும் பல இடங்களில் இதுபோன்ற வசதிகளை உருவாக்கலாம். ஏனென்றால் அந்த அளவுக்குப் புற்றுநோயாளிகள் இருக்கிறார்கள். சேலம் போன்ற மாவட்டங்களில் புற்றுநோயாளிகள் மிக அதிகம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியாவில் 8% மக்களுக்கு இந்த நோய் இருக்கிறது. ஏழைமையும், நோயும் பிரிக்கமுடியாத உறவு என்று சொல்லலாம்.

நீங்கள் தமிழகம் வரும்போது, ஸ்ரீ மாதா ட்ரஸ்ட்டை வந்து பார்த்து, இங்குள்ளவர்களிடம் பேசி, இந்தத் தென்றல் பேட்டியில் சொல்லியிருப்பது உண்மைதானா என்று சோதித்துப் பாருங்கள். பின்னர் பணம் கொடுங்கள். உங்கள் நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு. எங்களுக்குத் தோள் கொடுங்களேன்! இதை உங்கள் குடும்பக் கடமையாக எடுத்துக்கொண்டு உதவ முன்வரவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

என்னுடைய அடுத்த வேண்டுகோள் என்னவென்றால், இந்தப் பேட்டியை உங்கள் நண்பர்களுக்கு, உறவுகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களின் முகவரியைக் கொடுங்கள். நாங்கள் அவர்களுக்கு இதுபற்றிய கைப்பிரதிகளை அனுப்பிவைக்கிறோம். தாய்நாடு வரும்போது வந்து பார்த்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். இங்கிருக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்குச் சந்தோஷம் வரும். 'நாங்கள் ஆதரவற்றோர் அல்ல; வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல; தனியானவர்கள் அல்ல' என்ற எண்ணம் வரும்.

எங்களோடு எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.

மின்னஞ்சல்:
கிருஷ்ணமூர்த்தி - vkrishnamoorthy.smt@gmail.com.
விஜயஸ்ரீ - dvijayasree.smcc@rediffmail.com
தொலைபேசி - +91 44 2442 0727

அஞ்சல் முகவரி:
Sri Matha trust,
Mohandevi Hirachand Nahar Rajasthani Dharmasala,
Old Cancer Institute,
East Canal Bank Road,
Gandhi Nagar, Adyar,
Chennai - 600020, Tamil Nadu,
India.



Srimatha cancer care,
No.466, 3rd Avenue, Indira Nagar,
Chennai - 600020, Tamil Nadu,
India.
தொலைபேசி: (+91) 2491 2308, 2441 323

"எனக்கு இப்போது 72 வயது ஆகிறது. இன்னமும் ஒரு முப்பது வருடங்களாவது இருக்க ஆசைப்படுகிறேன். என் பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுவதற்கல்ல. இந்த ஏழைகளுக்கு இன்னமும் நம்மால் ஆனதைச் செய்யலாமே என்பதற்காக" என்று சொல்லிக் கண்கலங்குகிறார் கிருஷ்ணமூர்த்தி. நீர்த் திரையிட்ட கண்களாலும், சொற்களாலும் நன்றிகூறி, தென்றல் வாசகர்கள் உதவத் தயங்கமாட்டார்கள் என்று உறுதியும் கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


"எனக்கெதுக்கு இன்னொரு டிரெஸ்?"
சில நாட்களுக்கு முன்னால் ஒரு பையனும் அம்மாவும் வந்திருந்தார்கள். பையன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு மறுநாள் பிறந்த நாள். அவனுக்குத் துணி வாங்குவதற்காக அந்த அம்மா அவனை கடைக்குக் கூப்பிட்டிருக்கிறார். அவன், "எனக்கு டிரெஸ் வேண்டாம். இத்தனை வருஷமா வாங்கினதே போதும். இந்தப் பணத்தை நீங்கள் அடிக்கடி சொல்வீங்களே புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் ட்ரஸ்ட் பற்றி, அதுக்கே கொடுத்துடலாம்" என்று சொல்லி இங்கே கூட்டிக்கொண்டு வந்துவிட்டான்.

5000 ரூபாயைக் கொடுத்துவிட்டு அதற்கான ரசீதை வாங்கிக்கொண்டு என்னைப் பார்க்க வந்தார்கள். நான் அவனைப் பார்த்து, "ஏன் கண்ணா உனக்கு இது தோணிச்சு?" என்று கேட்டேன்.

அவன் அதற்கு, "தாத்தா... எனக்கு பீரோ நிறைய டிரெஸ் இருக்கு. எனக்கெதுக்கு இன்னொரு டிரெஸ். அது வாங்குற காசுல நீங்க 300 பேருக்கு ஒருவேளை சாப்பாடு போடறீங்களே தாத்தா. என்னுடைய பர்த்டேக்கு இதைவிடப் பெரிசா வேற என்ன பண்ணப்போறேன்" என்றான்.

"அதுக்கு ஏண்டா இதை செலக்ட் பண்ணினே" என்று விஜயஸ்ரீ கேட்டார்.

"இங்கதான ஏழைகளாவும் இருக்காங்க. நோயாளிகளாகவும் இருக்காங்க. அதுனாலதான்" என்றான் அவன்.

இப்படி உயர்ந்த எண்ணம் எல்லா இளைஞர்களுக்கும் வந்தால் இந்தச் சமுதாயம் எப்படி இருக்கும்? இவனைப் போன்றவர்கள்தான் வருங்கால சமூகத்தின் தூண்கள். இந்த மனோபாவம் பெரியவர்களுக்கு, செல்வந்தர்களுக்கு வரவேண்டாமா?

- கிருஷ்ணமூர்த்தி

*****


நர்ஸ் மயங்கி விழுந்தார்
ஒரு பாட்டி, சுமார் 68 வயது. அவங்களுடைய பிரச்சனை என்னவென்றால் கருப்பையில் புற்றுநோய் வந்து, பிறப்புறுப்பு வழியாக வெளியே வந்து தொங்குகிறது. அதில் புழுவேறு வைத்துவிட்டது. அவருக்குக் கண் தெரியாது. அவருக்கு ஒரே மகள். சமையல் வேலை செய்பவர். கணவரும் இல்லை. பரம ஏழை. வாடகை வீட்டில் குடியிருந்த அவர்களை, துர்நாற்றம் சகிக்கமுடியாத வீட்டுக்காரர் வெளியேபோகச் சொல்லிவிட்டார். அல்லது, அந்தப் பாட்டியை வெளியே அனுப்பிவிட்டு நீங்கள் இருங்கள் என்று சொல்லிவிட்டார். அவர்கள் எங்கே போவார்கள்? இங்கு வந்தார்கள். இங்கே அட்மிட் ஆகுமுன்னால் நர்ஸ் வந்து செக்கப் செய்வது வழக்கம். அப்படிச் செய்யப்போன நர்ஸ், பாட்டியின் நிலையைப் பார்த்து மயக்கமடைந்து விழுந்து விட்டார். எத்தனையோ புற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்திருப்பவர் அவர். அவராலேயே தாங்க முடியவில்லை!

அந்த நர்ஸுக்கு டாக்டர்கள் வந்து கவுன்சலிங் கொடுத்து, பின்னர் பாட்டிக்குச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தோம். மருத்துவரும், "இது முற்றிப் போய்விட்டது, வயதும் ஆகிவிட்டது. சர்ஜரி செய்யமுடியாது. இருக்கப்போவது இன்னும் கொஞ்ச நாள்தான். மற்ற உடல் பிரச்சனைகளைச் சரிசெய்து, புண்களை ஆற்றி, அமைதியாக வழியனுப்பும் முயற்சிகளை மட்டுமே செய்யமுடியும்" என்று சொல்லிவிட்டார். நாங்களும் அதன்படி அவரை நன்கு கவனிக்கவே, புண்கள் எல்லாம் ஆறி, வலி, வேதனை, அரற்றல் எல்லாம் குறைந்து நிம்மதியாக விடைபெற்றார். இது ஒரு சாம்பிள் கேஸ்தான். இப்படி இங்கே பல அனுபவங்கள்.

- விஜயஸ்ரீ

*****


நோயாளிகள் சொல்கிறார்கள்....
இந்திரா, தென்காசி.: எங்க பையன் இங்க வேலை பார்த்துகிட்டிருந்தான். அவன்மூலமாத்தான் இது தெரியும். இங்க நல்லா பாத்துகிடுவாங்கன்னு சொன்னாங்க. டாக்டரும் இங்க போகச் சொன்னார். அதான் வந்தோம். இங்க நல்லபடியா பாத்துகிடுதாங்க. சிகிச்சையும் நல்லபடியா இருக்குது. சாப்பாட்டுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத நல்ல ஒரு இடம். தங்கறதுக்கும் நல்ல பாதுகாப்பு. எங்களைமாதிரி ஏழைகளுக்கு இது இருக்குறதுனால பரவாயில்லை. இல்லைன்னா எங்களை மாதிரி ஆளுகளுக்கு ரொம்பக் கஷ்டம் சார்.

கர்ணன், ஏழாம் வகுப்பு, விழுப்புரம்: இங்க வந்தப்புறம் நல்லா இருக்கு. சாப்பாடு எல்லாம் நல்லா போடறாங்க. நல்லா சாப்பிடறேன்.

அருமையாள், திண்டிவனம்: இங்க வந்ததுக்கப்புறம்தான் நிம்மதியா இருக்கேன். தங்கறதுக்கு இடம், டயத்துக்கு சாப்பாடுன்னு ஒரு கொறயும் இல்ல. நல்லா பாத்துக்கறாங்க. வீட்லகூட இந்தமாதிரி சாப்பாடு சாப்பிட்டதில்லீங்க. திருப்தியா இருக்கேன். இவங்க எல்லாம் தெய்வம்.

தஸ்து பீவி, காட்டுமன்னார்குடி: என் பொண்ணுக்காக இங்க வந்தேன். பத்து வருஷமா இங்க வந்துட்டுப் போறோம். எந்தப் பிரச்சனையும் கிடையாது. எல்லாம் நல்லபடியா நடக்குது. போதும் போதும்னு சொல்றமாதிரி சாப்பாடு போடறாங்க. சாப்பாடு, காபித் தண்ணின்னு எந்தக் குறையும் கிடையாது. சாரும் அம்மாவும் எங்களுக்குத் தெய்வம். இவங்க பாடுபடற மாதிரி உலகத்துல எவங்களும் பாடுபட மாட்டாங்க. எத்தினி லட்சம் கொடுத்தாலும் இவங்கள மாதிரி பார்த்துப் பார்த்து யாரும் செய்யமுடியாது. இவங்க, இவங்க குடும்பம் எல்லாம் நல்லபடியா இருக்கணும்னு து ஆ பண்றோம். சிரிச்ச முகத்தோட இங்க சாப்பாடு போடுவாங்க சார். அதைப் பார்த்ததுமே எங்களுக்கு வவுறு நெறஞ்சிடும். சாப்பிடவே முடியாது. இந்தா இந்தா சாப்பிடுன்னு நிறைய நிறைய அள்ளிப் போட்றாங்க. இங்க வந்தப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. யாரும் எதுவும் குறைசொல்ல முடியாது. மவ நல்லபடியா குணம் ஆகி சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். அதுதான் பிரார்த்தனை.

முத்தம்மா, பாளையம் கிராமம், கரூர்: எனக்கு மார்புல புத்து. இங்க சிகிச்சைக்காவ வந்தேன். நல்லா பாத்துக்கறாங்க., ரொம்ப சந்தோஷமா இருக்கு. இங்க எந்த வேலையும் இல்ல. மூணுவேளைக்கும் நல்லா சுடச்சுட சாப்பாடு தராங்க. இங்க நான் நிம்மதியா, சந்தோஷமா, திருப்தியா இருக்கேன். எந்தக் குறையும் இல்ல. ஐயாவும், அம்மாவும் நல்லா கவனிச்சுப் பாத்துக்கறாங்க. எங்க வூட்லகூட அம்புட்டு இதா இருக்க மாட்டாங்க. வூட்ல நான் இருந்தா ஆட்டுக் குட்டியப் பிடிச்சுக் கட்டலைன்னு வைவாங்க. தண்ணி தூக்கப் போவலன்னு சண்டை பிடிப்பாக. இங்க அதெல்லாம் இல்லாம திருப்தியா சாப்பிட்டு, நிம்மதியாத் தூங்கி நல்லா ரெஸ்ட்ல இருக்கேன். இந்த அம்மாவை என் புள்ளபோல நினைக்குறேன். அன்பா பாக்குறாக. நல்லா கவனிக்குறாக. வேறென்ன வேணும்?

அம்மணி, கடலூர்: பாஞ்சு வருஷம் முன்னாடி இவங்களுக்கு நெஞ்சுல புத்து இருந்திச்சு. இங்கதான் வந்து தங்கி இருந்தோம். ஆபரேஷன் பண்ணினதில சரியாச்சு. இப்போ வயித்துல வந்திருக்கு. ட்ரீட்மெண்ட் எடுக்கணும். அதான் அட்மிட் ஆகியிருக்கோம். நாளைக்கு டாக்டர் வரச் சொல்லியிருக்காரு.

© TamilOnline.com