பாஸ்டன்: ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
2014 நவம்பர் 29, 30 தேதிகளில், பாஸ்டன் அருகே உள்ள நேஷுவாவிலுள்ள நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில் உலக அமைதிக்காகத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குமேல் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம அகண்ட பாராயணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது. மகாபாரத யுத்தத்தின் கடைசியில் குருக்ஷேத்திரத்தில் பீஷ்ம பிதாமகர் அம்புப் படுக்கையில் உயிர்விடும் தருணத்திற்காகக் காத்திருக்கையில், பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் அவரை அணுகி "உலகத்தின் ஒரே கடவுள் யார்? மிக உயர்ந்த நற்கதி எது? யாரைத் துதித்து பூஜிப்பதால் மனிதன் உயர்ந்த நன்மைகளைப் பெறுகிறான்? அறநெறிகளில் எல்லாம் எது மிக உயர்ந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எதை ஜபம் செய்வதால் மனிதன் பிறப்பு இறப்பு ஆகிற சம்சாரத்திலிருந்து விடுபடுகிறான்?" என்று கேட்கிறார்.
அதற்கு அவர், "பகவான் மகாவிஷ்ணு தேவர்கள், மானிடர்கள் எல்லாரிலும் உயர்ந்தவர். முதலும் முடிவும் இல்லாதவர். உலகங்களுக்கெல்லாம் தலைவர். தேவர்களுக்கெல்லாம் அதிபதி. அவரை ஆயிரம் நாமங்களால் துதித்துக் கொண்டும், எப்பொழுதும் தியானம் செய்துகொண்டும் இருக்க வேண்டும். உலகங்களை எல்லாம் ஆளுபவரும், உலகங்களுக்கு எல்லாம் நாயகனான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஆயிரம் பெயர்களையும் பக்தியுடன் சொன்னால், அம்மந்திரம் நம்முடைய பாவங்களையும் பயத்தையும் போக்கிவிடும். அந்தப் பெயர்களைச் சொல்கிறேன், கேள்" என்று தொடங்கி பகவானின் ஆயிரம் திருநாமங்களை பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு அருளினராம்.

நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயம் பற்றி மேலும் அறிய: www.hindutemplenh.org

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
பாஸ்டன், மாசசூசட்ஸ்

© TamilOnline.com