தமிழர்களை இழிவுபடுத்திப் பேசியதில்லை......
யோகம் ஒரு உடற்பயிற்சியோ என்று இன்றைய தினம் ஆராயப்படுகிற ஒரு விஷயமாக இருந்தாலும்கூட என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய அனுபவத்தில் அதை ஒரு உடற்பயிற்சியாக கருதுகிறேன். இன்னும் சொல்லப் போனால் அறிவை வளர்க்கின்ற பயிற்சியாகவும் கருதுகிறேன்.

ஒவ்வொரு நாளும் விடியற்காலை எழுவது, எழுந்தவுடன் எழுதுவது என்னுடைய வழக்கம். அப்படி எழுதுவதற்கு உற்சாகத் தைத் தரக்கூடிய ஒரு அமுதமாக யோகப் பயிற்சி எனக்கு இருக்கிறது. என்னை எல்லோரும் 82 வயது இளைஞன் என்று இன்றைக்கும் சொல்வார்கள். அதை நான் கிண்டலாக எடுத்துக் கொள்வதில்லை. உண்மையிலேயே இந்த யோகப் பயிற்சி யினால் நான் 82 வயது இளைஞனாகத்தான் இப்போது இருக்கிறேன்.

மு. கருணாநிதி, 'கிருஷ்ணமாசார்யா யோக மந்திரம்' அமைப்பின் பயிற்சி விழாவில்...

*****


நான் எல்லா மொழிகளையும் அளவு கடந்து நேசிக்கிறேன். பாரதி, ஜீவா வழி வந்த நான் எக்காலத்திலும் தமிழ் மொழியையோ, தமிழர்களையோ இழிவுபடுத்திப் பேசியதில்லை. எப்போதும் பரந்த நோக்கு கொண்ட தமிழ் சமூகம் மற்ற எல்லா மொழிகளையும் நேசிக்க எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இங்கே ஞானபீட விருது தரப்படுவது போல, தமிழகத்தின் பெரிய செல்வந்தர்கள் சேர்ந்து பிறமொழி இலக்கியவாதிகளுக்கு விருது தரும் நாளை எதிர்பார்க்கிறேன்.

ஜெயகாந்தன், ஞானபீட விருது பெற்றதற்காக டில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில்...

*****


அதிபுத்திசாலிகள் மட்டும்தான் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. கடும் உழைப்பும், ஓரளவு புத்திசாலித்தனமும் இருந்தால் நிச்சயம் தேர்ச்சி பெற முடியும். பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் ஒரே துறை இதுதான்.

டி.என். சேஷன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்...

*****


பண்பில்லாத கல்விமுறையால் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கிறது. தற்போது சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் படித்தவர்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். இதைத் தவிர்க்க கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்றுத்தர வேண்டும்.

கல்வியானது மாணவர்களிடம் மறைந் திருக்கும் திறமையை வெளிக்கொணர வேண்டும். அதை நாட்டு முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டும். நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்கள் கல்வி மற்றும் மேம்பாடு அவசிய மானது. ஆண்களைவிடப் பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். விமானப்படை, காவல்துறை, அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர். கல்பனா சாவ்லா, சானியா மிர்சா போன்ற பெண்கள் ஆண்களைவிடச் சிறப்பாகத் தங்கள் துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.

சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழக ஆளுநர், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

*****


உலகமயமாக்கலில் இந்தியா மட்டும் தனிமைப்பட்டு இருப்பது சாத்தியமல்ல. அதன் மூலம் கிடைக்கும் பலனை அனுப விக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு பத்திரமான வர்த்தகத்தைத் தனித்து மேற்கொள்வது சாத்தியமல்ல.

தற்போதைய சூழலில் உலகவர்த்தகத்துக்கு எல்லையே கிடையாது. எல்லைகளைக் கடந்து விரிந்துள்ள தாராளமயத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இந்நிலையில் இந்தியா மட்டும் பாதுகாப்பான வர்த்தக நடைமுறைகளைக் கடைபிடிக்க முடியாது.

அறிவு, அறிவுசார்ந்த தகவல் தொடர்புகள் எப்படி எல்லைகளைக் கடந்து பரவுகிறதோ அதைப்போல உலகெங்கும் பரவி வரும் தாராளமய வர்த்தகத்தைக் கண்டு இந்தியா பயப்பபடத் தேவையில்லை.

ப.சிதம்பரம், மத்திய நிதியமைச்சர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.எஸ். ராகவன் எழுதிய நூல்களை வெளியிட்டுப் பேசுகையில்...

*****


பெரும்பாலான மாணவர்கள் கல்வியை முடித்த பிறகு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதில்லை. மாணவர்கள் ஆராய்ச்சி வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத் துடன் ஈடுபட்டால்தான் கல்வியும், நாடும் வளரமுடியும்.

ஜப்பானில் தொழில்துறையில் உள்ளவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடு கின்றனர். இங்கு அவ்வாறு செயல் படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய வசதி மற்றும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டால் 2020-ம் ஆண்டுக்குள் உலகில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக நம் நாடு முன்னேறிவிடும் என்பது உறுதி.

டாக்டர் டி. விஸ்வநாதன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர், செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி வேதியியல் பொறியியல் துறை சார்பாக நடைபெற்ற சர்வதேசத் தொழில்நுட்பக் கருத்தரங்கில் பேசியது...

*****


சினிமாவிலே பல வெற்றி, தோல்விகளைப் பார்த்துவிட்டேன். அதனால் எனக்குத் தோல்வி ஏற்பட்டாலும்கூட எந்தத் தொய்வும் ஏற்படாது. என்னைப் பொறுத்தவரைக்கும் நல்லது நடந்தால், வெற்றி கிடைத்தால் அது எனக்கு மட்டும் அல்ல. எங்கள் கட்சியில் இருக்கிற எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் தீயது நடந்தாலோ, தோல்வியாக அமைந்தாலோ அது என்னை மட்டும் சேர்ந்தது. அந்த மனப்பக்குவத்தோடுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன். எங்கள் கட்சியின் வேகம் போகப்போக உங்களுக்குப் புரியும்.

நடிகர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர், பத்திரிகைப் பேட்டி ஒன்றில்...

தொகுப்பு : கேடிஸ்ரீ

© TamilOnline.com