பாரதி தமிழ் சங்கம்: 'யக்ஞசேனி' நாட்டிய நாடகம்
அக்டோபர் 5, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் 'யக்ஞசேனி - நெருப்பில் உதித்த தேவதை' என்ற பிரம்மாண்டமான மகாபாரத நாட்டிய நாடகத்தை ஃப்ரீமான்ட் ஓலோனி கல்லூரி ஜாக்சன் அரங்கத்தில் இரண்டு காட்சிகளாக வழங்கியது. பாஞ்சாலியின் பார்வையில் மகாபாரதம் நாட்டிய நாடகமாக வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான நாட்டியக் கலைஞர்களும் நடிகர்களும் பங்கேற்ற இந்த நாடகத்தில் கலைமாமணி. உமா முரளி திரெளபதி ஆகவும், மதுரை ஆர். முரளிதரன் அர்ஜுனனாகவும் நடித்தனர்.

வியாசர் விநாயகர் மூலமாக மகாபாரதத்தை எழுதும் காட்சியுடன் நாடகம் துவங்கியது. யாக குண்டத்தில் இருந்து திரௌபதியும், திருஷ்டத்யும்னனும் தோன்றும் காட்சி, திரௌபதி தன் சகோதரனுடனும் கிருஷ்ணனுடனும் ஆடிப்பாடி விளையாடி வளர்வது, வளர்ந்த திரௌபதியின் சுயம்வரத்தில் பல தேசத்து மன்னர்களும் கலந்து கொள்வது, கர்ணன் அவமானப்படுவது, அர்ஜுனன் வில்வித்தையில் வென்று திரௌபதியை மணப்பது என்று மகாபாரதக் காட்சிகள் அனைத்தும் அற்புதமான நாட்டிய நாடகமாக உருப்பெற்றிருந்தது.

மதுரை முரளிதரன் நாடகத்தை இயக்கி, இசையமைத்து, வசனம் எழுதி பின்னணிக் காட்சிகளை வடிவமைத்து அளித்தார். திருச்சிற்றம்பல நாட்டியப் பள்ளியின் ஆசிரியை தீபா மகாதேவன் கிருஷ்ணனாகவும் அவரது மாணவி ஸ்ருதி அரவிந்தன் திருஷ்டத்யும்னனாகவும் பிற மாணவிகள் பல்வேறு பாத்திரங்களிலும் நடித்தனர். மற்றொரு பிரபல நடன ஆசிரியை ரஞ்சனி மண்டாவின் மாணவிகள் கிராமிய நடனம் ஆடினர். புகழ்பெற்ற நாடக இயக்குனரும், நடிகருமான நவீன் நாதன் தனது குழுவினருடன் பங்குகொண்டார். சகுனியாக நவீன் நாதனின் நடிப்பும் துரியோதனாக திலீப் ரத்னம் நடிப்பும் அபாரம்.

கானகங்கள், நதிகள், போர்க்களம், அரண்மனை ஆகியவை மல்டிமீடியா டிஜிடல் காட்சிகளாகவும், நேரடியாக மேடையிலும் பின்னணியில் ஒளிபரப்பாயின. ஏராளமான ஸ்பெஷல் எஃபக்ட்களும் இடம்பெற்றன. ஃப்ரீமான்ட் நகர கவுன்சில் உறுப்பினர் ராஜ் சல்வான், இந்திய தூதரகத்தின் துணைத்தூதர் ஐ.எம். பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.

பாரதி தமிழ்ச் சங்கத்தின் வரவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து அறியவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், உதவி செய்யவும்:
மின்னஞ்சல்: batsvolunteers@gmail.com
இணைய தளம்: www.Bharatitamilsangam.org
முகநூல்: facebook.com/bharatitamilsangam

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com