அரங்கேற்றம்: நம்ரிதா நவீன்
செப்டம்பர் 7, 2014 அன்று, கலிஃபோர்னியா, சாரடோகா மெகாஃபி அரங்கில் ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனி சார்பாக, குருவும் நிறுவனருமான விஷால் ரமணியின் தலைமையில் அவரிடம் ஆறு வருடம் பயிற்சிபெற்ற செல்வி. நம்ரிதா நவீனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. ஜோக் ராகத்தில் தொடங்கிய புஷ்பாஞ்சலியில் ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கும் அவைக்கும் வணக்கத்தைத் தெரிவித்தார் நம்ரிதா. திரு. கௌஷிக் சம்பகேசனின் பாடலும் பதமும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. முத்தையா பாகவதரின் கணேசவந்தனம் தொடர்ந்தது. திரு. முரளி பார்த்தசாரதி இயற்றிய கரஹரப்ரியா ராக ஜதீஸ்வரம் சிறப்பாக இருந்தது. குரு விஷால் ரமணி, இசைக் கலைஞர்களுடன் ஒரு ஜூகல்பந்தி நடத்தி, அதற்கு நம்ரிதாவை ஆடவைத்து கலகலப்பூட்டினார். திரு. அஷோக் சுப்ரமணியம் இயற்றிய ஆரபிராக "மாதா பராசக்தி மஹேஸ்வரி" வர்ணத்தில், ஆதிசக்தியின் அவதாரங்களைச் சித்திரித்தது சிறப்பு.

இடைவேளைக்குப் பின் பாபநாசம் சிவனின் "கார்த்திகேயா காங்கேயா" பாடலுக்கு முருகப் பெருமான் அவதாரம், அறுபடை வீடுகள், சூரபத்மன் வதம் என அனைத்தும் வெகு அழகு. தொடர்ந்த நீலகண்ட சிவனின் பூர்விகல்யாணி ராகத்தில் அமைந்த "ஆனந்த நடனம் ஆடுவார்", "கண்ணா வா", பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் தில்லானா ஆகியவையும் அற்புதம். இறுதியாக மங்களம் பாடும்போது குருவுக்கும், இசைக் கலைஞர்களுக்கும், அவையோருக்கும் எல்லா நலனும் விளைய நடராஜரை அபிநயம் மூலம் பிரார்த்தித்தது சிறப்பு. இந்தியாவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள் திரு. வாசுதேவன் கேசவுலு (நட்டுவாங்கம்), திரு. கௌஷிக் சம்பகேசன் (பாட்டு), திரு. ராம்சங்கர் பாபு (மிருதங்கம்), திரு. சி.கே. விஜயராகவன் (வயலின்) நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தனர்.

என்.ஆர். தொரை,
கூபர்ட்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com