அக்டோபர் 2014: வாசகர் கடிதம்
1974ம் வருடம் அகில இந்திய வானொலி நடத்திய வருடாந்திர இசைப்போட்டியில் மெல்லிசைப் பிரிவில் ராஜ்குமார், லைட் கிளாசிகலில் சுதா வெங்கட்ராமன், கர்நாடக இசைப்பிரிவில் ரேவதி சர்மா ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டு, பாரதிய வித்யாபவனில் தனித்தனியே பாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முன்னணி இசைக் கலைஞராக இன்று விளங்கும் சுதா ரகுநாதன்தான் அந்த சுதா வெங்கட்ராமன்; அந்த ராஜ்குமார்தான் இன்று ராஜ்குமார் பாரதி எனப் புகழடைந்துள்ளார். பல பட்டங்கள் பெற்றுச் சிறந்த இசையமைப்பாளராக, ஆசிரியராக, பல பீடங்களில் ஆஸ்தான வித்வானாக, ஆழ்ந்த இசைஞானம் கொண்டு புகழ்பெற்று விளங்கும் ராஜ்குமார் பாரதி பற்றி அவரது 'நேர்காணல்' படித்து மிகவும் சந்தோஷப்பட்டேன். நானும் அவர்களுடன் இசைத்துறையில் இருந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். அவர் கூறியபடி இறை சக்தியானது இந்த உன்னத நிலைக்கு அவரை உயர்த்தியுள்ளது என்பதே உண்மை.

Dr. ரேவதி சுப்ரமணியன் (ரேவதி சர்மா),
சான் ஹோசே, கலிஃபோர்னியா.

*****


செப்டம்பர் தென்றல் இதழில் ராம் துக்காராம் மற்றும் ராஜ்குமார் பாரதி இருவரின் நேர்காணல்கள் என்னுள் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!' எனப் பாட வைத்தன. 1963ல் துக்காராம் கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெறுகிறார். நான் 1969ல் அதே கல்லூரியில் பட்டம் பெற்று, பின்னர் அங்கு விரிவுரையாளராகப் பணியாற்றுகையில் 1975ல் ராஜ்குமார் பாரதி, மற்றும் பின்னாளில் இந்திய கிரிக்கெட் குழு கேப்டனாக விளங்கிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருவரும் முதலாண்டு மாணவர்களாகச் சேருகிறார்கள். இருவருமே என் பொறியியல் வரைபட வகுப்பு மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எத்தனைப் பெருமை!

1989ல் முதன்முறை துக்காராமோடு TNF நிர்வாகக் குழு கூட்டம் ஒன்றில் கிளீவ்லேண்டில் அறிமுகமானதிலிருந்து நன்றாக அவரை அறிவேன். தென்றலுக்காக அவரை நான் நேர்காண வேண்டும் என்று எத்தனையோ முறை கேட்டுக் கொண்ட போதெல்லாம் விளம்பரத்தில் விருப்பமில்லாது 'அட, போய்யா' என்று உரிமையோடு சொல்லித் தட்டிக் கழித்துவிடுவார். தொழில்முறையிலும் சரி, தொண்டுப் பணிகளிலும் சரி தனியொரு முத்திரை பதித்தவர் துக்காராம். அவரது சாதனைகள் தமிழ் இனத்துக்கு, குறிப்பாக இளைய சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாய் இருந்த போதும், அவரது ஈகைத்திறன் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ் நாடு அறக் கட்டளையின் சென்னை அலுவலகம் கட்டப்படுகின்ற நாட்களில் கட்டுமானம் எங்கே நின்றுவிடுமோ என்று வாடிநின்ற நேரத்தில், சென்னையில் தனது தந்தை தந்த பூர்வீக வீட்டை விற்று உதவிய அவரது பெருந்தன்மை நினைக்கப்பட வேண்டியதாகும்.

பள்ளி நாட்களிலிருந்தே மகாகவியை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றபோது எனது இடைப் பெயரில் பாரதி என்று சேர்த்துக் கொண்டதில் பெருமையுண்டு. எனது மாணவர் ராஜ்குமார், பாரதியின் கொள்ளுப்பேரன் என்று அறிந்தபோது அவர்மீது தனிப்பட்ட முறையில் 'பற்று மிகுந்து' வரப் பார்த்திட்டேன். அவரது பணிவு, பரிவு இரண்டும் எனக்கு அப்போதே பிடித்துப் போனது. பின்னர் ஜிழிதி விழா மேடையில் பாட வந்திருந்த அவரை, "ராஜ்குமார்” என்று அழைத்தபோது சற்றே திகைத்தபின் “கோமதிநாயகம் சார்” (பூர்வோத்திரப் பெயர்!) என்று ஞாபகமாய்ச் சொல்லிக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

கோம்ஸ் கணபதி,
டென்னசி

*****


தென்றல் செப்டம்பர் இதழில் பிரபல எழுத்தாளர் பி.எஸ். ராமையா அவர்களைப் பற்றிப் படித்து ஆனந்தமடைந்தேன். இளமையில் வறுமையில் வாடி, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்ற தலைசிறந்த எழுத்தாளர். அவர் திறமைக்கு 'மணிக்கொடி' ஒரு சாட்சி. சிறுகதைகளுக்காகவே உருவான இதழ் மணிக்கொடி. திரைப்படங்களிலும் அவரது பங்குஉண்டு. அவர் பிறந்த வத்தலகுண்டு மாம்பழம் போலவே அவரது கதைகளும் இலக்கியமும் இனிப்பானவை, அர்த்தமுள்ளவை. சிறுவர்களுக்காக இவர் எழுதிய கதைகள் ஏராளம்.

கே. ராகவன்,
டென்வர், கொலராடோ

*****


வழக்கம்போல் பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைக்கு மேல்மாவு தயாரிப்பதற்காக, தென்றல் சந்தாதாரருக்கு இலவசமாக வழங்கிய 'மாயாபஜார்' சமையல் குறிப்பு நூலைப் (பக்கம் 69-71) பார்த்துச் செய்தேன். ஆஹா! அத்தனை அருமையாக வெங்காயத்தோல் மாதிரி மெல்லியதாக அமைந்தது. அதுவும் கோலி அளவு உருட்டிப் பூர்ணம் வைத்துச் செய்ததில் சிறிதும் விள்ளாமல், விரியாமல் அமைந்து என்னை அசத்திவிட்டது போங்கள். தென்றலே, மிக்க நன்றி!

கமலா சுந்தர்,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி

*****


செப்டம்பர் முன்னோடி பகுதி அமரர் கு.சா.கி. பற்றிய அரிய செய்திகளைத் தாங்கி வெளிவந்தது மகிழ்ச்சி. செந்நாப் பேரொளி கு.சா.கி., வள்ளலார் பாடல்களில் தன்னைப் பறிகொடுத்தவர். அவரது 'அருட்பா இசையமுதம்' இன்னமும் எங்கள் பகுதி வள்ளலார் திருமடங்களில் ஓதப்பட்டு வருகிறது. இந்தியாவில் 565 சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டுவர, இந்திய அரசுடன் இணைந்து அந்த வேள்வித் தீயில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்டவர் கு.சா.கி. வல்லத்தரசு என்ற எங்கள் குடும்ப நண்பர், “தவறித் தண்ணீரில் விழுந்தாலும்கூட அதையே குளிப்பதாக நம்பவைத்துப் பயன்பெறும் அரசியல்வாதிகள் மத்தியில், தமிழரசுக் கழக முன்னணித் தலைவர் ஆகக்கூடிய தகுதி இருந்தும் மிகவும் அப்பாவித்தனமாகவே வாழ்ந்து வருகிறார் கு.சா.கி.” என்றார். வல்லத்தரசின் வாக்கு பின்னாளில் பரிமளித்தது. பரிணமித்தது எனலாம். கும்பகோணம் சாமிநாத கிருஷ்ணமூர்த்தி சாதாரண கிருஷ்ணமூர்த்தி அல்ல என்பதை 'தென்றல்' உணர்த்தியது.

அரிமளம் தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன்

*****


'வானத்தையாவது விட்டு விடுங்களேன்' அருமையான கவிதை. நெஞ்சைத் தொட்டது. 'வேலையில்லாப் பட்டதாரி-விமர்சனமல்ல' என்று விமர்சிக்கப்பட்ட காட்சிகள் நல்ல நெத்தியடி. 'கதிகலங்க வைத்த கராஜ் கதவு' உண்மையாகவே கதி கலங்க வைத்தது.

ஜெயா மாறன்,
மரியட்டா, ஜார்ஜியா

*****


செப்டம்பர் இதழில் துக்காராம் அவர்களின் நேர்காணல் படித்தேன். உண்மை வாழ்ககையில் ஹீரோ திரு. துக்காராம் அவர்கள்தான். தென்றல் பல அரிய செய்திகளை மனிதர்களை அறிமுகப்படுத்தும் ஏடு. துக்காராம் அவர்கள் வாழ்வில் பத்திரிகைகள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்பதை தென்றல் நேர்காணலில் அவர் குறிப்பிடுகிறார். முன்னேறத் துடிப்பவர்கள் தொடர்புகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு அவர் ஒரு வழிகாட்டி. அவர் இன்று ஐந்து பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்பதும், இந்தியாவிலும் தொழில் தொடங்கி நாட்டின் வளர்ச்சிக்கும் தன்னார்வத் தொண்டுகளுக்கும் வழங்குவது மலைக்க வைக்கிறது.

தந்தை கொடுத்த வீட்டைத் தானம் கொடுத்து, தந்தையின் பெயரை நிலைக்க வைத்த தனயனாக, இந்தோ அமெரிக்கன் கால்ஃப் அஸோஸியேஷன் அமைத்து 16 வருடங்கள் போட்டிகள் நடத்தியவராக, பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பீடத்திற்கு 60 ஆயிரம் டாலர் வழங்கி தமிழ் வளர்த்த தமிழ்மகனாக, தன் வாழ்க்கை சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்று எண்ணும் சமூகசேவகராக இவருடைய பன்முகங்கள் நமக்குப் பல பாடங்களைத் தருகின்றன.

கனடாவில் ஏ.சி இல்லாத காரில் மூன்று மணி நேரம் கொளுத்தும் வெயிலில் நேர்காணலுக்குச் சென்றபோது, காத்திருந்த மனைவியின் மாண்பையும் வெளிப்படுத்துகிறார். அவர் முன்னிருக்கையில் அமர்ந்தோ, மேடைகளில் இடம் பெற்றோ, தன்னை எல்லோர் முன்னும் வெளிப்படுத்தியோ பார்த்ததில்லை. ஒரு விழாவில் கோம்ஸ் அவர்கள் அவர் வீடு கொடுத்ததைப் பற்றிப் பேசினார். அப்பொழுது அது மட்டும்தான் தெரியும். தென்றல்மூலம் அவரது மற்ற பரிமாணங்களை அறிந்து வியப்பின் எல்லையை அடைந்தேன். இந்தக் கடிதத்தைப் படிக்கும் வாசகர்கள், செப்டம்பர் இதழைத் தேடி அவர் நேர்காணலைப் படிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இறுதியில் அவரைப் பற்றி எண்ணும் பொழுது என் நினைவிற்கு வரும் டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் பாடல்...

நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை
நறும்பூவின் மனம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பல்லாகும் கனிமுழுதும் மரத்துக்கில்லை
பண்ணரம்பின் இசை முழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்


உமையாள் முத்து,
மிச்சிகன்

© TamilOnline.com