'பத்மஸ்ரீ' பெறுகிறார் ஜார்ஜ் ஹார்ட்
2015ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலை இந்தியா அறிவித்தபோது அதிலோர் இன்ப அதிர்ச்சி! பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் தமிழிருக்கை பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற ஜார்ஜ் ஹார்ட் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்ததுதான் அது. பேரா. ஜார்ஜ் ஹார்ட் தமிழ்மொழி எவ்வாறு செம்மொழி என்பதைக் காரணங்கள் காட்டி எழுதிய கட்டுரை உலகமுழுவதும் பரவியது. இந்திய அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்க ஒரு காரணியாக இருந்தது.

"சனிக்கிழமை காலையுணவு அருந்திகொண்டிருந்தபோது அழைப்பு வந்தது. வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தில் இருந்து கலைச்செயலாளர் அழைத்தார். "இந்திய அரசு உங்களுக்கு பத்மஸ்ரீ வழங்குகிறது, அதை ஏற்றுக்கொள்வீர்களா? இப்பொழுதே பதில் தேவை. நாளை நாங்கள் பட்டியலை அறிவிக்க இருக்கிறோம்" என்று கேட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சி. என்ன பதில் சொன்னேன் என்று நினைவில்லை. சரி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்" என்று சொல்லிச் சிரித்தார். பிறகு சற்றே சீரியஸாக, "தமிழ்ப்பணி செய்வதே ஆனந்தம்தான். விருதுகள் எல்லாம் பின்னால் வருபவை" என்கிறார்.

"ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் இயற்பியல், வேதியியல் படித்தபோது ஒருமுறை நண்பருடன் சமஸ்கிருத வகுப்புக்குச் சென்றேன். அப்போது தமிழ் என்றாலே என்னவென்று எனக்குத் தெரியாது. அந்த வகுப்பு சமஸ்கிருத மொழியின்மேல் பெரிய ஈடுபாட்டை ஏற்படுத்தியது. V. ராகவன், T.R.V. மூர்த்தி போன்ற பேராசிரியர்களுடன் ஏற்பட்ட தொடர்பு எனக்குத் தமிழில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அது எந்த மொழியுடனும் தொடர்பின்றி தனித்துவம் பெற்றிருப்பதைப் பார்த்து அதை மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. ஜோதிமுத்துவின் அறிமுகத் தமிழ்ப் புத்தகத்தை வைத்துக்கொண்டு நானே தமிழ் கற்க ஆரம்பித்தேன். ஆனால் தமிழ் எப்படி ஒலிக்கும் என்று கேட்டதில்லை. மலேசியாவிலிருந்து வந்த தமிழ் நண்பர் ஒருவர் நான் தமிழ் படிப்பதை அறிந்து "உனக்கு எவ்வளவு தமிழ் தெரியும்?" என்று கேட்டார். அப்போதுதான் "ஓ! தமிழ் இப்படித்தான் ஒலிக்குமா?" என்று அறிந்து கொண்டேன்" என்கிறார். A.K. ராமானுஜம் போன்ற சிறந்த பேராசிரியர்களிடம் படித்தது பல மொழிகளையும் ஆழ்ந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதாம்.

மனைவியாகக் கௌசல்யா ஹார்ட் அமைந்ததும் தனக்குக் கிடைத்த பாக்கியம் என்கிறார். "ஒரு மொழியைப் படித்தால் போதாது. அத்தோடு வாழவேண்டும். அந்த கலாசாரத்தைக் கற்கவேண்டும். அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி" என்று கூறுகிறார்.

பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் 'அகநானூறு' பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். "பல மொழிபெயர்ப்புகள் இருந்தாலும் அவை இந்தியர்களுக்கு ஏற்றவகையில்தான் இருக்கின்றன. மேனாட்டவர் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை. அந்த நோக்கோடு அதை மொழிபெயர்க்கிறேன்" என்கிறார்.

பேரா. ஹார்ட் வளைகுடாப்பகுதி தமிழ்மன்றத்தின் துவக்கக்குழுவில் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பெர்க்கலி தமிழ்த்துறை தொடர்ந்து பல ஆண்டுகளாக விரிகுடாப்பகுதித் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்திருப்பதில் அவருக்குப் பெருமை. பெர்க்கலியில் தமிழிருக்கை நிறுவத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டபோது அந்த நெருக்கம் அதிகரித்தது. "இந்தியாவில் தமிழ் மொழியின் பெருமை வடமாநிலங்களில் வாழ்பவர்களுக்குத் தெரியவில்லை. அதை எடுத்துச்செல்வது தமிழர்களின் கடமை. இது கடினமான வேலை. ஆயினும் எப்படி இதை செயல்படுத்தலாம் என்று சிந்திக்கவேண்டும்" என்கிறார்.

தமிழர்கள் அனைவரும் தமிழின் சில இலக்கியங்களையாவது படிக்க வேண்டும். நண்பர்கள் இணைந்து படித்தால் சுவையாக இருக்கும். மகிழ்ச்சியான இந்தச் சமயத்தில் தமிழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் செய்தி இதுதான்" என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறார் பேரா. ஹார்ட்.

இவரது தென்றல் நேர்காணல்கள்:
மார்ச் 2002, ஆகஸ்டு 2012

சிவா சேஷப்பன்,
ஃப்ரீமான்ட்

*****


"என் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்!"
பத்மஸ்ரீ விருதுபெற்ற பேரா. ஜார்ஜ் ஹார்ட் குறித்து அவரது மாணவர்கள் பெருமிதத்தோடு நினைவுகூர்கிறார்கள்:

Click Here Enlargeஆன் மோனியஸ், (இந்திய மதங்களின் வரலாற்றாய்வாளர், நூலாசிரியர்)

"ஜார்ஜ் ஹார்ட் எனது முதல் தமிழாசான். வகுப்பில் பலருக்கும் கொஞ்சம் சமஸ்கிருத அறிவு இருந்தது. தமிழ் இலக்கியத்தையும் வடமொழி இலக்கிய மரபோடு ஒப்பிட்டு அவர் கூறியன மிகவும் சுவையானவை மட்டுமல்ல, எனது ஆய்வுக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது."

###


Click Here Enlargeபேரா. எலெய்ன் க்ரேடக், (தென்மேற்குப் பல்கலை, ஆஸ்டின், டெக்சஸ்.)

"பெர்க்கலி பல்கலையில் ஜார்ஜ் ஹார்ட்டின் மாணவியாக இருந்தபோது எனக்குத் தமிழ்க்கவிதைமேல் காதல் ஏற்பட்டது. தமிழ்க் கலாசாரத்தைப்பற்றிய அவரது ஆழ்ந்த புரிதலும், அற்புதமான மொழிபெயர்ப்புகளும் எங்களில் பலபேருக்குத் தமிழாய்வில் ஈடுபட உற்சாகம் தந்தன."

###


Click Here Enlargeகீதா முரளி, (Chief Development Officer, RoomToRead.org)

"புள்ளிவிவரயியலில் பயிற்சி பெற்றிருந்த எனக்குத் தமிழ் இலக்கியத்தின் அழகு மற்றும் பாரம்பரியம் பற்றி எனது கண்களைத் திறந்தவர் ஜார்ஜ் ஹார்ட். அவர் ஓர் அறிஞர். முக்கியமாக, அவர் ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்நாள் நண்பர்."

###


Click Here Enlargeசுமதி ராமஸ்வாமி, பேராசிரியர், (வரலாறு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள், டியூக் பல்கலை.)

"நான் டெல்லியில் மாணவியாக இருந்தபோது ஜார்ஜ் ஹார்ட் மொழிபெயர்த்த சங்கப்பாடல் தொகுப்பைப் படித்தேன். அமெரிக்காவுக்குப் போய் அவரிடம் பயிலுமளவுக்கு அது என்னை மாற்றிவிட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகும், வகுப்பிலும் பெர்க்கலியின் காஃபி ஹவுஸ்களிலும் அவருடன் நடத்திய பளிச்சிடும் விவாதங்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த அரிய விருதுக்கு வாழ்த்துக்கள், ஜார்ஜ்!"

###


Click Here EnlargeDr. விஜயா நாகராஜன், இணைப்பேராசிரியர், (சமயக்கல்வித் துறை, சான் ஃபிரான்சிஸ்கோ பல்கலை.)

"நான் முதன்முதலில் 1981ம் ஆண்டு ஜனவரி முதல்நாளன்று ஜார்ஜ் மற்றும் கௌசல்யா ஹார்ட் தம்பதியரைச் சந்தித்தேன். அப்போதுமுதலே அவர்கள் எனக்கு மிகநெருங்கிய நண்பர்களாகவும் ஆலோசகர்களாகவும் இருந்து வருகின்றனர். தமிழில் 'பொதுமொழி', 'கோலம்' ஆகியவை குறித்த எனது ஆய்வுகளில் இவ்விருவரும் எனக்குக் கொடுத்துள்ள குறிப்புகள் விலைமதிப்பற்றவை."

###


Click Here Enlargeபேரா. கிரண் கேசவமூர்த்தி, கலாசார ஆய்வுத்துறை, (சமூக அறிவியல் ஆய்வுமையம், கொல்கத்தா.)

"தமிழ் தொடங்கி சமஸ்கிருதம், ரஷ்யன் ஆகிய மொழிகளின் முன்நவீன, நவீன இலக்கியங்கள் குறித்த விரிவான அறிவுகொண்டோரில் ஜார்ஜ் ஹார்ட் போன்றோரைக் காண்பது அரிது. கம்பராமாயணம் மற்றும் சங்கப்பாடல் மரபுகளில் ஜார்ஜ் ஹார்ட் கொண்டிருக்கும் அறிவு என்னை வியக்கவைத்தது. அவரது புறநானூறு மொழிபெயர்ப்பு அவருடைய வாசிப்புத் திறனுக்கும், இலக்கிய நேசத்துக்கும் ஒரு சான்று."

###


Click Here Enlargeகீதா வி. பய், துணைப்பேராசிரியர், (வரலாற்றுத் துறை, விஸ்கான்சின் பல்கலை)

"சிறுவயதில் எனது கேரளப் பெற்றோர் இந்திய கலாசார நிகழ்வுகளில் ஆர்வம் கொண்டிருந்தனர். அப்போது விரிகுடாப்பகுதியில் இவை அதிகம் இருக்கவில்லை. எங்கள் தாய்மொழி தமிழல்ல என்றபோதும், ஜார்ஜ் மற்றும் கௌசல்யா ஹார்ட் பெர்க்கலி வளாகத்தில் ஒழுங்குசெய்த தமிழ் சினிமாவைப் பார்ப்போம். ஒருநாள் இந்த தமிழ்ப் பேரறிஞர்களிடம் நான் தமிழ் கற்பேன் என்று அப்போது நினைத்ததில்லை. இந்திய மொழிகளின் இலக்கிய வளத்தை அவர்கள்மூலம் நான் அறிந்தேன். தமிழிலக்கியப் புலமைக்குப் பேரா. ஜார்ஜ் ஹார்ட் கௌரவிக்கப்படுகிறார்; மாணவர்களை ஊக்குவிப்பதில், கற்பிப்பதில், கற்பதைச் சுகமானதாக்குவதில் அவர் கொண்டுள்ள திறமைக்காக அவர் கௌரவிக்கப்பட வேண்டும்."

###


Click Here Enlargeஅர்ச்சனா வெங்கடேசன், இணைப்பேராசிரியர், (கலிஃபோர்னியா பல்கலை, டேவிஸ்).

"பற்பல ஆண்டுகளுக்கு முன்னால், பேரா. ஹார்ட் அகநானூற்றுப் பாடல்களைக் கூறக் கேட்டபோது எனக்குத் தமிழிலக்கியத்தின் மேன்மை புலப்பட்டது. என் மொழியான தமிழைக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவரது பரிவு, ஆழ்ந்த அறிவுடன் கூடிய மென்மை, தமது மாணவர்களிடம் அவர் செலுத்திய கவனம் ஆகியவை இன்னும் எனக்கு உள்ளுந்துதலாக இருக்கின்றன. அவரிடம் படிக்கக் கிடைத்தது பெரும்பேறு."

###


Click Here Enlargeப்ரீதா மணி, துணைப்பேராசிரியர் (ரட்கர்ஸ் பல்கலை, நியூ பிரன்ஸ்விக், நியூ ஜெர்சி.)

"அமெரிக்காவில் தமிழ் பயில ஜார்ஜ் ஹார்ட்டின் முயற்சிகள் இல்லையென்றால் என்னால் நவீன தமிழிலக்கியத்தில் பட்டக்கல்வி பெற்றிருக்க முடியாது. தமிழிலக்கியத்தின் ஆழ அகலங்களை அவர் எனக்குக் காண்பித்ததோடு, மொழிபெயர்ப்பிலும், புலமையிலும் தமிழின் ஒலிவளங்களை எவ்வாறு செழுமையாகக் கையாள்வதென அறிவதில் அவர் உதவினார்."

###

© TamilOnline.com