தென்றல் பேசுகிறது...
நவம்பர் நாலாம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 17வது காங்கிரஷனல் தொகுதியில் இந்திய அமெரிக்கரான ரோ கன்னா, மைக் ஹோண்டாவை எதிர்கொள்கிறார். இதை எழுதும் இந்தச் சமயத்தில் இருவரும் தோளுக்குத் தோள் நிற்கிறார்கள். இந்தியர்கள் மெல்ல மெல்லத் தமது ஆளுமையை அரசியல் களத்தில் அழுத்தமாகப் பதியத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில், இந்திய வம்சாவளியினர் ரோ கன்னாவுக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்வது அவசியம். அது நமது அரசியல் பயணத்தின் ஆழ, அகலங்களை அதிகரிக்கும். மோதியின் விஜயத்தால் இந்தியர்களை அமெரிக்கா புதிய மரியாதையோடு பார்க்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவது நமக்கும் இந்த நாட்டுக்கும் பெருநன்மை பயக்கும்.

*****


இரண்டு அவைகளுமே குடியரசுக் கட்சியின் பிடிக்குள் வந்துவிடும் சாத்தியக்கூறினை இந்த இடைத்தேர்தல் சுட்டுகிறது. நுகர்வோர் நம்பிக்கை, வேலையில்லாதோர் எண்ணிக்கையில் குறைவு, வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை குறைவு, தொழில்துறை லாபம் அதிகரிப்பு எனப் பல முனைகளிலும் காணப்படும் நற்குறிகள் இந்தச் சாத்தியக்கூறுக்குக் கட்டியம் கூறுகிறது. மக்கள் அனைவரும், அரசியல்வாதிகள் உட்பட, சுயநலத்தைத் தகர்த்து, நாட்டுநலனைச் சிரமேற்கொண்டு செயல்படுவது மீண்டும் அமெரிக்காவின் தலைமைநிலையை உலக அளவில் உறுதிப்படுத்தும். அத்தகைய அரசியல் உறுதித்தன்மை, அதிபர் மீண்டும் மீண்டும் தனது வீட்டோ அதிகாரத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலையை மாற்றும். ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க, சீனா மற்றும் பல நாடுகள் பொருளாதார எழுச்சி காணும் இந்த நேரத்தில், அமெரிக்கா பின்தங்கிவிடாமல் இருப்பதற்கு நாம்தான் தோள் கொடுக்க வேண்டும்.

*****


இந்தியாவில் மோதி அலை தொடர்கிறதென்றால் அது வெறும் மோகமல்ல. அவர் அறிவித்த 'தூய பாரதம்' (ஸ்வச்ச பாரத்) பலதரப்பினர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கறுப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்போர் பட்டியலை மோதி அரசு வெளியிடத் தொடங்கிவிட்டது. 'அமைச்சர்கள் வாய்மொழியாகப் பிறப்பிக்கும் ஆணைகளை ஏற்காதீர்கள். எழுத்தில் தரச் சொல்லுங்கள்' என்று நடுவண் அரசு கூறியுள்ளதும் அதிகாரிகள் பின்னொரு நாள் பலிகடா ஆவதைத் தடுக்கும்; அமைச்சர்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கும். எதுவும் செய்யாமலும், பேசாமலும் பிரதமர் இருந்த காலம் இனியும் இந்தியாவில் இல்லை. சொல்கிற, சொல்வதைச் செய்கிற அரசாக இது தோன்றுகிறது. ஆனாலும், அவசரப்பட வேண்டியதில்லை. மோதியின் குரலில் தெரிகிற நம்பிக்கையும் உறுதியும் செயல்களாக முழுமைப்படுகிற நாளுக்காக நாம் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறோம். மண் வாசம் அடிக்கிறது. மழை வலுக்கும்.

*****


மிதமிஞ்சிய லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்ட தொழில்முனைவோர் மத்தியில், "ஏழைகள், கிராமவாசிகள்" என்று வார்த்தைக்கு வார்த்தை கூறி, அவர்களுக்கான தூய குடிநீர், மலிவுவிலைக் கழிவறை இவற்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கும் ஜே. சந்திரசேகரன் 'சந்திரா'வோடான நேர்காணல் ஒரு புதிய நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. சிதிலமடைந்த கோவில்களைக் கண்டறிந்து, அவற்றின் பாரம்பரியத்தைத் தகர்க்காமல் புதுப்பிக்கும் நற்பணியையும் அவர் செய்துவருகிறார். செஸ் விளையாட்டில், இரண்டு முறை தமது வயதுப் பிரிவில் அமெரிக்க மகளிர் தேசிய சாம்பியனாக வந்தபின், 2231 புள்ளிகளுடன் மகளிர் தரவரிசையில் தேசிய அளவில் ஆறாவது இடத்திலிருக்கும் 13 வயது ஆஷ்ரிதா ஈஸ்வரனைப் பற்றிய செய்திகளும் பெருமிதம் ஊட்டுபவைதாம். தமிழகத்து இதழ்களைவிடத் தென்றல் தரம் உயர்ந்திருக்கிறது என்பதாக எமக்குத் தொடர்ந்து அஞ்சல்கள் வருவது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. தென்றலின் 14வது ஆண்டு நிறைவு இதழ் உங்களுக்கும் நிறைவு தரும் என்கிற நம்பிக்கையோடு உங்கள் கரங்களில் சமர்ப்பிக்கிறோம்.

வாசகர்களுக்கு குருநானக் ஜயந்தி, நன்றி நவிலல் நாள் வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

நவம்பர் 2014

© TamilOnline.com