எல்லையை நகர்த்தியவர்
இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய ஐம்பதாண்டு களின் நவீன தமிழிலக்கிய வரலாற்றைத் தமதாக்கிக் கொண்ட படைப்பிலக்கிய ஆசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் சு.ரா.

தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களைத் தாண்டி இக்காலத் தமிழ் ஆக்கங்களின் எல்லையை வெற்றிகரமாகத் தென்மேற்கு திசை நோக்கி நகர்த்தியவர்களில் முதன்மையானவர் சு.ரா. அவரைத் தொடர்ந்தவர்கள்தாம் நகுலன், நீல.பத்மநாபன், மாதவன், நாஞ்சில் நாடன், விசாலம் ராஜு போன்றவர்கள்.

சு.ரா.வின் 'புளியமரத்தின் கதை' தமிழிலக் கியத்தின் பரிமாணம் விரிவாகிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக அறிவுறுத்தியது. கதை மாந்தர்களும் உளவியல் கண்ணோட்டமும் யதார்த்த பாணியில் கதை சொல்லப் பட்ட விதமும் தமிழுக்குப் புதிய வரவுகளாக அமைந்தன. போன நூற்றாண்டின் அறுபதுகள் இவ்வகையில் நவீனத் தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்றே சொல்லவேண்டும்.

சு.ரா. ஒரு மிகச் சிறந்த சிந்தனாவாதி. சிந்திக்கும் திறன் படைத்த இளைஞர்களை ஈர்க்கின்ற பொதுவுடைமை இயக்கத்தை அவர் அக்காலக் கட்டத்தில் சார்ந்திருந்தார் என்பதில் வியப்பதற்கேதுமில்லை. கட்சிச் சார்பு அவர் இலக்கிய ஆளுமையைக் குறுக்கி விடவில்லை. பிறகு அவர் கட்சிக் கோட்பாட்டைத் தாண்டிய ஒரு தனிப்பட்ட அறிவு ஜீவியாக எழுதிய நிலைகளிலும் மார்க்ஸீய தர்க்கத் தாக்கம் அவர் எழுதிய கட்டுரைகளில் புலப்படாம லில்லை. எந்தவிதத்திலும் தம்மை இலக்கிய சமரஸத்துக்கு உட்படுத்திக்கொள்ளாமல், இலக்கியத் தரத்தையே முதன்மையான துலாக்கோலாகக் கொண்டவர் சு.ரா.

அவரது மறைவு தமிழ் இலக்கியத்துக்கு ஈடுசெய்ய இயலாத பெரும் இழப்பு.

பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி

© TamilOnline.com