சந்தோஷம்
கலிஃபோர்னியாவிலிருந்து முதல்முறையாக ஸ்கைப்பில் ராம் அவன் தம்பி கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தான்.

"கிச்சா ஹௌ ஆர் யூ? ரீசன்ட்டா யூட்யூப்ல உன் ப்ரோக்ராம் பார்த்தேன். இட் வாஸ் நைஸ்" என்றான்.

"ஹலோ அண்ணா! நாங்க எல்லோரும் நன்னா இருக்கோம். அந்த ப்ரோக்ராம் பக்தா யாரோ வீடியோ எடுத்து போட்ருப்பா" என்றான் கிருஷ்ணன். பாகவதாள்போல குடுமி வைத்து நெற்றியில் திருமண் இட்டு மார்பில் பூணூலுடன் ஞானப்பிழம்பாக இருந்தான். அவன் கண்களிலும் உதட்டிலும் உண்மையான சந்தோஷப் புன்னகை.

"ஹௌ இஸ் டாட்? அம்மாவுக்கு இருமல் கன்ட்ரோலில் இருக்கா? சென்னைக்குக் கூட்டிப்போய் ஸ்கேன் எடுக்கச் சொன்னேனே, உன் ஒய்ஃப், டாட்டர் எல்லாம் நல்லா இருக்காங்களா?" என்றான் கிருஷ்ணன். லேப்டாப்பை (ராம் சமீபத்தில்தான் வாங்கி அனுப்பியது) அப்பா அருகில் கொண்டுபோய் வைத்துவிட்டு, "மன்னி, வைஷூ (ராமின் மூத்த பெண் வைஷ்ணவி, 14 வயது), சீனு (சீனிவாசன், ராமின் மகன் 16 வயது) எல்லாம் நன்னா இருக்காளா அண்ணா?" என்று கேட்டுவிட்டு, "அப்பாட்ட பேசுங்கோ" என்றான்.

சென்னை ஐ.ஐ.டி.யில் பிஎச்டி முடித்துவிட்டுத் தன்னுடன் படித்த பெண்ணை பெற்றோரை சம்மதிக்க வைத்துக் கல்யாணம் செய்துகொண்டு 20 வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவுக்குப் போய் பெரிய கம்பெனியில் வேலையில் அமர்ந்தான். வருடத்துக்கு ஒருமுறை இந்தியாவுக்கு வந்து பெற்றோர்களைப் பார்த்துவிட்டுத் திரும்புவான். பிறகு 2, 3 வருடங்களுக்கு ஒருமுறை வந்தான். கடைசியாக வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. கார், பங்களா என்று நல்ல வசதியான வாழ்க்கைதான்.

ராமின் அப்பா இந்தியன் வங்கியில் 35 வருடங்கள் பணியாற்றி ரிடையர் ஆனார். ரிடையராகும் சமயத்தில் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திலிருந்த தங்கள் பூர்வீக வீட்டை மராமத்து செய்து, மேலும் சில அறைகள் கட்டி வசதிகள் ஏற்படுத்திக்கொண்டு மனைவி மற்றும் இரண்டாவது மகன் கிருஷ்ணனுடன் பத்து வருடங்களுக்கு முன் வந்து செட்டிலாகிவிட்டார். தினமும் ஸ்ரீரங்கநாதனின் திருவடி தரிசனத்தோடு ஒய்வு வாழ்க்கையை அமைதியாகக் கழித்து வருகிறார்.

கிச்சா என்னும் கிருஷ்ணன் பி.காம். படித்தாலும் ஆன்மீக நாட்டத்தினால் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றான். வேத பாராயணமும், நாலாயிர திவ்யப்பிரபந்தமும் பகவத் கீதையும் இதிகாச புராணங்களும் அவனை ஆட்கொண்டன. வங்கி வேலையில் இருந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தி வந்தான். பெற்றோர் பார்த்து வைத்த மைதிலியை மணமுடித்தான். பெண் பிறந்தாள். நாராயணி என்று பெயர்சூட்டி மகிழ்ந்தான்.

தகப்பனார் சொந்த ஊருக்குப் புறப்பட்டபோது, வங்கி வேலையை உதறிவிட்டுத் தானும் குடும்பத்துடன் அவருடன் ஸ்ரீரங்கம் வந்துவிட்டான். அங்கேயே ஸ்ரீராமானுஜ மடத்தின் வேத பள்ளியில் வாத்தியாராக இருந்துகொண்டு, அக்கவுன்டன்சி, காமர்ஸ் டியூஷன் சென்டர் நடத்துகிறான். அது தவிர, அழைக்கும் ஊர்களுக்கெல்லாம் சென்று உபன்யாசங்கள் செய்கிறான். தாய் தந்தையரை அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறான். அவனுக்கு வாய்த்த மனைவியும் சிரித்த முகத்துடன் அனுசரணையாகக் குடும்பம் நடத்துகிறாள்.

அப்பா ஈசிசேரில் உட்கார்ந்து கொண்டு ஹிந்து பேப்பர் படித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. பக்கத்தில் நின்றபடி அவருக்காக காஃபி ஆற்றிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணனின் மனைவி.

"குட் ஈவினிங்ப்பா, நல்லா இருக்கீங்களா?" என்றான் ராம். பெரியவர் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு லேப்டாப்பை உற்றுப் பார்த்தார். "ஸ்ரீரங்கநாதன் புண்ணியத்தில் நன்னா இருக்கோம். நீங்க எப்படி இருக்கேள்? உன் முகம் ஏன் டயர்டா இருக்கு? வேலையெல்லாம் எப்படி இருக்கு?" என்றார்.

"வீ ஆர் ஆல் ஃபைன் டாட். அம்மாவுக்கு இருமல்னு லாஸ்ட் மன்த் சொன்னீங்களே, இப்ப எப்படி இருக்கு?" என்றான். "இப்ப தேவலாம், அவகிட்ட பேசு" என்றார்.

கிருஷ்ணன் லேப்டாப்பை அம்மாவிடம் எடுத்துச்சென்றான். முற்றத்தில் மேல்படியில் அம்மா அமர்ந்திருக்க, கீழ்ப்படியில் கிருஷ்ணனின் பெண் நாராயணி விரித்த தலைமுடியுடன் உட்கார்ந்திருந்தாள். கை நிறைய எண்ணெய் ஊற்றிப் பேத்தியின் தலையில் தேய்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. அந்தக் காட்சி அவன் மனதை நெகிழ்த்தியது. அம்மாவின் முகத்தைப் பார்த்தான். 65 வயதிலும் அம்மாவின் முகம் பளிச்சென்றிருந்தது. மஞ்சள் பூசிய முகத்தில் அழகாகக் குங்குமப் பொட்டும், மூக்கில் வைர மூக்குத்தியும், காதுகளில் வைரக் கம்மலும் ஜொலித்தன. லட்சுமிகரமான அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் ராமின் கண்களில் ஏக்கத்தாலும் பாசத்தாலும் கண்ணீர் கோர்த்தது. ‘வாட் ஆம் ஐ டூயிங் ஹியர்?’ என்று ராமின் மனக்குரல் கேட்டது. "அம்மா, நான் ராம் பேசறேன், தெரியுதா? நல்லா இருக்கீங்களா, இருமல் சரியாயிடுத்தா?" என்றான்.

"ஐயா, ராம், நான் நன்னா இருக்கேன்யா, எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து. என்னய்யா இளைச்சிருக்கே? முடியெல்லாம் கொட்டிடுத்தே. நாராயணி, சித்தே இரு, பெரியப்பாவைப் பார், அவனாண்ட பேசிட்டு உனக்குப் பின்னி விடறேன். சொல்லுய்யா, நீங்கெல்லாம் நன்னா இருக்கேளா? மாட்டுப்பொண்ணு, பசங்கள்லாம் எங்கே? அவங்கள ஃபோட்டோவுல பார்த்ததோட சரி. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவுதானே" என்றாள். ராம் சிரித்துக்கொண்டான். "அம்மா, இப்ப இங்க சனிக்கிழமை, லீவுதான், ஆனா எல்லாரும் பிசியா இருக்காங்கம்மா, நீங்க உங்களைப்பத்தி சொல்லுங்க, இருமல் சுமாராச்சா?" என்றான்.

"அது அப்பப்ப வரும், சுக்குக் கஷாயம் சாப்டா சரியாப் போகும். மார்கழி மாசக் குளிரோன்னோ, அதனால கொஞ்சம் சங்கடமா இருக்கு. நேத்துதான் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதியில் உங்க எல்லார் பேர்லையும் அர்ச்சனை பண்ணி சேவிச்சோம். எல்லாரும் க்ஷேமமா இருக்கணும். ஏண்டாப்பா, ஊருக்குத்தான் வரமுடியலே, இந்த கம்ப்யூட்டரிலாவது அடிக்கடி பேசலாமில்லே. மாட்டுப்பொண்ணு, வைஷ்ணவி, சீனு அவாள்ளாம் எங்கே? எல்லாரையும் பார்க்கணும்னு எங்களுக்கு இருக்காதாப்பா?" என்றாள்.

"சரி, இருங்க, எங்க இருக்காங்கன்னு பார்த்துட்டு வரேன்" என்றான் ராம்.

ராமின் டூப்ளே டைப் பங்களாவில், கீழே இரண்டு பெட்ரூம்களும், ஹாலும், கிச்சன் கம் டைனிங் ரூமும் உள்ளது. படியேறி மேலே போனால் இரண்டு புறமும் இரண்டு பெட்ரூம்கள். ஒன்று வைஷ்ணவிக்கு ஒன்று சீனிவாசனுக்கு. பின்புறம் செர்வன்ட் குவார்டர்ஸ். எல்லா இடங்களிலும் வசதிக்கான அனைத்துப் பொருட்களும் கருவிகளும் அலங்காரங்களும் நிறைந்திருந்தன. ராம் ஹால் சோபாவில் அமர்ந்து அவனுடைய மேகின்டோஷ் கம்ப்யூட்டர் வைத்துப் பேசிக்கொண்டிருந்தான். அம்மா ஆசைப்படுகிறாள் என்று மனைவியை அழைத்தான், அம்மாவுடன் பேசுவதற்கு. "ஹனி, கம் அண்ட் ஸே ஹலோ டு மம், ஷி இஸ் ஆன் லைன்". மேகி என்றழைக்கப்படும் மரகதம் அவளுடைய ரூமிலிருந்து, "நோ வே, காட் எ க்லையன்ட் கால் ராம். ஹேவ் டு ராப் இட் அப். யூ கோ அஹெட்" என்றாள்.

இதென்ன அலட்சியம் என்று நினைத்து ராம் எழுந்து சென்று பார்த்தபோது, ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பிளாக்பெரியில் டயல் செய்து கொண்டிருந்தாள். பாப் தலையுடன் ஸ்லீவ்லெஸ் நைட்டியில் மேகியை அம்மா பார்க்கவே வேண்டாம் என்று தீர்மானித்தான். "வைஷ், சீனு" என்று மேலே பார்த்துக் கூப்பிட்டான். சத்தமே இல்லை. மேலே ஏறி வைஷ்ணவி ரூமுக்குப் போய்ப் பார்த்தான். கதவைத் திறந்ததும் ஜஸ்டின் பீபரின் ஸ்டீரியோ சத்தம் காதைத் துளைத்தது. கையில் ஒரு கிடாரை வைத்துக்கொண்டு குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. வயதுக்கு மீறிய வளர்ச்சி. அரைகுறை ஆடை. அலங்கோல மேக்கப். இரவு ஃப்ரெண்ட்ஸோடு பார்ட்டிக்குப் போகத் தயாராகி இருந்தாள். வெய்டிங் ஃபார் ஹர் ஃப்ரெண்ட்ஸ் டு பிக் அப்.

சீனுவின் ரூமிற்குப்போய் தாளிட்டிருந்த கதவைத் தட்டினான். திறந்த ரூமில் எட்டிப் பார்த்தான். அறை எங்கும் பாடி பில்டிங் எக்சர்சைஸ் செய்யும் கருவிகள் இறைந்திருந்தன. சீனு ஐஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். "பேப், கால் யு இன் எ கபுள் ....." என்று சொல்லிவிட்டு ஃபோனை நிறுத்தியபின், ராமைப் பார்த்து, "வாட் டாட்?" என்றான். கலரிங் செய்து விறைத்து நிற்கும் நூடுல்ஸ் போன்ற தலை முடியுடனும், இடது காதில் வளையங்களுடனும், கழுத்திலும் இரு புஜங்களிலும் டிராகன் டிசைனை டட்டூ செய்து கொண்டு தன்னைவிட உயரமாக நின்ற மகனைப்பார்த்தான் ராம், "நத்திங்" என்று சொல்லிவிட்டுக் கீழே வந்து "அவங்கெல்லாம் வெளியில வேலையா இருக்காங்கம்மா. நான் உங்ககிட்ட பேசுவேன்னு அவங்களுக்குத் தெரியாது . இன்னொரு நாள் கூப்பிடும்போது அவங்களைப் பேசச் சொல்றேன். நீங்க உடம்பைப் பார்த்துக்கோங்கம்மா. அப்பாவைப் பேசச் சொல்லுங்கம்மா" என்றான். "சரிடா கொழந்தை, க்ஷேமமா இருங்கோ" என்றாள்.

அப்பா ஸ்கிரீனில் தெரிந்ததும் "அப்பா, செலவுக்குப் பணம் ட்ரான்ஸ்பர் பண்ணட்டுமா?" என்றான். "வேண்டாம் ராம். தேவைக்கான பணம் இருக்கு. கிச்சாதான் குடும்பத்தை ரன் பண்றான். என் பீஎஃப் பணம் அப்படியே பாங்க்லதான் இருக்கு. இன்டரெஸ்ட் வருது. போதும். வேணும்னா சொல்றேன். நீங்க, நன்னா சந்தோஷமா இருக்கறதே எனக்கு திருப்திதான்" என்றார்.

கம்ப்யூட்டரை அணைத்து டேபிள்மேல் வைத்துவிட்டு சோஃபாவில் இருந்து எழுந்தான் ராம். சோம்பல் முறித்தான். வீட்டைவிட்டு வெளியில் வந்தான். கராஜில் இருந்த அவனுடைய பென்ஸ், டாட்சன் கார்களையும் சீனுவின் யமஹா பைக்கையும் பார்த்தான். அணிந்திருந்த காலணிகளைக் கழற்றிவிட்டு பராமரித்து வரும் கொரியன் கிராஸ் புல்வெளியில் பாதம் பதிய மெதுவாகக் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நடந்தான்.

அப்பா கடைசியில் சொன்ன வார்த்தைகள் மனதில் ஒலித்தன. "நீங்க நன்னா சந்தோஷமாக இருக்கறதே எனக்கு திருப்திதான்". "நான் சந்தோஷமாக இருக்கிறேனா?" அவனுடைய உள்மனது கேட்டது. ஸ்ரீரங்கத்தில் பிறந்து, கலிஃபோர்னியாவில் அமெரிக்கன் சிடிசனாக வாழும் 45 வயது மில்லியனேர் ராமுக்கு அந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.

சரோஜ் நீடின்பன்,
கொளத்தூர், சென்னை

© TamilOnline.com