ஒபாமாவின் விடுமுறைத் தீவு
ஆகஸ்ட் என்றாலே விடுமுறை மாதம் என்ற உணர்விற்கு அதிபர் ஒபாமா குடும்பமும் விதிவிலக்கல்ல. இந்த ஆகஸ்டில் ஒபாமா குடும்பத்தினர் 15 நாட்கள் (ஆமாம் 15 நாட்கள்!) மாசசூஸட்ஸ் மாநிலத்தில் உள்ள மார்த்தாஸ் வின்யார்ட் தீவுக்குச் சென்று களித்தனர். ஒபாமா அதிபரான பிறகு ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் (தேர்தல் வருடமான 2012 தவிர) மார்த்தாஸ் வின்யார்டுக்கே விரும்பிச் சென்றுள்ளனர். அப்படி என்ன இருக்கிறது இந்தத் தீவிலே? வாருங்கள், நாமும் அங்கேயே போய்ப் பார்க்கலாம்.

மாசசூசட்ஸ் மாநிலத்தின் புகழ்பெற்ற கேப்காட் (Capecod) பகுதியின் தெற்கே ஏழே மைல் தொலைவில் உள்ள சோலைவனம் மார்த்தாஸ் வின்யார்ட். இத்தீவின் பரப்பளவு 91 ச.மைல். அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையின் நியூ யார்க் லாங் ஐலண்டும், மெயின் மாநிலத்தின் மவுண்ட் டெலர்ட் தீவுகளும் மார்த்தாஸ் வின்யார்டைவிடப் பெரிதாக இருந்தாலும், அவை பாலத்தால் இணைக்கப்படவில்லை. பாலம் இணைக்கும் பெரிய தீவாக கிழக்குக் கடற்கரைக்கு அழகு சேர்க்கிறது மார்த்தாஸ் வின்யார்ட். கரீபியன் தீவுகளில் தனிநாடாக விளங்குகிற அரூபா உட்படப் பல கரீபியன் தீவுகளைவிடப் பரப்பளவில் பெரியது மார்த்தாஸ்.

1870ல் மார்த்தாஸுக்கு ஓய்வெடுக்க வந்த முதல் அமெரிக்க அதிபர் யுலிசெஸ் கிராண்ட். இவரைத் தொடர்ந்து பல அதிபர்களும், பிரபலமானவர்களும் வந்து சென்றாலும் இத்தீவின் நவீனகால வளர்ச்சிக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பில் கிளிண்டன். அவர் வரத் தொடங்குவதற்கு முன்பு, மார்த்தாஸ் வின்யார்ட் என்றால் மக்கள் நினைவில் டெட் கென்னடியின் சாலை விபத்து அல்லது ஜான் கென்னடியின் (Jr) விமான விபத்து போன்ற சோகமான நிகழ்வுகளே நினைவுக்கு வந்தன. அதை மாற்றி மார்த்தாஸை விடுமுறைத் தீவாக, கோடைக்கால வெள்ளை மாளிகையின் இருப்பிடமாக மாற்றியவர் கிளிண்டன் எனப் பெருமைப்படுகின்றனர் உள்ளூர் மக்கள்.

Click Here Enlargeஒபாமா வந்திருந்த அதே நாட்களில் நாங்களும் தீவில் இருந்ததால் கடைக்காரர்களிடம் வியாபாரம் எப்படி என்று கேட்டபோது, "கிளிண்டன், ஒபாமா வருகையால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள்; ஆனால் அதிபர்கள் ஊருக்குள் வந்தால் அன்று வியாபாரம் படுத்துவிடுகிறது. சுற்றுலாவாசிகள் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக கடற்கரைக்குச் சென்று விடுகிறார்கள்" என்று அங்கலாய்த்தனர். தீவை ஒட்டியுள்ள கேப்காட் பகுதியில் 12,000 ஏக்கர் கிரேன்பெர்ரி (cranberry) பழ விவசாயிகளோ, ஒபாமா விடுமுறை எப்போது முடியும் என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். அதிபர் தீவில் இருக்கும்வரை முப்பது மைல் சுற்றளவுக்குத் தனியார் விமானங்கள் பறக்கக் கூடாது என்பதால் கிரேன்பெர்ரி செடிகளுக்கு இன்றியமையாத உரத்தை விமானமூலம் தெளிப்பதை ஒத்திப்போட வேண்டியுள்ளது என்பது அவர்களின் வருத்தம்.

அதிபர்களுக்கு மட்டுமின்றி, ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் மார்த்தாஸ் வின்யார்டிற்கும் நெடுங்காலத் தொடர்பிருக்கிறது. மார்டின் லூதர் கிங், தமது உரைகள் பலவற்றை இத்தீவில் இருந்து எழுதியுள்ளார். ஆப்பிரிக்க அமெரிக்க உரிமைப் போராட்டத்திற்கு இத்தீவு கோடைகாலத் தலைமைச் செயலகமாக விளங்கியுள்ளது. தற்போது ஆப்பிரிக்க அமெரிக்கச் செல்வந்தர்கள் பலர் ஓக் பிளப் பகுதியில் கோடை விடுமுறைக்கு வருகின்றனர்.

அமெரிக்கச் சைகை மொழிக்கு (America's Sign Language) வித்திட்ட பெருமை மார்த்தாஸ் வின்யார்டையே சாரும். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் குடியேறிய மக்களிடையே காது கேளாமைக்கான மரபணுக்கள் இருந்தமையாலும், அவர்கள் நெருங்கிய சொந்தத்திலேயே திருமணம் செய்து கொண்டதாலும், ஒரு காலகட்டத்தில் நான்கில் ஒரு குழந்தை செவிடாகப் பிறந்தது. இதனால் தீவினில் உள்ள அனைத்து மக்களும் சைகைமொழியைக் கற்றுக்கொண்டனர். அதுவே அமெரிக்கச் சைகைமொழி பிறக்க அடித்தளமாக அமைந்தது.

மெக்டோனல்ட்ஸ் போன்ற விரைவுணவகங்கள் இல்லாத தீவு இது. 1963ல் உள்ளூர் வாசியால் தொடங்கப்பெற்ற டெய்ரி க்வீன் (Dairy Queen) மட்டுமே ஒரே விதிவிலக்கு. குளிர்காலத்தில் மூடப்பட்டு, பின்னர் திறக்கும்போது அருகிலுள்ள எட்கர் டவுன் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை விடுவார்கள், ஐஸ்க்ரீம் சாப்பிட!

பதினெட்டாயிரம் மக்கள் வாழும் இத்தீவின் மக்கள்தொகை கோடை மாதங்களில் 160,000ஐத் தாண்டுகிறது. தீவின் முக்கிய ஊர்களான ஓக் பிளஃப்ஸ் (Oak Bluffs) வின்யார்ட் ஹேவன் (Vinyard Haven) எட்கர் டவுன் (Edgartown) ஆகியவற்றைத் தவிர மற்றப் பகுதிகளில் சுற்றுலா வாசிகள் பரவலாகவே காணப்படுகின்றனர்.

செல்வந்தர்களின் சோலைவனம் எனப் பெயர்பெற்ற மார்த்தாஸ் வின்யார்டின் மூன்றில் ஒரு பங்கு தனிப்பட்டவர்களின் உடைமை. கென்னடி குடும்பத்தினர், தொலைக்காட்சி புகழ் வால்டர் குரோன்கைட், மைக் வாலஸ் மற்றும் பல ஹாலிவுட் நடிகர்கள் பல ஏக்கர் நிலத்துடன் கூடிய மாளிகைகளை வாங்கியுள்ளனர். தீவின் மற்றொரு பகுதி அரசுக்குச் சொந்தமானது. எஞ்சிய பகுதி அபிருவித்தி செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பிரம்மாண்டமான மாட மாளிகைகளைப் பார்ப்பது மட்டுமில்லாமல், இத்தீவினில் கண்ணைக் கவரும் சிட்டுக்குருவிகளாகக் காட்சியளிக்கின்ற முன்னூறுக்கும் மேற்பட்ட மரத்தாலான ஜிஞ்சர் பிரெட் (Ginger Bread Houses) வீடுகளை ரசிக்கத் தவறாதீர்கள். கே ஹெட் (Gay Head) கலங்கரை விளக்கத்தின் சூடான, சுழல் விளக்குகளை கையால் தொடலாம்! 170 அடிக்கு மேல் விளக்கின் அருகில் இருந்து காடுகளையும் கடற்கரையும் மாட மாளிகைகளையும் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். கடலுணவு விரும்பிகள் கிளாம் சௌடர் சூப்பைச் சுவைத்துப் பாருங்கள். சேலத்திற்குப் போய் மாம்பழம் சாப்பிடாமல் வரலாமா?

மார்த்தாஸ் வின்யார்டைக் காரில் முழுதும் சுற்றிவர இரண்டரை மணி நேரமாகும். அப்படிச் சென்றால்தான் தீவின் அழகையும், பல கோணங்களையும் பார்த்து ரசிக்கமுடியும். அங்கே பல நாட்கள் தங்க எண்ணுபவர்கள் காரைக் கப்பலில் கொண்டுசெல்வது நல்லது (steamshipauthority.com) ஒருநாளுக்கு மட்டும் செல்பவர்கள் வாடகைக் காரையோ அல்லது சுற்றுலா வேன்களையோ பயன்படுத்தலாம்.

மார்த்தாஸ் வின்யார்டிற்கு கார் மற்றும் கப்பல் மூலம் பாஸ்டனிலிருந்து இரண்டுமணி நேரத்திலும் நியூ யார்க்கிலிருந்து ஐந்து மணி நேரத்திலும் சென்றுவிடலாம். ஒபாமா குடும்பம் போன்று நீங்களும் அடுத்த கோடை விடுமுறைக்கு உல்லாசமாக மார்த்தாஸ் வின்யார்ட் போகலாமே!

மேலும் விவரங்களுக்கு: mvol.com

சோமலெ. சோமசுந்தரம்

© TamilOnline.com