சோர்வு தரும் சோகை
ரத்த அணுக்கள் மூன்று வகைப்படும். அவை சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டணுக்கள் ஆகும். இவற்றில் சிவப்பணுக்களின் அளவு குறைந்தால் அதை ரத்தசோகை (Anemia) என்பர். ரத்தசோகையைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

ரத்தச் சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் (Bone marrow) உருவாகின்றன. இதற்குப் போதிய அளவு இரும்புச்சத்து, வைடமின் B12 ஆகியவை தேவை. சிவப்பணுக்கள் 120 நாட்களுக்கு இருக்கும். அதற்குபிறகு ஆயுள்காலம் முடிந்துவிடும். இவை தினமும் உருவாக்கப்படுவதால், பழையன கழிதலும், புதியன புகுதலும் நடந்தபடி இருக்கும். இதன் அளவை ரத்தப் பரிசோதனையில் hemoglobin மற்றும் hematocrit என்ற அளவில் கணிப்பர். இவற்றின் அளவு பெண்களுக்கு சற்றுக் குறைவாகவும் ஆண்களுக்கு அதிகமாகவும் இருக்கும். மாதாவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு அதிகமானால் இந்த அளவுகள் குறையலாம்.

ஹீமோகுளோபின் அளவு பெண்களுக்கு 12-15 வரையும், ஆண்களுக்கு 14-17 வரையும் இருக்கவேண்டும்.

ரத்தசோகையின் அறிகுறிகள்
* சோர்வு
* வேலை செய்யமுடியாமல் களைப்பு
* உடற்பயிற்சி செய்யமுடியாமல் உடல்வலி
* நாக்கு சுவை வேறுபடுதல். சாம்பல், விபூதி, சாக்குக்கட்டி போன்றவை உண்ண விருப்பம் (Pica)
* மார்பு படபடத்தல்
* மூட்டுவலி
* தலைசுற்றல்
* மார்புவலி, மூச்சுவாங்குதல், மயக்கம்

இதைத் தவிர ரத்தசோகை ஏற்படக் காரணங்களான உதிரப்போக்கு அதிகரித்தல், அல்லது ஆசனவாயின் வழியே உதிரம் கசிதல், வாந்தியில் ரத்தம் வருதல் போன்றவை இருந்தாலும் மருத்துவரை அணுகவேண்டும்.

இரும்புச்சத்தும் ரத்தசோகையும்
ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருந்தால், ஹீமோகுளோபின் அளவும் குறைந்துவிடும். இரும்புச்சத்து உணவிலிருந்து உறிஞ்சப்பெற்று, ரத்தத்தில் ferritin என்பதாகச் சேமிக்கப்படும். பெண்களுக்கு மாதந்தோறும்ம் ஏற்படும் உதிரப்போக்கின்பின், இந்தச் சேமிப்புவங்கியில் இருந்து இரும்புச்சத்து எடுக்கப்பட்டு புதிய சிவப்பணுக்கள் உருவாகும். அதனால் இரும்புச்சத்தின் அளவோடு Ferritin அளவும் பரிசோதித்துக் கொள்வதால் எவ்வளவு இரும்புச்சத்து கையிருப்பிலுள்ளது என்பதை அறியலாம்.

இரும்புச்சத்து குறைவாக இருந்தால் சிவப்பணுக்கள் சிறியவையாக இருக்கும். போதுமான அளவு இரும்புச்சத்தை உணவிலிருந்து பெறாதவர்களிடமும், அதிக ரத்தப்போக்கு உடையவர்களிடமும் ரத்தசோகை அதிகமாகக் காணப்படும். குறிப்பாக, சைவ உணவு உண்ணும் பெண்களிடம் இது காணப்படலாம்.

இரும்புசத்துக் குறைவால் ஏற்படும் ரத்தசோகைக்குத் தீர்வுகள்
உணவின் மூலம்: மாமிசம், மீன்கள், கோழியிறைச்சி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவுகளில் குறைவாக உள்ளது. கீரைகள், பச்சைக் காய்கறிகள், பீன்ஸ் வகைகள், திராட்சை, பேரீச்சம்பழம், பட்டாணி போன்றவற்றில் காணப்படுகிறது. இதைத்தவிர இரும்புச்சத்து சேர்த்த சீரியல், பாஸ்தா ரொட்டிகளிலும் கிடைக்கும். இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைடமின் C தேவைப்படும். தக்காளி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களிலும், பிராகலி, கீரை வகைகளிலும் இந்த வைடமின் அதிகமாக உள்ளது.

மாத்திரை வழியே: உணவில் இரும்புச்சத்து குறைவாகப் பெறுவர்களுக்கும், ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கும் இரும்பு மாத்திரைகளும், டானிக்குகளும் வழங்கப்படும். இவற்றை வெறும்வயிற்றில் உட்கொண்டால் சத்து நன்றாக உறிஞ்சப்படும். ஆனால் வயிற்று உபாதை வரலாம். அதனால் உணவோடு உட்கொள்ளலாம். இரும்புச்சத்து மாத்திரை உட்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படலாம். அதற்கு மருந்து தேவைப்படும். இதை தினமும் இரண்டு அல்லது மூன்றுமுறை எடுத்துக் கொண்டால் இரண்டு, மூன்று மாதத்தில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இது ஒரேநாளில் குணமாகும் நோயல்ல. அடிப்படைக் காரணமான உதிரப்போக்கைக் குறைக்க வேறு வழிகளையும் கையாள வேண்டிவரும்.

மாத்திரையாக இதை எடுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு மாதம் ஒருமுறை ரத்தநாளம் (Intravenous Iron) வழியாக இரும்புச் சத்தை ஏற்றமுடியும். இதற்கு மருத்துவமனையின் புறநோயாளிப் பகுதியில் 1-2 மணி நேரம் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டி வரும். முதல்முறை கொடுக்கும்போது இதற்கு ஒவ்வாமை இருக்கிறதா என்று கணிக்க வேண்டிவரும். ஆறுமாதங்கள் எடுத்துக்கொண்ட பின், மேலும் இரும்புச்சத்துள்ள உணவுப் பொருட்களையும் விடாமல் உண்டால் இரும்புச்சத்தின் அளவும், சேமிப்பு அளவும் அதிகரிக்கும். இதன்மூலம் சிவப்பணுக்களின் அளவு அதிகரித்துச் சோர்வு நீங்கும்.

ரத்தம் செலுத்துதல்
உடலில் ஹீமோகுளோபின் அளவு 8-க்குக் குறைவாக இருந்தால் இதயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது இரும்புச்சத்து குறைவான ரத்தசோகையிலும் காணப்படலாம். இவர்களுக்கு மருத்துவமனையில் சேர்த்து ரத்தம் செலுத்தவேண்டும். வேறு சில காரணங்களாலும் இரும்புச்சத்து குறைவினாலாகும் ரத்தசோகை ஏற்படும். மாதவிடாய் நின்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், ஆண்களுக்கும் ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் அவர்களுக்கு குடல்புண் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். குழாய்மூலம் வயிறு, பெருங்குடல் பகுதிகளைப் பரிசோதிப்பர். இதை endoscopy அல்லது colonoscopy என்று சொல்வர்.

மேலும் விவரங்களுக்குப் பார்க்க: www.mayoclinic.org

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com