எழுத்தும் வாழ்வும் - சுந்தர ராமசாமி (1931 - 2005)
சுந்தர ராமசாமியின் மறைவு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் 1:35 மணிக்கு சாண்ட்டா க்ரூஸ், கலி·போர்னியாவில் நிகழ்ந்தது. மறைவுக்கு முன் இரண்டு வாரம் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரலில் Pulmonary Fibrosis என்ற நோயால் அவர் மரணம் நிகழ்ந்தது. தமிழ் சமூகத்தில் ஒரு எழுத்தாளனின் மரணம் பொதுவாக அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை.

எழுத்துக்கும் தமிழ்வாழ்வுக்கும் உள்ள இடைவெளி அப்படி. வணிகப்பத்திரிக்கைகள் கேளிக்கை, அரசியல் ஆரவாரங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இலக்கியத்திற்கும், கலாச்சாரத்தை முன்வைத்து நிகழும் உரையாடல்களுக்கும் அளிப்பதில்லை. இது பழகிப்போன விஷயம் தான். இருந்தும் சு.ராவின் மறைவு எல்லா ஊடகங்களாலும் வெகுவாக கவனிக்கப்பட்டது.

சு.ரா. 1931ஆம் ஆண்டில் நாகர்கோவில் அருகே பிறந்தார். புதுமைப்பித்தனின் மகாமசானம் சிறுகதையால் வெகுவாக ஈர்க்கப்பட்டு தமிழ் இலக்கியப் பணியை மேற்கொள்ளத் துவங்கினார். தகழி சிவசங்கரன் பிள்ளையின் மலையாள நாவலான 'தோட்டியின் மகன்' நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். அதற்குப்பிறகு சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் (பசுவய்யா எனும் பெயரில் எழுதியது), நாவல்கள், மொழிபெயர்ப்பு என அவருடைய எழுத்துப் பணி மறைவு வரை தொடர்ந்தது. காலச்சுவடு என்னும் இலக்கியப் பத்திரிக்கையை தொடங்கி எட்டு இதழ்கள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். கவிதைக்கான குமரன் ஆசான் விருது, கனடிய இலக்கிய தோட்டமும் டொரொன்டோ பல்கலையும் அளித்த இயல் விருது, மற்றும் கதா அமைப்பு அளித்த சூடாமணி விருது
ஆகியவை இவருடைய இலக்கிய வாழ்வில் பெற்ற விருதுகள்.

ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு cult novel ஆகக் கருதப்படுவது. கருத்துலகத்தோடு தனக்கிருக்கும் உறவை மிகுந்த படைப்பூக்கத்தோடும் அங்கதம் தெறிக்கவும் எழுதப்பட்ட நாவல். இன்னும் கூட வாசகர்களாலும் இலக்கியவாதிகளாலும் இந்த நாவலின் பல வாக்கியங்கள் வெவ்வேறு விவாதங்களில் மேற்கோள் காட்டப்படுகின்றன. இதைவிடவும் மிகவும் நுட்பமான தளத்தில் எழுதப்பட்ட "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" நாவலில் குழந்தைகளின் உலகம் மிகச்சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ரத்னாபாயின் ஆங்கிலம், சீதை மார்க் சீயக்காய்த்தூள், பக்கத்தில் வரும் அப்பா, அழைப்பு, பல்லக்குத் தூக்கிகள், காகங்கள், விகாசம், கதவுகளும் ஜன்னல்களும், மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் சில. கூர்மையான கேலியும், தமிழ் வாழ்வின் மீதான விமர்சனங்களும், மனிதர்களின் மீதான அக்கறையும் அவருடைய எழுத்தில் சிறப்பாக பதிந்திருப்பவை.

உன்னதம் தமிழ்வாழ்வை சேரக்கூடியதே என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் பழம்பெருமையையும் கற்பனைப் பூச்சுகளையும் மட்டுமே முக்கியப்படுத்தும், சக மனிதனுக்கு சுதந்திரத்தை மறுத்து அறிவுத் தளத்தில் சுய சிந்தனையைப் பெருக்காத தமிழ்வாழ்வு மீது அவர் கடினமான விமரிசனங்களை கொண்டிருந்தார். திறந்த மனதையும், சுயமாகச் சிந்திக்கும் மனதையும் கொண்டவர் களால் அவருடைய எழுத்துடன் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்த முடியும். அவரை மறுத்து புதிய சிந்தனைகளை வைப்பது அல்லது அவர் சிந்தனைகளை மேல் எடுத்துச்செல்லும் பரிசீலனைகளைப் புரிவது - இவை தான் ஒரு எழுத்தாளனுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.

கோகுலக்கண்ணன்

© TamilOnline.com