பட்சியொலி
அவர்களுக்குள்ளும் இருந்தன
உயர்வு தாழ்வுகள்
வலிமையில் வண்ணத்தில்.
அவர்களுக்கென்றும் இருந்தன
தனித் தனி ராஜ்யங்கள்
மலைகளில் வனங்களில்.

வானம் வசப்பட்டென்ன
கூடமைக்கக் கிளையில்லை இன்று.

சுயமிழந்து அகதிகளாய்
நகரங்களில் அடைக்கலமாகி
அலகுக்கு அகப்படுகிறவற்றை
கொத்திக் கொத்தி
உயிர் வளர்க்கும் இவர்கள்
ஒருவரையொருவர்
அழைத்துக் கொள்ளும் குரலில்
இல்லவே இல்லை
அந்நாளைய கம்பீரமும்
சிலிர்ப்பைத் தந்த குதூகலமும்.

படம், கவிதை: ராமலக்ஷ்மி

© TamilOnline.com