தெரியுமா?: சான் ஹோசேவில் தமிழ்த் திருவிழா
2015 ஜூலை 3, 4 தேதிகளில் சான் ஹோசேவில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஒரு பிரம்மாண்டமான தமிழர் சங்கமமாக அமையும். விழாவில் முத்தமிழ்ச் சுவையில் துறை வல்லுநர்களால் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தமிழ்த்திரை பிரபலங்களின் பங்களிப்புடன் பேரவையின் 27 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் நடக்கப்போகும் இந்த விழா 80 மணிநேரம் உவகையூட்டும் மாபெரும் கலைவிழாவாக இருக்கும். சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றம் தலைமையேற்று நடத்தும் இந்த விழாவில், சாக்ரமெண்டோ தமிழ் மன்ற உறுப்பினர்களும் பங்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு அறக்கட்டளை (TNF-Tamilnadu Foundation) மற்றும் அமெரிக்கத் தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA-American Tamil Medical Association) போன்ற முக்கியமான அமைப்புகளும் தோள் கொடுக்கின்றன.

விழாவின் கருப்பொருள் 'தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!' என்பதாகும். பிரபல பாடகி சௌம்யா வரதன், பட்டிமன்ற/கவியரங்கக் கவிஞர் சுமதிஸ்ரீ ஆகியோர் இசைத்தமிழையும் இயற்றமிழையும் கொண்டாடுகிறார்கள். கலைக்காவிரி கல்லூரி முதல்வர் முனைவர். மார்கரெட் பாஸ்டின், தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் திரு. தி. உதயசந்திரன் (இ.ஆ.ப.), 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சார்ந்த திரு. சுந்தரராஜன் முதலானோர் சிறப்புரை வழங்க, நடிகை ஏமி ஜாக்சன் தமிழ்த்திரை விரும்பிகளுக்கு உற்சாகமூட்ட வருகிறார். பல முன்னணிக் கலைஞர்கள் மற்றும் தமிழறிஞர்களின் வருகைக்கான பூர்வாங்க வேலைகள் நடந்துவருகின்றன. 'கல்யாண மாலை' நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.

Click Here Enlargeவிழா சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடைபெறுவதால், தொழில்முனைவோருக்கான அரங்கம் (Entrepreneurship Forum) பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்படுகிறது. இரு துணையரங்குகளில் நான்கு முக்கியச் சிறப்பு அழைப்பாளர்களோடு இந்நிகழ்ச்சி நடைபெறும். Best Startup Idea-க்களை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் போட்டியும் உள்ளது. புதுத் தொழில்திட்ட முதலீட்டாளர் (Venture capitalists) நடுவர்களாக அமர்ந்து, பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுப்பர். சுயதொழில் முனைவில் யோசனை/ திட்டமுன்வரைவு உள்ளோர் அதை எவ்வாறு வெற்றிகரமான தொழிலாக எடுத்தச் செல்லலாம் என்பதை Market research, நிதி, திட்டமிடல், சட்டம் எனப் பல பரிமாணங்களில் விளக்கும் வகுப்புகளும் நடக்கும். மாபெரும் நிறுவனங்களில் உயர்பதவியில் இருப்போரும், வெற்றிகரமான தொழில் முனைவோரும், அரசுப் பணியாளர்களும் பல்முனை நோக்கில் கருத்துகள் வழங்குவர். அமெரிக்கத் தமிழ் முன்னோடிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பேரவையின் தமிழ் முன்னோடி விருதும் (Tamil American Pioneer Award) அளிக்கப்படவுள்ளது. ATMA மருத்துவர்களுக்கான தொடர்கல்வி நிகழ்ச்சிகளை (CME- continuing medical education seminars) ஏற்பாடு செய்கிறது.

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை பெரிய வெற்றிப்படைப்பாக அமைத்து வழங்கிய அபிராமி கலைமன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், மற்றும் வேணு சுப்பிரமணியன் ஆகியோர், இம்முறை அவரின் மற்றுமொரு படைப்பாகிய 'சிவகாமியின் சபதம்' நாவலை அரங்கேற்ற இருக்கிறார்கள். வளைகுடாப் பகுதி தமிழ் நாடக ஆர்வலர்களைக் கொண்டு அரங்கேறும் இந்த நாடகம், விழாவின் முக்கியமான ஒரு நிகழ்வு.

பேரவையின் தமிழ் விழாவைக் குறித்து அறிய:
www.fetna2015.org, www.fetna.org

மேலும் விவரங்களுக்கு coordinator@fetna.org அல்லது secretary@bayareatamilmanram.org ஆகிய மின்னஞ்சல்களுக்கு எழுதவும்.

© TamilOnline.com