அரங்கேற்றம்: அபி மோஹன்
ஆகஸ்ட் 23, 2014 அன்று செல்வி. அபி மோஹனின் அரங்கேற்றம் எல்ஜின் டிரினிடி கல்லூரி வளாகத்தில் ஹாஃப்மன் ஸ்டேட்ஸ் வில்லேஜ் கவர்னர் திரு. மக்லியாட் அவர்கள் தலைமையில் நடந்தேறியது. இல்லினாய்ஸ் மாநிலப் பிரதிநிதியான திரு. ஃப்ரெட் க்ராஸ்போ இன்னொரு சிறப்பு விருந்தினராவார். அபியின் சிறந்த நடனம், பொதுச்சேவை ஆகியவற்றைப் பாராட்டிய கவர்னர், அன்றைய தினத்தை அபி மோஹன் சுந்தர் தினமாக அறிவித்துப் பாராட்டுப் பத்திரம் வழங்கினார்.

திருமதி. மீனு கார்த்திக் (வாய்ப்பாட்டு), திரு. வெங்கடேஷ் பத்மநாபன் (வயலின்), டாக்டர். ஸ்ரீராம் பாலகிருஷ்ணன் (மிருதங்கம்) என்று தேர்ந்த கலைஞர்களின் பக்கபலத்தோடு நிகழ்ச்சி சபா வந்தனத்தில் துவங்கி, 'மஹா கணபதிம்'. 'கோபகுமரா' எனத் தொடர்ந்தது. பாபநாசம் சிவனின் சிவபெருமான் மீதான வர்ணத்திற்கு அழகாக, அளவாக ஆடினார் அபி.

இடைவேளைக்குப் பின் 'அதையும் சொல்லுவாள்' பதமும், 'தேவி நீயே துணை' பாடலும் அவரது அபிநயத் திறமையை முழுவதும் வெளிக்காட்டும் விதமாக அமைந்தன. அபியை, தேவி மீனாக்ஷியாக அலங்கரித்த விதம் நேர்த்தியாக இருந்தது. ஒப்பனைக் கலைஞர் ஜெயந்தி பாராட்டுக்குரியவர். துளஸிதாசரின் ராமர் மீதான பஜனைப் பாடலுக்கு அபாரமாக அபி பிடித்த அபிநயம் மனதைக் கொள்ளை கொண்டது. பாலமுரளியின் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

சிறுவயதுமுதல் பரதம் கற்றுவரும் அபி, பல நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டிப் பொதுச்சேவைகளுக்கு அளித்துள்ளார். பள்ளியிறுதி மாணவியான இவர் பள்ளியிலும் பலவித குழுக்களில் தலைவர் அல்லது உறுப்பினராகப் பங்கேற்பதோடு, பன்மொழிக் கலைஞராகவும் சிறப்புப் பெற்றவர். பெற்றோர் மோஹனும், ஜெயந்தியும் நன்றி கூறினர்.

மீனா சுபி,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com