எம்.ஏ. சுசீலா
பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், நூல் திறனாய்வாளர் எனப் பல திறக்குகளிலும் இயங்குபவர் எம்.ஏ. சுசீலா. காரைக்குடியில், பிப்ரவரி 27, 1949 அன்று பிறந்தார். தந்தைக்குக் காவல்துறையில் பணி. தாயார் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியை. வீட்டின் இலக்கியச் சூழல் வாசிப்பார்வத்தைத் தூண்டியது. காரைக்குடி கம்பன் விழா தமிழிலக்கியங்களை வாசிக்கத் தூண்டியது. உயர்நிலைக் கல்வியை முடித்தபின், பள்ளத்தூரில் இருக்கும் சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கல்லூரியில் வேதியியல் இளநிலைப் பட்டம் பெற்றார். தமிழார்வம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை தேர்ந்தார். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என்று தன் வாசிப்பு வட்டத்தை விரிவுபடுத்தினார். 1970ல் மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குப் படைப்பிலக்கிய முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

முதல் சிறுகதை 'ஓர் உயிர் விலைபோகிறது' 1979ல், அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. கலைமகள், ஆனந்த விகடன், தினமணி கதிர், அமுதசுரபி, மங்கையர் மலர் எனப் பல இதழ்களில் படைப்புகள் வெளியாகின. ஓய்வுநேரத்தில் முனைவர்பட்ட ஆய்வினை மேற்கொண்டார். 'காலப்போக்கில் தமிழ்ச்சமூக நாவல்களில் பெண்மைச் சித்திரிப்பு' என்ற தலைப்பிலான இவரது முனைவர்பட்ட ஆய்வேடு ஓர் முன்னோடி ஆய்வாக மதிப்பிடத் தக்கது. இதற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகளும், திரட்டிய தகவல்களும் படைப்பார்வத்தை மேலும் வளர்த்தன. பல்வேறு தளங்களில் பெண்ணியத்திற்கு முன்னுரிமை கொடுத்து தீவிரமாக எழுதத் துவங்கினார். கலைமகளில் வெளியான இவரது 'புதிய தரிசனங்கள்' சிறுகதை பரவலான கவனத்தைப் பெற்றது. ராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில் அணுகியிருந்த இவரது சிந்தனைப் போக்கு வரவேற்கப்பட்டது. இச்சிறுகதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. அதுபோல கண்ணகியின் தோழியான தேவந்தியை மையப்படுத்தி இவர் எழுதிய 'தேவந்தி' சிறுகதையும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை சுசீலா எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாகவும் வெளியாகியுள்ளன. 'பருவங்கள் மாறும்', 'புதிய பிரவேசங்கள்', 'தடை ஓட்டங்கள்', 'தேவந்தி' போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தன. வடக்குவாசல் பதிப்பகம்மூலம் வெளியான 'தேவந்தி' சிறுகதைத் தொகுப்பு, அப்துல்கலாம் அவர்களால் வெளியிடப்பட்ட பெருமையையுடையது. இவரது சிறுகதைகள் மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. கோவை ஞானி நடத்திய பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியில் இவரது கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் அவர் தொகுத்த பெண்ணெழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் இடம்பெற்றன.

சம்ஸ்கிருதம், மலையாளம் அறிந்த சுசீலா, சிறந்த பேச்சாளரும்கூட. பல பல்கலைக்கழகங்களில், தமிழ்ச்சங்கக் கருத்தரங்குகளில் பங்கேற்றுச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். வானொலியிலும் நூற்றுக்குமேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆய்வுக் கருத்தரங்குகளில் கட்டுரைகள் அளித்துள்ளார். 'விடுதலைக்கு முன் தமிழ்நாவல்களில் பெண்கள்' என்ற தலைப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இவர் நிகழ்த்திய சொற்பொழிவு, அவர்களாலேயே நூலாக்கம் பெற்றுள்ளது. 'பெண் இலக்கியம்-வாசிப்பு', 'இலக்கிய இலக்குகள்', 'தமிழ் இலக்கிய வெளியில், பெண்மொழியும் பெண்ணும்' போன்றவை குறிப்பிடத்தகுந்த கட்டுரைத் தொகுப்புகளாகும். சுசீலா, நாடகங்களிலும் ஈடுபாடு கொண்டவர். கல்லூரிக்காகப் பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். மதுரை நிஜநாடகக் குழுவினரின் 'இருள்யுகம்' என்ற நாடகத்தில் நடித்த அனுபவமும் உண்டு. சில தன்னார்வப் பெண் அமைப்புக்களில் ஆலோசகராகவும், இயக்கவாதியாகவும் பங்காற்றியிருக்கிறார். இவரது சிறுகதைகள் பலவும் பெண் சிக்கல்களை மையப்படுத்தியவையே என்றாலும் அவை பிரச்சாரமாக உரத்துக் கூவாமல் சிந்தனையை வாசகமனத்துக்குக் கடத்துபவையாக உள்ளன. பேராசிரியர் பணியனுபவம் இவரது மொழியாளுமைக்கு உறுதுணையாக உள்ளது. வாசகர்களைக் குழப்பும் உத்திகளோ, வார்த்தை ஜாலங்களோ, தேவையற்ற வர்ணனைகளோ இல்லாமல் நேரடியாகக் கதைகூறும் பாணி என்று இவரது எழுத்து முறைமையைச் சொல்லலாம்.

36 ஆண்டுகள் பாத்திமாக் கல்லூரியில் விரிவுரையாளர், ரீடர், துணைமுதல்வர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த சுசீலா, 2006ல் பணி ஓய்வு பெற்றார். பின் படைப்பிலக்கியத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவள் விகடன், புதிய பார்வை, வடக்கு வாசல் போன்ற இதழ்களில் நிறைய எழுதினார். ஆர். சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், அம்பை, கிருத்திகா, வாஸந்தி, பாமா, சிவகாமி ஆகியோர் இவர் விரும்பும் பெண் படைப்பாளிகளாவர். இன்றைய எழுத்தாளர்களான உமா மகேஸ்வரி, தேனம்மை லக்ஷ்மணன் போன்றோர் இவரது மாணவிகளே. தேனம்மை 'அன்னப்பட்சி' என்ற தனது கவிதை நூலையும், உமா மகேஸ்வரி 'யாரும் யாருடனும் இல்லை' என்ற நாவலையும் ஆசிரியை எம்.ஏ. சுசீலாவுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளனர்.

எம்.ஏ. சுசீலா செய்திருக்கும் படைப்பிலக்கிய முயற்சிகளுள் மிகவும் குறிப்பிடத் தகுந்தது, தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' புதினத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயத்திருப்பதும், 'இடியட்' நாவலை 'அசடன்' என்ற தலைப்பில் தந்திருப்பதுமாகும். "தமிழில் இதுவரை பெயர்க்கப்படாத இன்னும் சில உலகப் பேரிலக்கியங்களை மொழியாக்க விருப்பம். குறிப்பாக, தஸ்தயெவ்ஸ்கியின் 'கீழுலகின் குறிப்புக்க'ளை மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருக்கிறேன்!" என்கிறார். தஸ்தயெவ்ஸ்கி குறுநாவல்களின் மொழிபெயர்ப்பையும் விரைவில் சுசீலாவிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 'சுஜாதா விருது', பெண்ணிய சமூகப் பணிகளுக்காக 'ஸ்த்ரீரத்னா', மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்காகக் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது', நல்லி-திசை எட்டும் 'பாஷாபூஷண் விருது', எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கிய 'ஜி.யூ. போப் விருது' போன்றவற்றை இவர் பெற்றுள்ளார். இவரது சமீபத்திய முயற்சி 'யாதுமாகி' என்ற புதினமாகும். ஒரு தாயின் வாழ்கையில் நிகழ்ந்த சம்பவங்களுடன் கற்பனை கலந்து இதனை உருவாக்கியுள்ளார். "எவராலும் பொருட்படுத்தப்படாத, யாராலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத இருட்டறை மூலைகளில் கிடந்து புழுதிபடர்ந்து பாசிபிடித்து வீணடிக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறு மட்டுமே மலிந்திருந்த ஒரு வாழ்க்கை; அதற்குள் புதையுண்டு போயிருக்க வேண்டிய ஞானம்; இவற்றை அரிதாக வாய்த்த ஒரு சில ஊன்றுகோல்களால் மீட்டெடுத்தபடி தனக்கென்று ஒரு தகுதிப்பாட்டை ஏற்படுத்திக்கொண்ட தாயின் வாழ்க்கையே 'யாதுமாகி' என்கிறார் அவர்.

பணிநிறைவுக்குப் பின் ஏழாண்டுகள் தில்லியிலிருந்த சுசீலா, தற்போது மகளுடன் தமிழகத்தில் வசித்துவருகிறார். தனது எண்ணங்களை www.masusila.com என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். ஆர். சீனிவாச ராகவன், டாக்டர் மு.வரதராசன், இந்திரா பார்த்தசாரதி என தமிழ்ப் பேராசிரியர்களாக இருந்துகொண்டு இலக்கியத்திற்கும் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர்கள் பலர். அவர்கள் வரிசையில் வைத்து மதிப்பிடத் தகுந்தவர் சுசீலா. "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவை நனவாக்கி வரும் எம்.ஏ. சுசீலாவின் திறமையைத் தமிழ் படைப்புலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அரவிந்த்

© TamilOnline.com