தெரியுமா?: பூமணிக்கு சாஹித்ய அகாதமி விருது
கரிசல் வட்டார இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாகச் செயல்பட்டு வரும் பூமணிக்கு 2014ம் ஆண்டிற்கான சாஹித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. இவர் எழுதிய 'அஞ்ஞாடி' நாவலுக்காக இவ்விருது பெறும் பூமணி, 1947ம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இளவயதிலிருந்தே இலக்கிய நாட்டம் கொண்டிருந்த பூமணி, கி. ராஜநாராயணன், தி.க. சிவசங்கரன் ஆகியோரின் ஊக்குவிப்பால் இலக்கிய வெளியில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். முதல் சிறுகதை 'அறுப்பு' 1971ல் தாமரை இதழில் வெளியானது. முதல் நாவல் 'பிறகு' இவரை தனித்துவமிக்க படைப்பாளியாக அடையாளம் காட்டியது. தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய 'கருவேலம் பூக்கள்', சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற பெருமையுடையது. இலக்கியச் சிந்தனை, அக்னி, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் ஆகிய விருதுகள் பெற்றுள்ள பூமணிக்கு, 2011ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.

கூட்டுறவுத்துறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பூமணி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுசெய்து 'அஞ்ஞாடி' நாவலை எழுதினார். 19ம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர்கள் கழுவேற்றம், பாண்டியர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற மோதல்கள், ஜமீன்கள், சாதிக்கலவரங்கள், அதனால் விளைந்த மதமாற்றங்கள், அவற்றால் சமூகத்தில் விளைந்த பாதிப்புகள் குறித்தும் நாவலில் எழுதியுள்ளார். சாஹித்ய அகாதமி விருது மார்ச் 9, 2015 அன்று புதுதில்லியில் வழங்கப்பட உள்ளது.

பூமணி பற்றி மேலும் அறிய

© TamilOnline.com