பாஸ்டன்: 'கவி நிருத்தியம்'
நவம்பர் 9, 2014 அன்று, கோலம் நடனப்பள்ளி, 'கவி நிருத்தியம்' என்ற தலைப்பில், பாஸ்டன் ஆண்டோவர் சின்மயா மிஷன் அரங்கில், பள்ளியின் நடன இயக்குநரான திருமதி. சுஜா மெய்யப்பன் தலைமையில் ஒரு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் இடம்பெற்ற பல படைப்புகள் மதுரை திரு. R. முரளீதரன் அவர்களுடையவையாகும்.

ஜோக் ராகப் புஷ்பாஞ்சாலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் குழந்தைகள் ஐரின், ஷ்ரியா, திதி, மெதா, மஹிஜா, ரியானா, ஓவியா, ஸ்ரீவைஷ்ணவி, சந்த்ரிவி, அனன்யா ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து வந்த தஞ்சை நால்வரின் சாவேரி ராக ஜதீஸ்வரத்தைச் சிறுமியர் அவனி, ரிச்சா, சான்வி வழங்கினர். அடுத்து வந்தது சப்தம். இதைச் சிறுமியர் காவியா, ஜானவி, ஜேனட், க்ருதி, யஷ்வி ஆகியோர் சிறப்பாக வழங்கினர். நீலகண்ட சிவனின் "ஆனந்த நடனமாடுவார்" என்ற பூர்விகல்யாணி ராகப் பாடலுக்கு நடனமாடிய சேத்னா, ஷில்பா, சுருதி, த்ரிஷா ஆகியோர் நடராஜர் ஆடிய நர்த்தனத்தைத் துல்லியமாக ஆடிக் காட்டினர்.

தொடர்ந்தது கணேச கவுத்துவம். திவ்யா, லமிதா மற்றும் ப்ரீத்தி ஆடிய இப்பாடலை இயற்றியவர் கங்கை முத்து நட்டுவனார். ராகமாலிகையில், மதுரை முரளிதரன் இயக்கத்தில் உருவான நடராஜார் கவுத்துவத்தை அருமையாக ஆடியவர்கள் மித்தாலி, நந்திதா, தக்ஷீனியா. ஹம்சத்வனியில், தஞ்சை நால்வர் படைத்த விருத்தம் மற்றும் நடேச கவுத்துவம், சிவபெருமானைப் பற்றியது. திருநாவுக்கரசரின் "குனித்த புருவமும்" தேவாரத்தைக் கண்குளிர அளித்தனர் அநிக்கா, அனுஷா, ஜனனி, லயா, சிரி, ரெபேக்கா, ஏமி, அனுஷ்கா, அபர்ணா, சாத்வி, சிந்தியா மற்றும் சோலை.

மோகன ராகத்தில் அமைந்த மகாதேவ கவுத்துவத்துக்கு வெகு அழகாக ஆடியவர் ஷில்பா. முரளீதர கவுத்துவத்தை ஆரபி ராகத்தில் கார்த்தியாயினி மற்றும் மேக்னா நடனமாடினர். சண்முகப்ரியா ராகத்தில் அமைந்த சடாக்ஷரத்துக்கு சுருதி ராஜு நளினம் மிளிர ஆடினார். அடுத்து வந்த அம்மா கவுத்துவத்தை அழகுற ஆடியவர்கள் சேத்னா மற்றும் த்ரிஷா.

குரு சுஜா மெய்யப்பன் தன் குருவின் படைப்பில் பாலினி ராகத்தில் சூரிய கவுத்துவத்தைக் கண்டோர் வியக்கும் வண்ணம் ஆடினார். இறுதியாக தில்லானாவுக்கு நடனமாடினர் சேத்னா, கார்த்தியாயினி, மேக்னா, ஷில்பா, சுருதி மற்றும் த்ரிஷா. 'ஜயமாருதி'யுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com