கலக்கம் உண்டாக்கும் இபோலா!
இபோலா என்னும் வைரஸ் மேற்காப்பிரிக்க நாடுகளில் படுவேகமாகப் பரவி வருகிறது. எங்கே இது உலகம் முழுதும் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க நோய்த்தடுப்பு நிறுவனமான CDC இதைப்பற்றிய பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் நான்கு நபர்களை இபோலா தாக்கிவிட்டது. இது மேலும் பரவாமல் இருக்கவேண்டும் என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது. இந்த நோய் கொடியது தான், ஆனால் இதைப் பற்றிய நடுக்கம் சற்றுக் கூடுதலாக ஊடகங்கள் மூலம் பரவியிருப்பது உண்மை. இருதய நோய், புற்றுநோய், சாலை விபத்து போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட, இந்த நோய் பரவி, அதனால் மரணம் ஏற்படும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு என்பதை மனதில் கொள்ளவேண்டும். உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இபோலாவைப் பற்றி நாமும் சற்றுத் தெரிந்துகொள்வோம்.

இபோலா வைரஸ்
மருத்துவ நூல்களில் ஒரு ஓரமாகப் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த நுண்ணுயிர்க் கிருமி திடீர்ப் பிரபலம் அடைந்துவிட்டது. 2014ம் ஆண்டில் கினி, லைபீரியா, சியரா லியோன் என்ற மேற்காப்பிரிக்க நாடுகளில் மிகப்பெரிதாக இந்த வைரஸ் விஸ்வரூபம் எடுத்திருப்பது உண்மை. இந்த நாடுகளில் போதுமான சுகாதாரமும், மருத்துவ வசதியும் இல்லாத காரணத்தால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி லைபீரியாவில் இருந்து அமெரிக்கா வந்த ஒருவருக்கு இபோலா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இவருக்குச் சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவ ஊழியர்களுக்கும் இபோலா பரவியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மூவருமே டெக்சஸைச் சேர்ந்தவர்கள். இவர்களைத் தவிர ஆப்பிரிக்க மருத்துவ முகாமில் வேலைசெய்த மருத்துவர் ஒருவருக்கு இபோலா இருப்பது நியூ யார்க்கில் கண்டுபிடிக்கப் பட்டது. முதல் நோயாளி இறந்துவிட்டார். மற்றவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களையும், இவர்கள்மூலம் வேறு யாருக்கெல்லாம் நோய் பரவக் கூடுமோ அவர்களையெல்லாம் CDC கண்காணித்து வருகிறது.

இபோலா எப்படிப் பரவுகிறது
இந்த வைரஸ் உடலின் திரவங்கள் மூலம் பரவக் கூடியது. இது ரத்தம், சிறுநீர், உமிழ்நீர், வாந்தி, மலம் தாய்ப்பால், உயிரணு திரவம் போன்றவை மூலம் பரவும். இதைத் தவிர ஒரு சில காட்டு விலங்குகளின் மாமிசம் மூலமும் பரவக்கூடும். இந்த வைரஸ் குரங்கு மற்றும் வௌவால்களைத் தாக்க வல்லது. அதனால் மேற்கூறிய நாடுகளுக்குப் பயணம் செய்பவருக்கும், இபோலா வைரஸ் தாக்கிய நபருடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்களுக்கும், இவர்களை கவனித்துக் கொள்ளும் மருத்துவ ஊழியர்களுக்கும், இபோலாவினால் இறந்தவரின் சடலத்தைத் தீண்டுவோருக்கும் இந்த வைரஸ் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

காற்று, குடிநீர், உணவு மூலம் இந்த வைரஸ் பரவாது என்பதனால் வெகுவேகமாக உலகம் முழுதும் பரவும் அபாயம் குறைவு. போதிய சுகாதாரம் இல்லாத காரணத்தினாலேயே மேற்காப்பிரிக்காவில் இது கடுமையாகத் தாக்கியுள்ளது.

நோயின் அறிகுறிகள்.
இந்த வைரஸ் தாக்கியவுடனேயே அறிகுறிகள் தென்படாது. அறிகுறிகள் தெரியத் தொடங்கக் குறைந்தபட்சம் 2 நாள் முதல் 21 நாள்வரை எடுக்கும். அதை Incubation Period என்று மருத்துவ உலகம் சொல்லும். இது சராசரியாக 8-10 நாட்களில் தெரியவரும். அறிகுறிகள் மற்ற வைரஸ் நோய் போலவும் இருக்கக்கூடும். அவை

* அதிகக் காய்ச்சல்
* உடல்வலி
* மூட்டுவலி, தசைவலி
* வாந்தி பேதி, வயிற்றுவலி
* தோலில் ரத்தம் கசிதல்
* மூச்சு வாங்குதல்
* மலத்தில் ரத்தம் கலந்திருத்தல்

முதலில் மற்ற வைரஸ் போலவே இருந்தாலும் நாளடைவில் தீவிரம் அதிகரிக்கும். நோயாளியின் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால் இவர்கள் குணம் அடையும் சாத்தியக்கூறு அதிகம். மேலே சொன்ன நாடுகளுக்குப் பயணம் செய்தவரும், இந்த நோய் தாக்கியவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும், மருத்துவத் துறையில் வேலை செய்பவர்களும் இந்த நோய் வராமல் இருக்க கவனம் எடுத்துக்கொள்வது தேவை. இவர்கள் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மாமிசங்களைக் கையாள்வோர், வேற்று நாட்டில் இருந்து வரும் மாமிசத்தைக் கையாள நேர்ந்தால் கவனம் தேவை.

மருத்துவத் துறையின் தயார்நிலை
இந்த வைரஸை அமெரிக்காவில் கண்டறிந்த நாள் முதலாக அமெரிக்க மருத்துவமனைகள் இந்த நோயை உடனடியாக இனங்காணவும், பரவாமல் தடுக்கவும் ஆயத்தங்கள் செய்துவருகின்றன. CDC பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. அவசர சிகிச்சை பிரிவு முதல், தீவிர சிகிச்சைப் பிரிவுவரை அனைவரும் தயார்நிலையில் உள்ளனர்.

ரத்தப் பரிசோதனையில் இந்த வைரஸ் இருப்பதை ELISA அல்லது PCR என்று சொல்லப்படும் பரிசோதனை மூலம் ஊர்ஜிதம் செய்யலாம் ஆனால் இந்த நோய் இருக்கக்கூடும் என்ற ஐயம் இருந்தால், மருத்துவ ஊழியர்கள் தலைமுதல் கால்வரை மூடிய தற்காப்பு உடை அணிந்து இந்த நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களது உடல் திரவங்களைப் பாதுகாப்பாக அகற்றவும் அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நோய் தீர்ப்பு முறைகள்.
மற்ற வைரஸ்கள் போலவே இதற்கும் தகுந்த முறையில் உடலில் நீரளவு குறையாமல் ரத்த நாளங்களில் திரவம் செலுத்துதல், அவர்களது ரத்த அழுத்தத்தைச் சரியாகப் பராமரித்தல், வேறு நுண்ணுயிர் கிருமிகள் தாக்காமல் வைத்தல் போன்ற பொதுவான சிகிச்சை வழங்கினால் போதுமானது. இவர்களைத் தனி அறையில் வைத்துச் சிகிச்சையளிக்க வேண்டும். இதை மீறி அவர்களுக்கு நோயின் தீவிரம் முற்றினால் அதற்கேற்பச் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் தற்போது இதற்கு மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இல்லை. தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

நோய் பரவாமல் தடுக்கும் வழிகள்
* சுத்தமான நீரில் சோப்புப் போட்டு கைகளைக் கழுவுதல்
* ஆல்கஹால் கலந்த கைத்துண்டு அல்லது திரவம் கொண்டு கையைக் கழுவுதல்
* நோய்வாய்ப்பட்டோரின் உடல் திரவத்தை எச்சரிக்கையோடு கையாளுதல்
* மாமிசம் கையாள்வோர் எச்சரிக்கையுடன் கையாளுதல்
* மருத்துவமனை, ரத்தப் பரிசோதனைக் கூடம் போன்றவற்றில் பணியாற்றுவோர் கவனமாக இருத்தல்
* பயணம் செய்வோரும், அதிகக் கூட்டம் இருக்கும் இடத்திற்குச் செல்வோரும் கைகளைச் சுத்தமாகக் கழுவும் பழக்கத்தைக் கொள்ளுதல்
* அருகில் இருப்போரின் உடல் திரவத்தைத் தொட நேர்ந்தால், (உதாரணத்திற்கு அவருக்கு இருமல் வந்து சளி ஏற்பட அதைத் தொட நேர்ந்தால்) உடனடியாகக் கையை சோப்புப் போட்டுக் கழுவுதல்

இது ஃப்ளூ நோய்போலக் காற்றில் பரவாது. அதனால் மூக்கைப் பொத்திக்கொள்ளும் முகமூடி தேவையில்லை. இந்த ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டால் CDC கூறியுள்ள தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும். அந்த நாடுகளில் இருந்து வரும் பிராயாணிகளுக்குப் பலவிதங்களில் இந்த நோய் பற்றிய தகவல்களை CDC அளித்து, கண்காணித்து வருகிறது. நோய் தாக்குவதற்கான சாத்தியக்கூறு உள்ளவர்கள், நோயின் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும்.

நோய்க்கு மாற்றுமருந்து இல்லை, தடுப்பு மருந்து இல்லை என்ற அச்சம் இருந்தாலும் இதைவிடப் பல கொடிய நோய்களின் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை உணர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தபடி இபோலாவையும் மற்ற வைரஸ்களையும் எதிர்கொள்வோம். மேலும் பரவாமல் தடுப்போம்.

மேலும் விவரங்களுக்குப் பார்க்க: www.cdc.gov/vhf/ebola/index.html

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com