டாக்டர் மு. வரதராசன்
எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், இலக்கிய ஆய்வாளர், கல்வியியலாளர், பேராசிரியர் என பல்கலை வித்தகராக விளங்கியவர் முனுசாமி வரதராசன் எனும் மு. வரதராசன். இவர், ஏப்ரல் 25, 1912 அன்று வடாற்காடு மாவட்டத்தின் திருப்பத்தூரில் உள்ள வேலம் என்ற சிற்றூரில், முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் திருவேங்கடம். துவக்கக் கல்வியை வேலத்திலும், உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரிலும் பயின்றார். படிப்பை முடித்தபின் சிலகாலம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அப்பணியிலிருந்து விலகினார். தமிழார்வத்தால் முருகைய முதலியாரிடம் தமிழ் பயின்று, வித்வான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்வுபெற்றார். இதற்காகத் திருப்பனந்தாள் மடத்தின் பரிசுப்பணம் ரூபாய் ஆயிரம் இவரைத் தேடிவந்தது. தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. 1935ல் மாமன் மகள் ராதாவை மணம் செய்துகொண்டார். திருநாவுக்கரசு, நம்பி, பாரி என மூன்று மகவுகள் பிறந்தன. ஆசிரியப் பணியினூடே பயின்று பி.ஓ.எல். பட்டம் பெற்றார். குழந்தைப் பாடல்கள், கதைகள் எழுதுவதில் வரதராசனுக்கு ஆர்வமிருந்தது. மு.வ.வின் முதல் நூலே 'குழந்தைப் பாட்டுக்கள்' (1939) என்பதுதான்.

இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளர் பணி வந்தது. அதனை ஏற்றுப் பணியாற்றி, மாணவர்கள், சக ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார். அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக உயர்வு பெற்றார். அக்காலகட்டத்தில் 'தமிழ் வினைச்சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு 1944ல் எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'சங்க இலக்கியத்தில் இயற்கை' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். சென்னைப் பல்கலையின் முதல் முனைவர் பட்டதாரி மு. வரதராசன்தான். அடுத்து, சென்னைப் பல்கலையில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. துணைப்பேராசிரியராகப் பொறுப்பேற்ற அவர், தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார். ஓய்வு நேரத்தில் படைப்பிலக்கியத்தின் மீது கவனத்தைச் செலுத்தினார். இலக்கிய இதழ்களில் கட்டுரை, சிறுகதைகள் எழுதத் துவங்கினார். 'செந்தாமரை' என்ற நாவலைத் தாமே பதிப்பித்தார். இலக்கியம் கூறும் களவு மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்ட 'பாவை' அவரை ஓர் இலக்கியப் பேராசிரியராகவும், நாவலாசிரியராகவும் அடையாளம் காட்டியது 'கள்ளோ, காவியமோ' அவரை ஓர் தேர்ந்த இலக்கியவாதியாக அடையாளம் காட்டியது.

அகிலன், நா.பா., மு.வ. போன்றோர் அக்கால இளைஞர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். இலக்கிய உலகின் மும்மூர்த்திகளாக மதிக்கப்பட்டனர். "மு.வ. பைத்தியம் பிடித்துத் தமிழக வாசகர்கள் அலைந்த காலத்தை நான் நேரில் பார்த்தவன். அந்த மனநிலை மக்களுக்கு வந்ததன் காரணமே மு.வ. படைப்புகளின் நேர்த்திதான்" என்கிறார் முக்தா சீனிவாசன், தமது 'இணையற்ற சாதனையாளர்கள்' நூலில்.

மு.வ. சங்க இலக்கியத்தில் தேர்ந்தவர், காந்தியக் கொள்கைகளில் அளவற்ற பிடிப்புக் கொண்டவர். அவை அவரது படைப்புகளில் வெளிப்பட்டன. அவருடைய படைப்புகள் அனைத்துமே தன்மை ஒருமையில், கதை நாயகனே கதைகூறுவதாக அமைந்தவை. கதையின் போக்கில் ஆங்காங்கே தனது கருத்துகளை - அறிவுரைகள் போல், பொன்மொழிகள் போல் - வலியுறுத்திக் கூறிச் செல்வது அவரது வழக்கம். படிப்போரின் உள்ளத்தைப் பண்படுத்துவதாகவும், சிந்திக்கத் தூண்டுவதாகவும் அவரது எழுத்துக்கள் இருக்கும். அவரது பெரும்பாலான படைப்புகளில் மானுட அறத்தையும், நேர்மை, உண்மை, அன்பு, அகிம்சை, தியாகம், சத்தியம் போன்றவற்றையும் வலியுறுத்தி எழுதியிருப்பார். மு.வ.வின் படைப்புகளில் 'கயமை', 'டாக்டர் அல்லி', 'அந்தநாள்', 'நெஞ்சில் ஒரு முள்', 'மண்குடிசை', 'வாடாமலர்' போன்றவை முக்கியமானவை. அவரது 'அகல்விளக்கு' நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. ஓவியன் ஒருவரின் வாழ்க்கையைக் கூறும் 'கரித்துண்டு' மு.வ. படைப்புகளில் மிக முக்கியமானது. அவரது 'பெற்றமனம்' நாவல் திரைப்படமாக வெளியானது.

சமூக அவலங்களைச் சுட்டும் மு.வ.வின் சிறுகதைகளான 'எதையோ பேசினார்', 'தேங்காய்த் துண்டுகள்', 'விடுதலையா?', 'குறட்டை ஒலி' போன்றவை மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சமூகம், மானுட நெறிகளைப் பற்றிச் சிந்திக்கவும் தூண்டுபவை. குறிப்பிடத்தக்க நாடகங்களையும் மு.வ. எழுதியிருக்கிறார். 'பெண்மை வாழ்க', 'அறமும் அரசியலும்', 'குருவிப் போர்', 'அரசியல் அலைகள்' போன்ற அவரது கட்டுரைகள் சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்துபவை. எழுத்தாளராக மட்டுமல்லாமல் கல்வியியலாளராக, ஆராய்ச்சியாளராகவும் மு.வ. முத்திரை பதித்துள்ளார். 'இலக்கிய ஆராய்ச்சி', 'நற்றிணைச் செல்வம்', 'குறுந்தொகைச் செல்வம்', 'கண்ணகி, மாதவி, இலக்கியத் திறன்', 'இலக்கிய மரபு', 'கொங்குதேர் வாழ்க்கை', 'இலக்கியக் காட்சிகள்', 'மொழி நூல்', 'மொழி வரலாறு', 'மொழியின் கதை', 'எழுத்தின் கதை', 'தமிழ் நெஞ்சம்', 'மணல் வீடு', 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்', 'முல்லைத் திணை', 'நெடுந்தொகை விருந்து', 'குறுந்தொகை விருந்து', 'நற்றிணை விருந்து' போன்ற நூல்கள் அவரது நுண்மாண் நுழைபுலத்தையும் ஆய்வுத்திறனையும் பறைசாற்றுபவை. 'அன்னைக்கு', 'தம்பிக்கு', 'தங்கைக்கு', 'நண்பருக்கு' போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய கடித இலக்கியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அவரது 'தமிழ் இலக்கிய வரலாறு' கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்ட பெருமை உடையது. அந்நூலுக்கு சாகித்ய அகாதமியின் விருதும் கிடைத்தது. பல்வேறு பதிப்புகள் கண்ட அந்த நூல் இன்றளவும் மறுபதிப்புச் செய்யப்படுவதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை உணரலாம். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட மு.வ.வின் 'திருக்குறள் தெளிவுரை' நூற்றுக்கு மேற்பட்ட பதிப்புகள் கண்ட நூலாகும். சுருக்கமான, தெளிவான விளக்கங்கள் கொண்ட அந்நூல், பிற்காலத் திருக்குறள் தெளிவுரைகள் பலவற்றுக்கும் முன்னோடி. மகாத்மா காந்திஜி, தாகூர், திரு.வி.க., பெர்னாட்ஷா போன்றோரது வாழ்க்கை வரலாற்றையும் மு.வ. எழுதியிருக்கிறார்.

மதுரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பெற்ற மு.வ., பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தினார். சிங்கப்பூர், ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன், ரஷ்யா, மலேசியா, இலங்கை, பாரிஸ், எகிப்து என உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கருத்தரங்குகளில் உரையாற்றியிருக்கிறார். பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், தமிழ் ஆட்சிமொழிக் குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம் உட்படப் பல அமைப்புகளில் உறுப்பினர், ஆலோசகர் எனப் பொறுப்புகளை வகித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் கல்லூரி இவரது தமிழ்ப் பணிக்காக டி.லிட். பட்டம் வழங்கிக் கௌரவித்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ.தான். உலகம் சுற்றிவந்த முதல் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளரும் அவர்தான்.

தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர் டாக்டர் மு.வ. நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், தமிழ் இலக்கியம், பயணக் கட்டுரை, மொழி ஆய்வு, கடித இலக்கியம் என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். இவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்யன், சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. மு.வ. அக்டோபர் 10, 1974 அன்று, தமது 62ம் வயதில் காலமானார். டாக்டர் மு. வரதராசனுக்கு தமிழ்ப் படைப்புலகில் தனித்ததோர் இடமுண்டு.

அரவிந்த்

© TamilOnline.com