வி.எஸ். ராகவன்
குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற வி.எஸ்.ராகவன் (90) சென்னையில் காலமானார். காஞ்சிபுரத்தை அடுத்த வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன், சிறுவயதிலேயே நாடக ஆர்வம் கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் இயங்கிய நாடகக்குழுக்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். பணி காரணமாகச் சென்னை வந்த ராகவன், அங்கும் நாடகக் குழுக்களில் இணைந்து குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தார். கே. பாலச்சந்தரின் நட்புமூலம் பல வாய்ப்புகள் வந்தன. 1954ல் 'வைரமாலை' திரைப்படத்தில் அறிமுகமானார். 'காதலிக்க நேரமில்லை', 'நினைவில் நின்றவள்', 'உரிமைக்குரல்', 'சங்கே முழங்கு', 'சவாலே சமாளி' போன்ற படங்கள் முதல் சமீபத்திய 'கலகலப்பு', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்டவற்றிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்ற இவர், தன் இறுதிக்காலம்வரை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். இவர் கடைசியாக நடித்த 'காத்தாடி' திரைப்படம் இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது. கணையப் புற்றுநோய்க்குச் சிகிச்சை பலனின்றி ராகவன் காலமானார். மனைவி தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். ராகவனுக்கு கே.ஆர். சீனிவாசன், கே.ஆர். கிருஷ்ணன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.



© TamilOnline.com