சுந்தர ராமசாமி - ஒரு சகமனிதரை இழந்தோம்
"மேதா விலாசத்திற்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாத ரகசிய உறவோ? அதிலும் இந்த நாற்பதை ஒட்டிய வயதுகள்..." - சு.ரா

புதுமைப்பித்தன், கு.பா.ராஜகோபாலன் போன்ற முன்னோடிகளை அற்ப ஆயுளிலேயே இழக்க நேரிட்டதின் ஆதங்கத்தை 'ஜே.ஜே, சில குறிப்புகள்' நூலில் சுந்தர ராமசாமி இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அற்ப ஆயுளோ, நெடிய ஆயுளோ, இழப்பு என்பது துக்கம் நிரம்பிய சூன்யமாய் நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கிறது. அதிலும் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் என ஐம்பது வருடங் களுக்கும் மேல் தொடர்ந்த பங்களிப்பை ஆற்றிய ஒருவர் மறையும்பொழுது அந்தச் சூன்யம் பூதாகரமாக விரிகிறது.

சு.ரா என்ற இலக்கியவாதியை, எழுத்தாளரை, விமர்சகரை இழந்ததைவிட சு.ரா. என்ற நெருங்கிய நண்பரை இழந்ததுதான் மேலான துக்கமாக எனக்குப் படுகிறது. 2002 ஜூன் மாதத்தில் சான்டா கிளாராவில் முதன்முதலாக சு.ரா.வை அவரது மனைவி யுடன் சந்தித்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. தென்றலில் அப்போது தான் நான் புத்தக அறிமுகக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியிருந்தேன்.

சு.ரா.வின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' நூலுக்குத்தான் முதல் அறிமுகம். சு.ரா. 70 வயதைக் கடந்திருந்த சமயம். நாள்பட்ட தொங்கலில் பச்சையை உதிர்த்து, மஞ்சள் நிறமேற்றிக்கொண்டு, இனிப்பையும், ரசத்தையும் வளர்த்துக் கொண்டு, சுகந்தத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் முதிர்ந்த பழம் போன்றுதான் அன்று இருந்தார். நாற்பத்தியைந்து வருடங்கள் எங்களுக்குள் இடைவெளியிருந்தும் மேதாவிலாசத்தின் மமதை இன்றி அவர் என்னைத் தோழனாய் நடத்தித் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதே அவர் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.

அதற்குப்பின் வருடாவருடம் அவர் சாண்டா குரூஸில் கோடையைக் கழிக்க வந்தபோதெல்லாம் தவறாமல் பலமுறை சந்தித்திருக்கிறேன். "உங்கள் அலுவலகம் வீட்டிலிருந்து எத்தனை தூரம்?

மதியம் உணவிற்கு வீட்டிற்கு வருவீர்களா? நீங்கள் சமீபத்தில் என்ன படித்தீர்கள்? அது ஏன் உங்களுக்கு பிடித்தது? ஏதாவது 'நல்ல' திரைப்படம் பார்த்தீர்களா?" அவரது கேள்விகள் நொடிகளில் என்னை சகஜ நிலைக்கு மீட்டு வரும்.

ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், உமா மகேஸ்வரி, சல்மா போன்ற தற்காலத்திய இலக்கியவாதிகளுக்கு எல்லாம் ஆதர்ஸமாக இருந்தவர் சு.ரா. நான் என் படைப் பூக்கத்தை வளர்த்துக்கொள்ள 2003-இல் ஒரு வகுப்பு எடுத்திருந்தபோது, "நீங்கள் கற்றுக்கொண்டதை எனக்கும் சொல்லிக் கொடுங்கள்" என்று அவர் ஒரு மாணவனைப் போலக் கேட்டுக்கொண்டார். என்னைப் போன்ற இளம் படைப்பாளி களின் படைப்புகளைப் படித்து மிகுந்த நம்பிக்கையளிக்கும் விதத்தில் ஊக்கமளித் திருக்கிறார்.

"நான் முதலில் சகமனிதன். பின்னர்தான் எழுத்தாளன், இலக்கியவாதி எல்லாம். மனிதர்களைப் பற்றி எழுத முதலில் எல்லா மனிதர்களையும் அவர்களது குறை நிறைகளோடு நேசிப்பது சாத்தியமாக
வேண்டும்." அவருடனான நான்கு வருடச் சந்திப்பில் 'அறிவுரை' என்றெதுவும் எனக்கு அவர் கொடுத்ததில்லை. இன்றும் எனக்கு அவர் சக மனிதராகவே, சக நண்பராகவே தோன்றுகிறார். அந்த முதிர்ந்த பழம் இளம் வடுக்களை எந்த ஏளனமும் இன்றி மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் நடத்தியதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.

முறையான பள்ளிப் படிப்பைச் சிறுவயதில் பெறாத சு.ரா., ஆங்கிலம் மற்றும் பிறமொழி இலக்கியங்களில் கொண்டிருந்த தேர்ந்த ஞானம் அவரது அயராத உழைப்பைக் காட்டுகிறது. சு.ரா.வின்
எழுத்துக்களின் கலைநேர்த்தியும், சொற்சிக்கனமும், செதுக்கி வடிக்கப்பெற்ற அழகியலும் எந்த வாசகனின் வாசிப்பனுபவத்தையும் வளப்படுத்தக் கூடியவை. அவரது விமர்சனக் கட்டுரைகளில் சூட்சுமாய் வெளிப்படும் அங்கதமும், கலை இலக்கியப் போக்குகளைப் பற்றிய கவலைகளும், அதன் வளர்ச்சிக்கான யோசனைகளும் தமிழ் மனத்தின் சிந்தனையைத் தூண்டக்கூடியவை. அவரது இலக்கிய நேர்மையும் கட்டுக்கோப்பும் இளம்படைப்பாளிகள் பின்பற்ற வேண்டியவை.

2004 ஏப்ரலில் சு.ரா. இந்தியாவிலிருந்து வருகையில், நானும் என் மனைவியும் அதே விமானத்தில் வர வாய்ப்பிருந்ததைச் சொன்னபோது, குழந்தைக்குத் துணை கிடைத்தது போன்று சந்தோஷப்பட்டார். ஆனால் எங்களுக்கு அந்த விமானத்தில் இடம் கிடைக்காமல் போய்விட்டது இப்பொழுது ஆழ்ந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. சமீபத்தில் எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனை, சு.ராவுடன் சேர்த்து, சு.ரா.வின் மகள் வீட்டில் சந்தித்தேன். அடுத்த வாரம் சு.ரா. கனெக்டிகட் செல்வதாக இருந்தது. அப்பொழுதுதான் சிறிது உடல்நலக் குறைவிலிருந்து குணமாகி வெளி வந்திருந்தார். அன்று விடைபெறும்போது சு.ரா. எப்பொழுதும் போலில்லாமல் அழுந்தக் கைகொடுத்தார். அன்று அவரது முகத்தில் வெளிப்பட்ட வாஞ்சையும், 'பின்னர் எப்பொழுது சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறதோ?' என்ற கவலையும் என்னை என்னவோ செய்தது.

அதுவே அவருடனான கடைசி சந்திப்பாகிப்போனது.

மனுபாரதி

© TamilOnline.com