ஜனவரி 2015: வாசகர் கடிதம்
மாத மொருமுறை மெல்லடி எடுத்து
சீதக் கனிவுடன் செய்திகள் தாங்கி
ஏதமில் எழிலுடன் இலக்கிய ரசனை
நீதமாய் நல்கிடும் தென்றலே வருக!

Dr. சக்ரபாணி சேதுமாதவன்,
கிங்ஸ்ட்ரீ, தென் கரோலினா

*****


பதினைந்து வயதை எட்டிய இளந்தென்றலுக்கு மனமுவந்த ஆசிகள். மேலும் செழிப்பாக வளர வாழ்த்துக்கள்.

கமலா சுந்தர்,
ப்ரின்ஸ்டன் ஜங்ஷன், நியூ ஜெர்சி.

*****


உன்னதமான, மிகப் பழமையான தமிழ் மொழியை ஆர்ப்பாட்டமில்லாமல், அழகாக உலகமுழுதும் பரப்பிக் கொண்டிருக்கும் எங்கள் இளவயதுத் தென்றலுக்கு 15ம் ஆண்டின் பிறந்தநாள் வாழ்த்து. அற்புதமாகச் செழித்தோங்கி வளர வாழ்த்துக்கள். வெளியுலகிற்கு அதிகம் தெரியாத, தமிழ் மொழிக்காகப் பாடுபட்டவர்களை, தொண்டு செய்தவர்களை, கதாசிரியர்களை, கவிஞர்களை, ஆர்வலர்களை, ஆய்வாளர்களை, சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் தங்கள் பணி சாதாரணமானதல்ல. அதனைச் செய்யும் தென்றலைக் கண்டு வியப்புறுகிறோம்.

தென்றலின் அனைத்துப் பகுதிகளும் தரம் நிறைந்தவையாக உள்ளன. தங்கள் குறிக்கோளை மறவாமல், தெளிவாக, கவனமாகப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

*****


தென்றல் பதினான்கு ஆண்டுகள் கடந்து புகுந்த திசையெல்லாம் பண்புமணம் வீசி, வாசகர்கள் உள்ளத்தில் இடம் பிடித்திருப்பதில் வியப்பில்லை. கடந்த ஏழுமாத காலமாகப் படித்துவரும் எனக்கே தென்றல் மணம் அருமையாக இருக்கும்போது, பல ஆண்டுகளாகப் படித்துவரும் வாசகர்களுக்கு எப்படியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆசிரியர் குழுவின் சிறந்த பணி, விளம்பரதாரர் பங்கு, கதை, கட்டுரை, எல்லாவற்றிற்கும் மேலாக நேர்காணல் பகுதி உங்கள் இதழின் வெற்றிக்குக் காரணம். தென்றல் பல வருடங்களைக் கண்டு மகிழ்ந்திட நான் பிரார்த்திக்கிறேன்.

கே. ராகவன்,
பெங்களூரு, இந்தியா

*****


தீரர் சத்தியமூர்த்தி பிறந்த புதுக்கோட்டைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் கடம், கஞ்சிரா, மிருதங்கம் என மூன்றிலும் முதன்மை பெற்று விளங்கிய லயமேதை தக்ஷிணாமூர்த்திப்பிள்ளை பற்றிய கட்டுரையை வெளியிட்ட தென்றலுக்குப் பாராட்டு. மாட்டுக் கொட்டகையைவிடச் சற்றே பெரிய இடத்தில் வசித்துக்கொண்டு தான் ஈட்டிய பணத்தை ஆலயப்பணிக்கும், இதர தர்ம காரியங்களுக்கும் அர்ப்பணித்த மாமேதை. காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு பல மேடைகளில் தேசிய முழக்கமிட்டவர். இறுதிவரை கதரை மட்டுமே அணிந்த தியாகச்சுடர். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடத்தில் மட்டுமல்லாது காஞ்சி மகாசுவாமிகளிடமும் அளவற்ற பற்றும் பக்தியும் கொண்டவர் எனத் திலகவதியார் திருவருள் ஆதீன கர்த்தரான சாயிமாதா சிவ பிருந்தாதேவி என்னிடம் கூறியதுண்டு. புதுக்கோட்டை சங்கரமடம் அருகே தஷிணாமூர்த்திப்பிள்ளைக்குத் திருச்சி தாயுமானவன் ஒரு நினைவாலயம் கட்டியுள்ளார். இன்றும் திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் அவரது மிகப்பெரிய உருவப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.

அரிமளம் தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன்

*****


டிசம்பர் மாதத் தென்றலின் மூன்று சிறுகதைகளுமே முத்தானவை. 'காசுமாலை'யின் நாயகி லலிதா நல்ல பண்பாடும் பாரம்பரியமும் உள்ள குடும்பத் தலைவியாகவும், தற்கால நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் யதார்த்தவாதியாகவும் இருக்கிறாள். முடிவில் சுயநலமிக்க இந்த உலகில் பாரம்பரிய சொத்தான நூறு சவரன் காசுமாலை அந்திம காலத்தில் தங்களைப் பார்த்துக் கொள்பவருக்குச் சேரவேண்டுமென்று எழுதிவைத்த உயில் அவளது அறிவுக்கூர்மைக்கு அடையாளம். அகிலாண்டேசுவரிக்குப் போய்ச்சேரும் காசுமாலை கதையில் மென்மையானதோர் ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது.

ஏசுபெருமானின் ரட்சித்தருளும் பெருமையை விளக்கும் வெரோனிகாள் பாத்திரப்படைப்பு இடம்பெறும் 'மீட்சி' டிசம்பர் மாதத்திற்குப் பொருத்தமான கதை. மூன்றாவதாக, வயதில் மூத்தவர்களை மரியாதைக்குறைவாகப் பேசி மனதைப் புண்படுத்தும் இன்றைய இளைய தலைமுறைக்கு பாசத்திற்காக ஏங்கும் மூத்தவர்களின் மனநிலையை உளவியல் ரீதியாக அலசிப் பாடம் கற்பிக்கும் கதை 'அப்பா'. 15வது ஆண்டின் முதல் இதழே அமர்க்களமாய்த் தொடங்கியுள்ளது. மேன்மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள். கதாசிரியர்களுக்குப் பாராட்டுக்கள்!

டாக்டர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com