சிகாகோ: தங்கமுருகன் விழா 2014
டிசம்பர் 13, 2014 அன்று, சிகாகோவின் லெமாண்ட் முருகனுக்கு 'தங்கமுருகன் விழா' எடுத்தனர். அவ்வமயம், முருகனருள் பெற்ற பாம்பன் சுவாமிகளின் வரலாற்றை நினைவுகூர்ந்தனர். காலை ஏழுமணி அளவில் அபிஷேகம், அலங்காரம் செய்து உற்சவமூர்த்தியைப் பல்லக்கில் தாங்கிக் கொணர்ந்து, திருப்புகழ் பாடி, காவடி எடுத்தபின் பல்சுவை நிகழ்ச்சிகள் துவங்கின.

சிறுவர், சிறுமியர், ஆடவர், பெண்டிர் எனச் சுமார் 350 பேர் ஆடல், பாடல், சொற்பொழிவு, கருவியிசை, கருத்துரையாடல், வினா-விடை எனப் பல்வேறு கலைவடிவங்களில் முருகநேயத்தை வெளிக்காட்டினர். சிகாகோவின் பெற்றோர் மற்றும் இசை, நாட்டியப் பள்ளி ஆசிரியர்களும் இப்பெருவிழாவில் குழந்தைகளை மேடையேற்றி மகிழ்ந்தனர்.

இந்த ஆண்டு 'மயில்வாகனர்' என்ற தலைப்பில், இறைவன் படைப்பில் காகம் முதல் யானைவரை எல்லா இனங்களும் சிறப்பு மிக்கவை என்னும் கருத்தைப் பல்வேறு தெய்வங்களின் வாகனங்களாக விளங்கும் மிருகம், பறவை போல் வேடமிட்டு, முருகனுடன் உரையாடுவதாக நடித்துக் காட்டியது பரவசப்படுத்தியது. மற்றொரு நிகழ்ச்சியில் குழந்தைகள் ஸ்ரீ பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறினார்கள்.

சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய அஷ்டகம், கந்தர் அநுபூதி, சண்முக கவசம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பதின்மூன்று மணிநேரம் நடத்தினார்கள். விழாவின் உச்சக்கட்டமாக வரும் 'குட்டி முருகன்' அணிவகுப்பில் இருபத்தைந்து குழந்தைகள் வேடமிட்டு வர, மேடை நிரம்பிக் காட்சியளித்தது. விழாவின் உயிர்நாடியான திரு. கோபாலகிருஷ்ணன், ராமசுவாமி மற்றும் தொண்டர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சோமு திரு,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com