அரங்கேற்றம்: ஷாயினி ஷிவா
அக்டோபர் 6, 2014 அன்று San Ramon Dougherty Valley Performing Arts Center அரங்கில் கலைமாமணி திருமதி. ராதா அவர்களின் மாணவி செல்வி. ஷாயினி ஷிவாவின் (Shaini Shiva) பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. 6 வயதில் நடனம் கற்கத் துவங்கிய ஷாயினி தனது 13ம் வயதில் அரங்கேற்றம் கண்டிருக்கிறார். புஷ்பாஞ்சலியில் துவங்கியது நிகழ்ச்சி. கம்பீரநாட்டையில் கணபதியின் மீதமைந்த திருப்புகழ்ப் பாடலுக்கு கம்பீர கணபதியைக் கண்முன் கொணர்ந்தார்.

சுப்பிரமணிய கவுத்துவம், சரஸ்வதி ராகத்திலமைந்த சரஸ்வதி துதி, பாபநாசம் சிவனின் "சுவாமி நான் உந்தன் அடிமை" என்று நிகழ்ச்சி வெகு அழகாகத் தொடர்ந்தது. சிவனின் ருத்ர தாண்டவம், கருணை என எல்லா பாவங்களையும் ஒரு 13 வயதுக் குழந்தையால் இவ்வளவு செம்மையாக ஆடமுடியுமா என்று பிரமிக்க வைத்தார். முருகன்மீது அமைந்த காவடிச்சிந்துக்கு, வயதான கிழவனாக முருகன், இரக்கம் காட்டும் இளம்பெண்ணாக வள்ளி, மோகம் கொண்ட கிழவனைக் கண்டு வெறுப்புறும் பெண், யானையாக மாறி மிரட்டும் விநாயகன் எனப் பல வடிவங்கள் எடுத்து கைதட்டலை அள்ளினார். இந்தப் பாடலை எழுதிய ஷாயினியின் அம்மம்மா, ஸ்ரீமதி. சரஸ் ராஜேஸ்வரன், ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. ரசனைமிக்க "கான மழை பொழிகின்றான்" பாடலை அடுத்து வந்த தில்லானாவில் ஷாயினியின் கால்கள் சுழன்றாடி நம்மைக் கிறக்கின. இறுதியாகப் பெரியபுராணம், சிவபுராணம், மங்களத்துடன் அரங்கேற்றம் நிறைவுற்றது.

குரு ராதாவின் சிறந்த நடன அமைப்பும் நட்டுவாங்கமும், ஸ்னிக்தா வெங்கடரமணியின் இனிய பாடல், கௌரி சங்கரின் மிருதங்கம், முல்லைவாசல் சந்திரமௌலியின் வயலின், அஷ்வின் கிருஷ்ணகுமாரின் புல்லாங்குழல், விஷ்ணி ரவீந்திரனின் வீணையிசை யாவும் நடன அரங்கத்தை கந்தர்வ லோகமாக்கின.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட்

© TamilOnline.com